Monday, 30 March 2015

நனவுதேசம்


சிங்கப்பூர் பொன்விழாவையொட்டி சிங்கப்பூர் சார்ந்த தகவல்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் ஷாநவாஸின் நூல் ”நனவு தேசம்”. சிங்கப்பூர் என்றவுடன் கனவு தேசம் என்று தான் பலருக்கும் நினைவுக்கு வரும். இவரோ நனவு தேசம் எனப் பெயர் வைத்துள்ளார். இந்தப் பெயர் தான் நூலிற்குள் நுழைவதற்கான திறப்பின் ஆவலை அதிகரிக்கச் செய்தது. ஒருவேளை கனவு தேசம் எனப் பெயர் வைத்திருந்தால் நாடுகளின் பிம்பங்களைப் பதிவு செய்து சந்தைக்கு வந்து குவிக்கின்ற ஒரு நூலாக நினைத்து புறந்தள்ளிப் போயிருக்க வாய்ப்புண்டு. என்னுரையில் தன் கனவுகளை நனவாக்கிய தேசம் என்பதால் நனவு தேசம் என நூலுக்கு பெயரிட்டதற்கான குறிப்பைச் சொல்கிறார்.

நாட்டின் பரப்பளவில் தொடங்கி அங்கு இருக்கும் சுற்றுலாத் தலங்கள், சீதோஷ்ண நிலை வரை பரவி நிற்கும் தகவல்களால் சிங்கப்பூரைப் பற்றிய பிம்பத்தை நம் முன் காட்டும் வழக்கமான புத்தகமாக இல்லாமல் அந்த தேசத்தைப் பற்றி  அறிந்திராத, அறிந்து கொள்ள வேண்டிய புதிய தகவல்களை, அங்கு வாழும் பல்லின மக்களின் வாழ்வியல் மனநிலையைப் பதிவு செய்த படியே சிங்கப்பூரின் பிம்பத்தை புதிய கோணத்தில் விரித்துச் செல்கிறது நனவு தேசம்.

ஐம்பது பத்திக் கட்டுரைகள் கொண்ட நூலின் முதல் கட்டுரை உலகம் முழுக்க இரசிகர்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் கால்பந்து விளையாட்டுப் பற்றிய தகவல்களோடு தொடங்குகிறது. போர்க்கள யுத்தமாகவே பார்க்கப்படும் அவ்விளையாட்டு குறித்து அவருக்கு இருக்கும் பதிமூன்று சந்தேகங்களும் படிக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த விளையாட்டைப் பார்க்கும் நேரமெல்லாம் தொற்றிக் கொள்வதோடு அதற்கான விடைகளைத்  தேடும் முனைப்பையும் கொடுக்க ஆரம்பித்து விடும் என்றே சொல்லலாம். இப்படித் தேடல்களுக்கான சிந்தனைகளை கேள்விகளாக, ஆசிரியரின் கருத்துக்களாக பதியமிட்டு நகரும் கட்டுரைகள் நம்மைச் சிங்கப்பூர் என்ற தேசத்தின் அறிய வேண்டிய சுவராசியங்களுக்குள் தானகவே நுழைய வைத்து விடுகிறது.

உலகம் வியக்கும் ஒரு தேசம் தன்னைச் சீர் செய்து கொண்டு எழுந்த விதத்தை அதன் கடந்த கால, சமகால நிகழ்வுகளோடு பதிந்து கொடுப்பவன் தான் இலக்கியம் சார்ந்த படைப்பாளியாக இருக்க முடியும். அப்படி ஒரு படைப்பாளியாய் ஒவ்வொரு கட்டுரையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார் ஷாநவாஸ்.

பல்லின மக்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள், நம்பிக்கைகள் என எல்லாத் தளங்களிலும் தன்னைக் கொண்டு செலுத்திய படியே முன்னேறி நிற்கும் சிங்கப்பூரின் வெற்றிக் கதையை அந்தந்த தளங்களில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளின் வழி நூலில் சொல்லப்பட்டிருக்கும் கட்டுரைகள் காட்சிகளாக நம் முன்னே விரிக்கிறது.

மனிதர்களுக்கு மட்டுமல்ல இடங்களுக்குப் பெயரிடுவதற்கும், அழைக்கப்படுவதற்கும் கூட காரணங்கள் இருக்கின்றன. அத்தகைய காரணங்களோடு அழைக்கப்படும் இடங்களை சுட்டிக்காட்டும் ”சாங்கி மரம்” என்ற கட்டுரையில் ஒரு செய்தியைத் தருகிறார். ஒரு மீட்டருக்கும் அதிகமான சுற்றளவு கொண்ட மரங்களை வெட்ட வேண்டுமானால் சுற்றுச் சூழல் துறைக்குத் தெரியப் படுத்த வேண்டும் என்பது சிங்கப்பூர் சட்டம். இந்நிலையில் நிலச் சீரமைப்பிற்காக ஒரு தனியார் நிறுவனம் 3.4 மீட்ட பருமனுள்ள மரம் ஒன்றை வெட்டித் தள்ளியதற்காக 4.8 ஆயிரம் வெள்ளி அபராதமும், 4 இலட்சம் வெள்ளி இழப்பீட்டுத் தொகையும் அந்நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்பட்டதாம். தவிர, வெட்டப்பட்ட அந்த மரத்தின் விதைகள் சேகரிக்கப் பட்டு அதிலிருந்து மரக்கன்றுகள் வளர்த்தெடுக்கப்பட்டது என்ற செய்தி சுற்றுச் சூழலில் சிங்கப்பூர் காட்டும் அக்கறையைச் சொல்கிறது.

மனிதர்களைப் புதைத்த இடங்களை இடுகாடு என்றழைக்கிறோம். சிங்கப்பூரில் அந்த இடுகாட்டைக் கல்லறைத் தோட்டம் என்கிறார்கள்.  இறந்து விட்ட தன் குடும்பத்தவர்கள் உறங்கும் இடத்தை ஒரு தோட்டம் போல அரசாங்கமே பராமரித்து வருவதைப் பற்றிய தகவல்களோடு கூடிய “இடம் மாறும் கல்லறைகள்” என்ற கட்டுரையில் புதிய நகர நிர்மாணிப்புப் பணிகளுக்காக கல்லறைகள் தோண்டப்பட்டு உடல்கள் எடுக்கப்படும் முறையையும், மீண்டும் மறு அடக்கம் செய்யப்பட்ட இடங்களையும் சொல்லும் ஷாநவாஸ் சிங்கப்பூரில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகக் கல்லறைத் தோட்டங்களையும் குறிப்பிடுகிறார். கட்டுரையை வாசித்து முடிக்கும் போது வாய்ப்பிருந்தால் பயத்தைத் துறந்து சிங்கப்பூரின் கல்லறைப் பக்கம் போய் வரும் ஆவல் வந்து விடுகிறது.

பெயரில் என்னய்யா இருக்கு? என சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், பல்வேறு இன மக்கள் வாழும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பெயரில் தான் பல சூட்சுமங்களும், அடையாளங்களும் மறைந்திருக்கின்றன என்ற தகவல்களால் “சொல்ல மறந்த பெயர்கள்” என்ற கட்டுரை விரிகிறது. தன் நண்பர்களை, தன் நிறுவன வாடிக்கையாளர்களைப் பெயரிட்டு அழைக்கும் போது ஏற்பட்ட சில சுவையான சம்பவங்களால் சூழ் கொண்டிருக்கும் இக்கட்டுரை இப்படியான நாடுகளுக்குப் பணிகள், தொழில் நிமித்தம் செல்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று.

இத்தாலி என்றால் நாடு என்று நமக்குத் தெரியும். அதைத் தவிர்த்து அந்தச் சொல்லை வேறு எதற்கும் பயன்படுத்தியிருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் இத்தாலி என்ற சொல்லை I Trust And Love You (ITALY) என்று தன் காதலியிடம் நேசத்தை வெளிப்படுத்தும் குறியீடாகப் பயன்படுத்திய ரசீத் என்ற மாணவனைப் பற்றியும், தான் சந்தித்த சில மனிதர்கள் பற்றியும் பேசும் “நிஷான் இச்சிபாங்” கட்டுரை நம்மைச் சுற்றி உள்ள மனித மன நிலைகளின் அலைவரிசையை கவனித்தலைக் கவனப்படுத்துகிறது.

கழிவறைகளைப் பற்றி இன்று உலகம் முழுக்க முழக்கங்கள் கிளர்ந்தெழத் தொடங்கி விட்டன. இந்தியா போன்ற நாடுகளில் வீட்டுக்கொரு கழிவறை கட்டாயம் என்று நாட்டின் பிரதமரே அறிவிக்கும் சூழலில் கழிவறைகள் குறித்து இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் “வெறுப்பின் அடையாளங்கள்” என்ற கட்டுரை மிக முக்கியமான ஒன்று. சில நாடுகளில் கழிவறைக்குச் செல்வதும்,  பராமரிப்பதும் வெறும்  தனிமனித குறியீடாக இல்லாமல் சமூகத்தின் குறியீடாக  மாறியிருப்பது போல உலகம் முழுக்க மாற வேண்டும் என்ற தன் விருப்பத்தை சொல்லும் ஆசிரியர் சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகள் கழிவறைகள் சார்ந்து காட்டும் அக்கறைகளைப் பட்டியலிட்டிருப்பதை வாசிக்கும் போது நம்மை அறியாமலே நம் கண்கள் நம் வீட்டுக் கழிவறையை ஒரு முறை மெல்ல நோட்டமிட ஆரம்பித்து விடுகிறது.

இரவெல்லாம் சுற்றித்திரிந்து விட்டு காலையில் நம் வீட்டு வாசலில் ”நமஸ்தே சாப்” எனக் கூறிய படி வந்து நிற்கும் கூர்க்காக்கள் சிங்கப்பூரில் எப்படி வாழ்கிறார்கள், சிங்கப்பூர் காவல் படையில் அவர்களின் பங்கு, அதற்கு அவர்கள் தேர்வு செய்யப்படும் விதம், சிங்கப்பூரின் கடந்த கால கலவரங்களில் கூர்க்கா படையினரின் பங்களிப்புகள் என அவர்களைப் பற்றிப் பேசும் “மானெஷாவின் தொப்பி” கட்டுரையில் ஆண்டு தோறும் நிரப்பப்படும் 200 பணியிடங்களுக்கு 20,000 பேர் வரை போட்டியிடுகின்றனர் என்ற புள்ளி விபரமும், அவர்களுக்கு குடியுரிமையோ, நிரந்தரவாச உரிமையோ தரப் படுவதில்லை என்பதோடு பணி ஓய்விற்குப் பின் அவர்கள் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவதோடு ஓய்வூதியம் மாதா மாதம் அங்கேயே அனுப்பித் தரப்படுகிறது என்ற தகவல்களும் ஆச்சர்யம் தருகின்றன.

நூலாசிரியர் ஷாநவாஸ் சிங்கப்பூரில் தொழில்கள் சார்ந்து நிறைய அனுபவம் பெற்றவர். அங்கேயே சொந்தமாகத் தொழில் செய்து வருபவர் என்பதால் கட்டுரைகளில் தன் சொந்த அனுபவங்களின் வழி கற்ற பாடங்களை மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் ஆங்காங்கே கோடி காட்டிய படியே செல்கிறார். ஒரு பணியாளன் தன் சக பணியாளனிடமிருந்து எப்படி வேறுபடுகிறான்? அதற்காக எத்தகைய வழிமுறைகளைக் கையாள்கிறான்? என்பதை உச்சி முகர்ந்து சொல்லும் ”கதவு திறந்தது” கட்டுரை யோசிக்க வைக்கிறது. எவ்வளவு தூரம் யோசிக்கிறோம் என்பதைக் கணக்கிட கட்டுரையின் இறுதியில் ஒரு கணித அளவீடையும் சொல்லி இருக்கிறார்.

சிங்கப்பூர் என்றவுடன் அங்கு சென்று வந்தவர்களுக்கு “பளிச்” சென நினைவில் வரக்கூடிய விசயங்களில் 4D (நான்கு நம்பர்) என்றழைக்கப்படும் குலுக்கல் லாட்டரிச் சீட்டும் ஒன்று. ”தீர்க்க தரிசனம்” என்ற கட்டுரை நாள்காட்டி சார்ந்து பயணித்து 4D எடுக்க டிப்ஸ் கொடுக்கும் “பை சைக்கிள் அப்பே” என்ற மனிதரின் மூலமாக காலம் காலமாக அங்கு வாழும் மக்களிடம் இருக்கும் நம்பிக்கையை சுவராசியமாகவும், நகைச்சுவையாகவும் நமக்குச் சொல்கிறது.

தான் படித்த கல்லூரி, பயணித்த இடங்கள், வாசித்த நூல்கள், சேகரித்த தகவல்கள், பொருத்தமான கவிதைகள், திரட்டிய புள்ளி விபரங்கள், தரவுகள் ஆகியவைகளிலிருந்து நனவு தேசமான சிங்கப்பூர் பற்றித் தான் சொல்லப் போகின்ற தகவல்களுக்குப் பொருத்தமானவைகளை எல்லாக் கட்டுரைகளிலும் பயன்படுத்தி இருப்பதால் சம்பந்தப்பட்ட தகவல்கள் குறித்துக் கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ள முடிகிறது. அருணகிரிநாதரும் கூட தன் கருத்தால் ஒரு கட்டுரையில் வந்து போகிறார்!

சிங்கப்பூரின் அரசியல், நிர்வாகத்திறன், மக்களின் வாழ்க்கை முறை, பேச்சு வழக்கு, அங்கிருக்கும் இடங்கள், நூலகங்கள், முதலில் தொடங்கப்பட்ட தமிழ் இதழ்கள், தமிழர்களூக்காக சீனர்கள் நடத்திய தமிழ் பத்திரிக்கை, சிங்கப்பூரின் படைப்பாளுமைகள், சுற்றுச்சூழல், சிங்கப்பூர் கொண்டிருக்கும் எதிர்காலத் திட்டங்கள், இணையத்தையும் இன்றைய சூழலையும் தனக்குச் சாதகமாக்கி முன்னேறும் வேகம் என எல்லா விசயங்களின் வழியும் பயணிக்கும் இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளைத் தன்னைச் சந்தித்த, தான் சந்தித்த மனிதர்களிடமிருந்து கேட்டுப் பெற்ற, அறிந்து கொண்ட தகவல்களாலும், அத்தகைய மனிதர்களாலும் முடித்திருக்கிறார்.

வழக்கமான நூலில் இருந்து மாறுபட்ட ஒரு நூலின் வழி சிங்கப்பூர் என்ற தேசத்தை அறிந்து கொள்ள வைத்த இந்த ஐம்பது கட்டுரைகளையும் வாசித்து முடிக்கும் போது எப்படி ஷாநவாஸிற்கு மட்டும் இப்படியான நண்பர்கள் கிடைக்கிறார்கள்? அண்டை வீட்டுக் காரர்கள் உள்ளிட்ட எவரிடமும் இணக்கமாகப் பழகவும், அவர்களுக்குள் இருக்கும் அறிந்திராத - அறிய வேண்டிய தகவல்களை அடையாளம் காணவும், வாங்கவும் இவரால் மட்டும் எப்படி முடிகிறது? என்ற இரண்டு கேள்விகள் மிஞ்சுகிறது!

வ்வளவு தூரத்தில் இருந்தாலும் தனக்கான இரையைத் தேடிச் செல்லும் ஒரு வேட்டை நாய் போல பத்திரிக்கையாளனான நான் ஷாநவாஸைக் கண்டுபிடித்தேன் என நூலின் பின்னட்டையில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் நினைவு கூர்ந்திருப்பதைப் போல தகவல்களைத் திரட்டவும், அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ளவும் ஒரு வேட்டை நாய் தனக்கான இரையை தேடிச் செல்வது போலத் தேடித் திரட்டி அதை சுவராசியம் குன்றாத வகையில் ஷாநவாஸ் கொடுத்திருக்கிறார். மனிதர்களை நகலெடுக்காத வகையில் அவர்களாகவே நூல் முழுக்க இயங்க விட்டிருக்கிறார்.  விமர்சனமற்ற உரையாடல்கள் மூலமாக அவர்களை நம்மருகில் அழைத்து வந்து காட்டுகிறார்.

நூலில் இடம் பெற்றிருக்கும் கணக்கெடுப்பு சார்ந்த புள்ளி விபரத் தகவல்களை  குறைத்திருக்கலாம். நாடுகள் பற்றிய தகவல்கள் தாங்கி வரும் நூல்களில் இந்த முயற்சி புதிது. இந்த நூலின் எந்த ஒரு பக்கத்தில் இருந்தும் சிங்கப்பூரை, அங்குள்ள மக்களை அறிந்து கொள்வதற்கான தகவல்களை நீங்கள் பெற முடியும் என்ற உத்திரவாதத்தைத் தரும் நனவு தேசம் சிங்கப்பூர் எழுத்திலக்கியத்தில் ஒரு ஆவணப்பதிவு.  நூல்களின் வழி ஆவணமாக்கும் முயற்சியை ஷாநவாஸ் தொடர்ந்து செய்ய வேண்டும். ஒரு படைப்பாளியாய் அது அவரின் கடமை.

நன்றி : சொல்வனம்.காம்

Monday, 16 March 2015

ரசிக்க – சிந்திக்க – 8

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் பேசும் ஒவ்வொரு முறையும்  நிறையப் புத்தகங்களில் இருந்து மேற்கோள்கள் காட்டிப் பேசுவார். எப்பொழுதும் நேரமில்லை, நேரமில்லை எனச் சொல்லும் நேருவுக்கு புத்தகங்கள் படிக்க மட்டும் எப்படி நேரம் கிடைக்கிறது? என்பது மன்ற உறுப்பினர்களுக்கு ஆச்சர்யமான விசயமாக இருந்தது.

ஒருநாள் அவர்கள் அவரிடம் தங்கள் ஆச்சரியத்தைச் சொன்ன போது, ”நான் நேரத்தைத் திருடுகிறேன்'' என்று கூறினார். அதைக் கேட்டு குழம்பி நின்றவர்களிடம் "நான் இரவில் எப்போது தூங்கப் போக வேண்டும், எப்போது எழ வேண்டும் என்பதை என் உதவியாளர் தான் நிர்ணயிக்கிறார். அப்படி நான் உறங்குவதற்காக அவர் ஒதுக்கித் தரும் நேரத்தில் இருந்து ஒரு நாளைக்கு, இரண்டு மணி நேரத்தை திருடிக் கொள்கிறேன். அந்த இரண்டு மணி நேரத்தைத் தான் பல்வேறு புத்தகங்கள் படிக்கச் செலவிடுகிறேன்,'' என்றார்.

ஒரு விசயத்தைச் செய்ய வேண்டும் என்பதில் உறுதி இருந்தால் அந்த விசயத்தைச் செய்வதற்கான நேரத்தை எப்படியும் உருவாக்கிக் கொள்ள முடியும். வழக்கமான செயல்களுக்குரிய நேரத்திலிருந்து உங்களுக்குத் தேவையான கூடுதல் நேரத்தை நீங்களும் திருடப் பழகிக் கொள்ளுங்கள். அதன்பின் ”நேரமில்லை”, ”நேரமில்லை” என்ற புலம்பல்கள் உங்களிடமிருந்து காணாமலே போய்விடும். 

நன்றி : தமிழ்முரசு நாளிதழ்

Wednesday, 11 March 2015

நினைவுகளின் துளிர்ப்பு


தூரத்து வானமாய்
எட்டாமலே போனது
நமக்குள் ஊடேறி கவிழ்ந்திருந்த நினைவுகள்.
கரைசேர வந்த அலையை
அள்ளிச்செல்லும் கடலாய்
நினைவுகளை வாரிக் கொண்டு திரும்பினோம்.
எடுத்துச் செல்லும் வரை தெரியவில்லை
நான் உனக்கானதையும்
நீ எனக்கானதையும் எடுத்துப் போகிறோமென்று.
திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கையில்
விதையாய் விழுந்திருந்த நினைவுகள்
உச்சரிப்பின் உவப்பில் துளிர்த்துக் கொண்டேயிருக்கிறது
என் பெயர் தாங்கிய உன் மகனாய்
உன் பெயர் தாங்கிய என் மகளாய்
அவரவர் வீட்டில்!

நன்றி : இன்மை.காம்

Monday, 9 March 2015

ரசிக்க – சிந்திக்க - 7


இந்தியக் குடியரசுத்தலைவராக இருந்த டாக்டர். இராதா கிருஷ்ணன் முதன் முறையாக அமெரிக்காவிற்கு சென்ற போது வாசிங்டனில் தட்பவெப்ப நிலை மோசமாக இருந்தது. காற்று, இருள் இவற்றோடு பலத்த மழையும் பெய்ய ஆரம்பித்திருந்தது. விமானத்தை விட்டு இறங்கிய இராதா கிருஷ்ணனை வரவேற்ற அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி தங்களுடைய பயணத்தின் போது இங்கே இவ்வளவு மோசமான தட்பவெப்ப நிலை இருப்பதற்காக வருந்துகிறேன் என்று கூறினார்.

அதற்கு இராதா கிருஷ்ணன் “மிஸ்டர் கென்னடி……….நம்மால் மோசமானவற்றை மாற்ற முடியாது. ஆனால், அது பற்றிய நம் மனக் கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ள முடியும்” என்றார். தத்துவமேதையான இராதா கிருஷ்ணன் கூறிய இந்த மனநிலை தான் நாம் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு அவசியம். அத்தியாவசியம். வெள்ளம், புயல் போல உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த – நிகழும் – நிகழப்போகும் மாற்ற முடியாத விசயங்களுக்காக கவலைப்பட்டுக் கொண்டிருப்பதை விட அதற்கு ஏற்ப உங்களையும், உங்கள் மனநிலையையும் மாற்றிக் கொண்டு வாழப் பழகுங்கள்.

நன்றி : தமிழ்முரசு நாளிதழ்

Saturday, 7 March 2015

வாழ்வை விருட்சமாக்கும் விதைகள் • உனக்குரிய வேலையை முழுமையாகச் செய்.
 • எண்ணம் போல் தான் செயல்.
 • நேரம் பொன் போன்றது.
 • முயன்றால் முடியும்.
 • இலக்கில் தெளிவாய் இரு.
 • தவறான யோசனைகள் அழிவைத் தரும்.
 • செய்கின்ற வேலையில் முழு ஈடுபாடு கொள்.
 • பிறரை முழுமையாக நம்பி எந்தக் காரியத்திலும் இறங்காதே.
 • பிரச்சனைக்கான தீர்வு அதற்குள்ளேயே இருக்கும்.
 • கவனித்தலில் இருக்கிறது காரிய சாத்தியம்.
 • நாளை என்பது நிச்சயமல்ல.
 • நிகழ்காலத்தில் வாழு.
 • கடந்தகாலத்தைக் கிளறாதே.
 • தீர ஆலோசித்து செயலைத் தொடங்கு.
 • கெட்டவர்களோடு இருக்கும் போதும் நல்லவனாக வாழ முடியும்.
 • பிறர் பொருளின் மீது உரிமை கொண்டாடாதே.
 • பிறர் விரும்ப வேண்டுமானால் ”நான்” என்ற அகந்தையை விடு.
 • பேசும் விதத்தில் பேசினால் எதையும் சாதிக்கலாம்.
 • உன் குறையை உணர்.
 • ஆர்வமே அனைத்திற்கும் அடிப்படை.
 • சுய முயற்சியால் மட்டுமே வெற்றி சாத்தியம்.
 • மறக்க மட்டுமல்ல; மன்னிக்கவும் பழகு.
 • தகுதியானவர்களிடம் யோசனை கேள்.
 • பேச்சை நிறுத்து; செயலைத் தொடங்கு.
 • முதலில் தொடங்கு; தானாகவே அது தொடரும்.
 • வாழ்க்கையை சிக்கலாக்குவதும், சுகமாக்குவதும் உன் கையில் தான் இருக்கிறது.
 • உன்னிடமிருந்தால் மட்டுமே அது நம்பிக்கை.
 • வெற்றி வரும் போது பணிவும் வர வேண்டும்.
 • வெற்றியை எட்ட விடா முயற்சி செய்.
 • வெற்றி, தோல்வியைச் சமமாகப் பாவி.
 • ஒப்பீடுகள் மகிழ்ச்சிக்கு எதிரி.
 • எதிர்ப்புகளைச் சாதகமாக்கப் பழகு.
 • குறைகளை நிறைகளாக்கு.
 • எதற்கும், எப்பவும் தயாராய் இரு.
 • பயம் நீங்காதவரை எந்தப் பயனுமில்லை.
 • அன்பினால் எவரையும் திருத்த முடியும்.
 • அளவுக்கு மிஞ்சிய நம்பிக்கையும் ஆபத்தே.
 • சுய சிந்தனை வளர்ச்சிக்கு அடிப்படை.
 • பிடிவாதமே வெற்றியின் அடிநாதம்.
 • உன்னை நீயே தாழ்த்திக் கொள்ளாதே.
 • சரியும், தவறும் கேட்கும் விதத்தில் இருக்கிறது.
 • பிறர் பொறுமைக்கும் எல்லை உண்டு.
 • சூழ்நிலைக்கேற்ப வாழப் பழகு.
 • ஒவ்வொரு செயலிலும் விழிப்போடு இரு.
 • பிரச்சனைகள் எதுவுமில்லாமல் வாழ்க்கை இல்லை.
 • நம்பிக்கையின் ஆற்றல் மகத்தானது.
 • பிறருக்காகவும் வாழப் பழகு.
 • போதும் என்ற எண்ணம் உழைப்பிற்குப் பொருந்தாது.
 • ஒருபோதும் பிறரைக் குறை கூறாதே.
 • மற்றவர்களை மாற்ற முயல்வதற்குப் பதில் உன்னை நீயே மாற்றிக்கொள்.
 • பிறர் என்ன கூறுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தாதே.
 • அரைகுறை அறிவு ஆபத்து.
 • உன்னை மட்டும் மையப்படுத்தி சிந்திக்காதே.
 • தடைகளைத் தாண்டு.
 • பிறரை மதிக்கவும், பாராட்டவும் ,உற்சாகப்படுத்தவும் தயங்காதே.


Thursday, 5 March 2015

ஆசையின்றி ஓர் கடிதம்

அம்மாவின் வார்த்தையை மீற முடியாமல் தாலி கட்டி விட்டதாகவும், அறிமுகப்படுத்தும் அளவுக்கு அழகுடையவள் இல்லை என்றும் திருமண வரவேற்பில் தன் காது பட நண்பர்களிடம் வெளிப்படையாக கணவன் பிரபு கூறியதைக் கேட்டு வருத்தப்பட்டாலும் அதில் இருந்த எதார்த்தத்தை உணர்ந்தவளாய் அவனோடு குடும்பம் நடத்துகிறாள் சந்திரிகா. தன் மீதான வெறுப்பை வன்மமாய் குழந்தையின் மீது அவன் காட்டிய  போதும் சகித்துக் கொள்கிறாள். பொய்த்துப் போன எதிர்பார்ப்புகளோடு மட்டுமேயான வாழ்க்கையிலும் தன் கணவனை மனதார நேசிக்கும் சந்திரிகா அவனின் பொய்யான வார்த்தைகளால் எடுக்கும் முடிவை மனித இயல்புகளின் மெல்லிய உணர்வுகளோடு கடிதம் வடிவில் சொல்லும் கதை ”ஆசையின்றி ஒர் கடிதம்”. உத்தம சோழனின் ”மனிதத் தீவுகள்” என்ற தொகுப்பில் இக்கதை இடம் பெற்றுள்ளது

”நான் உங்களுக்குப் பிடிக்காதவள் தான். ஆனாலும் நானும் ஒரு மனுஷி தானே. எனக்கென்றும் ஒரு மனசு….அதற்கென்றும் சில ஆசைகள் இருக்கும் தானே….அதைப்பற்றி எப்பொழுதாவது யோசித்திருப்பீர்களா?” என்ற சந்திரிகாவின் வரிகளின் மூலம் அவளுக்கும், அவள் கணவனுக்குமான இடைவெளியையும், பல குடும்பங்களில் மனைவி என்ற நிலையில் இருக்கும் பெண்களின் மனவலியையும் ஆசிரியர் சமதளத்தில் காட்டி விடுகிறார்.

சுய சம்பாத்தியம் இருந்தும் தன்னை வெறுத்து, உதாசீனப்படுத்தும் பிரபு போன்ற மனநிலை கொண்ட கணவனை அவனின் மன நேர்மைக்காக மட்டுமே சகித்துக் கொள்ளும் சந்திரிகாவின் மனம் பெண்களுக்கு மட்டுமேயானது!

பிறரின் சூழ்ச்சியால் கணவனின் நேர்மைக்கு இழுக்கு ஏற்பட்ட போது அதிலிருந்து அவனை மீட்க வக்கீல் பாரியுடன் செலவிட்ட தருணங்களைத் தவறான நோக்கத்தில் புரிந்து கொண்டும், அவளுடைய செயல்பாடுகளின் நேர்த்தியை அவன் விகற்பமின்றி எதார்த்தமாய் சிலாகித்ததை வைத்தும் சந்திரிகாவின் கைப்பைக்குள் கணவன் பிரபு எழுதி வைக்கும் சிறு கடிதம் கதையில் திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

பத்தாண்டுகாலமாக தன்னோடு வாழும் நிலையை மறந்தும், மறைத்தும் அக்கடிதத்தில் “நீ என் உயிர் என்றும்”, ”நீயின்றி என்னால் இருக்க முடியாது” என்றும் அவன் எழுதியிருந்த பொய்கள் அதுவரை அவனை அவள் நேசிக்கக் காரணமாக இருந்த நேர்மையையும், அவன் மீது அவளுக்கிருந்த நம்பிக்கையையும் பொய்யாக்கி விடுகிறது. தன் சந்தேகத்தால் எழுந்த பயத்தை மறைக்க அவன் எழுதிய அந்தக் கடிதத்தால் சந்திரிகா எடுக்கும் முடிவு எதிர்பார்த்த ஒன்றாக இருந்தாலும் அதன் பிந்தைய நிலையை வாசிப்பவர்களிடமே ஆசிரியர் விட்டு விடுகிறார்.

ஒரே வீட்டிற்குள் வசிக்கும் தம்பதிகளுக்கிடையே நிகழும் கடித வடிவிலான கதைக்கு நீரோட்டமாக வாழ்வின் எதார்த்தங்களை, சிறிய எதிர்பார்ப்புகளை, புறக்கணிப்புகளை பயன்படுத்திய விதம் பழைய கதைக்கருவை  புதிய பரிணாமம் பெறச் செய்கிறது.

ஆசிரியர்  :  உத்தம சோழன்
    கதை   :  ஆசையின்றி ஓர் கடிதம்
வெளியீடு : திருவரசு புத்தக நிலையம்

Wednesday, 4 March 2015

நிஜத்தைத் தேடி

ஊருக்குப் புதிதாக வேலை தேடி வந்த இடத்தில் தன் மனைவி இறந்து விட்டதாகவும், பிணத்தை எடுக்கப் பணம் இல்லாததால் உதவி கேட்டு வந்திருப்பதாகவும் வாசலில் தட்டைக் கையில் ஏந்தியபடி நிற்கும் ஒருவன் சொல்லும் உண்மைத்தன்மை மீது கணவன், மனைவிக்கிடையே நிகழும் உரையாடல் தான் ”நிஜத்தைத்தேடி” கதை. இக்கதையின் ஆசிரியர் சுஜாதா.

கல்யாணமாகி ஒன்பது வருசத்திற்குப் பின் எதிரெதிரே அமர்ந்திருக்கும் கணவன், மனைவிக்கிடையே இருக்கும் ”பழக்கப்பட்ட மெளனம்” என்ற ஆரம்ப வரிகளிலேயே நகர வாழ்வின் நிஜத்தைச் சொல்லி நேரடியாக கதைக்குள் ஆசிரியர் அழைத்து வந்து விடுகிறார்.

உதவி கேட்டு வந்து நிற்பவனிடம் கேள்விகளால் துளைத்தெடுக்கும் கிருஷ்ணமூர்த்தி மூலம் ஆண்களின் மனநிலையும்-

”அவன் சொல்வது பொய்யாகவே இருந்தாலும் ஒரு ரூபா, ரெண்டு ரூபா கொடுத்துட்டா என்ன தேஞ்சா போயிடுவோம். எவ்வளவோ செலவழிக்கிறோம் கன்னா பின்னான்னு” என சொல்வதிலிருந்து சித்ரா மூலம் பெண்களின் மனநிலையும் காட்டி அவர்களுக்கிடையேயான உரையாடலையும் அதே மன ஓட்டத்திலேயே கொண்டு சென்றது கதையை தொய்வின்றி நகர்த்திச் செல்கிறது.

இப்படி உதவி கேட்பதை ”முட்டாளாக்கும் தந்திரம்” எனச் சொல்லும் கிருஷ்ணமூர்த்தி அதற்கு ஆதாரமாக வரிசைப்படுத்தி காட்டும் ஏமாற்றுச் சம்பவங்கள் நமக்கு நிகழ்ந்திருப்பவைகளாக, நாம் பார்த்திருப்பவைகளாக இருந்தாலும் ”வீட்டுக்குள்ள இருக்கிறவ நீ”, “உனக்கு அந்த அறிவு போதாது” எனக் கூறி மனைவி சித்ராவின் வாயை அடைக்க முயல்வதை ஒருவித அதிகார, ஆணாதிக்கத் தனம் எனலாம்.

உதவி கேட்டு வந்தவன் சொன்னதில் பொய் இருக்க வாய்ப்பில்லை என நினைக்கும் சித்ரா அதை உறுதி படுத்த முடியாமல் தன் மனதோடு வாதிட்டுக் கொண்டே இருக்கிறாள், அதன் வெளிப்பாடும், இயலாமையும் அவளிடமிருந்து கண்ணீராக வெளியேறியதை கிருஷ்ணமூர்த்தி பார்ப்பதில் கதை திசை திரும்புகிறது. அதுவரையிலான உரையாடல் சித்ராவின் கண்ணீரைப் போல அங்கு உடைபட்டு உண்மையின் தேடலாக மாறுகிறது.

தான் சொன்னதில் இருக்கும் உண்மையை மனைவிக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற வேகத்தில் உதவி கேட்டு வந்தவன் சொன்ன உத்தேச முகவரிக்கு காரை எடுத்துக் கொண்டு சென்ற கிருஷ்ணமூர்த்திக்கு அங்கு காணும் காட்சி இப்படித்தான் இருக்கப் போகிறது என்பதை ஊகித்து விட முடிகிறது. ஆனால், உண்மையை அறிந்து வீட்டிற்கு திரும்பியவன் என்ன ஆச்சு? எனக் கேட்ட மனைவியிடம் பொய் சொல்கிறான். அதைக்கேட்ட சித்ரா ”எத்தனை பொய்” எனச் சொல்லி அமைதியடையும் போது பல நேரங்களில் பொய்யே ஜெயிக்கிறது என்ற நிஜம் நம் மனதில் ஆர்ப்பரிக்கத் தொடங்குகிறது.

சுஜாதாவின் தனித்த அடையாளங்களோடு மனித மனவோட்டத்தை வெளிச்சமிடும் கதை! 

ஆசிரியர்  : சுஜாதா
    கதை   :  நிஜத்தைத் தேடி
வெளியீடு : வானதி பதிப்பகம்

Tuesday, 3 March 2015

காலப் பெருவெளி

மரபு மயங்கி நிற்க புதுக்கவிதை, நவீனக்கவிதை, பின் நவீனக் கவிதை எனக் கவிதையின் குழம்படிகள் வேறு, வேறு ஓசைகளை எழுப்பிய படியே வேகம் கொள்ளும் இத்தருணத்தில் வாசிப்பாளனோடு படைப்பவனும் தன்னுடைய படைப்பை அந்தந்தத் தளத்தில் கொண்டு நிறுத்த வேண்டியது இன்றைக்கு அவசியமாகிறது. அப்படி இல்லாது போகும் போது அந்தப் படைப்பு அதன் வெளியை முழுமையாக எட்டாமல் ஒரு அடைப்புக்குள் சிக்கிக் கொள்ளும் அபாயத்தைச் சந்திக்க நேரும். இந்தச் சூழலில் புதியதாக கவிதைப் பரப்பிற்குள் நுழைபவன் தன்னுடைய படைப்பை தொகுப்பாக்கி முன்னெடுத்துச் செல்வதற்குச் சாதகமாக கவிதைகளுக்கான விற்பனைக் கேந்திரம் இல்லாத நிலையில் துணிந்து இந்தத் தொகுப்பை கொண்டு வந்திருக்கும் தங்கமீன் பதிப்பகத்துக்கும், அதன் பதிப்பாளருக்கும் வாழ்த்துகள்.


”காலப்பெருவெளி” என்ற இந்தத் தொகுப்பில் முப்பது கவிஞர்களின் எழுபது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மாதந்தோறும் வாசகர் வட்டத்தில் கொடுக்கப்படும் கருவைக் கொண்டு எழுதப்பட்டு பரிசுக்குரியவைகளாக தேர்வான கவிதைகளின் தொகுப்பு தான் இந்நூல். புதிர்களை உள் நிறுத்துவதாய் காட்டி புரியாத் தன்மையோடு வாசகனை நகர்ந்து போகச் செய்யும் நவீனம் சாராமல் வரி விளையாட்டு, வார்த்தைத் திருகல் எதுவுமின்றி எளிமையான மொழியில் சம்பவங்களையும், காட்சிகளையும், நிகழ்வுகளையும் நேரடியாக விரித்துச் செல்லும் இக்கவிதைகள் ஒரு கருவை மட்டுமே மையமிட்டு எழுதியதால் அந்த மையத்திற்குள்லேயே குவிந்து கிடந்தாலும் ஒட்டுமொத்தமாக தொகுப்பை வாசிக்கும் போது சில கவிதைகள் அந்த மையத்தைத் தாண்டியும் சமகால நிகழ்வுகளையும், சூழலையும் பேசுவதைக் காண முடிகிறது. ஈழம் சார்ந்த கவிஞர் யாழிசை மணிவண்ணனின் ”புலம் பெயர்தல்” என்ற கவிதையை உதாரணமாகச் சொல்லலாம்.

ஆண், பெண் பேதம் படைப்புகளுக்கு இல்லை என்ற நிலையிலும் பெண் தனக்கான விசயங்களையும், ஆண் தனக்கான விசயங்களையும் தன் படைப்புகளில் முன்னிலைப்படுத்திக் காட்டுவது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது என்பதற்கு இந்தத் தொகுப்பில் உள்ள பல கவிதைகள் அடையாளமாகின்றன. பெண் கவிஞர்கள் பலரும் தங்களைச் சார்ந்த விசயங்களையே கொடுக்கப்பட்ட கருவுக்குள் கொண்டு வந்து நிறுத்தி கவிதையாக்கி இருக்கிறார்கள். இத்தொகுப்பில் இருக்கும் கவிஞர்கள் பிரேமா மகாலிங்கம், சுஜா செல்லப்பன் ஆகியோரின் கவிதைகள் அந்த வகையானவைகள்! இது இயல்பாக நிகழக்கூடியதாயினும் இந்த மன நிலை படைப்பாளிக்கு அவசியமற்றுப் போனால் மட்டுமே புதிய தளமும், களமும் வசப்படும். 

மணமான பின் பெண்கள் தங்களிடமிருந்து நழுவி நகரும் சுயத்தை அவர்கள் இழந்து விட்டதாய் மற்றவர்கள் நினைக்கும் விசயங்களில் இருந்தே மீட்டெடுக்கிறார்கள். ஆனால் அதை மற்றவர்கள் அறியாமல் அல்லது அறிவதற்கு முன்பாகச் செய்து முடித்து விடுகிறார்கள் என்பதை ”புகுந்த வீடு” என்ற தன் கவிதையில் கவிஞர் சுஜா செல்லப்பன் -
செழித்து வளர்ந்து கிளை பரப்பியது
இடப்பட்ட உரத்தினால் என்பதாகவே
அனைவரும் எண்ணிக் கொள்ளட்டும்!
வேரோடு ஒட்டிக் கொண்டு வந்த
சில மண்துகள்கள் தான்
என் உயிருக்கு ஆதாரமானவை
என்பது எனக்குள் மட்டுமே
புதைந்த ரகசியமாகவே இருக்கட்டும்! – என்று பேசுகிறார்.

ஒவ்வொரு முறையும் நம் மீது திணிக்கப்படும் மற்றவர்களின் பிம்பங்களால் நாம் நாமாக இருப்பதில்லை அல்லது இருக்கமுடிவதில்லை என்ற எதார்த்தத்தை  ”நான் நானாக இருப்பதில்லை”  என்ற கவிதையில்
யாரின் முகத்தையோ, குணத்தையோ
யார் மேலேயோ திணித்து திணித்து
தனிமனித அடையாளம்
இங்கு திவாலாகி விட்டது - என்று குறைபட்டுக் கொள்கிறார் கவிஞர் சேகர். நிவாரணியற்ற நோவுகள் போல இந்தக் குறை மனித இனம் உள்ளவரை இருக்கத்தான் செய்யும்!

துணையை இழந்த பெண்ணின் குரலாய் ஒலிக்கும் ”வெளிச்சமாக நீ” என்ற தன் நீண்ட கவிதையின் முழு வீச்சையும்
பெளர்ணமி இரவில்
அமாவாசையாய் என் வானம்
இருண்டு கிடக்கிறது!
என்ற கடைசி மூன்று வரியில் நிலை நிறுத்திப் போகிறார் கவிஞர் பிரேமா மகாலிங்கம்.

நவீன கவிதைகளின் நுழைவாயிலாய் இருந்த, இருக்கின்ற குறீயீடுகளின் வழியே  கவிதையை விரித்துச் செல்லும் கவிதைகளும் இதில் இருக்கின்றது. உதாரணமாக இணைந்து முரண்பாடுகளால் பிரியும் வாழ் நிலைக்கு இரவு, பகலை குறியீடாக்கிப் பேசும் கவிஞர் கிருத்திகாவின் ”எதிர் பால்!” கவிதையைச் சொல்லலாம்.

தாய் தானம்” என்ற கவிதையில் கவிஞர் சமயமுத்து சந்திரசேகர்
தாய் ஈவதும்
தாய்க்கு ஈவதும்
தானம்
தலைசிறந்த தானம் – என்கிறார். தாய் ஈவது தானம். ஆனால், தாய்க்கு ஈவது தானமாகுமா? அது பொறுப்புடன் கூடிய கடமையல்லவா? 

இத்தொகுப்பில் இருக்கும் சிறு கவிதைகளில் என் மனதைத் தொட்ட கவிதை கவிஞர் கீழை அ. கதிர்வேலின் ”தானத்தின் மொழி
குருட்டுப் பிச்சைக்காரனின்
பாத்திரத்தில்
கணீர் என்று சப்தமெழ
நாணயத்தைப் போட்ட பின்பும்
சற்றே காத்திருந்தான்
“நீங்க மவராசனா இருக்கணும்”கிற
பிச்சைக்காரனின்
வார்த்தைகளுக்காக! – வயிற்றுக்கு யாசித்தவனிடமே மனதுக்கு யாசிக்கக் காத்திருக்கும் மனித இயல்பைப் படம் போடுகிறது கவிதை!

வார்த்தைகளை உடைத்து வரிகளை நீட்டித்தல், கவிதை அதன் நிலையை எட்டிய பின்பும் விரித்தல் என கவிதையின் செழுமையை வறட்சியாக்கக் கூடிய விசயங்களால் கட்டமைக்கப்படிருக்கும் சில கவிதைகளுக்கிடையே இத்தொகுப்பில் கவனிக்கத்தக்க கவிதைகளாக மகேஷ்குமாரின் ”வலையில் விழாதவை”, ”ஒற்றை மரம்”, முளைப்பாரி, ராஜீரமேஷின் ”நான்”, மதிக்குமாரின் ”செய்தியாகாதவர்களின் கதை” பாலாவின் “நத்தையின் தலை மீதொரு சிறுவன்“ ஆகியவைகளை அடையாளப்படுத்தலாம்.

காற்றில் ஆடும் தாவணியை காதலின் முக்தி நிலையாக்கி காதல் கவிதைகளாய்  வார்த்தைகளை இணையப் பக்கங்களில் வரிகளாக்கி அதன் ஈரத்தன்மையை உலரச் செய்து விட்ட நிலையில் இத்தொகுப்பில் அப்படியான காதல் கதறல் கவிதைகள் இல்லாது இருப்பது சந்தோசமான விசயம். நல்ல ஆரம்பத்தின் அறிகுறி.

தன் பழைய ஆடையைக் கழைத்து புதிய ஆடை தரித்து நகர ஆரம்பித்திருக்கும் கவிதையின் தடத்தைக் குறைவாகக் கொண்டிருக்கும்  இத்தொகுப்பின் ஆக்கத்திலும், வடிவமைப்பிலும் சமரசமற்றிருந்த போதும் ஊர் கூடி தேர் இழுப்பதைப் போல படைத்தவர்களே பங்களிப்புச் செய்து இத்தொகுப்பை கொண்டு வந்திருப்பதால் ஒரு தொகுப்பு நூலுக்கான அத்தனை சமரசங்களையும் உள்ளடக்கிய தொகுப்பாய் மிளிர்கிறது காலப்பெருவெளி. 

நன்றி : சொல்வனம்.காம்

Monday, 2 March 2015

ரசிக்க – சிந்திக்க – 6


இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தி. அதுவரையிலும் இந்தியப்பிரதமராக ஆண்களே இருந்து வந்ததால் பிரதமரின் அலுவலக அதிகாரிகள் பிரதமராக இருந்தவர்களை “மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்” என்றழைத்து வந்தனர். அதுவே மரபாகவும் இருந்து வந்தது. இந்திராகாந்தி பிரதமர் பதவி ஏற்றதும் அந்த மரபிற்கு சோதனை வந்தது. பெண்பிரதமர் என்பதால் அவரை எப்படி அழைப்பது? என்ற குழப்பம் பிரதம அலுவலக அதிகாரிகளுக்கு வர அவர்களின் சங்கடத்தைப் புரிந்து கொண்ட இந்திரா சொன்னார். என்னையும் ”மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்” என்றே அழையுங்கள்.

“ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்” என்ற பாரதியின் வரிக்கேற்ப தன்னைத் தாழ்த்திக் கொள்ளாத இந்திராவின் அந்த மனநிலைதான் அவரைத் துணிச்சல் மிகு நிர்வாகியாக்கி இந்தியாவின் இரும்பு பெண்மணியாக்கியது. எதற்காகவும், எதன் பொருட்டும் உங்களை நீங்கள் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். அது உங்களுக்கே உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்க வைக்கும்.

நன்றி : தமிழ்முரசு நாளிதழ்