Friday, 30 May 2014

மெளன அழுகை - 2

மெளன அழுகை கவிதை தொகுப்பிற்கு கவிஞரும், விமர்சகருமான திரு. ஸ்ரீரங்கம் செளரிராஜன் அவர்கள் அளித்துள்ள விமர்சனம்


மு.கோபி சரபோஜி அழகன்குளம்( இராமநாதபுரம் மாவட்டம்) என்ற ஊரில் பிறந்தவர். கவிதை, நாவல், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, ஆன்மிகம், தன்னம்பிக்கை என இதுவரை 21  நூல்கள் வந்துள்ளன. இது இவரது மூன்றாவது கவிதை தொகுப்பு.

இதில் 54 கவிதைகள் உள்ளன. எளிமை, தெளிவு, இழுத்துக்கட்டிய மொழி சார்ந்த வெளிப்பாடு இவரது கவிதை இயல்புகள்.

“பரதேசி” – பணம் வேண்டி வாழ்வின் அற்புத தருணங்களை இழக்கும் ஒருவனை இக்கவிதையில் காட்டுகிறார் கோபி,

ஊரில் உள்ள
கடவுளையெல்லாம் வேண்டி
கண்ணீரோடு அம்மா

புத்தியோடு பிழை
கவனமாய் இரு
வழக்க வாசிப்போடு அப்பா

அடிக்கடி பேசு
யாரிடமும் சண்டைபோடாதே
அக்கறையோடு தங்கை

வார்த்தைகள் தேடும்
மெளனத்தின் பிரிவு துயரோடு மனைவி

எத்தனையாவது
படிக்கும் போது வருவீங்க
ஆவல் கேள்வியோடு மகள்

இத்தனையவும் கடந்து
நகர்ந்து போகின்றேன்
அக்கரை தேசத்திற்கு
பரதேசியாய்!

இக்கவிதையில் சொற்கட்டு அழகாக அமைந்துள்ளது. ஒவ்வொரு பத்தியும் முடிந்தபின் மறையாமல் நிற்கும் கனம் மனத்தை வருத்துகிறது. அம்மா, அப்பா, தங்கை, மனைவி, மகள் எல்லோர் மனத்திலும் இவன் ஒருவன் தான் மையப்படுகிறான். ஆனால், இவன் மனத்தின் சுமை? எது அதிக கனமானது? எடை போட முடியாது!

“பொய்யாகும் புலம்பல்கள்” தன்னம்பிக்கை உணர்வூட்டும் கவிதை. பாறையிடுக்கில் முளைக்கும் சிறு செடியை முன் வைத்து கவிதை நடத்தப்படுகிறது.

எவரும் சாதகமாக இல்லை
எவரும் உதவிக்கரம் நீட்டவில்லை
விதியோ
விடாது சதிராடுகிறது.
என்பது கவிதைத் தொடக்கம். இக்கவிதையில் தகவலே முக்கிய இடம் பிடிக்கிறது.

“தாத்தாக்களற்ற வாழ்வு’” என்ற கவிதை நகர்மயமாதலின் இழப்பை பேசுகிறது. ஒரு நேர்கோடு இழுத்தது போல் கவிதை முடிந்து விடுகிறது.

மரத்து பிசின் பசை
நார் இடைவார்
மட்டை செருப்பு
ஓலை தொப்பி
களிமண் பலிங்கி
கொட்டாங்குச்சி வயலின்
கொம்பு ஏற்றம்
சருகு காத்தாடி
கோம்பை வண்டி
மரப்பாச்சி பொம்மை
இலை பீப்பி
இப்படியான எதுவும்
நம் பிள்ளைகளுக்கு
சாத்தியமற்றுப் போனது

தாத்தாக்களற்ற
தனித்த வாழ்வில்!

கிராம வாழ்க்கையின் சாரத்தை நல்ல கலைஞனின் தூரிகைத் தீற்றலாய் காட்டுகிறார் கோபி.

“அலமாரி அங்கீகாரங்கள்” எழுத்து தொடர்பான கவிதை. வட்டிக்கு கடன் வாங்கி புத்தகம் போடும் எழுத்தாளர்கள் உண்டு. மனைவியின் சங்கிலியை விற்று புத்தகம் பார்த்தவர்களும் உண்டு. இப்படிக் கஷ்டப்படுவது எதற்காக? அலமாரி அங்கீகாரம் வேண்டித் தானே? இதிலும் தகவல் தன்மை முன்னிற்க, கலை கைகட்டி வாய் பொத்தி நிற்கிறது.
      
அரசியலும், சமூக அவலங்களும் ஒன்றாக இணைந்து கருப்பெருளான கவிதை “வல்லரசு கோஷம்”.

ஊழலை ஒழி என்கிறோம்
ஓட்டுரிமையை செலுத்த
பணம் பெறுகின்றோம்.

சாதியை நீக்கு என்கிறோம்
சாதிக்கென தனிஒதுக்கீடு கேட்கின்றோம்.

சட்டத்தை கடுமையாக்கு என்கிறோம்
பாராளுமன்றத்தை தாக்கியவனுக்கு
பாவமன்னிப்பு கோருகின்றோம்

எனத் தொடரும் கவிதையில் ஆயுதபலம், இலவசம் பற்றியும் பேசப்படுகிறது. இவ்விதக் குழப்பங்கள் தீர்க்கப்படாமல் வல்லரசு ஆவோம் என்றால் எப்படி? எனச் சிந்திக்க வைக்கிறார் கோபி.

“மெளன அழுகை” பெண் மனத்துயரைக் கருப்பொருளாகக் கொண்டது. பாலியல் கவிதையில் கோடிட்டுக் காணப்படும் குறிப்பு சிந்திக்க வைக்கிறது.

விருப்பமறியாமலே
உன் தாக செதில்களை
என் தேக மேடுகளில்
உதிர்த்து எழுந்தாய்…..

“களைப்பால் நசிந்த உடலோடு” என்ற பெண்ணின் தன்னிலை விளக்கம், தாம்பத்தியத்தின் ரசமான பகிர்தலை ஒரு துயர நிகழ்வாய் மாற்றிப் போட்டுள்ளது. ஆண் குற்றவாளியாய் நிற்கிறான்!

“உருமாற்றம்” கடவுள் வழிபாட்டிற்கு காசு வசூலிப்பதைக் கண்டிக்கிறது. “தவறிப்போன இளமை” பணம் தேட வெளிநாடு செல்பவர்களைச் சுட்டுகிறது
.

“இரகசியம்” யதார்த்ததமானது. சுருக்கென்கிறது.

பூங்காக்கள் தோறும்
இறைந்து கிடக்கின்றன
சிலரின் ஏமாறுதல்களும்
பலரின் பரிமாறல்களும்!
      
இதரக் கவிதை இயல்புகளும் சேர்ந்தால் கோபியின் கவிதைகள் அடுத்த கட்டத்திற்கு நகரும்!

Sunday, 18 May 2014

மெளன அழுகை - 1

(நந்தலாலா (இதழ் 17) இணைய இதழில் என் “மெளன அழுகை” கவிதைத் தொகுப்பிற்கு நண்பரும், கவிஞருமான இரா. பூபாலன் எழுதிய விமர்சனம்)கதறியழத் திராணியுள்ள மனிதன் தன் ஆற்றாமையை அழுதழுது துடைத்துக் கொள்கிறான் அல்லது தளர்த்திக் கொள்கிறான். கதறியழுது கண்ணீரையெல்லாம் வற்றிவிடச்  செய்யாது, தனக்குள்ளேயே அழுது கண்ணீரை மறு சுழற்சி செய்துகொள்ளும் மெளன அழுகைக்காரன் கவிஞன்.

தனது வலிகளை, ஆற்றாமைக் கோபங்களை வார்த்தைகளாகக் கோர்த்து எறிகிறான் கவிதையாக. அவனின் அழுகையை கவிதை செய்கிறது. அதன் மெளன சாட்சியாக கவிஞன் நிற்கிறான். சமூகத்துக்காக மட்டுமே கவிஞன் அழுவதில்லை. தன்பாலும் அழ வேண்டிய தருணங்கள் கவிஞனுக்கு நிறையவே இருக்கின்றன. எப்படியாகினும் கவிஞனின் மெளன அழுகையே கவிதையாகிறது.

கோபி சரபோஜியின் தொகுப்பின் தலைப்பு மெளன அழுகையாக இருப்பதின் பொருட்டு, வெடித்துக் கதறக் காத்திருக்கும் கவிதைகளைக் கையிலெடுப்பதாக உருவகித்துக் கொண்டு வாசிக்கத் துவங்குகிறேன் இக்கண்ணீரை.

பிழைப்பு தேடி பிறந்த மண்ணை விட்டு நகரத்து நெருக்கடிகளுக்குள் நுழந்துவிடுகிற எல்லா எளிய மனிதர்களும் வலிகளுடனும்ஏக்கங்களுடனுமே நகரவீதிகளில் மலங்க மலங்க விழித்துக் கொண்டு அலைந்த படியிருக்கின்றனர்தமது வேர்களை ஊர்களில் விட்டுவிட்டு புதிய வேடங்களைப் போட்டுக் கொள்ள வேண்டிய பின் நாட்களில் ஒவ்வொரு கிராமத்து மனமும் திக்குமுக்காடித்தான் போகும்.
அகப்படாத வித்தை
காலாரக் கிளம்பி
கருக்கல் மறைவில்
வயிற்றுக்கொரு கையறு பாடி
கையும் காலும்
அலம்பியே பழக்கப்பட்ட தாத்தாவிற்கு
 வருடம் போயும்
பிடிபடவில்லை
பத்துக்கு நாலு கழிப்பறையில்
பக்குவமாய் வயிறு கழுவி
புறம் வருதல்

இக்கவிதையில் தாத்தா குறியீடாகிறார். தாத்தா நம் ஆதி முகமாகிறார். தாத்தா நாமாகிறார். சுயமிழந்த கண்மாய்கள் கவிதையும் இதே வலியைத்தான் பேசுகிறது.

பொருள் தேடி வெளிநாடு செல்ல வேண்டிய சுய அனுபவத்தின் வலி மிகுந்த இழப்புகளாக இவர் எழுதியிருக்கும் சில கவிதைகள் நம் அனுபவமுமாக இருக்கின்றன.
பரதேசி
ஊரில் உள்ள
கடவுளையெல்லாம் வேண்டி
கண்ணீரோடு அம்மா
புத்தியோடு பிழை
கவனமாய் இரு
வழக்க வாசிப்போடு அப்பா.
………………………………………………..
…………………………………………….
இத்தனையும் கடந்து
நகர்ந்து போகின்றேன்
அக்கரை தேசத்திற்கு
பரதேசியாய்.

ஒரு நிமிட, இரண்டு நிமிட மெளன அஞ்சலிக் கூட்டங்களை ஏராளமாய்ப் பார்த்தாயிற்று. அங்கு நடந்தேறும் அபத்தங்கள் தவிர்க்கவியலாத்து தான். சொல்லப்போனால் அந்த அபத்தங்களை, பெருமையாய் ஏற்றுக் கொள்ளவும் பழகியிருக்கிறோம். கவிஞர் இப்படிச் சொல்கிறார்
மெளன அஞ்சலி
எழுந்து நிற்கச் சொல்லும்
மெளன அஞ்சலிகளில்
நிமிடங்களை எண்ணுவதில்
நினைவிழந்து போகிறது
இறந்தவனின் நினைவு.
மெளன அஞ்சலிக் கூட்டங்களில் இறந்தவனின் நினைவைப் புறந்தள்ளிவிட்டு சுய பறைசாற்றல்களாகவும், நிமிடங்களில் கவனித்தும் இருக்கும் மனிதர்கள் இறந்தவனுக்கு துரோகமும் இழிவும் தான் செய்கிறார்கள்.

காட்சிப் படிமனாக விரியும் ஒரு நல்ல கவிதையாக இத்தொகுப்பில் நான் ரசித்த கவிதை …
மீண்டும்
செயற்கையை
தனக்குள் வாங்கி
உந்தி எழுந்த நீர்த்திவலை
இயற்கையோடு
கை கோர்த்து புணர்ந்த கணத்தில்
அடங்கி மறைந்த்து
மீண்டும் நீர்க்குமிழியாய்.

நவீன கவிதையின் முனை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் புதுக்கவிதைக்காரனின் கவிதை வரிகள் இவை எனக் கொள்ளலாம். இன்னும் பொறுத்திருந்தால் இன்னும் சிறப்பான ஒரு தொகுப்பாக கவனம் ஈர்த்திருக்கக் கூடுமான ஒரு தொகுப்பு…

விலை ரூ 70/-

வெளியீடு அகநாழிகை பதிப்பகம்
எண் 33, மண்டபம் தெரு ,
மதுராந்தகம் 603 306
தொடர்புக்கு : +91 9994541010 
ஆசிரியர் மு.கோபி சரபோஜி

-இரா. பூபாலன்,
 பொள்ளாச்சி.
 9842275662 

நன்றி நந்தலாலா

Thursday, 1 May 2014

இன்னொரு புரட்சி


மேதைகளின் வழிகாட்டல்களில்
உழைப்பாளர்களாய் ஒன்றுபட்டோம்.

முதலாளித்துவத்தின் முகமூடிகளை 
நம் தோள் வலிமை கொண்டு
கிழித்தெறிந்தோம்.

கண்ணீர் சிந்தியே
பழக்கப்பட்ட நாம்
செந்நீர் சிந்தி
ஜெயித்துக் காட்டினோம்.

வியர்வையின் விளைச்சலை
நாடுதோறும் நட்டு வைத்தோம்.

எல்லைகள் கடந்து
எதிரிகள் மறந்து
மே தினமாய் - நம்மை
அடையாளமிட்டுக் கொண்டோம்.

அன்று
வீரியமாய் நின்ற அடையாள தினமோ
இன்று
வெறும் விடுமுறை தினமாகிப் போனது.

விடுமுறையும்
வாழ்த்தும் போதுமென
வீரிய வித்துக்களை
அழுகச்செய்து விட்டோம்.

நடந்தவை உணர்ந்து
நடப்பவை அறிந்து
இனி ஒரு புரட்சிக்கு தயாராவோம்

அது இன்னொரு
மே தினமாய் இல்லாமல்
 நம்மை 
மேம்படுத்தும் தினமாய் இருக்கட்டும்.

நன்றி : வல்லமை

பல் வலியும், பாராசெட்டமாலும் (Paracetamol)

அபிலேஷ்
ஆடி விழவேண்டிய பல் என்பதால் அதற்கான தருணம் வந்ததும் மகனின் பல்லும் ஆட ஆரம்பித்திருந்தது. புது பல் முளைக்க போகுது என்று சொல்லி சந்தோசப்பட்டுக்கொண்டிருந்தான். நேற்று பள்ளியில் விளையாடும் போது அவன் நண்பனொருவன் தலையால் பல்லில் இடித்து விட அது வலி தரவே, பள்ளியிலிருந்து வந்ததும் அவன் அம்மாவிடம் சொல்லி இருக்கிறான். விழப்போற பல்லு தானே………லேசா வலிச்சிட்டு தானா விழுந்திடும்னு சொல்லிட்டு அப்படியே விட்டு விட்டாள். ஆனால், பல் வலி அவனை விட்ட பாடில்லை! இரவு சாப்பிடும் போது என் அப்பாவிடம், தாத்தா…. என் பிரெண்ட் தலையால இடிச்சிட்டான். அதுனால ஆடுன பல்லு வலிக்குதுன்னு சொல்லி இருக்கிறான். அவரோ பாதி பாராசெட்டமால் (Paracetamol) போட்டா சரியாயிடும். உன் அம்மாட்ட சொல்லி தர சொல்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். உடனே பாராசெட்டமால்  போட்டா வலி போயிடுமா தாத்தா? என கேட்டிருக்கிறான். அதற்கு அவர் வலிக்கத்தான் செய்யும்னு சொல்லவும், மாத்திரை போட்ட அப்புறமும் வலிக்கும்னா எதுக்கு தாத்தா மாத்திரையை போடனும்? போடாமையே இருந்துரலாமேன்னு சொன்னதும் அவர் பேசாமல் இருந்து விட்டார். பேரனுக்கு என்ன பதில் சொல்வது? என அவருக்கு யோசிக்க நேரம் தராமலே மம்மி…. எனக்கு மாத்திரை வேணாம் என சொல்லி விட்டு இரவில் தூங்கி காலை எழும்பி பள்ளிக்கு கிளம்பி விட்டான்.