Tuesday, 27 January 2015

செல்லக்கிளியின் தம்பி

நந்தன் ஸ்ரீதரனின் தாழி என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதை ”செல்லக்கிளியின் தம்பி”. எதிர்வினையாற்றாமல் ஏவல் வேலை செய்யும் சென்றாயன் ”மெண்டல்” (பைத்தியம்) என்ற பெயருக்குரியவனாய் மாறிப்போன வலியைச் சொல்லும் கதை. 

அந்த ஊர் நாட்டாமையின் ஒரே மகள் செல்லக்கிளி. திடீரென நாட்டாமை இறந்து போக அவரின் உடன் பிறந்தவர்களால் செல்லக்கிளியும், அவளுடைய அம்மாவும் ஒதுக்கப்படுகிறார்கள். சுய சிந்தனையின்றி செயல்படும் செல்லக்கிளியை திருமணமான மூவரோடு ஓய்வு பெறும் வயதுடைய ஒருவரும் சுவைத்து எறிய அவள் கருவுறுகிறாள். குடும்ப மானத்தைக் காக்க அவளை ஆற்று நீரில் மூழ்கடித்து கெளரவக் கொலை செய்ய முடிவு செய்து அவள் கண்முன்னாலயே உறவினர்கள் அதற்கான திட்டத்தையும் போடுகின்றனர்.

அதை நிறைவேற்ற வரும் இருவர் அவளை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தி விடக்கூடாது. என்பதற்காக அவளோடு அவளின் உடன்பிறவா தம்பி சென்றாயனை அனுப்பி வைக்கின்றனர். நடக்க இருப்பவைகளைத் தெரிந்திருந்த போதும் உடன் வரும் தம்பியோடு விளையாட்டு காட்டிக் கொண்டு வரும் செல்லக்கிளி திடுதிப்பென ”எப்புடிடா நான் செத்துப் போவேன்?” எனக் கேட்கும் போது அவனுக்கு வந்த அதே அதிர்வு நம்மையும் கவ்விக் கொள்கிறது.

”மெண்டல்” என நாமெல்லாம் அழைப்பவர்களுக்குள்ளும், அப்படியான மனநிலையில் இருப்பவர்களுக்குள்ளும் நம்மால் உணர முடியாத துன்பம் இரகசியமாய் புதைந்து கிடக்கிறது என்பதை ”அம்புட்டு பேரும் மெண்டலுன்றாங்க. என்ன நடந்துச்சுன்னு எல்லாருக்கும் தெரியும். எப்படி நடந்துச்சுன்னு எனக்கும், நான் சொல்லி உனக்கு மட்டும் தான்  தெரியும். நம்ம துன்பம் யாருக்குண்ணே தெரியும்” என்ற சென்றாயனின் வார்த்தைகளின் வழி வாசிக்கும் நமக்கு உணர்த்தி விடுகிறார் ஆசிரியர்.

கால ஓட்டத்தில் எதார்த்த நிலையின் அடையாளங்களை தொலைத்தவனாய் இருந்த சென்றாயனை அடையாளம் கண்டு கொண்டு கட்டியணைத்து ஆறுதல் படுத்த முனையும் போது அவன் மெண்டலா ஆகிவிட்டான் என நண்பர்கள் கூறிய போதும் புன்னகைத்த படியே நகர்ந்து செல்லும் சென்றாயனின் நடையை ”உணவேதும் கிடைக்காமல் சமையலறையை விட்டு வெளியேறும் தளர்ந்த எலியைப் போன்ற நடை” என்று சுட்டிய வரி நிராகரிப்பின் வலி!

மன நிலை முற்றிலும் சீராக இல்லாத பெண்ணிடம் பொறுப்பாக இருக்க வேண்டியவர்களின் கொள்ளும் மோகம், கெளரவக் கொலை அதுவும் சம்பந்தப்பட்டவருக்கு தெரிந்தே நிகழ்த்தப்படும் கொடுமை, மற்றவர்களின் மனதை உணராமல் நமக்கு நாமே கொண்ட புரிதல்களின் வழி சம்பந்தப்பட்டவர்களை மதிப்பிடும் துயரம் என அன்றாடம் நாம் காணும், கேட்கும் நிகழ்வுகளின் வழி கதையை எளிய நடையில் நகர்த்திச்செல்லும் ஆசிரியர் கதாபாத்திரங்களின் வார்த்தைகள் வழி நமக்குள்ளும் அந்த வலியின் துயரை நுழைத்து விடுகிறார்.

ஆசிரியர்  : நந்தன் ஸ்ரீதரன்
    கதை : செல்லக்கிளியின் தம்பி
வெளியீடு : நிலமிசை

Monday, 26 January 2015

ஓலைக்கிளி

நகரத்தில் வசிக்கும் மருத்துவரை சவட்டி என்ற பட்டப்பெயரில் அழைக்கப்படும் பரமன் பலவருடம் கழித்து வயது வந்த பெண்ணோடு சந்திக்க வருகிறான். தன் மகள் என அறிமுகப்படுத்தும் அவளைப் படிக்க வைப்பதற்காக பண உதவி கேட்டு இரண்டாயிரம் ரூபாய் வாங்கிச் செல்கிறான். அவரிடம் வாங்கியதைப் போலவே தெரிந்தவர்களிடம் எல்லாம் ஆளுக்கு இரண்டாயிரம் என வசூலிக்கும் சவட்டி அந்தப் பணத்தின் மூலம் ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிக்கிறான். எளிதில் நம்மால் யூகிக்க முடியாத அதை சவட்டியின் குணங்களோடும், வாழ்வியல் முறைகளோடும் சொல்கிறது ”ஓலைக்கிளி” கதை. இக்கதை எஸ்.ராமகிருஷ்ணனின் ”மழைமான்” தொகுப்பில் உள்ளது.

”எம்மான் என் பேரை எல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்க. அந்தப்பேரு எனக்கே மறந்து போச்சு” என்ற வரியின் வழி இட்டபெயர்களை பட்டப்பெயர்கள் மறக்கடித்து விடும் அவலத்தோடு மருத்துவரும், சவட்டியும் சந்திக்கும் கால இடைவெளியையும் -

”அந்த ஆளையும், அந்தப் பொண்ணையும் பார்த்தா ஒட்டவேயில்லை” என்றும்,  சவட்டி ஏமாற்றப் போவதை முன்னரே உணர்ந்ததைப் போல ”உங்களை நல்லா ஏமாத்திக் காசு வாங்கிட்டுப் போயிட்டாங்க” என்றும் மருத்துவரான தன் கணவரிடம் அவரின் மனைவி சொல்வதிலிருந்து பெண்களின் முன் உனர் தன்மையையும் –

”உங்கள் அத்தனை பேரையும் தேடி வந்து ஏமாற்றியதன் வழியாக என்னைப்பற்றிய நினைவை உங்களிடம் புதுப்பித்துக் கொண்டேன்” என்று கடிதத்தில் எழுதும் சவட்டியின் வரிகளின் மூலம் ஒவ்வொரு மனிதனும் தன்னை மற்றவர்களிடம் பதியம் போட்டுச் செல்ல விரும்பும் மனித இயல்பையும்  கோடி காட்டியபடியே கதை நமக்குள் பதியம் போடத் துவங்குகிறது.

ஏமாற்றி பணம் வசூலித்தது எதற்கு? என்று கடிதம் எழுதிய சவட்டி அதனோடு வைத்து அனுப்பிய ஓலைக்கிளியைப் பார்த்து சந்தோசப்படும் மனைவியிடம் அதைத் தன் நண்பர் அனுப்பி வைத்திருப்பதாய் பொய் சொல்லும் மருத்துவர் சவட்டியின் பெயரையும், அவன் எழுதிய கடிதத்தையும் மறைத்து விடுகிறார்.

தான் ரவுடியாக இருந்த காலத்தில் ஒருநாள் உதவிய பூக்காரக் குடும்பத்தில் இருக்கும் பெண்ணின் திருமணச் செலவுக்கு பணம் வசூலித்துக் கொடுத்து விசுவாசத்தையும் –

மருத்துவரின் மனைவி கையால் காபி குடித்தததற்காக  ஓலைக்கிளி ஒன்றை அனுப்பி வைத்து நன்றிக் கடனையும் - செலுத்திய சவட்டியின் மேல் தன் மனைவிக்கு இருக்கும் தவறான அபிப்ராயத்தை மருத்துவர் அப்படியே நீட்டிக்கச் செய்தது ஏன்? என்ற கேள்விக்கான விடை கதையில் தொக்கி நிற்கிறது. ஒருவேளை வாசிக்கும் வாசகர்களிடமே அதற்கான விடையை ஆசிரியர் கொடுத்து விட்டார் என்றும் கொள்ளலாம்.

குணங்களை மட்டுமே மையமாக வைத்து கதை சொன்ன விதம் புதியதொரு வாசிப்பு அனுபவத்தை தருகிறது.

ஆசிரியர்  : எஸ். ராமகிருஷ்ணன்
       கதை    : ஓலைக்கிளி
வெளியீடு : உயிர்மை பதிப்பகம். ரசிக்க – சிந்திக்க -1

இக்கால தெருவிளக்கின் தந்தை, மின்னலுக்கும், மின்சாரத்திற்கும் ஒரே தன்மை இருப்பதைக் கண்டுபிடித்தவர், மூக்குக் கண்ணாடியின் தந்தை, சூட்டடுப்பை கண்டுபிடித்தவர், அசைந்தாடும் நாற்காலியை கண்டுபிடித்தவர் இப்படி பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான அமெரிக்காவின் பெஞ்சமின் பிராங்கிளின் ஓர் இலக்கியக் கூட்டத்திற்காக பாரீஸ் நகருக்கு சென்றிருந்தார். அந்த கூட்டத்தில் வாசிக்கப்பட்ட தொடக்க உரையைக் கேட்டு மக்கள் அவ்வப்போது கைதட்டிய வண்ணமிருந்தனர். பிராங்கிளினுக்கு பிரெஞ்சு மொழி தெரியாததால் எந்த இடத்தில் கை தட்ட வேண்டும் என புரியவில்லை. அதேநேரம் எல்லோரும் கை தட்டும் போது தான் மட்டும் வெறுமனே உட்கார்ந்து கொண்டிருக்கவும் அவருக்கு விருப்பமில்லை. எனவே அவருக்குத் தெரிந்த பெளலர் என்கிற அம்மையாரைப் பார்த்து அவர் கைதட்டும் பொழுதெல்லாம் தானும் கைதட்டினார்.

உரை முடிந்ததும் அவருடைய பேரன் அவரிடம், “ தாத்தா உங்களைப் பற்றி புகழ்ந்து சொன்ன போதெல்லாம் மற்றவர்களைக் காட்டிலும் நீங்கள் தான் வேகமாக கைதட்டினீர்கள்” என்று சொன்னான். அப்போது தான் அவருக்குத் தான் எவ்வளவு பெரிய முட்டாள் தனமான காரியத்தை செய்திருக்கிறோம் என்பது புரிந்தது. 

மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக அவர்களைப் போலவே நாமும் செய்யக்கூடாது. ஒன்றைச் செய்வதற்கு முன் எதற்காக செய்கிறோம்? அப்படி செய்வது சரியா? என தெரிந்து கொண்டு செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் பெஞ்சமின் பிராங்கிளின் பேரன் அவரைக் கேலி செய்ததைப் போல மற்றவர்கள் உங்கள் செயலைப் பார்த்து கேலி பேசுவார்கள். 

நன்றி : தமிழ்முரசு நாளிதழ்

Thursday, 22 January 2015

கடவுளின் நிலைக்கு உயர முடியுமா?


தன் அண்ணன் வாலியிடமிருந்து அமைச்சர்கள் சகிதம் தப்பிய சுக்ரீவன் எங்கு சென்று பதுங்கினாலும் தன்னை வாலி துப்புறுத்தாமல் விடமாட்டான் எனக் கவலைப்பட்டான். அதனால் அவனிடமிருந்து தப்ப தனக்கு ஒரு பாதுகாப்பான இடம் அவசியம் என்பதை உணர்ந்தவன் வாலி நுழைவதற்கு 144 தடையுத்தரவு நடப்பில் இருந்த ரிஷ்யமுக பர்வத மலைக்கு வந்து சேர்ந்தான். ஒருநாள் மலையின் உச்சிக்கு வந்த சுக்ரீவன் அங்கிருந்த பம்பா நதிக்கரையில் ஆயுதங்களுடன் ஆட்களின் நடமாட்டத்தைக் கண்டதும் பதறிப் போய் விட்டான். அவர்கள் யாரெனத் தெரியாத போதும் எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிந்தது. ஆனாலும் அவனுக்கு திருப்தி வரவில்லை. மரவுரி ஆடைகள் தரித்திருந்த அவர்களின் தோற்றமும், உடற்கட்டும் சுக்ரீவனை சந்தேகப்பார்வை கொள்ள வைத்தது. அண்ணன் வாலியின் உளவாளிகளாய் இருப்பார்களோ? என யோசித்தவன் தன்னிடம் அமைச்சராக இருக்கும் அனுமனை அழைத்து உடனடியாக மாறு வேடமிட்டுச் சென்று வந்திருப்பவர்கள் யார்? என அறிந்து வா என உத்தரவிட்டான்.

வந்திருப்பவர்கள் ஆயுதம் தாங்கிகளாக இருப்பதால் ஏதாவது ஒரு வேடத்தை நாம பாட்டுக்கப் போட்டுட்டுப் போய் அவனுக பாட்டுக்க நம்மளைப் போட்டுத்தள்ளிட்டு போயிட்டானுகன்னா என்ன செய்றது? என யோசித்த அனுமன் எவ்வளவு பெரிய வல்லனும் எளிதில் தாக்க யோசிக்கும் அந்தணர் வேடமிட்டு அவர்கள் முன் வந்து நின்றார். ஏம்பா………..உங்களைப் பார்த்தால் எதையோ தேடிக் கொண்டிருப்பவர்கள் போல் தெரிகிறதே. நதிக்கரையில் வந்து என்ன தேடுகிறீர்கள்? யாரைத் தேடுகிறீர்கள்? நீங்க அணிந்திருக்கிற ஆடைக்கும், உங்களுக்கும் சம்பந்தமில்லாதது மாதிரி இருக்கே? நீங்கள் யார்? எனக் கேட்டார்.

நாங்கள் அயோத்தியில் இருந்து வருகிறோம். என் தந்தை கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக நானும், என் மனைவியும் வனவாசம் கிளம்பி வர எங்களுக்குத் துணையாக என் தம்பியும் வந்தான். அப்படி வந்த இடத்தில் என் மனைவி சீதாதேவியை மாரீசனின் வித்தையால் இராவணன் ஆட்டையப் போட்டுட்டு போய்விட்டான். அவளைத் தேடித் தான் இப்பகுதிக்கு வந்திருக்கிறோம்  என இராமர் சொன்னதும் அனுமன் தன் அந்தணர் வேடத்தைக் கலைந்து சுயரூபத்தில் நின்று அவர்களை வணங்கினார்.

அடடா…...வந்த இடத்தில் உங்களுக்கு வந்தப் பிரச்சனை மாதிரியே தான் வாழ்ந்த இடத்தில் எங்களின் அரசன் சுக்ரீவனுக்கும் ஒரு பிரச்சனை. அவனுடைய நாட்டையும், மனைவியையும் அவன் சகோதரன் வாலி அபகரித்துக் கொண்டு விரட்டியடித்து விட்டான். அவனுக்குப் பயந்து தான் இங்குள்ள மலையில் எங்கள் அரசன் தங்கி இருக்கிறான் எனச் சொல்லி சுக்ரீவனிடம் அவர்களை அழைத்துச் சென்றான்.

இராமர் சுக்ரீவனிடம் உங்களின் உதவி தேவை எனக் கோரிக்கை வைக்க சுக்ரீவனும் பதிலுக்கு ஒரு கோரிக்கையை வைத்தான். அதன்படி வாலியைக் கொன்று சுக்ரீவனை மீண்டும் அரசனாக்க இராமரும், அதற்குப் பதிலுதவியாக இராமரின் மனைவியைக் கண்டு பிடித்துத் தர சுக்ரீவனும் உதவுவது என ஒப்பந்தம் முடிவானது.

”பதிலுக்குப் பதில்” என்ற ஒப்பந்த சரத்துப்படி வாலியைப் போட்டுத்தள்ள இராமர் முடிவு செய்தார். ஆனால் அதை அவரால் எளிதாகச் செய்ய முடியவில்லை. காரணம் வாலி பெற்றிருந்த ஒரு வரம். போரில் தன் எதிரில் வந்து நிற்பவனின் பலத்தில் பாதி தனக்குக் கிடைக்கும் படியான வரத்தை வாலி பெற்றிருந்ததால் அவனை நேருக்கு நேர் சந்தித்துக் கொல்லுவது சாத்தியமில்லை என்ற நிலையில் வேறு என்ன செய்யலாம்? என இராமர் யோசித்தார். ”மந்திரம் பலிக்காத இடத்தில் தந்திரம் பலிக்கும்” என்ற நியதிப்படி வாலியை வீழ்த்த முடிவு செய்த இராமர் சுக்ரீவனும், வாலியும் போர் செய்யும் சமயத்தில் ஒரு மரத்திற்கு பின் மறைந்திருந்து தந்திரமாய் அம்பெய்து வாலியைப் போட்டுத் தள்ளினார். போடனும்னு முடிவு செஞ்சதுக்கு அப்புறம் நெத்தியில போட்டா என்ன? நெஞ்சுல போட்டா என்ன? கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் விதமாக வாலியின் கதையை இராமர் முடித்தார்.   

களத்தில் நேருக்கு நேர் எதிர் கொள்வது தான் ஒரு வீரனுக்கு அழகு என்ற நிலையில் தன்னுடைய இந்தச் செயல் தனக்கும், தன் புகழுக்கும் தீராத கலங்கத்தைத் தரும் என இராமருக்குத் தெரியாமலா இருந்திருக்கும்? வாக்குறுதியா? போர் நியதியா? என யோசித்தவர் எல்லாவற்றையும் விட கொடுத்த வாக்கு முக்கியம் என நினைத்தார். வாலியை வீழ்த்தினார். வாலி இன்னொருத்தனின் மனைவியை அபகரித்த பாவி என்பதால் அவன் அழிக்கப்பட வேண்டியவன். அவனைக் கொன்றதைக் கொண்டாட வேண்டுமேயொழிய கொன்ற முறை சரியா? தவறா? என்றெல்லாம் வியாக்கானம் பண்ணக்கூடாது என்பது சிலரின் வாதம். ”கருத்துச் சொன்னா கேட்டுக்கனும். ஆராயக்கூடாது” என்பது ஆரோக்கியமானதா? இல்லையா? என்பதையெல்லாம் பட்டிமன்ற நடுவர்களின் முடிவுக்கே விட்டு விட்டு நம்ம விசயத்துக்கு வருவோம்.

சுக்ரீவனும் இராமருக்கு கொடுத்த வாக்குறுதிப் படி உதவினான். அவனால் இராமருக்கு உதவியாக அனுப்பப்பட்ட ஒருவன் பின்னாளில் அவரின் பரம பக்தனாக, சேவகனாக மாறிப்போனான். அந்தச் சேவக பக்தன் அனுமன்! கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் முயற்சியில் சுயம் சார்ந்த விசயங்களைப் பார்க்கக்கூடாது என நினைத்து சுக்ரீவன் என்ற குரங்கரசனுக்கு உதவிய  இராமர் உயிரற்ற கல் குன்று ஒன்றிற்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக எடுத்த இன்னொரு அவதாரம் தான் “கிருஷ்ணவதாரம்”! இராமர் கிருஷ்ணராய் மறுபிறவி எடுத்துவரக் காரணமான அந்தக்குன்றின் பெயர் “கோவர்த்தனகிரி மலை”!

இராமருக்கும், இந்த மலைக்கும் தீர்க்கப்படாத பழைய பாக்கி ஒன்று இருந்தது. ”விட்ட குறை தொட்ட குறை” என்பார்களே அதுபோல இராம அவதாரத்தில் விட்ட குறை தான் கிருஷ்ணவதாரத்தில் நிறைவடைந்தது! இந்திரன் மதுரா நகர் மக்கள் மீது கொண்ட கோபத்தால் அடைமழையை பெய்விக்க அதிலிருந்து அந்நகர மக்களைக் காப்பதற்காகக் கிருஷ்ணர் கோவர்த்தனகிரி மலையை தூக்கிப் பிடித்து அதன் கீழ் மக்களையும், ஆடு, மாடுகளையும் நிற்க வைத்து காப்பாற்றினார் என கிருஷ்ணவதாரத்தில் ஒரு கதை உண்டு. கடவுள் மக்களைக் காப்பது கடமையில்லையா? இதுல என்ன விசேசம் என்கிறீர்களா? விசேசம் கடவுள் காப்பாற்றியது அல்ல. கடவுளுக்கும், அந்த மலைக்குமான முந்தைய உறவு!

கிருஷ்ணர் தன் ஒற்றை விரலில் தூக்கி நிறுத்திய கோவர்த்தனகிரி மலைக்கு ஒரு நெடிய கதை உண்டு. சேதுபாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அதற்காக மிகப் பெரிய கற்கள், குன்றுகள், பாறைகள், வேரோடு பிடுங்கப்பட்ட மரங்கள் என எல்லாப் பக்கங்களிலிருந்தும் வானரங்களால் கொண்டுவந்து சேர்க்கப்பட்டன. பெருங்கற்கள் எல்லாம் இமயமலையிலிருந்து பெயர்த்து எடுத்து கொண்டுவரப்பட்டன. அப்படி அனுமனால் தூக்கி வரப்பட்ட ஒரு குன்றுதான் கோவர்த்தன கிரிமலை!

இமயமலையில் சிறுகுன்றாய் இருந்த கோவர்த்தன கிரிமலையை அனுமன் தன் பலம் கொண்ட மட்டும் தூக்க முயன்றும் முடியவில்லை. உடனே அவர் இராமகாரியத்திற்கான பணியில் ஈடுபட்டிருக்கும் என்னோடு நீ வருவதால் இராமரின் தரிசனம் பெறும் பலனை அடைய முடியும். அவரின் அருள் கிடைக்க வேண்டுமானால் உன் பலத்தைக் குறைத்துக் கொண்டு என்னோடு வா என்றழைத்தார். உடனே கோவர்த்தனகிரி மலையும் தன் பலத்தைக் குறைத்துக் கொண்டு அனுமனுடன் கிளம்பியது. மலையோடு அனுமன் வரும் வழியில் மற்ற வானரங்கள் செய்ய வேண்டிய வேலைக்கான உத்தரவை பிறப்பித்துக் கொண்டிருந்த ஜாம்பவான் பாலம் கட்டும் பணி முடிவடைந்து விட்டதால் இனி கட்டுமானப் பொருட்களை கொண்டுவர வேண்டாம் என இராமபிரான் கூறிவிட்டார் என  அனுமனிடம் சொன்னார்.

தலைவனின் உத்தரவை சிரமேற்கொண்டு செயல்படுத்தும் அனுமன் அந்தத் தகவலைக் கேட்ட அடுத்த நொடி தான் தூக்கி வந்த மலையை அந்த இடத்திலேயே இறக்கி வைத்தார். நதிக்கரையோரம் தன்னை இறக்கிவிட்டு கிளம்பப் போன அனுமனிடம் என்னை இராமதரிசனத்திற்காக அழைத்துச் செல்வதாய் சொன்னதால் தான் இமயமலையிலிருந்து வந்தேன். நீயோ இப்படி இடையிலேயே விட்டு விட்டுப் போனால் என்ன அர்த்தம்? எனக் கேட்டது.

சங்கடமான சூழலாகிவிட்டதை உணர்ந்த அனுமன் தலைவரின் உத்தரவுக்கு கீழ் படிய வேண்டியது என் கடமை. அதிலிருந்து என்னால் விலகவே முடியாது. அதனால் உன்னை இங்கு விட்டுப் போவதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை, ஆனால், இந்த விசயத்தைத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன் என அனுமன் கூறினார். சொன்னபடியே தலைவர் இராமரைச் சந்தித்து நிகழ்ந்தவைகளைக் கூறினார். தொண்டனுக்கு ஒரு நெருக்கடி என்றால் அதைப் பார்த்துக் கொண்டிருப்பது நல்ல தலைவனுக்கு அழகில்லை என நினைத்த இராமர் உன் வாக்குறுதியை நான் நிறைவேற்றுவேன். கவலைப்படாதே எனக் கூறினார்.

பாலம் கட்டும் பணி தான் முடிவடைந்து விட்டதே! அப்புறம் எப்படி? என்றார் அனுமன்.

அடுத்த யுகத்தில் நான் பிறவி எடுப்பேன். நீ தூக்கி வந்த மலையை எங்கு இறக்கி வைத்தாயோ அதே இடத்தில் தான் வளர்வேன். அப்பொழுது என்னை நம்பி வந்த மலைக்கு நீ கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்றார். இந்தத் தகவல் உடனடியாக அனுமன் மூலம் கோவர்த்தனகிரி மலைக்குச் சொல்லப்பட்டது. தன்னை நம்பி தன் பக்தன் கொடுத்த வாக்குறுதிக்காக சொன்ன சொல் தவறாமல் அடுத்த யுகத்தில் கிருஷ்ணராய் அவதரித்த இராமர்  தன் விரலால் தூக்கி நிறுத்தி மலையை ஆசிர்வதித்தார். இன்னைக்கு அனுமன் மாதிரி பக்தர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் இராமர் மாதிரி தலைவர்களுக்குத் தான் பஞ்சம் நிலவுகிறது!!.

கொடுத்த வாக்குறுதியை மீறாமலும், அவசியம் ஏற்பட்டால் யுகம் கடந்து வந்தேனும் கொடுத்த வாக்குறுதியை நிறைவு செய்கிறான் கடவுள். மனிதர்களாக நாமோ கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுகிறோமா? காப்பாற்றாவிட்டாலும் பொய்யான வாக்குறுதிகளையாது கொடுக்காமல் இருக்கலாமே! அப்படி இருந்தாலே போதும். இந்த நாளை மட்டுமல்ல எல்லா நாளையும் இனிய நாளாக்கிக் கொள்ளவும், அந்தக் கடவுளின் நிலைக்கு நம் வாழ்க்கையை நகர்த்திக் கொள்ளவும் முடியும். அதெப்படிங்க மனிதன் தெய்வநிலைக்கு வர முடியும் என்கிறீர்களா? கடவுள் மனித நிலைக்கு இறங்கும் போது மனிதன் மட்டும் கடவுள் நிலைக்கு உயர முடியாதா என்ன?!

நன்றி : வல்லமை.காம்

Wednesday, 21 January 2015

நேர்மை

உச்சரிப்பதைப் போல இலகுவாய் இல்லை
வாழ்க்கையில் கைக்கொள்வதும்
நித்தம் கடைப்பிடிப்பதும்.
பல நேரங்களில்
முகமாய் இல்லாமல்
முகமூடியாய் மாறி விடுகிறது.
ஏதோ ஒரு நிலையில்
எல்லா நாளும்
என்னிலிருந்து நழுவி நகர்கிறது.
மீட்டெடுத்து முகமாக்க
எத்தனிக்கும் போதெல்லாம்
பிழைக்கத்தெரியாதவன் என்ற வசையே மிஞ்சுகிறது.
ஆயினும் –
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது
முகமூடியை முகமாக்குவதற்கான யுத்தம்!

நன்றி : சொல்வனம்.காம்

Sunday, 18 January 2015

”சுலைமானி” ஆபரேட்டர்உங்களுக்கென்னங்க?

வட்டி கட்டுறவனுக்குத் தான் தெரியும். வலியும், வேதனையும்.

பதினைந்து நாளுன்னு சொன்னீங்க. ஆனால் மூனு மாசமாச்சு. இப்ப இன்னும் பத்து நாளாகும்னு சொன்னா என்ன அர்த்தம்? தெண்டமா வட்டிக்காசு போகுது. அதைக்கூட கட்ட வழி இல்லாம சொந்தக்காரனுககிட்ட கை மாத்தா வாங்கிக் கட்டிக்கிட்டு இருக்கேன். தெரியுமா?

முடியும்னா செய்யுங்க. சொல்லுங்க. இல்லைன்னா பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுங்க. நான் வேற எடம் பார்த்துக்கிறேன். எனக்குப் பின்னாடி பணம் கட்டினவனெல்லாம் போய் சம்பளம் வாங்கி அனுப்பிட்டான். ஊருல பார்க்குற பய எல்லாம் எப்பப் போற? எப்பப் போற? ன்னு கேட்டே பாதி உசுர எடுக்குறானுக என மனனம் செய்து வந்ததைப் பள்ளியில் ஒப்பிக்கும் குழந்தையைப் போல பட படவென பொரிந்து தள்ளினான் முருகேசன். அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவரோ எதுவும் பேசவில்லை. ஆனால், முருகேசனோடு வந்திருந்த அவன் மச்சான் பாண்டி, ”மாப்ள…….கொஞ்சம் பொறுமையா இரு. படபடன்னு பேசி என்ன ஆவப் போகுது? அதுவும் இவங்க வேலைக்கு இருக்குறவங்க. இவங்க கிட்ட சத்தம் போடுறதால என்ன பிரையோசனம்? சாத்தையா அண்ணன் வரவும் பேசிக்கிடலாம். அதுவரைக்கும் பேசாம அமைதியா உட்காரு” எனச் சொல்லிக் கொண்டு அருகில் இருந்த சோபாவில் அவனை உட்கார வைத்தான்.

சாத்தையா அந்த வட்டாரத்தில் வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜண்டாக இருப்பவர். ஆரம்பத்தில் சென்னையில் இருந்த சில பெரிய ஏஜண்டுகளுக்கு ஆள் அனுப்பி தலைக்குத் தன் பங்காக பத்தாயிரம், இருபதாயிரம் என வாங்கிக் கொண்டிருந்தார். அதன் பின் வெளிநாடுகளில் இருந்த சில கம்பெனிகளின் பழக்கம் கிடைத்ததும் தானே நேரடி ஏஜண்டாக மாறியதோடு இனி கிராமத்தில் இருக்கும் வீட்டில் உட்கார்ந்து கொண்டு தொழில் செய்வது சரியாக இருக்காது என நினைத்து பக்கத்தில் இருக்கும் நகர் பகுதியான இராமநாதபுரத்துக்கு குடிபெயர்ந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகிலேயே ”சாத்தையா டிராவல்ஸ்” என்ற பெயரில் பத்துக்குப் பத்து கடையில் தன்னுடைய நிறுவனத்தை ஆரம்பித்தார். ஆட்கள் அனுப்புவதோடு மட்டுமில்லாமல் அது சார்ந்த விசயம் தெரிந்தவர்களை வேலைக்கு அமர்த்தி  கடவுச்சீட்டு எடுத்துத் தருவது, புதுப்பித்துத் தருவது, பயணச்சீட்டு எடுத்துத் தருவது ஆகிய வேலைகளையும் சேர்த்துச் செய்து கொடுத்து வந்தார்.

இராமநாதபுரத்தைச் சுற்றிலும் இருக்கக்கூடிய பெரும்பாலான கிராமங்களில் பலருக்கும் கடவுச்சீட்டுக் கடவுள் சாத்தையா தான்! எந்த ஒரு வியாபாரத்தையும் தூக்கி நிறுத்துவதற்குப் பெரிய அளவில் உதவக்கூடிய வாய் விளம்பரம் தான் அவரின் வளர்ச்சிக்குப் பெரிய பலமாக இருந்தது. அவசரத் தேவைக்குப் பணம் கொடுத்து உதவுவது, கிராமத்தில் இருக்கும் கோயில்களுக்கு நிதி தருவது என சின்னச் சின்ன உதவிகள் மூலம் சுற்றுப்பகுதி கிராமங்களில் தனக்கென நிறைய நல்ல பெயரைச் சம்பாதித்து வைத்திருந்தார்.

நகரத்தானைப் போல காரியம் முடிந்ததும் மறந்து விடும் மனசு கிராமத்தானுக்கு எப்பொழுதும் இருப்பதில்லை. தக்க நேரத்தில் தனக்கு ஒருவன் செய்த உதவியை தன் தலைமுறைக்கும் அவன் கடத்திக் கொண்டே இருப்பான். அப்படிப்பட்ட மனநிலை கொண்ட மக்கள் வாழும் கிராமங்களில் படித்தும், படிக்காமலும் அடிமாட்டு கூலிக்கு வேலை செய்து கொண்டிருந்த  பலரும் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றதற்கும், பல குடும்பங்கள் பொருளாதாரத்தில் முன்னேறியதற்கும் சாத்தையா தான் காரணம்.

ஒரே வருடத்தில் பத்துக்குப் பத்து கடையை விட்டு விட்டு நகரத்தின் மையப் பகுதியில் ஒரு பெரிய தளத்திற்கு தன் டிராவல்ஸை மாற்றினார். உள்ளூர் பிரபலங்கள் சிலரின் பழக்கத்தால் சாத்தையா பெரிய புள்ளியாக மாறியிருந்தாலும் அன்று போலவே எளிமையாய் இருந்தது தான் ஆச்சர்யம். வசதி வாய்ப்புகள் வந்த பின் ஒரு மனிதன் மாறமலிருப்பது அத்தனை சாதாரண விசயமில்லை!

சொன்ன தேதி மாறினாலும் சொன்ன சொல் மாறாதவர் என்பதால் அவரிடம் பல இலட்சங்களை விசாவுக்காக கட்டிவிட்டு பயமின்றி பலரும் காத்திருந்தனர். ஒரு தனிநபரின் நம்பிக்கை மேல் எழும்பி நின்ற அந்த டிராவல்சின் வரவேற்பறை முகப்பில் மாட்டப்படிருந்த பிள்ளையார்பட்டி விநாயகர் படத்தைப் பார்த்த படியே அருகில் இருந்த வேலைப்பாடுகளுடன் கூடிய மண்பானையில் இருந்த தண்ணீரைப் பிடித்து குடித்த முருகேசன் மீண்டும் சோபாவில் வந்து அமர்ந்து கொண்டான்.

இப்பவே மணி இரண்டாச்சு. மூனு மணிக்கு தாசில்தார் ஆபிஸ் வேற போகனும்.  அவர் எப்ப வந்து நாம எப்ப போறது? எனக் கேட்ட முருகேசனை அமைதிப்படுத்திய பாண்டி, ”இப்பத்தான் உள்ளே கேட்டேன்”. ”வந்துக்கிட்டே இருக்காராம்“ என்றான்.

சிறிதுநேரத்தில் அகன்ற வாசலின் முகப்பில் வெள்ளை நிற ஹோண்டா கார் வந்து நின்றது. வெள்ளை வேஷ்டி சட்டையில் கக்கத்தில் தோலினாலான கருப்பு கைப்பை ஒன்றை இடுக்கியபடி இறங்கிய சாத்தையா வாசலில் இருந்த விநாயகருக்கு சூடம் கொழுத்தி உக்கி போட்டு வணங்கி விட்டு உள்ளே வந்தார்.

இருவரையும் பார்த்ததும், ”வாங்க…….வாங்க….எப்ப வந்தீங்க? காபித் தண்ணி கொடுத்தாங்களா? ஊருல எல்லாரும் எப்படி இருக்காங்க?” எனக் கேட்டவர் அவர்கள் பதில் சொல்வதற்குள், ”வாங்க உட்கார்ந்து பேசுவோம்” எனச் சொல்லிய படி அருகில் இருந்த சிறிய அறையைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார். முழுவதும் குளிரூட்டப்பட்ட அந்த அறையில் இருந்து வெளியேறிய வாசனைத் திரவியத்தின் வாடை அவரைப் பின் தொடர்ந்து சென்ற இருவர் முகத்திலும் வருடியது.

தனக்கான இருக்கையில் சென்று அமர்ந்தவர் தனக்கு எதிரில் இருந்த இருக்கையைக் காட்டி இருவரையும் அமரச் சொன்னார்.

”முருகேசா…..உன் விசயமாத்தான் நேத்து இராத்திரி சிங்கப்பூர் கம்பெனியில பேசினேன். எல்லாம் ரெடியாயிடுச்சாம். நமக்குப் புது வருசம் மாதிரி அங்கே இருக்கிற சீனக்காரவங்களுக்கு இப்ப புது வருசமாம். அதுக்கு நான்கைந்து நாள் தொடர்ந்து விடுமுறைங்கிறதால லேட்டாயிடுச்சாம். அடுத்த வாரம் கட்டாயம் பேப்பர் அனுப்பிடுறோம்னு சொல்லிட்டாங்க” என்றார்.

இந்த பதிலால் திருப்தியடையாத முருகேசன், ”அடுத்த வாரம் வரலைன்னா பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுங்க” என்றான் கோபமாக.

”ஏன் இந்த அவசரம்? ஆக்கப் பொறுத்தவங்க ஆறப்பொறுக்கலைன்னா எப்படி? அடுத்தவாரம் கட்டாயம் வந்துடும். விசா பேப்பர் வரவும் நானே கூப்பிட்டு சொல்லுறேன். சஞ்சலமில்லாமல் போயிட்டு வாங்க. நானாச்சு”. எனச் சொல்லி அனுப்பிவைத்தார்.

வெளியில் வந்ததும், ”எனக்கென்னமோ இவரு அனுப்புவாரான்னு சந்தேகமா இருக்கு மச்சான்? ஏதோ கதையளக்குறாருன்னு நினைக்கிறேன்” என்று முருகேசன் சொன்னதைக் கேட்ட பாண்டி, ”அப்படியெல்லாம் இருக்காது. முடியலைன்னா இவ்வளவு நாள் இழுக்க மாட்டாரு மாப்ள. நாம கட்டி இருக்கிற இரண்டு இலட்சம் இன்னைக்கு நிலைமைக்கு அவருக்குச் சாதாரணம். பொறுத்தது பொறுத்துட்டோம். இன்னும் பத்து நாள் பொறுத்துப் பார்ப்போமே” என்றான்.

இல்ல மச்சான். புது வருசத்துக்கெல்லாமா நான்கைந்து நாள் லீவு விடுவானுக? எனக்கென்னமோ பொய் சொல்றாரோன்னு தோனுது. எதுக்கும் செவண்ட்டி எம்.எம்.க்கு ஒரு போன் போட்டு கேட்டா தேவல.

டே மாப்ள. அவன் சும்மாவே படம். அவங்கிட்டப் போய் கேட்கனுமா? என்றான் பாண்டி.

செவண்டி எம்.எம். என்பது முருகேகசனுடைய பால்ய சிநேகிதன் சங்கரின் பட்டப் பெயர். எதையுமே கொஞ்சம் பெரிதாக, பூடகமாகச் சொல்வது அவனது வழக்கம். சின்ன விசயத்தைக் கூட ஒரு திரைப்படக் கதை அளவுக்குச் சொல்வதால் நண்பர்கள் அந்த பட்டப் பெயரில் அவனை அழைத்து வந்தார்கள். முருகேசன் ஊரில் இருந்த போது அவன் வெளிநாட்டிலும், இவன் வெளிநாட்டில் இருந்த போது அவன் ஊரிலும் இருந்ததால் இருவரும் சந்தித்துப் பத்தாண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தது. ஒப்பந்தகாலம் முடிந்து சவுதியில் இருந்து வந்தவன் பின்னர் சிங்கப்பூருக்குச் சென்று விட்டான். எப்போதாவது அலைபேசியில் முருகேசனை அழைத்துப் பேசுவான். அதுவும் ஓரிரண்டு வார்த்தையோடு முடித்து விடுவான். பணவிசயத்தில் பயங்கர கெட்டி.

இல்ல மச்சான். நாழு வருசமா அங்கே இருக்கான். அவங்கிட்ட கேட்டாத் தெரிஞ்சிடும். நமக்கும் திருப்தியா போயிடும் என்ற படி தன்னுடைய அலைபேசியிலிருந்து மிஸ்டு கால் கொடுத்தான். கால்மணி நேரமாகியும் பதில் இல்லாததால் தொடர்ந்து இரண்டொரு மிஸ்டு கால்களை கொடுத்த படியே இருந்தான். அதன்பின்னரே சங்கர் அழைத்தான்.

முருகேசன் தகவல் சொன்னதும், ”ஆமாம். இங்கே அது பெரிய விசேச நாள். சாத்தையா அண்ணன் சொன்னது நிசம் தான். உனக்கு விசா வரவும் எனக்குப் போன் செய்” என வேகமாகச் சொல்லிவிட்டு வேறு தகவல் எதுவும் கேட்காமலே அலைபேசியை அணைத்து விட்டான்.

ஏமாற்றமடைந்த முருகேசன், ”என்ன மச்சான் நாழு வார்த்தை பேசலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள வச்சுட்டான்” என்றான்.

”டே……..அவன் அப்பன் எச்சிக் கையில காக்கா ஓட்டமாட்டான். அப்படியே ஓட்டினாலும் கையை ஒன்றிற்கு இரண்டு தடவை நல்லா சூப்பிட்டு தான் விரட்டுவான். அவன் மவன் எப்படி இருப்பான். அதை விட்டுத் தள்ளு. இப்ப உனக்கு திருப்தியாயிடுச்சுல” எனச் சொல்லிவிட்டு தன்னுடைய இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்த பாண்டி பின்னிருக்கையில் முருகேசனை ஏற்றிக் கொண்டான்.

விடியும் பொழுதெல்லாம் விசேசச் செய்தி வந்துவிடும் என முருகேசனைப் போலவே அவன் வீட்டில் உள்ளவர்களும் காத்திருந்து காத்திருந்து ஏமாந்தாலும்  இன்னைக்காவது நல்ல செய்தி வந்துவிடும் என ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். அது தானே மனித சுபாவம்! ச்சீ, ச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்பதைப் போல அது பற்றிய நினைப்பே இல்லாமல் இருந்த ஒரு நாளில் சாத்தையாவிடமிருந்து முருகேசனின் அலைபேசிக்கு அழைப்பு வந்தது.

”முருகேசா…….பேப்பர் எல்லாம் வந்துடுச்சு. வெரசா கிளம்பனுங்கிறானுக. இரண்டு நாளைக்குள்ள உள்ளூர் சோலியெல்லாம் முடிச்சிட்டு கிளம்புறதுக்குப் பாரு.  வெள்ளிக்கிழமை அன்னைக்கு டிக்கெட் போட்டுறேன்” என்றார்.

எப்ப கூண்டு திறக்கும். பறந்து போயிடலாம் என நினைத்துக் கொண்டிருந்த முருகேசன், “வெள்ளிக்கிழமை எத்தனை மணிக்கு போடப் போறீங்க?” என்றான்.

”இராத்திரி பத்து மணிக்கு ஒரு பிளைட் இருக்கு. அதுல போட்டுடலாம். நீ ஒரு எட்டு மணிக்கெல்லாம் விமான நிலையத்திற்கு வந்துடு. நானும் அங்கே வந்துறேன். பாஸ்போர்ட், டிக்கெட் எல்லாம் நான் கொண்டு வந்துடுவேன். பத்து கிலோவுக்கு மேல சுமை இல்லாம பாத்துக்க. கூடுனா காசு கட்டனும்” எனச் சொன்னார்.

சங்கரை அலைபேசியில் அழைத்துத் தகவல் சொன்ன கையோடு அருகில் இருந்த சொந்த பந்தங்களுக்கு மட்டும் நேரில் போய் சொன்னான். வெள்ளிக்கிழமை மதியம் கிளம்பி திருச்சி விமானநிலையத்திற்கு வந்து சேர்ந்தான். இதற்கு முன் துபாயில் ஏழாண்டுகள் இருந்திருந்ததால் பதட்டமில்லாமல் இருந்தான். விமான நிலையத்திற்கு சாத்தையா வரவில்லை. திருச்சி டிராவல்சிலிருந்து ஒருத்தர் வந்து பாஸ்போர்ட், டிக்கெட் எல்லாம் கொடுத்தார். வழக்கமான சுங்கச் சோதனைகளைக் கடந்து விமானத்தின் நுழைவாயிலில் இருக்கும் காத்திருப்புப் பகுதியில் வந்து அமர்ந்தான். நுழைவாயில் திறக்க  இன்னும் சில மணிநேரம் இருந்ததால் கிளம்பும் அவசரத்தில் சொல்லாமல் வந்த தன் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தகவல் சொல்லியவன் சங்கரை அழைத்து மறுநாள் காலையில் தான் அங்கு வந்து விடும் தகவலை நினைவூட்டினான். அவனும் விமான நிலையத்திற்கு வந்து விடுவதாய் சொன்னான்.

இவன் வேலைக்காக துபாய்க்கு முதன் முதலில் சென்ற சமயத்தில் சங்கர் சவுதியில் வேலை செய்து கொண்டிருந்தான். இவனின் நண்பர்களில் பள்ளிப்படிப்பைத் தாண்டியவனும் முதலில் வெளிநாட்டு வேலைக்குப் போனவனும் அவன் தான். அவனின் சித்தப்பா அங்கு இருந்ததால் ஏஜண்ட் இல்லாமல் அவனால் போக முடிந்தது. சவுதிக்குப் போனவன் தன்னை மறந்து போய் விட்டானோ? என நினைத்திருந்த ஒருநாளில் உனக்கு வெளிநாட்டுல இருந்து போன் வந்துருக்கு. சங்கர் பேசுறான்னு எதிர்வீட்டு சுசிலா அக்கா சொன்னதும் சந்தோசத்தில் துள்ளி ஓடினான்.  அலைபேசி அவ்வளவாக புழக்கத்தில் இல்லாத அந்தச் சமயத்தில் சுசிலா அக்கா வீட்டில் மட்டும் தான் போன் இருந்தது. துபாய்க்குப் போக அப்போது தான் இவனும் பணம் கட்டி இருந்தான். துபாயும், சவுதியும் ஒரே மாதிரி நாடு தான் என ஏஜண்ட் சொல்லி இருந்ததால் சங்கரிடம் அது பற்றிக் கேட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என நினைத்திருந்த சமயத்தில் தான் அவனிடமிருந்து போன் வந்திருந்தது.

ஓடி வந்ததால் மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்கியவாறே, “டே சங்கரு……எப்படி இருக்க? எங்கே மறந்துட்டியோன்னு நினைச்சேன்? என்ற வழக்க விசாரிப்புகளோடு தான் துபாய் போக பணம் கட்டி இருக்கும் விசயத்தையும் அவனிடம் சொன்னான். இரண்டு நாடும் ஒரே மாதிரின்னு ஏஜண்ட் சொல்லுறான். வெயிலு ரொம்ப இருக்குமாமே என்றவன், ”நீ அங்கே என்ன வேலை செய்யிற?” என்று கேட்டான்

”சுலைமானி ஆபரேட்டர்” வேலை பார்க்கிறேன் என்று அவன் சொன்னதும், ”ஏலே……..பரவாயில்ல. ஒரு நல்ல வேலை தான் கிடைச்சிருக்கு போல. பார்த்து சூதனமா இரு. கை, கால் பத்தரம்” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப்பட்டது. ஒன்றிரண்டு முறை ஹலோ…….ஹலோ என அழைத்து விட்டு கட் ஆயிடுச்சு என தனக்குத் தானே சொல்லிய படி ரிசீவரை வைத்தவனிடம், என்னவாம்? எப்படி இருக்கானாம்? என்றாள் சுசிலா அக்கா.

நல்லா இருக்கானாம் அக்கா. ”ஆபரேட்டர் வேலை செய்றானாம்” என்றான்.

அப்படின்னா? என்றாள் வெள்ளந்தியாய் சுசிலா அக்கா.

”நம்ம ஊருக்கு இடத்தைச் சுத்தம் பண்ண வரும் ஜேசிபி வண்டியை ஓட்டுறாங்கள்ள அது மாதிரி வண்டி ஓட்டுற வேலை” என்றதும், ”மகராசனா இருக்கட்டும்” என்றாள்.

தனக்கும் துபாயில் அப்படி ஒரு வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்டான். அடுத்த சில வாரங்களில் அவன் துபாய் செல்வதற்கான விசா வந்தது. கிளினிங் கம்பெனியில் வேலை என்று ஏஜண்ட் சொன்னான்.

முதல் வெளிநாட்டுப் பயணம். மொழி, பழக்க வழக்கம் எல்லாமே புதிதாய் இருக்கும் என்பதால் அங்கு தரும் வேலையைத் தன்னால் செய்ய முடியுமா? என்ற குழப்பத்தோடு ஒருவழியாக துபாயில் வந்து இறங்கினான். வானுயர் கட்டிடங்கள், வித்தியாசமான வடிவமைப்பில் இருந்த பொதுப் பேருந்துகள் என அத்தனையும் அவனுக்கு அந்நியமாகவே இருந்தது. அவர்கள் பேசும் மொழியோ இன்னும் அந்நியமாகப் பட்டது. வாசலில் இவன் பெயரோடு இன்னும் சிலரின் பெயரையும் தாங்கிய பதாகையைக் கையில் ஏந்திய படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அதை இவன் பார்த்த விதத்தை வைத்தே, ”ஏய்…….நீ ஏஜண்ட் சுந்தரேசன் ஆளா?” என அந்த நபர் தமிழில் கேட்க ”ஆமாம்” என்றான்.

”இப்படி வா” என பக்கத்தில் அழைத்து நிறுத்திக் கொண்டார். தமிழில் அவர் பேசியதைக் கேட்டதும் அவனின் மன படபடப்பு கொஞ்சம் குறைந்தது.

மருத்துவ பரிசோதணைக்குச் சென்று வந்த பின் இரண்டு நாட்கள் மட்டுமே அறையில் இருந்தான். மூன்றாவது நாள் முன்பு வேலைக்குப் போய் கொண்டிருக்கும் நால்வரோடு இவனையும் சேர்த்து ஐந்து பேராக ஒரு பள்ளிக் கூடத்தில் வேலைக்கு அழைத்துச் சென்றார்கள்.

ஆறாம் வகுப்பு வரைக்குமான அந்த அரபி மொழிப் பள்ளிக்கூடம் அரண்மனை மாதிரி இருந்தது. ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் சென்று வரவே ஐந்து நிமிடமானது. ”இங்குள்ள பசங்க சரியான சேட்டை செய்வானுக. நம்மூரு மாதிரி இல்ல. கோபம் வந்தாலும் அடிச்சிடக் கூடாது. எதுனா பிரச்சனையினா எங்களிடம் வந்து சொல்லு” எனச் சொல்லிவிட்டு அவரவருக்குரிய வேலைகளைப் பார்ப்பதற்காக பள்ளிக்கூடத்தின் நாலாபுறமும் மற்ற நால்வரும் பிரிந்து போய்விட்டார்கள்.

வேலைகளை முடித்து விட்டு மதிய உணவருந்த ஓய்வறைக்கு இவன் வந்த சமயத்தில் எதிர்த்தவாறு வந்த அந்தப் பள்ளிக்கூடத்தின் தலைமையாசிரியர் இவனிடம் ஏதோ ஒன்றைச் சொல்ல அது என்ன மொழி என விளங்காத போதும் ”சுலைமானி” என்பது மட்டும் தெளிவாகக் கேட்டது. புரிந்தது. ஊரில் இவன் இருந்த போது சவுதியில் இருந்து பேசிய சங்கர் ”சுலைமானி ஆபரேட்டர்” எனச் சொல்லி இருந்ததால் அந்த வார்த்தை மட்டும் பட்டென விளங்கியது. ஆனால் சுலைமானினா என்னவென்று தெரியாததால் பேக்க, பேக்க என விழித்த படி  ”ஒன்செகண்ட்” என ஆங்கிலத்தில் சொல்லி விட்டு ஓய்வறையை நோக்கி ஓடினான். இவனுக்கு முன் அங்கு வந்து உணவருந்திக் கொண்டிருந்த மேற்பார்வையாளரிடம் ஹெட்மாஸ்டர் எதையோ ஓட்டச்  சொல்றார்? எனக்கு விளங்கவில்லை என பதற்றத்தோடு சொல்லி முடிக்கவும் அவன் பின்னாலயே அவர் வருவதற்கும் சரியாக இருந்தது.தன்னிடம் சொன்னதைப் போலவே மேற்பார்வையாளரிடமும் அவர் சொல்ல நக்கலாக இவனை ஒரு பார்வை பார்த்து விட்டு தலைமையாசிரியரின் பின்னால் கிளம்பிச் சென்றார். சிறிதுநேரம் கழித்து திரும்பி வந்த மேற்பார்வையாளர், “சீக்கிரமா சுலைமானி ஓட்டக் கத்துக்க” எனச் சொல்லி விட்டு நமட்டுச் சிரிப்பொன்றை சிரித்தார். சுலைமானின்னா என்னன்னு தெரியாத போது எப்படி கத்துக்கிறது? என யோசித்த படியே தன்னோடு வேலைக்கு வந்த இன்னொரு நண்பரிடம் சென்று ”சுலைமானி ஓட்டிப் பழகணும்? அது எங்கே இருக்கு? உங்களுக்கு ஓட்டத் தெரியுமா? நானும் கத்துக்க முடியுமா? என்று கேட்டது தான் தாமதம் அவரும் இவனை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு சுலைமானி ஓட்டனுமா? சுலைமானின்னா என்னன்னு தெரியுமா? என்று கேட்டார்.


தெரியாது. ஆனால் என் ஃபிரண்டு ஒருத்தன் சவுதியில சுலைமானி ஆபரேட்டரா இருக்கேன்னு சொன்னான் என்றதும், தன் வாய் காதுக்கு விரியச் சிரித்தவர், ”சரி……..நீ போய் இப்ப வேலையைப் பாரு. சாயங்காலம் வேலை முடிஞ்சதும் சொல்லித் தருகிறேன்” என்றார்.

அதன் பிறகும் அவனால் சும்மா இருக்க முடியவில்லை. தான் கற்றுக் கொள்ளப் போகும் சுலைமானி எப்படி இருக்கும்? எனப் பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் அவனை இருப்புக் கொள்ள விடாமல் செய்து கொண்டிருந்தது.

மேல் தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த இன்னொரு நண்பரிடம் போய் சுலைமானி எப்படி இருக்கும்? அது இங்கு எங்கே இருக்கு? எனக் கேட்டதும் அவர் இவனை மேலும், கீழும் ஒரு பார்வை பார்த்து விட்டு, ”நான்கு மணிக்கு கம்பெனி வண்டி வந்துடும். அதுக்குள்ள போய் உன் வேலையை முடி. சாயங்காலம் நீயே தெரிஞ்சுக்குவ” என்றார்.

அவனுக்கோ ஒன்றும் விளங்கவில்லை. என்ன பெரிதாகக் கேட்டு விட்டோம்? சுலைமானினா என்னன்னு சொல்றதுக்கும், அதைக் காட்டுவதற்கும் கூடவா இவர்களுக்கு நேரமில்லை? நான் கேட்டதும் ஏன் சிரித்தார்கள்? அப்படி ஒரு பார்வை பார்த்தார்கள்? தப்பா எதுவும் கேட்டுட்டேனா? என தனக்கு தானே கேள்விக் கணைகளைத் தொடுத்துக்கொண்டே தனக்குரிய வேலைகளை முடித்து விட்டு வண்டிக்குக் கிளம்பத் தயாரான சமயத்தில் மேற்பார்வையாளர் அவனை அழைத்தார். பள்ளிக்கூடத்திலேயே தேயிலைத் தூள், சர்க்கரை, ஏலக்காய் எல்லாம் வாங்கி வைத்திருப்பார்கள் என்பதால் பணி முடிந்து கிளம்பும் சமயத்தில் அங்கேயே டீ போட்டு குடித்து விட்டுச் செல்வது வழக்கம் என்பதால் இவனைத் தவிர மற்ற நால்வரும் முன்னரே வந்து அங்கு அமர்ந்திருந்தனர்.

இவனைப் பார்த்ததுமே நால்வரும் சிரித்து விட்டனர். வார்த்தையற்ற அந்தக் கேலியால் தலையை லேசாகக் குனிந்து கொண்டவனிடம் மேற்பார்வையாளர் அந்தச் சட்டியில் தண்ணீரைப் பிடித்து அடுப்பில் வைத்து சூடாக்கு என்றார். சிறிது நேரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ஐந்து டீ குவளைகளை வரிசயாக வைத்து அதில் இரண்டு கரண்டி சர்க்கரை, ஒரு கரண்டி தேயிலைத் தூளைப் போடச் சொன்னவர் சுடு தண்ணீரை அதில் ஊற்றி கரண்டியால் நன்கு கலந்தபின் வடிகட்டியால் தேயிலைத் தூளை வடிகட்டச் சொன்னார். தேயிலைத் தூள் வடிகட்டப்பட்ட டீயை எல்லோருக்கும் கொடுக்கச் சொன்னவர் அவனையும் குடிக்கச் சொன்னார்.

ஒரு மிடறு இறக்கியதும், ”எப்படி இருக்கு?” என்றார்.

”நல்லாயிருக்கு”.


அப்ப சரி. நீ சுலைமானி ஆபரேட்டராயிட்டேன்னு சொல்ல அனைவரும் கொள் எனச் சிரித்து விட்டனர்.

என்ன அண்ணே சொல்றீங்க? என இவன் அப்பாவியாய் கேட்க, ”பால் ஊத்தாத டீயைத் தான் அரபி மொழியில சுலைமானின்னு சொல்லுவானுக. டீ போடுற வேலையை ரெம்ப நேக்கா உன் ஃபிரண்டு சொன்னதைக் கேட்டு கப்பல் ஓட்டுற வேலை மாதிரின்னு நம்பியிருக்கியலடா. நீயும் ஊருக்கு போன் பண்ணி ஆத்தா நான் சுலைமானி ஆபரேட்டர் ஆயிட்டேன்னு சொல்லிடு” என மேற்பார்வையாளர் சொல்ல மற்றவர்கள் மீண்டும் சிரித்தனர்.

அப்பொழுது மட்டும் சங்கர் இவன் கையில் சிக்கி இருந்தால் அவனை இரண்டாக்கி இருப்பான். அவ்வளவு கோபம் வந்தது. அந்த நாய் சொன்னதைக் கேட்டதுக்கு இவனுக இப்படி அசிங்கப்படுத்திட்டானுகளே என நினைத்த படி விடுதிக்கு வந்து சேர்ந்தான். மொத்த ஊழியர்களுக்கும் முருகேசன் என்ற பெயர் ஒரே நாளில் மறந்து போய் விட்டதைப் போல அன்றிரவில் இருந்தே அனைவரும் அவனை ”சுலைமானி ஆபரேட்டர்” என்றே அழைக்கத் தொடங்கினர். வதந்தியை விட வேகமாகப் பரவி இருந்தது இவனுடைய சுலைமானி சங்கதி! எறும்பு ஊறக் கல்லும் தேயும் என்ற கதையாய் ஆரம்பத்தில் அப்படி அழைக்கும் போது கோபம் வந்தாலும் பின்னர் அப்படி அழைக்கும் போது திரும்பிப் பார்க்கும் நிலைக்கு அவனே பழகி இருந்தான். அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த ஏழு வருடத்தில் வெகு அபூர்வமாகவே முருகேசன் என்ற பெயரால் அவன் அழைக்கப்படிருந்தான். இன்றும் கூட அங்கிருக்கும் நண்பர்கள் போனில் பேசும் போது சுலைமானி ஆபரேட்டர் என்றே கூப்பிடுவது வழக்கமாகிப் போயிருந்தது.

விமானத்திற்குள் நுழையும் வாசல் திறக்கப்படுவதற்கான அழைப்பு ஓசை பழைய நினைவுகளைக் கழைக்க கடைசிக் கட்ட சோதனையை முடித்துக் கொண்டு விமானத்திற்குள் சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டான். சொன்ன நேரத்திற்குக் கிளம்பிய விமானம் அதிகாலை ஏழு மணிக்கு சிங்கப்பூர் விமான நிலையத்தை வந்தடைந்தது. தடுக்கி விழுந்தால் ஒரு தமிழன் மேல் தான் விழ வேண்டும் என்பதைப் போல எங்கும் தமிழர்களாக இருந்தனர். அந்நிய மண்ணில் இருக்கிறோம் என்ற உணர்வே அவனுக்கு ஏற்படவில்லை.

விமான நிலையச் சுங்கச் சோதனைகளை முடித்து விட்டு முதல் வாயிலைக் கடந்து வந்தவனை அடையாளம் கண்டு கொண்டு சங்கர் கை காட்டி அழைத்தான். கொஞ்சம் சதைப் பிடிப்பாக இருந்தாலும் பத்தாண்டுக்கு முன் பார்த்தது போலவே இருந்தான். அதனால் அடையாளம் கண்டு கொள்வதில் சிரமமிருக்கவில்லை. வெளியில் வந்ததும் கட்டிப்பிடித்துக் கொண்டவன் ஊர் நிலவரங்களைக் கேட்டுக் கொண்டான். மதியம் தன் அறையில் தங்கி ஓய்வெடுத்து விட்டுப் பின்னர் கம்பெனிக்கு போன் செய்து இடத்தைக் கேட்டறிந்து நானே கொண்டு போய் விடுகிறேன் எனச் சொன்னான். ஒரு வாடகை டாக்சியை கை நீட்டி அழைத்த சங்கர் இவனோடு சேர்ந்து பின் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.


சிங்கப்பூருக்கு வந்த பின் இங்கேயே படித்து சாதாரண தொழிலாளியாய் தான் வேலைக்கு வந்த நிறுவனத்தில் மாதச்சம்பளம் வாங்கும் சூப்பர்வைசராக இப்போது இருப்பதை முருகேசனிடம் பெருமையாகச் சொல்ல வேண்டும் என விரும்பிய சங்கர், ”நீ என்ன வேலை செய்யிற?” என அவன் கேட்க மாட்டானா என நினைத்துக் கொண்டும், ஒரு முறை இப்படிக் கேட்டு தன் பெயர் தனக்கே மறந்து போகும் அளவுக்குப் பட்டப் பெயர் வந்தது போல் இம்முறையும் அப்படி எதுவும் வந்திடக்கூடாது. இந்த நாட்டிலாவது நான் முருகேசனாகவே இருக்க வேண்டும் என்றால் மறந்தும் ”நீ என்ன வேலை செய்யிற?”ங்கிற கேள்வியை மட்டும் இவனிடம் கேட்டு விடக் கூடாது என்று முருகேசனும் எதிரெதிர் மன ஓட்டத்தோடு உதட்டளவில் மட்டும் பல விசயங்களைப் பேசிக் கொண்டிருக்க இருவரின் மன ஓட்டம் போலவே அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த டாக்சிக்கு எதிர்புறமாக சாலையின் இருபக்க கட்டிடங்களும் ஓட ஆரம்பித்திருந்தது.

நன்றி : மலைகள்.காம்
        தமிழ்முரசு நாளிதழ்

Tuesday, 13 January 2015

மெளன அழுகை - 3

(திண்ணை இணைய இதழில் “மெளன அழுகை” கவிதை நூல் குறித்து கவிஞரும், கட்டுரையாளருமான தேனம்மை லெஷ்மணன் எழுதி உள்ள அறிமுக உரை)

கிட்டத்தட்ட 15 நூல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார் கோபி. அதில் ஒன்று "மௌன அழுகை" கவிதைத் தொகுதி. முன்னுரை வழங்கியவர் கல்கியின் தலைமைத் துணையாசிரியர் அமிர்தம் சூர்யா. அணிந்துரை ஈரோடு சம்பத்.
புலம் பெயர் வாழ்வின் துயரங்கள் அங்கங்கே கவிதையாகி இருக்கின்றன. ஈழத் தமிழரின் அவல வாழ்வும் பாலசந்திரனின் மரணமும் கவிதையாகி அவஸ்தைப்படுத்துகின்றன. "எழுந்து வருவோம் உன்னிலிருந்து" என்ற கவிதையில்
   புறமுதுகு காட்டா புறநானூற்றுத் தமிழன்
என அறிந்து மார்பில் சுட்டார்களோ ?
 இத்தொகுதியில் மிகப் பாதித்த கவிதை "வன்மம்"
இடறிவிழும்
உன் ஆசைகளுக்கான
காரண ஈறுகளை
பேனாய்
பெருமாளாய்ப் பருமனாக்கி
எப்பொழுதும்
என்மீது
உமிழ்ந்து செல்ல
உனக்கு கிடைத்துவிடுகிறது
நீ ராசியில்லாதவள்
என்ற ஒற்றை வரி.
பெருநகர வாழ்வில் இயற்கையாய் நாமிழந்துவிட்ட பலவிஷயங்களைப் பேசிச் செல்கின்றன கவிதைகள். "தடம்" அப்படியான ஒன்று.
புறநகரின்
மனைகள் தோறும்
புதைந்து கிடக்கிறது
உழுது விதைத்து
உயிர் வளர்க்க
உணவு தந்தவனின்
வறுமை தடவிய
வியர்வை ரேகைகள்.
 "நினைவுகள் குழைந்த தருணம்" கண்ணீர் விட வைத்த கவிதை.
பெற்றோர்
மனைவி
பிள்ளைகள்
நண்பர்கள் என
எல்லோருக்கும் ஏதோ ஒரு
நினைவுகளைத் தருபவனாகவே
துயில்கொண்டிருந்தான்
சடங்கேந்தி வந்த உறவினர்கள்
பொணத்த எப்ப தூக்குறீங்க ? என
விசாரிக்கும் வரை.
"மௌன அழுகை"யும் அப்படியான ஒன்று. மனைவியாகவும் கூடு பாய்ந்து அந்த உணர்வுகளைக் கவிதையாக்கி உள்ளது சிறப்பு.
"கடவுளுக்கு வந்த சோதனை" கண்டதேவித் திருவிழாவை நினைவுறுத்தியது. வெளிநாட்டில் வசித்து வந்தாலும் கோபியின் நினைவுகளில் சூல்கொண்டிருப்பது தாய்நாடே. அதன் பிரதிபலிப்பாகவே கவிதைகள் வெளிப்படுகின்றன. மிக யதார்த்தமான கவிதைகள் படித்துப் பாருங்கள்.
நன்றி : திண்ணை.காம்