Wednesday, 30 April 2014

மெளன அழுகை

அதீதப் புனைவு, மிகையதார்த்தப் புனைவு,  ஜால யதார்த்தப் புனைவு போன்ற யுத்திகளில் சிக்கித் திணறாமல் தான் அறிந்த வாழ்வை எதிர்கொண்ட யதார்த்தத்திலிருந்து கவிதையாகச் செதுக்கிச் செல்கிறார் கவிஞர் மு.கோபி சரபோஜி. சமூகத்தைச் சதா கண்காணிப்பது, குடும்பச் சிக்கல்களை எடுக்க முனைவது, பெண்மையைக் கொண்டாடுவது, தத்துவ கவித்துவச் சரடினூடே கொஞ்சம் பிரச்சாரம் செய்வது, கொஞ்சம் வசந்தம் பூசுவது, வாழ்வை ரசிக்கச் சொல்வது என எல்லாமுமாகியிருக்கும் கோபி சரபோஜி  இலக்கிய வெளியில் தன் பயணத்தை வெற்றிகரமாய் துவங்குவதற்கான சாட்சியங்களோடு இருக்கிறார்.
அமிர்தம் சூர்யா
    தலைமை துணை ஆசிரியர் -கல்கி வார இதழ்


Saturday, 12 April 2014

காத்திருக்கும் வேட்பாளர்கள்!

அபிலேஷ் & இலக்கியா
ஒரு வழியாக மகனை டான்ஸ் போட்டியில் சேர்த்துக் கொண்டதும் அந்த வயதிற்கே உரிய சந்தோசத்தோடு மகிழ்ந்திருந்தவனுக்கு பள்ளியில் நடந்த ஓவியப் போட்டியில் பரிசு ஒன்று கிடைத்திருக்கிறது என்ற இன்னொரு சந்தோச செய்தி சொல்லப்பட்டது. இந்த வருடம் இரண்டு பரிசு பெற காத்திருந்தவனுக்கு வம்பிழுக்க ஒரு ஆள் தேவைப்பட எல்லோரும் எப்போழுதும் கொண்டாடித் திரியும் தன் அக்காவை அதற்காக தேர்ந்தெடுத்தான். இந்த வருடம் அவளுக்கு ஒரு பரிசு மட்டுமே இருந்தது. தான் இரண்டு பரிசு வாங்கியிருப்பதை பெருமையாய் தன் அண்ணனின் பக்கபலத்தோடு சொல்லிக்கொண்டும் கூடவே நீ ஒன்னு தானே வாங்கி இருக்கே என கேலி செய்து கொண்டும் இருக்க, இரண்டொரு நாட்களாகவே பணி முடிந்து திரும்பியதும் அவர்களைச் சமாதானம் செய்வதே எனக்கு வேலையாக இருந்தது. நேற்று பேசும் போது டாடி……நானும் இரண்டு பரிசு வாங்க வாய்ப்பு வந்து இருக்கு என்று மகள் சொன்னாள். பெஸ்டா ஸ்டேஜ்ல டான்ஸ் பண்ணுறவங்களுக்கு கரஸ்பாண்ட் சார் சிறப்புப்பரிசு தருவதாக சொல்லி இருக்காங்களாம். எங்க மிஸ் சொன்னாங்க. அதை வாங்கிட்டா எனக்கும் இரண்டு பரிசாகிடும். அதுனால வீட்டுல தினமும் ரிகர்சல் பண்ணிப்பார்க்க போறேன்னு சொன்னாள். அருகிலிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த மகன் நானும் நல்லா ரிகர்சல் பண்ணி அந்த பரிசை நான் வாங்கிட்டா எனக்கு மூன்றாகிடும்ல என்றான். இரண்டா? மூன்றா? பார்ப்போம். ஆண்டுவிழா அன்னைக்கு தெரிஞ்சிடும்ல என மகளும், மகனும் காத்திருக்கிறார்கள் தேர்தல் வெற்றிக்கு காத்திருக்கும் வேட்பாளர்கள் போல!

Friday, 11 April 2014

சரித்திரம் செய்

இளைஞனே……..! 
இன்னும் என்ன உறக்கம்?
எதற்காக இந்த தயக்கம்?

உன்னை அறி
அறிதலில் தொடங்கி
உற்சாகத்தின் உன்னதத்தில் முடி.

எதிர்மறை சிந்தித்தலில்
நேர்மறை சிந்தனைகளை தொலைக்காது
உன் சிறகுகளை அகல விறி.

எதையாவது
செய்வதை விடுத்து
எதைச் செய்வது என திட்டமிடு.

சந்தர்ப்பங்களுக்காக
காத்திருப்பதை விடுத்து
சகலத்தையும் சந்தர்ப்பங்களாக்கு.

தோல்விகளைக் கண்டு
துவளாமல் – அதன்
வலிகளை தோள் வரை வை.

விழுந்ததற்காக அழாதே
எழுவதற்காக
விழப்பழகு.

வெற்றியின் தாகத்தோடு இரு
தாகத்தோடு வேகமாய்
வேகத்தோடு விவேகமாய் செயல்படு.

ஆரியக்கூத்தாடும்
கலைக் கூத்தாடியாய்
காரியம் செய்யும் ரெளத்ரம் பழகு.

பொழுது போக்கு கழுகுகளுக்கு
நேர மாமிசங்களை போடாமல்
காலத்தே நின்று காரியம் செய்.

சாதித்தவர்களின் சரித்திரம் படித்து
உனக்கென தனியே செய்
ஒரு சரித்திரம்”.

நன்றி : செம்பருத்தி 

Thursday, 10 April 2014

துளிப்பாக்கள்

வனப்பில் நின்று
வறுமையைக் காட்டுகின்றன
அலமாரி அங்கீகாரங்கள்

நன்றி : சஞ்சிகை

Wednesday, 9 April 2014

புத்திசாலி சான்றிதழும், தேர்வறை அனுபவமும்


சென்ற முறை தேர்வெழுத சென்றபோது மெயின் ஹாலில் என்னுடைய நம்பர் இருந்தது. அந்த அறை எல்லா பாடங்களில் தேர்வெழுதுபவர்களால் சூழப்பட்டதைப் போல எல்லா வயதிலும் உள்ளவர்களாலும் பால் பாகுபாடின்றி சூழப்பட்டிருந்தது. கண்காணிப்பாளர்கள் என ஆணும், பெண்ணுமாய் ஒரு பத்து பேர் இருந்தார்கள். போதாக்குறைக்கு அவ்வப்போது சிலர் வந்து போனார்கள். அத்தனை கண்காணிப்பிலும் ஒரு தேர்வர் தன் செல் போனில் பிட்டை பதிவு செய்து கொண்டு வந்து எழுதிக் கொண்டிருந்தார். அதைக் கண்டுபிடித்து செல்லை பறிமுதல் செய்த பெண் கண்காணிப்பாளர் என் அருகில் வந்ததும் மணி பார்ப்பதற்காக டேபிளின் மேல் நான் எடுத்து வைத்திருந்த என் செல் போனை பார்த்து விட்டு அதையும் எடுத்துக் கொண்டார். உடனே நான் ஏன் எடுக்குறீங்க? மணி பார்ப்பதற்காக தான் மேலே எடுத்து வைத்திருக்கிறேன். வேண்டுமானால் உள்ளே வைத்துக் கொள்கிறேன் என்று சொன்னேன். அவர் தர மறுத்து விட்டார். அது கூட பரவாயில்லை. அதற்கு பிறகு தான் பிரச்சனை ஆரம்பமானது. அந்த கண்காணிப்பாளர் தன் சக கண்காணிப்பாளரிடம் ரொம்ப புத்திசாலின்னு நினைப்பு போல.....செல்லுல மணி பார்க்குறதுக்காக மேலே வச்சிருந்தாராம். பறித்து வந்து விட்டேன் என்று சொன்னது என் காதில் விழுந்தது. சட்டென தயங்காமல் அந்த கண்காணிப்பாளரை அழைத்து உங்க புத்திசாலி தனத்துக்கு வாழ்த்துகள். ஆனால் இந்தத் தேர்வறையில் பிட் கொண்டு வரக்கூடியவர்களாக இருப்பார்கள் என நீங்கள் சந்தேகம் கொண்டால் அது அறிவியல் பாட தேர்வு எழுதுகிறவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும். அவர்களை கண்காணிக்காமல் தமிழ் பாடத்தில் தேர்வெழுதிக் கொண்டிருக்கும் என்னிடம் செல்லை எடுத்துக் கொண்டதோடு இல்லாமல் என்னுடைய புத்திசாலித் தனத்திற்கு நீங்கள் சான்றிதழ் தர வேண்டியதில்லை என்றேன். சங்கடமான ஒரு இறுக்கம் அறையெங்கும் நிலவ தேர்வறையை விட்டு வெளியேறும் போதுசாரிஎன்றேன். அந்த கண்காணிப்பாளர் பதிலுக்கு ஒரு புன்னகை மட்டும் செய்தார். அதன் பின் அடுத்த மூன்று தேர்வு நாட்களும் பரஸ்பரம் காலை வணக்க பரிமாறல்களோடு கழிந்தது