Monday, 24 November 2014

வெற்றிக்கு ஐந்து காரணிகள்


கற்றுக்கொள்ளத் தயாராய் இருங்கள் :

எப்பவும், எதையும், எதிலிருந்தும் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் மட்டுமே தடைகளைக் கடந்து சாதிக்கவும், வாழ்வை தன் வசப்படுத்தவும் முடியும். இதற்கென நீங்கள் அதிகமாக மெனக்கெடவோ, உங்கள் மூளையை கசக்கிப் பிழியவோ வேண்டியதில்லை. உங்களைச் சுற்றியிருக்கக் கூடியவைகளை, நிகழ்பவைகளை உற்று நோக்கினாலே போதும். ”மாணவன் தயாராய் இருக்கும் போது குரு தானே தோன்றுவார்” என்பது கற்றல் விசயத்தில் முற்றிலும் சரியல்ல. இந்த விசயத்தைப் பொறுத்தவரையில் வெவ்வேறு வடிவங்களில்., உருவங்களில், அஃறிணையாகவும், உயர்திணையாகவும் குருவானவர் உங்களைச் சுற்றிலும் இருந்து கற்பித்துக் கொண்டே இருக்கிறார். மாணவனாக நீங்கள் மாறி கற்றுக் கொள்ள வேண்டியது மட்டும் தான் பாக்கி. குழப்பமாக இருக்கிறதா? கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன்.

எறும்பு - சுறுசுறுப்பையும், ஒழுங்கு முறையையும், மழைக்கால சேமிப்பையும், காகம் - ஒற்றுமையையும், சிங்கம் - ஆண்மையின் கம்பீரத்தையும் குருவாக இருந்து நித்தமும் கற்றுத் தந்து கொண்டே இருக்கின்றன. என்றாவது ஒருநாள் கற்றுக் கொண்டு அதை உங்களின் வாழ்க்கையின் உயர்வுக்கு பயன் படுத்தி இருக்கிறீர்களா? இது தனிமனித ஒழுங்கிற்கு என்றால் வெற்றி வாழ்க்கைக்கு உதாரணம் சொல்கிறேன். பறவைகள் கூட்டு முயற்சியையும், கொக்கு சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதையும், சிலந்தி விடாமுயற்சியையும் கற்றுத்தந்து கொண்டிருக்கிறதே! நீங்கள் கவனித்ததுண்டா? கற்றுக் கொண்டதுண்டா? இல்லையென்றால் இந்த நிமிடத்திலிருந்து மாணவனாய் மாறுங்கள். ஏனெனில் பறவை என்ற குருவிடம் கற்ற பாடம் தான் ரைட் சகோதரர்களை விமானத்தைக் கண்டுபிடிக்கத் தூண்டியது. சிலந்தி என்ற குருவிடம் பாடம் கற்ற இராபர்ட் புரூஸ் இழந்த தன் நாட்டை மட்டுமல்ல தன்னுடைய நம்பிக்கையையும் மீட்டான். இது வரலாறு. நீங்களும் வரலாற்றில் இடம் பெற விரும்பினால்  கற்றுக்கொள்ள தயாராய் இருங்கள்.

மற்றவர்களின் திறமைகளை மதியுங்கள் :

திறமைசாலிகள் எங்கிருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் மதிக்கப் பழகுங்கள். உங்களின் மேலதிகாரியை விட உங்களின் கீழ் பணியாற்றுபவர்கள் திறமைசாலிகளாக இருந்தால் தான் உங்களைத் திறமைசாலியாக நிர்வாகத்திற்கு காட்டிக் கொள்ளமுடியும். எனவே பெரியவன், சின்னவன், ஏழை, பணக்காரன், என் கீழ் பணிசெய்பவன் என்று எந்த வித ஏற்றத்தாழ்வும் பாராமல் திறமைக்கும், திறமைசாலிக்கும் மதிப்புத் தர தயாராய் இருங்கள். அப்படித் தந்தவர்கள் சாதித்திருக்கிறார்கள். தங்களை வெற்றியாளர்களாக அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.

உலகிலேயே அதிக பங்குதாரர்களைக் கொண்ட நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தை அதன் தலைவர் திருபாய்அம்பானி திறமைசாலிகளைக் கொண்டே உருவாக்கினார். திறமைசாலிகளை உலகம் முழுக்க தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் தந்து தங்கள் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்துவதும், அதன் மூலம் அவர்களின் திறமைகளை தங்களின் வெற்றிகளுக்கு பயன்படுத்த வைப்பதும் தான் இன்றளவும் ரிலையன்சின் வெற்றிக்கான வழிகளில் ஒன்றாக பின்பற்றப்படுகிறது. நிர்வாகத்தில் தான் என்றில்லை. வீட்டில்  மனைவியின், குழந்தைகளின் திறமையைப் பாராட்டி அவர்களை உற்சாகப்படுத்தும் கணவன் வெற்றிகரமான குடும்பத் தலைவராக கொண்டாடப்படுகிறார். ஏனெனில் தானும், தன் திறமையும் பிறரால் மதிக்கப்பட வேண்டும் என நினைப்பது மனித இயல்பு. அதை மிகச்சரியாக தன்னுடைய நிர்வாகத்தில், வீட்டில் செயல்படுத்துகிறவர்கள் வெற்றி பெறுகின்றனர்.

முன்மாதிரியாய் இருங்கள் :

நீங்கள் நீங்களாக இருப்பது எப்படி வெற்றிக்கு அவசியமோ அதே மாதிரி மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நடந்து கொள்வதும் அவசியம். உங்களின் அலுவலக வருகைப் பதிவேட்டில் உயரதிகாரியாக இருக்கும் உங்களின் வருகை சரியான நேரத்தில் இருக்குமானால் மற்றவர்களும் சரியான நேரத்திற்கு வந்து விடுவார்கள். இந்த நடைமுறையை வெற்றி முறையாகப் பின்பற்றும் நோக்கில் தான் பல அலுவலக வருகைப் பதிவேடுகளில் நிர்வாகியின் பெயர் முதலிடத்தில் இருக்கும். முதலிடத்தில் இருப்பவர்கள் முன் மாதிரியாய் இருப்பதன் மூலம் மற்றவர்களையும் அப்படியே இருக்கச் செய்ய முடியும். சுந்தரம் க்ளெய்டன் லிமிடெட்டின் தலைவர் டி.வி.எஸ். வேணுசீனிவாசன் தங்கள் நிறுவனத்தில் ஏதாவது குப்பை கீழே கிடப்பதை பார்த்தால் உடனே அதை குனிந்து எடுத்து குப்பைத் தொட்டியில் போடுவாராம். “எதிலும் ஒழுங்கு” என்ற நிறுவனத் தலைவரின் எண்ணம் ஒரு முன் மாதிரியாக கடைநிலை ஊழியர் வரையிலும் அங்கு கடைபிடிக்கப்படுகிறது. இது டி.வி.எஸ். நிறுவனத்தின் வெற்றி என்றால் அதன் தலைவராக மட்டும் இருக்காமல் நிர்வாக அதிகாரியாகவும் இருந்து மற்ற நிர்வாகிகளுக்கு முன்மாதிரியாய் இருப்பது வேணுசீனிவாசன் என்ற தனிமனிதனின் வெற்றி!

டாட்டா தம்முடைய அலுவலகத்தை விட்டு வீட்டிற்கு கிளம்பும் போது அவசியமின்றி எரியக்கூடிய விளக்குகளை எல்லாம் அனைத்து விட்டுச் செல்வாராம். இந்த முன்மாதிரி தலைவரின் நிறுவனம் இன்று உலக அளவில் வெற்றி பெற்று நிற்கிறது. எனவே, உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளுங்கள். தானாகவே மற்றவர்கள் உங்களை பின்பற்றத் தயாராகி விடுவார்கள்.

தவறுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் :

இவைகளைப் பயன்படுத்தி அதை மற்றவர்கள் மீது சுமத்தவோ முயலாதீர்கள். அப்படிச் செய்வது அரசியல்வாதிகளின் வேலை. ஆள்பிடிக்கும் கூட்டத்தின் அஸ்திரம். நீங்கள் வெற்றி பெற முயற்சிப்பவர்கள். உங்களுடைய அஸ்திரமாக இருக்க வேண்டியது குள்ளநரித்தனமல்ல. தைரியம். “தைரியம் புருஷ லட்சணம்” என்பதை நினைவில் கொள்ளுங்கள். தன் தவறுக்குத் தானே பொறுப்பேற்றுக் கொள்ள முடிகிறவனால் தான் அதைச் சரிசெய்யவும் முடியும். சரிசெய்யப்பட்ட தவறுகள் தான் சாதனைகளாக மாறியிருக்கின்றன. இன்றைய கண்டுபிடிப்புகள் எல்லாமே தவறுகளை சரிசெய்ததில் தான் முழுமையடைந்து பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. எனவே நீங்கள் முழுமை பெற்ற வெற்றியைப் பெற்று வெற்றியாளராக திகழ வேண்டுமானால் உங்களின் தவறுகளுக்கு மற்றவர்களை நோக்கி கை நீட்டாமல் நீங்களே துணிச்சலுடன் பொறுப்பேற்றுக் கொள்ள பழகுங்கள்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்திருந்தார். அரசாங்கத்தோடு மக்கள் ஒத்துழைக்க வேண்டாம் என்ற காந்தியின் அறைகூவலுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். ஆங்காங்கே அரசுக்கு எதிராக ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களும் மக்களால் நடத்தப்பட்டன. அப்படி ஊர்வலமாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள செளரிசெளரா என்னுமிடத்தில் வந்து கொண்டிருந்த மக்கள் தங்களைத் தாக்கியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் கொடூரமாக நடந்து கொண்ட காவலர்களில் இருபத்திரண்டு பேரை காவல் நிலையத்திற்குள் பூட்டி வைத்து தீயிட்டுக் கொழுத்தினர். இதைக் கேள்விப்பட்ட காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை உடனடியாக வாபஸ் பெற்றுக் கொண்டதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. மக்களை தான் முறையாக கட்டுப்படுத்தவில்லை என்று குறிக்கும் விதமாக “நான் இமாலாயத் தவறு செய்து விட்டேன்” என்றார். இந்த தைரியம் தாம் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிரான வெற்றியை அவருக்குப் பெற்றுத் தந்தது. தேசப்பிதாவாக பரிணாமம் பெறச் செய்தது.

வெற்றி பெறுவதற்காகப் படியுங்கள் :

அப்படியானால் இதுவரை பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நான் படித்தவைகள் வெற்றி பெறுவதற்காக இல்லையா? என நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்வி என்றாலும் உண்மை என்ன தெரியுமா? நீங்கள் படித்த பாடப் புத்தகங்களால் வாழ்க்கையில்  சில மதிப்பீடுகளைப் (RANK) பெற முடியுமே தவிர ஒருநாளும் வெற்றி (SUCCESS) பெற முடியாது. அதனால் தான் பாடத்திட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியங்கள் குறித்து இன்று எல்லோரும் பேச ஆரம்பித்துள்ளனர். கல்விநிறுவனங்கள் தங்கள் பாடத்திட்டங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த ஆரம்பித்துள்ளன.

எல்லோருக்கும் சமமான நிலையில் நீங்கள் இருந்தால் பத்தோடு பதினொன்று என்ற கணக்கில் தான் அறியப்படுவீர்கள், சாமானியருக்குரிய இந்த கணக்கிலிருந்து சாதனையாளனுக்குரிய கணக்கிற்கு மாற வேண்டுமானால் அதற்கு வெற்றி என்கின்ற விலாசம் தேவை. அந்த விலாசத்தை பாடப்புத்தகங்களால் ஒருநாளும் பெற முடியாது என்பதால் தான் வெற்றி பெறுவதற்காக படியுங்கள் என்றேன். வெற்றிப் பயணத்திற்கான தூண்டல்களை தரக்கூடிய தன்னம்பிக்கை, வாழ்வியல் நூல்கள், வெற்றியாளர்களின் வாழ்க்கை வரலாறுகள், வெற்றியாளர்களின் வெற்றி மொழிகள் போன்ற வெற்றி சார்ந்த நூல்களைப் படியுங்கள். அப்படி படிப்பதன் மூலமும், அதன் வழி பெறும் வழிகாட்டல்கள், அனுபவங்கள் மூலமும் மட்டுமே உங்களுக்குள் உறைந்து கிடக்கும் ஆற்றல்களை உசுப்பி விட்டு அதன் பாய்ச்சலை அதிகமாக்கிக் கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். செலவில்லாமல், நினைத்த நேரத்தில் கிடைக்கக்கூடிய புத்தக அறிவுரைகளால் பிரமாண்ட வெற்றியைப் பெற முடியும் என்பதால் தான் இந்தியாவிற்கு வெளியிலும் தன்னுடைய நிறுவனப் பொருட்களுக்கு வாடிக்கையாளர்களை வைத்திருக்கக் கூடிய கெவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரெங்கநாதன் ”இளம் வெற்றியாளர்கள் தினமும் சிறிது நேரம் ஒதுக்கி வெற்றி சம்பந்தமான புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்” என அறிவுரை கூறுகிறார். இன்று பில்கேட்ஸ்க்கு அடுத்த இடத்தில் இருந்து கொண்டு அவருடன் போட்டியிடக்கூடிய அளவுக்கு வளர்ந்து வரும் பணக்காரரான வாரன்பஃபெட்டின் அஸ்திவாரம் சிறுவயதில் அவரால் படிக்கப்பட்ட ஒரு புத்தக அறிவுரையில் இருந்து தான் ஆரம்பமானது.

காந்தியடிகள் சுதந்திரம் வாங்கித் தந்தார் என்று சொல்லித் தரும் பாடப்புத்தகங்களை விட எப்படி வாங்கித் தந்தார் என்று சொல்லித் தரும் வாழ்க்கை புத்தகங்களில் தான் ஒரு போராட்டத் தலைவனுக்கு தேவையான விசயங்கள் விரவிக்கிடக்கும் என்ற நிஜத்தை உணருங்கள். எனவே, உங்களின் இலட்சியத்திற்கு உதவக்கூடிய புத்தகங்களைத் தேடி எடுத்து அதற்கென சில மணிநேரங்களை ஒதுக்கிப் படியுங்கள். அது உங்களை நீங்களே புதுப் பித்துக் கொள்ள உதவும்.

தேடிச் சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடத் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப் பருவமெய்தி
கொடுங்கூற்றுக் கிரையெனப் பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? –

என பாரதியைப் போல செருக்காய் நின்று வெற்றிகளை குவிக்க விரும்பினால் மேற்கூறிய ஐந்து காரணிகளின் வழி தொடந்து இயங்குங்கள். அந்த இயக்கம் உங்களை வெற்றியை நோக்கி நகர்த்துவதோடு மட்டுமல்ல தொடர்ந்து நகரவும் வைக்கும்.

நன்றி : நிலாச்சாரல்

Sunday, 23 November 2014

புகைப்படம் - 7

சிங்கப்பூரின் தேசிய நூலக அதிகாரி புஷ்பலதா நாயுடு அவர்களிடமிருந்து பரிசு பெற்ற போது

Wednesday, 19 November 2014

”அவளு”க்கும் பெயர் இருக்கு!


நீண்ட நேரம் அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த மகனிடம் அம்மா எங்க? என்றேன். சமைக்க கறி வெட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றவனிடம்அவள்ட்ட கொடு என்றேன். ”அவள்னு ஏன் சொல்றீங்க. அம்மாவுக்கு பேர் இல்லையா? என்றான். எதிர்பாராத இந்தக் கேள்வி சற்றே தடுமாற்றத்தைத் தர சுதாரித்துக் கொண்டு அப்படிச் சொன்னா தான் அவளுக்குப் பிடிக்கும் என்றேன். அது எப்படி உங்களுக்குத் தெரியும்? என்றான். அவ எனக்கு பிரண்ட்(FRIEND). அதுனால தெரியும் என்றேன். பிரண்டுன்னா தெரியுமாக்கும். அவங்க சொன்னா தானே உங்களுக்குத் தெரியும். பிரண்டு கிட்ட கொடுன்னு சொல்லுங்க. ”அவகிட்டேன்னு சொல்லாதீங்க. இல்லைன்னா சங்கீதகலா (மனைவி பெயர்) கிட்ட கொடுன்னு சொல்லுங்க. சரியா? என்றான். சரி என சொன்னவுடன் அப்பா இனிமேல் அப்படி சொன்னா எனக்கிட்ட சொல்லுங்க என்ற படி மனைவியிடம் செல்போனை கொடுத்தான். மகனிடமிருந்து அலைபேசியை வாங்கிய மனைவி சற்றே நக்கலாக ”இன்னைக்கு செம பாடம் போலஎன்றாள். இன்று மகனிடமிருந்து வந்த இந்த எதிர்வினைஒருமையில் அழைப்பது நட்பு சார்ந்த விசயமில்லை. உரிமை சார்ந்த விசயம்” என்பதை உணர்த்தியது.

Tuesday, 18 November 2014

உல்லாசக்கப்பல் பயணம்


சுற்றுலா செல்வதற்கு ஒரு காலத்தில் சாத்தியமானதாக இருந்த கப்பல் பயணம் பொருளாதாரபலம், நேர விரய தவிர்ப்பு ஆகியவைகளால் ஆகாயவிமானங்களுக்கு மாறின. விமான பயணங்களின் மூலம் பார்க்க வேண்டிய இடங்களின் தூரங்கள் குறைந்தது போலவே அந்தப் பயணம் சார்ந்த நினைவுகளின் வாழ்நாளும் குறைந்து போயின. இந்த நிஜத்தை உணர்ந்த கப்பல் நிறுவனங்கள் தங்களுடைய உல்லாசக் கப்பல்கள் மூலம் ”க்ரூஸ்” எனப்படும் பயணங்களை அறிமுகம் செய்தன. இன்று பிரபலமான சுற்றுலா வகைகளுள் ஒன்றாக அது மாறிவிட்டது. விமான பயணச் சுற்றுலாக்கள் போல கப்பல் பயணச் சுற்றுலாக்கள் சட்டென அது சார்ந்த நினைவுகளை நீர்த்து போக வைப்பதில்லை. விரைவாக இன்னொரு மனநிலைக்கு நம்மை கடத்துவதில்லை. இன்னும் சொல்லப்போனால் பசுமரத்தாணியாய் மனதில் உறைந்து அவ்வப்போது அலைகளாய் எழுந்து கொண்டே இருக்கும். கப்பலின் பிரமாண்டம் போலவே அதில் கிடைக்கும் பிரமாண்ட வசதிகள், பல நாட்டவரோடு குறிப்பிட்ட சில தினங்கள் கலந்து குழுவாக இன்னும் சொல்லப்போனால் நவநாகரீக வசதி கொண்ட கிராமத்தில் வாழ்தல் போன்ற உணர்வு (கப்பல் சிப்பந்திகள், கலைஞர்கள் தவிர இந்த பயணநாவல் பேசும் கப்பல் பயணத்தில் 36 நாடுகளைச் சேர்ந்த 3624 பிரயாணிகள் பயணம் செய்துள்ளனர்) ஆகியவைகள் அதற்கு முக்கிய காரணம் எனலாம். இந்த காரணத்தை ஏற்க முகாந்திரம் கேட்பவர்களுக்கு அதற்கான எல்லா தரவுகளையும் தாராளமாய் அள்ளித் தருகிறது இந்த உல்லாசக் கப்பல் பயணம் நூல்.

”நாவல்” என ஆசிரியர் குறிப்பிட்டிருந்தாலும் இதில் நாவலுக்கான இழை பூரணி, அருண், குமிகோ, லெனின், வாங்லி, யாசியன், திசைகள் மாறி வந்து ஒரு சேர கப்பலில் பயணிக்கும் நண்பர்கள் என கதாபாத்திரங்களால் வாழ்வியலுக்கான விசயங்களை தலையில் குட்டு வைப்பது போல சொல்லியும், எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படியும், சுவராசியமாய் ஒரு மெல்லிய சரடாக மட்டுமே நகர்ந்து செல்கிறது. மற்றபடி நூல் ஒரு கப்பல் பயணத்தை மட்டுமே முழுமையாக தருகிறது.

சிங்கப்பூர் – மலேசியா – தாய்லாந்து  என மூன்று நாடுகள் ஐந்து நாட்கள் என சுற்றி வந்த இந்த கப்பல் பயணத்தை நூலாசிரியரே மேற்கொண்டு அனுபவித்து அதன் ஈரம் காயாமல் கொடுத்திருப்பதால் நேரடியாக நாமே பயணம் செய்த அனுபவத்தை உணர முடிகிறது. உணர்ந்தால் மட்டும் போதாது அனுபவிக்க வேண்டும் என்றால் பயணம் செய்து தான் ஆக வேண்டும். செலவு என்று பார்த்தால் கணவன், மனைவி, குழந்தை என மூவர் அடங்கிய குடும்பத்திற்கு 1,75,000 ரூபாயாம்! கப்பலில் தரப்படும் அறை உள்ளிட்ட சில வசதிகள் தவிர மற்ற வசதிகளுக்கு நாம் செய்யும் செலவு தனியாம்!! கப்பலில் ஏறும் போதே அடையாள அட்டையோடு (SEE PASS) கடன் அட்டையையும் (CREDIT CARD) இணைத்து விடுவார்களாம்!!!

சிங்கப்பூரில் தொடங்கும் ஐந்து நாள் கப்பல் பயணத்தை தனித்தனி நாளாக பிரித்து வரிசைப்படுத்தி அழகாக நூலாசிரியர் கிருத்திகா சொல்லியிருக்கிறார். ஓரளவு விபரம் தெரிந்த குழந்தைகள் உள்ள பெற்றோர் மட்டுமல்ல கைக்குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்கள் கூட இந்த க்ரூஸ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்றும், அதற்காக கப்பலிலேயே இருக்கும் வசதிகளை சொல்லியும் சகலருக்கும் பயண ஆசையை தூண்டும் தகவல்களோடு கப்பலில் பின்பற்றப்படும் நடைமுறைகள், அச்சமயங்களில் நாம் கவனிக்க வேண்டிய விசயங்கள், கப்பலில் கிடைக்கும் வசதிகள், கப்பல் பணியாளர்கள் பிரயாணிகளை கவனித்துக் கொள்ளும் விதம், பிரமாண்டமான அரங்குகள், கப்பலின் பதினைந்து தளங்கலிலும் கிடைக்கும் பொழுதுபோக்கு சார்ந்த அம்சங்கள், அதை எப்படியெல்லாம் முழுமையாக பயன்படுத்தலாம் என்பதை நேரவரிசைப்படி சொல்லி இருப்பதால் அயர்ச்சியுறாமல் நூலை வாசிக்க முடிகிறது. எழுத்தில் சொன்னதை கண்களில் கண்டு இரசிக்க ஏதுவாக வண்ண புகைப்படங்களையும் இணைத்துள்ளது நூலை இன்னும் சிறப்பாக்குகிறது.

பயணத்தை தொடங்குவதற்கு முன் என்னென்ன செய்ய வேண்டும், அன்னியநாட்டில் நுழைவதற்கான நுழைவுச் சீட்டு (VISA) நடைமுறைகள், அந்தந்த நாடுகளின் துறைமுகத்திற்கு கப்பல் சென்ற பின் வெளியேறி சுற்றிப்பார்ப்பதற்கான நடைமுறைகள், அங்கு வாங்கக் கூடிய பொருட்கள் போன்ற தகவல்களை சொல்லி வரும் நூலாசிரியர் கட்டம் கட்டப்பட்ட அடையாளங்களுக்குள் பயணக்காப்புறுதி உள்ளிட்ட பயணங்களின் போது மறக்காமல் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்களையும் சுட்டிக் காட்டுகிறார்.

நூலாசிரியர் ஒரு கவிஞர் என்பதால் கப்பலுக்கு வெளியே, வானிற்கு கீழே நிகழும் நிகழ்வுகளை ஆங்காங்கே கவிதைகளின் வழியே கைப்பிடித்து காட்டுகிறார். கடலில் பயணிக்கும் கப்பலுக்குள்ளும், துறைமுகத்தில் இறங்கி நாடுகளை சுற்றிப்பார்க்கும் பொழுதும் சிக்கனமாய் இருப்பதற்கான யோசனைகளை சிக்கனமில்லாமல் நூல் முழுக்க சொல்லியிருக்கிறார். கூடுதல் தகவல்களை அறிய ஏதுவாக சம்பந்தப்பட்டவைகளின் இணையதள முகவரிகள் தேவையான இடங்களில்  இணைக்கப்பட்டிருக்கிறது.

சரளமான தமிழ் நடையில் நூலாசிரியரின் எழுத்திலேயே சொல்ல வேண்டுமானால் ”குழிகள் இல்லாத விரைவுச்சாலையில் வழுக்கிக் கொண்டு சென்ற கார் பயணம் போல” வாசித்தலின் வழி ஒரு முழு கப்பல் பயணத்தை அதன் பிரமாண்டத்தோடும், அழகியலோடும் என்னை அனுபவிக்க வைத்தது இந்நூல். நீங்களும் வாசியுங்கள். நிச்சயம் நீங்களும் உணர்வீர்கள்.

நன்றி : மதிப்புரை.காம்

Tuesday, 11 November 2014

இங்கிலீஸ்ல தெரியாதுல!


வேனில் தம்பி அவன் பிரண்ட்ஸ் கூட ஏதேதோ பேசிக்கிட்டே வந்தான். அவன் பிரண்ட்ஸ்களும் ஏதேதோ சொல்லிக்கிட்டு வந்தாங்க. முதல் சீட்டுல உட்கார்ந்திருந்த மேடம் (PRINCIPAL) “TALK TO ENGLISH” அப்படின்னு சொல்லவும் எதுவுமே பேசாமல் அமைதியா இருந்துட்டானுகஎன்றாள் பள்ளியில் இருந்து திரும்பிய மகள். உடனே மகனிடம் மேடம் அப்படிச் சொல்லவும் ஏன் பேசவில்லை? எனக் கேட்டேன். நாங்க பேசுற எல்லாத்துக்கும் இங்கிலீஸ்ல தெரியாதுல டாடி. தமிழ்ல தான் தெரியும். அதான் பேசல என்றான். பாடங்கள் சாராத விசயங்களைக் கூட தாய்மொழியில் பேசி மகிழ குழந்தைகளை அனுமதிக்க மறுக்கும் இத்தகைய சூழலில் தான் தாய்மொழி புழக்கத்திற்கான முன்னெடுப்புகளும் நிகழ்ந்து வருகிறது என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருந்தது. கூடவேகுழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்என்ற கவிக்கோவின் வரிகளும், பள்ளிக்கூடத்தில் என்ன சொல்லித் தந்தார்கள்? எனக் கேட்ட தந்தையிடம் பேசாமல் இருக்கச் சொன்னார்கள் என அந்தக் குழந்தை சொன்னதாய்ஸ்கூல் - டேஞ்சர்என்ற புத்தகத்தில் படித்ததும் தான் நினைவுக்கு வந்தது.

Sunday, 9 November 2014

புகைப்படம் - 6

தங்கமீன் அமைப்பின் மாதாந்திர கலந்துரையாடல் அரங்கில்

நகைச்சுவை நானூறுஒரு மாலை நேரப் பொழுதில் நண்பராய் அறிமுகமான கீழை அ. கதிர்வேல் அவர்கள் தன்னுடைய நகைச்சுவை நானூறு நூலை என்னிடம் கொடுத்தார். நகைச்சுவையின் மூலம் வேலைப்பளுவின் அழுத்தங்களை அகற்றிக் கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கும் எனக்கு அது அற்புத பரிசாக இருந்தது. மனம் கொஞ்சம் குன்றும் போதெல்லாம் புத்துணர்வு கொடுத்துக் கொள்ள வசதியாக என் அலுவலகத்திலேயே எப்பொழுதும் வைத்திருக்கிறேன். நீங்களும் வாங்கி வைத்துக்கொள்ள பரிந்துரைக்கிறேன்.

நகைச்சுவை நானூறு என்ற பெயருக்கேற்ப நகை (புன்னகை) + சுவையால் நிரம்பி நிற்கும் இந்நூலின் எந்த ஒரு பக்கத்தில் இருந்தும் உங்களுக்கான சிரிப்பை பெற்றுக் கொள்ளமுடியும்.  நீண்ட பத்திரிக்கை அனுபவம் கொண்ட கதிர்வேல் அவர்கள் வாழ்வின் நெடிய நிகழ்வுகளை எல்லாம் நகைச்சுவையாக இந்நூலில் பிழிந்து தந்திருக்கிறார். நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு நிகழ்வும் இந்நூலில் நகைச்சுவையாய் நகர்கிறது. நம்மையும் நகர்த்துகிறது!

உலகம் முழுக்க பரவி நிற்கும் வேகத்தடையான இலஞ்சத்தின் உயரம் இந்தியாவில் சற்றே அதிகம். அதைக் கடக்காமல் யாரும் எந்த ஒன்றையும் செய்திருக்க வாய்ப்பு குறைவு என்பதால் அது பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம் இருக்கவே செய்யும். அந்த அனுபவ குமுறலை –
அந்த செக்‌ஷனில் ஏன் சார் கூட்டம்?
ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் இலஞ்சம் கொடுக்கிறவர்களுக்கு ஒரு ”கேஷ்பேக்” அன்பளிப்பாய் கொடுக்கிறாங்களாம் – என நகைச்சுவை தேன் தடவி தருகிறார். இலஞ்சத்திற்கே அன்பளிப்பு தரும் வேதனையின் துயரம் நகைச்சுவையின் வழி சாடலாகிறது!.

வாச ரோஜாவை……வா சரோஜா என வாசிப்பதைப் போல புரிந்து கொள்ளலில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை -
என்ன சார் பாங்க் பூரா ஒரே நோயாளிகள் கூட்டமா இருக்கு?
நலிவடைந்தோருக்கு கடன் வழங்கறதா சொல்லி இருந்தாங்களாம் அதான்”. -  என்று எளிமையாக எடுத்துக்காட்டும் நகைச்சுவைகள் நூல் முழுக்க விரவி கிடக்கிறது.

அலுவலகங்களில் கோப்புகள் நகர்வது குதிரைக் கொம்பு. அதை -
எதுக்கு உங்க ஆபிஸ் கோபுவை “கோப்பு”, “கோப்பு”ன்னு கூப்பிடறீங்க?
இருக்கிற இடத்திலிருந்து இரு இஞ்ச் நகரமாட்டானே! – என அந்த சூழலில் இருந்தே சுட்டிக்காட்டுகிறார்.

சிலர் விளக்கம் சொல்லும் விதமே வியக்க வைத்துவிடும். எப்படி தான் யோசிப்பானுகளோன்னு வடிவேலு சொல்லுவதை நம் கண்முன் கொண்டுவந்து போகும். அப்படி எனக்கு வரச்செய்த நகைச்சுவைகள் இதில் நிறைய இருக்கிறது. அதில் ஒன்று -
ஏம்பா சாமி சிலையைத் திருடுனே?
கடவுள் இந்த உலகத்துக்கே பொதுவானவர். அதனால் தான் அவரை நாங்க வெளிநாட்டுக்கெல்லாம் கூட்டிட்டு போறோம்!

அதேபோல, சில வார்த்தை விளையாட்டுகள் மூலம் தன் தவறுகளை சரியாய் இருப்பது போல காட்டி விடுவார்கள். ஒரு ஜோக்கை பாருங்கள்
எங்க ஸ்கூலில் நன்கொடை வாங்கறதில்லை
அப்படியா?
ஆமாம். எல்லாத்தையும் பீசாகவே வாங்கிடறோம்!
சரியாக கவனிக்கா விட்டால் தவறை சரி என நம்மை ஒப்புக் கொள்ள வைத்து விடும் நிகழ்வுகளைக் கூட நகைச்சுவையாக இந்நூலில் தந்திருக்கிறார்.

சொந்த வீடு என்பது பலருக்கும் வாய்க்காத கனவு. வாய்த்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். வீட்டைக் கட்டிப்பார் என்பது சவாலான விசயம் என்பதை
என்ன சார் சொல்றீங்க? வீட்டுக்கு அஸ்திவாரம் போட்டதோட வேலை நிக்குதுங்களா?
ஆமாசார். இருந்த ஆஸ்தி எல்லாம் அஸ்திவாரத்தோட முடிஞ்சுட்டது! என  சுட்டுகிறது இந்த நகைச்சுவை.

எழுத்தாளர் : போனவாரம் வெளியான என் சிறுகதையைப் பற்றி கடிதங்கள் வந்ததா?
பத்திரிக்கை ஆசிரியர் : ஓ........வந்ததே. மூணுபேர்  அது தங்களோட கதையின் ”காப்பி”ன்னு எழுதியிருக்காங்க.           

இப்படி பக்கத்துக்கு பக்கம் நகைச்சுவையோடு நம்மை சிந்திக்க வைத்த படியே நகரும் நிகழ்வுகள் வழக்கமான மருத்துவம், அரசியல், குடும்பம், பள்ளிக்கூடம், இலஞ்சம் போன்றவைகளோடு அறிவுத்திருட்டு, டைமிங் காமெடி, மனித இயல்புகள், சக மனிதர்களின் குணங்கள் என புதிய பக்கங்கள் வழியேயும்  நம்மை அழைத்துப் போகிறது. இந்த நூலின், இந்த நூலாசிரியரின் சிறப்பு இது எனலாம். இதற்காகவே இந்நூலை விலை கொடுத்து வாங்கலாம். ஒரு காக்டெயில் நகைச்சுவை போதை நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.