Monday, 27 April 2015

ரசிக்க – சிந்திக்க – 13

ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகம் பொன்விழா கொண்டாடியது. அந்த விழாவில் நோபல் பரிசு  பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.இராமன் கலந்து கொண்டு ”வைரங்கள்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அவரது உரைக்குப் பின் ஒரு இளைஞன் எழுந்து, “ஐயா, வைரங்களின் தன்மை, குணம், ஒலிச்சிதறல் பற்றியெல்லாம் தெளிவாகச் சொன்னீர்கள். ஆனால், வைரம் செய்வது எப்படி? என்று தாங்கள் சொல்லவில்லையே” என்றார்.
உடனே சர்.சி.வி.இராமன் “அது ஒன்றும் கடினமான காரியமில்லை. ஒரு கரித்துண்டை எடுத்துக் கொள். அதை பூமியில் ஆயிரம் அடி ஆழத்தில் புதைத்துவைத்து விட்டு ஆயிரம் ஆண்டுகள் காத்திரு, உடனே வைரம் கிடைத்து விடும்” என்றார். வைரம் என்ற விலை மதிப்பில்லா பொருள் கிடைக்க வேண்டுமானால் அதற்கு ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படுவதைப் போல நம்முடைய இலட்சியத்தை அடைந்து அதன் மூலம் விலை மதிப்பில்லா வெற்றியைப் பெற வேண்டுமானால் அதற்கு வெறும் ஆசை மட்டும் இருந்தால் போதாது. கடின உழைப்பு, தீவிர முயற்சி ஆகியவற்றோடு தேவையான கால அளவிற்குப் பொறுமையும் அவசியம். இல்லையென்றால் விதையைப் போட்ட மறுநாளே அது முளைக்கவில்லை எனக் கூறிக் கொண்டு அந்த விதையைத் தினமும் எடுத்து, எடுத்துப் பார்த்து விட்டு பதியம் போட்ட குரங்கின் கதையாகி விடும்.

நன்றி : தமிழ்முரசு நாளிதழ்

Monday, 20 April 2015

ரசிக்க – சிந்திக்க - 12

தேவாலயத்தில் சொற்பொழிவை முடித்த போதகர் கூட்டத்தில் இருந்தவர்களிடம் “என் அருமைச் சகோதரர்களே! என்னுடன் சொர்க்கத்திற்கு வர விரும்புபவர்கள் கை தூக்குங்கள்” என்றார். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரே ஒருவரைத் தவிர மற்ற எல்லோரும் கையைத் தூக்கினார்கள். இதைக் கண்ட போதகர் அவரிடம், ”நீங்கள் சொர்க்கத்திற்கு வரா விட்டால் நரகத்திற்குப் போக விரும்புகிறீர்களா? என்றார்.
அதற்கு அந்த நபர், ”இல்லை ஐயா, நான் பாராளுமன்றத்திற்குச் செல்ல விரும்புகிறேன்” என்றார். சொன்னதோடு மட்டுமில்லாமல் தன்னை விரட்டியடித்து வந்த தோல்விகளை எல்லாம் விரட்டியடித்து தேர்தலில் நின்று வெற்றி பெற்று தான் எண்ணிய படியே பாராளுமன்றத்திற்குள் உறுப்பினராக நுழைந்து பின்னர் அந்நாட்டின் அதிபராகவும் பதவியில் அமர்ந்தார். அவர் தான் அமெரிக்க அதிபராக இருந்த ஆப்ரகாம் லிங்கன்!

லிங்கனைப் போல் உங்கள் இலட்சியம் தெளிவாய், நேரத்திற்கேற்ப மாறாத வகையில் உறுதியாய் இருந்து அதை அடைவதில் நீங்கள் தீவிர கவனம் செலுத்தினால் போதும். உங்களாலும் நினைத்ததைச் சாதிக்க முடியும். 

நன்றி : தமிழ்முரசு நாளிதழ்

Tuesday, 14 April 2015

ரசிக்க – சிந்திக்க – 11

பெளதீகத்திற்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி. இராமனிடம் ஒரு இளைஞன் வேலை கேட்டு வந்தான்.  நேர்முகத் தேர்வில் இராமன் அவனிடம் பெளதீகம் சம்பந்தப்பட்ட சில கேள்விகளைக் கேட்டார். அந்த இளைஞனுக்கோ விடை தெரியவில்லை.  பெளதீகம் தெரியாதவருக்குத் தன்னிடம் வேலை இல்லை எனக் கூறி இராமன் அந்த இளைஞனை அனுப்பி விட்டார். ஏமாற்றத்தோடு அந்த அறையை விட்டு வெளியே வந்த இளைஞன் அறை வாசலில் ஒரு குண்டூசி கீழே கிடப்பதைக் கண்டான். உடனே அதை எடுத்து அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு வெளியே செல்லப் புறப்பட்டான்.

இதைத் தற்செயலாகக் கவனித்த இராமன் அந்த இளைஞனைத் திரும்பக் கூப்பிட்டார். “உன்னை வேலையில் சேர்த்துக் கொண்டு விட்டேன். உனக்குப் பெளதீகம் தெரியா விட்டாலும் என்னால் அதைக் கற்றுத்தர முடியும். ஆனால், பொறுப்பில்லாதவர்களுக்கு என்னால் பொறுப்பைக் கற்றுத் தர முடியாது” என்றார். சர்.சி.வி.இராமன் அந்த இளைஞனிடம் கூறிய காரணம் வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்! பின்பற்ற வேண்டிய விசயம்!!
பொறுப்புணர்வு கொண்டவர்களால் மட்டும் தான் எதையும் நேர்த்தியாகச் செய்ய முடியும். செய்ய முடிகிறது என்ற உண்மையை உணருங்கள். அப்படியான பொறுப்புணர்வு மட்டுமே உங்களுடைய நோக்கத்தை அடைவதற்கான உற்சாகத்தையும், உந்து சக்தியையும் தொய்வில்லாமல் தரும். எனவே உங்களுடைய அன்றாட நிகழ்வுகளில் கூட அலட்சியம் காட்டாமல் பொறுப்புணர்வோடு செயல்படுங்கள். உங்களுக்கான அடையாளம் தானாகவே உங்களைத் தேடி வரும்

நன்றி : தமிழ்முரசு நாளிதழ்

Friday, 10 April 2015

விட்டுக்கொடுத்து வசப்படுத்துங்கள்

ஒரு குழந்தையானது தனது பழக்க வழக்கங்களில் மேம்பாடு அடைவதும், தாழ்நிலை அடைவதும் பெற்றோரையும், சுற்றுச்சூழலையும் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது என்கிறார் மு.வ. இதை இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் வீடு, சமூகம் சார்ந்தே  குழந்தைகளின் எதிர்காலம் மேம்படுகிறது எனலாம். வீட்டில் பெற்றோர்களையே அதிகம் சார்ந்திருக்கும்  குழந்தைகள் அவர்களைப் பார்த்தே தங்களை வடிவமைக்க முயல்கின்றன. இந்த ஆரம்ப முயற்சி தான் பின்னாளில் ஒரு குழந்தையை சமூகத்திற்கு அடையாளம் காட்டுகிறது. ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியிலும் பெற்றோர்களின் நடவடிக்கைகள் மிகப் பெரிய தாக்கத்தை தரக்கூடியதாக அமைவதால் தான் குழந்தைகள் உளவியலில் ”பெற்றோர் – குழந்தைகள் உறவு” குறித்து அதிக கவனம் அளிக்கப்படுகிறது. ”மக்கு” என பள்ளியிலிருந்து விரட்டியடித்த போது நான் உனக்கு பாடம் சொல்லித்தருகிறேன் என அரவணைத்துக் கொண்ட தன் தாயின் நடவடிக்கையால் செவித்திறன் குறைந்த ஒரு குழந்தை பின்னாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு உரிமையாளரானது. அந்தக் குழந்தையின் பெயர் தாமஸ் ஆல்வா எடிசன்!


இப்படியான அரவணைப்பு சார்ந்த நடவடிக்கைகளின் வழி குழந்தைகளை நேசிப்பதன் மூலமாக மட்டுமே அவர்களுடனான உறவை இணக்கமாகப் பேண முடியும். துரதிருஷ்டவசமாக குழந்தைகளிடம் அன்பாய் இருப்பதையும், அவர்களுக்கு தேவையானவைகளை வாங்கி தருவதையும் மட்டுமே நேசிப்பதற்கான அடையாளங்களாக - வரையறைகளாக நாம் வைத்திருக்கிறோம். இந்த அடையாளமும், வரையறையுமே தவறு. இதற்குப் பெயர் கடமை. நேசிப்பு, கடமை இவ்விரண்டிற்குமான வித்தியாசத்தை உணராததால் தான் ”நான் அவனுக்காக என்னவெல்லாம் செய்தேன், அவனை எப்படியெல்லாம் உருவாக்க நினைத்தேன். ஆனால் பள்ளிக்கூடம் போக மாட்டேங்கிறான். படிக்க மாட்டேங்கிறான்” என பல பெற்றோர்கள் புலம்புகின்றனர். பெற்றோர்கள் தன் கடமையை செய்வதன் மூலம் மட்டும் தங்களைப் பற்றி குழந்தைகளிடம் புரிதலை உருவாக்கி விட முடியாது. புரிதல் இல்லாத போது அங்கு நேசிப்பு குறைந்து குழந்தைகளின் செயல்கள் பெற்றோரிடமிருந்து குற்றச்சாட்டுகளாக வெளியேறுகிறது. அதன் தாக்கம் அதிகமாகும் போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் வார்த்தைகளால் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். சில பெற்றோர்கள் ”அடிக்காத பிள்ளை திருந்தாது” என்ற அபத்தமான உதாரணங்களுக்கு முன்னுதாரணமாகிப் போகிறார்கள்.

பள்ளியிலேயே குழந்தைகளுக்கான எல்லாமும் கிடைத்து விடுகிறது என்ற பெற்றோர்களின் மனநிலைதான் இது போன்ற ஆதங்கங்களுக்கு காரணமாகின்றன.  உண்மையில் பள்ளியில் தான் குழந்தைகளுக்கு பிரச்சனைகள் ஆரம்பமாகிறது. பெற்றோரின் கையிலிருந்து விலகிச் செல்லும் குழந்தைகள் சந்திக்கும் முதல் பிரச்சனை பள்ளியில் தான் தொடங்குகிறது. சக மாணவனோடு முரண்படுதல், ஆசிரியர், வகுப்பறை மீதான பயம், புதிய சூழலில் நிகழும் நிகழ்வுகள், தனியே செய்ய வேண்டிய செயல்கள் என தான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை  ஆசிரியர்களிடம் சொல்லத் தயங்கி நிற்கும் ஒரு குழந்தை அதற்கான தீர்வைத் தருபவர்களாக பெற்றோர்களை நோக்கி வரும் போது அவர்கள் பேச தயாராக இல்லாத பட்சத்தில் அந்த குழந்தைக்கு மனவியல் பிரச்சனை ஆரம்பமாகி விடுகிறது. அதேபோல, பள்ளியில் தான் புதிதாக கேட்ட, படித்த  விசயங்களைப் பகிர்ந்து கொள்ள குழந்தை பெற்றோரை நாடி வரும் போது ”கதையெல்லாம் போய் அப்பா கிட்ட சொல்லு” என அம்மாவும், ”அப்பாவுக்கு வேலை இருக்கு” என அப்பாவும் மறுக்கும் போது அது அந்தக் குழந்தையின் மனதில் ஒரு முடிச்சாக விழுந்து விடுகிறது. இந்த முடிச்சுகள் தான் குழந்தைகள் வீட்டில் அதிக சேட்டைகள் செய்வதற்கான தூண்டலைச் செய்கின்றன என்கிறார் ஓஷோ.

குழந்தைகளை இது போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுவிக்க அவர்களை எப்பொழுதும் பெற்றோர்கள் நெருக்கத்தில் வைத்திருக்க வேண்டும். அதற்கு அவர்களுடன் தினமும் சிறிது நேரம் உரையாடுவதன் மூலம் இதை சாத்தியமாக்க முடியும். அவர்கள் பேசும் போது அவர்களுடன் அமர்ந்து கேட்பது, பிரச்சனைகள் அல்லது பயத்தால் அவர்கள் பேச தயங்கும் போது பொதுவான சில உரையாடல்கள் வழி அவர்களைப் பேச வைப்பது என்ற இரண்டு வழிகளை மேற்கொண்டாலே போதும். என்ன நிகழ்ந்தாலும் அப்பா, அம்மாவிடம் போய் சொன்னால் அவர்கள் சரி செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு வர வைக்க வேண்டும். கூட்டுக்குடும்ப வாழ்க்கை சிதைந்து போய் தனித்த வாழ்க்கை வாழும் சூழலில் குழந்தை பெற்றோரை நேசிக்கவும், அவர்களுடனான உறவை விரும்பவும் குழந்தைகளிடம் இந்த நம்பிக்கையை உருவாக்குவது  அவசியம். அதனால் தான் பொருளாதார நெருக்கடிகளுக்கான வேக வாழ்க்கையில் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குவது சிரமமாக இருக்கிறது என்று கூறுவதை முதலில் நிறுத்துங்கள் என்று குழந்தை உளவியாளர்கள் அடிக்கடி அறிவுறுத்துகின்றனர். இந்த அறிவுறுத்தலை அச்சரம் பிசகாமல் பின்பற்றும் பெற்றோர்கள் குழந்தைகளின் கை கோர்த்து அவர்களின் வாழ்நாள் முழுக்க பயணிக்கிறார்கள். குழந்தைகளுக்காக நேரம் செலவழிப்பது, சொன்ன விசயத்தையே குழந்தைகள் திரும்ப, திரும்ப சொன்னாலும் அதை புதிய விசயம் போலக் கேட்பது, அடக்குமுறை இல்லாத அன்பை தருவது இந்த மூன்றும் தான் தாத்தா, பாட்டி ஆகியோரிடம் குழந்தைகள் நெருக்கமாக இருப்பதற்கும், அவர்களை விரும்புவதற்கும் முக்கிய காரணம். இதை பெற்றோரிடம் பெறும் குழந்தைகள் இன்று அரிதாகி விட்டார்கள்!

குழந்தைகள் செய்யும் சின்ன விசயங்களைக் கூட கவனித்து அதற்காக அவர்களை உற்சாகப்படுத்தி பாராட்டுவதன் மூலமும், போனில் எப்படி பேசுவது? வீட்டிற்கு வந்த உறவினர்களை எப்படி வரவேற்பது? என சில அடிப்படையான விசயங்களைச் சொல்லித் தருவதன் மூலமும், சில செயல்களில் அவர்களையும் உங்களோடு பங்கெடுக்க வைப்பது, சிறு, சிறு கதைகளை சொல்லி அவர்களை அது சார்ந்து பேச வைத்து அவர்களின் சிந்தனைப் பரப்பை விரிய வைப்பது ஆகியவைகளின் மூலமும்  குழந்தைகளின் முதல் நண்பராக உங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டுமேயொழிய வெறும் எச்சரிக்கை வார்த்தைகளால், கோபத்தின் வெளிப்பாட்டால் குழந்தைகளை நீங்கள் விரும்பிய வகையில் செயல்பட வைக்க முயலக் கூடாது. அது அந்தக் குழந்தைக்கு உங்கள் மீதான அந்நியோனியத்தை உருவாக்குவதற்கு பதிலாக ஒருவித அச்சத்தையே தரும். புரிதலை உருவாக்காது. நெருங்கி வரச்செய்வதற்கு பதில் விலகிச் செல்லவே வழி வகுக்கும். எந்த ஒரு செயலையும் உங்களின் கட்டாயத்திற்காக என்றில்லாமல் உங்களுக்காகவும் – தனக்காகவும் என குழந்தையை செய்ய வைப்பதில் தான் பெற்றோரின் வெற்றி அடங்கி இருக்கிறது. அப்பா, அம்மாவுக்கு பயந்துக்கிட்டு இதைச் செய்தேன் என்றில்லாமல் அப்பா அம்மாவுக்காக இதைச் செய்தேன் என்று உங்கள் குழந்தை சொல்லுமேயானால் அதுதான் உங்களின் வெற்றி. அப்படிச் சொல்ல வேண்டுமானால் அதற்கு விட்டுக்கொடுத்தலுடன் கூடிய நேசிப்பு அவசியம். எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றைச் சொல்கிறேன்.

அன்று சுதந்திரதினம் என்பதால் அரைநாள் தான் வகுப்பு. அதுலயும் ஒரு மணிநேரம் விழாவுக்குப் போயிடும். இரண்டு நோட்டும், ஸ்நாக்சும் தான் கொண்டு போகனும். அதுனால என் ஸ்கூல் பேக்குக்கு பதிலா அம்மா கிட்ட இருக்கிற பேக்கை கொண்டு போகவா? என மகள் கேட்டாள். குடும்ப நண்பர் மூலம் பரிசாக வந்த வேலைப்பாடுள்ள அந்த பேக்கை வீணாக்கி விடுவாளோ என்ற எண்ணத்தில் நான் வேண்டாம் என்றேன். அவளும் பலவாறு பேசிப்பார்த்தாள். நானும் பிடிகொடுக்காமல் மறுத்து விட்டேன். இரவில் உறங்குவதற்கு முன் தன் அம்மாவிடம் பேசிப்பார்த்தவள் எந்த பேக்கை நாளைக்கு நான் எடுத்துட்டு போறதுன்னு முடிவு பண்ணிவையுங்க என சொல்லி விட்டு உறங்கப் போய்விட்டாள். விரும்பி கேட்டாளே என்ற உறுத்தல் எனக்குள் வரவேகாலையில் அந்த பேக்கை கொடுத்தனுப்பு” என மனைவியிடம் சொல்லிவிட்டு மகளிடமும் சொன்னேன். அவளோ, ”வேண்டாம்...… என் ஸ்கூல் பேக்கையே கொண்டு போறேன். நைட்டே எல்லாம் எடுத்து வைத்துவிட்டேன்என்றாள். பரவாயில்லம்மா இன்னைக்கு ஒருநாள் தானே....... எடுத்துட்டு போ. அம்மாவிடம் சொல்லி விட்டேன் என்றேன். அவளோ ப்ளீஸ் அப்பா…..வேண்டாம் என்றாள். எப்பொழுதும் வேணும் என்பதற்கு ப்ளீஸ் என்பவள் இம்முறை வேண்டாம் எனபதற்கு சொன்னதால் ஏன்? என்று காரணம் கேட்டேன். நான் சொல்ற எல்லாத்தையும் நீங்க கேட்கிறீங்க. அதுமாதிரி நீங்க சொல்றதையும் நான் கேட்கனுமில ……அதுனால நீங்க சொன்ன மாதிரியே என் ஸ்கூல் பேக்கையே எடுத்துட்டு போறேன் என்றாள்.

குழந்தைகளுக்காக நீங்கள் உங்களின் பிடிவாதங்களை, மனநிலையை விட்டுக்கொடுத்து செயல்படும் போது அவர்களும் தங்களை உங்களுக்காக மாற்றிக் கொள்வார்கள். எனவே வளரும் குழந்தைகளை விட்டுக்கொடுக்கும் மனநிலையோடு நேசித்தாலே போதும் அவர்களை உங்கள் வசப்படுத்த முடியும். உங்களின் முன் குழந்தை என்ற கல் இருக்கிறது. அதை சிலையாய் வடித்து ஆலயத்திற்குள் வைப்பதும், அம்மியாய் கொத்தி அடுப்படியில் முடக்குவதும் உங்கள் கைகளில் தான் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நன்றி : தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி கல்விச் சிறப்பு மலர். திருப்பூர்.

Wednesday, 8 April 2015

இராமருக்கு அருளிய ஆதிஜெகன்னாதர்

புதிதாக வீடு கட்டும் போது கட்டிட சாமான்களை போட்டு வைப்பதற்காக தற்காலிக குடிசை ஒன்றை வீடு கட்டும் இடத்திற்கு அருகில் உள்ள இடத்தில் அமைப்பது நம்முடைய வழக்கம். அப்படி அமைக்கும் போது அந்த இடத்திற்குரியவரிடம் அதற்கான அனுமதியை கேட்போமில்லையா? அதுபோல சீதையை மீட்க கடலின் மேல் பாலம் கட்ட முடிவு செய்த இராமர் கடலரசனிடம் கடல் அலைகலின் சீற்றத்தை குறைத்துக் கொள்ள வேண்டியும், அனுமதி கேட்டும் காத்திருந்தார். அவனுக்கென்ன வேலையோ? மூன்று நாட்களாக இராமரின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமலிருந்தான். இராமரோ அங்கிருந்த தர்ப்பையை ஆசனமாக கொண்டு சயனித்தபடியே காத்திருந்தார். அப்படி இராமர் சயனித்திருந்த தலம் ”திருப்புல்லணை” என அழைக்கப்பட்டது. நாளடைவில் அது மருவி ”திருப்புல்லாணி” என்று பேச்சு வழக்கானது. வடமொழியில் இவ்வூர் ”தர்ப்பசயனம்” என்றழைக்கப்படுகிறது. தர்ப்பம் – புல்; சயனம் – உறங்குதல். தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை செல்லும் வழியில் பத்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்தலத்தில் வீற்றிருப்பவர் ஆதி ஜெகன்னாத பெருமாள். பஞ்சதரிசன தலமான பூரியில் இடுப்பு உயர அளவில் மட்டுமே வீற்றிருந்து காட்சி தரும் ஜெகன்னாதர் இங்கு முழுமையாக காட்சி தருவதால் இத்தலம் ”தட்சிண ஜெகன்னாதம்” என்று அழைக்கப்படுகிறது.


72 சதுர் யுகங்களுக்கு முன் புல்லவர், காலவர், கண்ணவர் என்ற மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல் நிரம்பி இருந்த இத்தலத்தில் அமர்ந்து கடும் தவம் செய்து வந்தனர். இவர்களின் தவத்தினால் அக மகிழ்ந்த பெருமாள் அரசமரமாக அவர்கள் முன் காட்சி கொடுத்தார். அதைக் கண்டு மகிழ்ந்த அம்மகரிஷிகள் பெருமாளிடம் உண்மையான சொரூபத்தில் காட்சியளிக்கும் படி வேண்ட அவர்களின் விருப்பத்தை ஏற்று அசுவத்த நாராயணனாய் அமர்ந்து காட்சி கொடுத்தார். அதனால் இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமாள் ”ஆதி பெருமாள்” என்றழைக்கப்படுகிறார்.

சீதையை மீட்கச் சென்ற இராமர் தனக்கு அருளும் படி இப்பெருமாளை வேண்டி நிற்க அவரின் யோசனைப்படியே வருணன் மூலம் கடலை வற்றச் செய்வதை விட சேது பந்தனம் (சேது அணை) அமைப்பது மேல் என முடிவு செய்து கட்டப்பட்டது. அதோடு, அப்பொழுது அவர் அளித்த ஒரு பாணம் (வில்) மூலம் தான் இராமர் இராவணனை அழித்தார். இப்படி இராமருக்கு வெற்றி தேடி கொடுத்த ஜெகன்னாதரை வேண்டி செய்யும் எந்த காரியமும் வெற்றியடையும் என்பதால் இவருக்கு ”வெற்றி பெருமாள்” என்ற பெயரும், இராமர் வணங்கி வழிபட்டதால் ”பெரிய பெருமாள்” என்ற பெயரும் உண்டு. தவிர, இத்தலத்தில் உள்ள பெருமாளும், அவருடைய தேவியாரும், ஆலயத்தின் விமானமும் கல்யாணம் எனும் மங்கலத் திருப்பெயரை தாங்கி இருப்பதால் இவருக்கு ”ஸ்ரீ கல்யான ஜெகன்னாதர்” என்ற சிறப்பு பெயருமுண்டு.

மரங்களில் நான் அரசமரமாய் இருக்கிறேன் என கண்ணன் கூறியதைப் போல இத்தலத்தில் உள்ள விருட்சம் அரசமரம் (அஸ்வத்த விருட்சம்). இத்தலமரத்திற்கு வடக்கே சற்று தூரத்தில் நாக சிலைகளுடன் கூடிய பெரிய மேடை அமைந்துள்ளது. ஆரம்பத்தில் தலமரம் இங்கு தான் இருந்ததாகவும் பின் தானாகவே கிளைகளை தாழ்த்தி மண்ணில் புதைத்து தற்போது இருக்கும் இடத்திற்கு நகர்ந்ததாகவும் கூறப்படுகிறது. புத்திரபாக்கியம் வேண்டி வந்த தசரதர் இத்தலத்தில் புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்தி அந்த யாககுண்டலத்திலிருந்து வந்த பாயசத்தை தன் மனைவியருக்கு வழங்க அவர்கள் கருவுற்றனர் என்பது ஐதீகம். புத்திரபாக்கியத்திற்கான மூல மந்திரத்தை பெருமாள் தசரதனுக்கு உபதேசித்த தலமான இங்கு தசரதன் பிரதிஷ்டை செய்த நாகலிங்கம் உள்ளது. இத்தலத்தில் நாகலிங்க பிரதிஷ்டை செய்து நிவேதனம் செய்த பால் பாயாசத்தை அருந்தினால் புத்திரபேறு கிடைக்கும் என்ற ஐதீகம் இன்றும் பகதர்களால் பின்பற்றப்படுகிறது.

தலபுராணமோ தலமரத்திற்கு வேறு கதை சொல்கிறது. தொடக்க காலத்தில் படைப்புத் தொழிலை பரந்தாமனே செய்து வந்தாராம். அவரே முதன் முதலில் பிரம்மா, நவ பிரஜாபதிகள், இந்திரன் ஆகியோரை படைத்து பின் படைப்புத் தொழிலை பிரம்மாவிடம் அளித்தாராம். பிரம்மா தன் படைப்புத் தொழிலை செய்வதற்காக தென்திசை நோக்கி வருகையில் பேரொளி பிழம்பு ஒன்று தோன்றி அதே நொடியிலேயே மறைவதைக் கண்டு அது பற்றி கேட்டபோது அது ”போத ஸ்வரூபமான மரம்”. அதாவது அரச மரம். அதன் நிழலில் தான் ஜெகன்னாதர் தங்கி வருகிறார் என அசரிரி வழி பதில் கிடைத்ததாம்.

இத்தலத்தில் அமர்ந்த கோலம் (ஆதிஜெகன்னாதர்), சயனக்கோலம் (ஸ்ரீ தர்ப்பசயன இராமர்), நின்ற கோலம் (ஸ்ரீ பட்டாபி இராமர்) என்ற மூன்று கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். மூலவர்கள் மூவருக்கும் தனித்தனி ஆலயங்கள் உள்ளன. மூலவர் ஜெகன்னாதர்  கல்யாணவல்லி, பதமாசனித் தாயாருடன் காட்சி தருகிறார். ஸ்வஸ்திக விமானம், கல்யாண விமானம், புஷ்பக விமானம் என விமானங்களால் சிறந்து விளங்கும் இத்தலத்தில் புராதான கோயில்களில் மட்டும் காணக்கூடிய வகையில் மகாலட்சுமியை மடியில் இருத்தி நரசிம்மர் காட்சி தருகிறார். இவருக்கு பக்தர்கள் சந்தன காப்பிட்டு வழிபடுகின்றனர். நாகத்தின் மீது நடனமாடும் ஸ்ரீ சந்தான கண்ணன் இன்னுமொரு சிறப்பு.

இத்தலத்திலிருந்து நான்கு கி.மீ தொலைவில் இராமேஸ்வர யாத்திரையில் முக்கியமான ”சேதுக்கரை” என்ற தலம் அமைந்துள்ளது சேது என்றால் அணை என்று பொருள். அணை கட்டிய இடத்தில் உள்ள ஊர் என்பதால் சேதுக்கரை என பெயர் பெற்றது.  இங்கு அணைகட்டும் சமயத்தில் தான் தனக்கு கைங்கர்யம் செய்த அணில்களுக்கு முதுகில் இராமர் தன் திருக்கைகளினால் தடவி பாராட்டினாராம். முன்பு இராமேஸ்வரத்தோடு இணைந்திருந்த இப்பகுதி பின் கடல் கோளால் அதிலிருந்து பிரிக்கப்பட்டது.  இத்தலத்தில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள தீர்த்தம் ”ரத்னாகர தீர்த்தம்” என்றழைக்கப்படுகிறது. ஆற்று நீர், குளத்து நீர், கடல் நீர் என்ற மூன்று நீர் பெருமைகளை ஒருங்கே கொண்டிருப்பது இத்தலத்தின் மற்றும் ஒரு சிறப்பாகும். சேதுவின் கரையைக் கொண்ட பிரதேசத்தை ஆண்ட இப்பகுதி மன்னர்கள் சேதுபதிகள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் ஆட்சி செய்த போது பரராஜசேகர மன்னர் காலத்தில் தான் ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில் கட்டப்பட்டது. அதன் காலம் சரியாக அறியப்படவில்லை. அதன் பின் 17 ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த கிழவன் சேதுபதி மற்றும் விஜயரகுநாத சேதுபதி, முத்துராமலிங்க சேதுபதி ஆகியோரால் இக்கோயிலுக்கென ஊர்களும், உதவிகளும் வழங்கப்பட்டன. இக்கோயிலுக்கென பல உப்பளங்கள் உள்ளன. மன்னார் வளைகுடாவில் மூழ்கி எடுக்கப்படும் முத்துகுளியலில் ஒரு பங்கு இவ்வாலயத்திற்கு உரியது.

திருமங்கையாழ்வார் இத்திருத்தலத்திற்கு வந்து 20 பாசுரங்களை எம் பெருமான் மீது பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துச்சாமி ஆகியோர் கீர்த்தனைகளிலும், திருஞான சம்பந்தர், அப்பர் ஆகியோர் தத்தமது தேவார பதிகங்களிலும் இத்தலத்தை பாடியுள்ளனர். ஆண்டாளும், திருமாழிசையில் சேதுவை பாடி உள்ளார்.

108 திவ்ய தேசங்களில் 96 வது திவ்ய தேசமாகவும், பாண்டி நாட்டு திருப்பதிகளில் நான்காவது திவ்ய தேசமாகவும் திகழும் இத்தலம் தீர்த்தம், மூர்த்தி, தளம் ஆகிய முப்பெருமைகளை உடையது இராமபிரானின் திருவடிகளில் தன் மனைவியோடு கடலரசனும், அனலன், அனிலன், அரன், சம்பாதி ஆகிய நால்வரோடு வீடணனும், இராவணனால் வேவு பார்க்க அனுப்பப்பட்ட சுகன், சாரணன ஆகியோரும் சரணடைந்த தலம் என்பதால் இத்தலம் சரணாகதி தலமாகவும் திகழ்கிறது. நாமும் இவர்களைப் போல சரணடைந்து இராமனுக்கு அருளிய ஆதிஜெகன்னாதரை வேண்டி துன்பங்கள் நீங்கி வெற்றி பெற ஒருமுறை இத்தலத்திற்கு சென்று வரலாமே!

நன்றி : நிலாச்சாரல்.காம்

Tuesday, 7 April 2015

ரசிக்க – சிந்திக்க – 10

இங்கிலாந்தின் பிரதமராக இருந்த சர்ச்சில் பேச்சை விட செயலுக்கே முக்கியத்துவம் தருபவர். அதிர்ந்து பேசாதவர். அவருடைய அறைக்குப் பக்கத்து அறையில் இருந்த அமைச்சரோ எப்பொழுதும் சப்தமாக பேசும் வழக்கமுடையவர். 

ஒருநாள் சர்ச்சில் தனது அலுவலக அறையில் முக்கியமான வேலையில் இருந்த போது பக்கத்து அறையில் இருந்து வந்த அமைச்சரின் பேச்சு சப்தத்தினால் பொறுமையிழந்தார். உடனே தன் உதவியாளரை அழைத்து அவரிடம் போய் மெல்லப் பேசச் சொல்லு என்று கூறினார். அங்கு சென்று திரும்பிய உதவியாளர்  ”ஸ்காட்லாந்தில் உள்ள முக்கிய அதிகாரியுடன் அவர் பேசிக் கொண்டிருக்கிறார்” என்றார்.

உடனே சர்ச்சில், ”அது எனக்குத் தெரியும். அவரிடம் தொலை பேசியைப் பயன்படுத்தி பேசச் சொல்” என்றார் நக்கலாக! 

இன்று பொது இடங்களில் கூட அலைபேசியில் அலையடிக்கும் சப்தத்தோடு பேசுபவர்கள் தான் அதிகம். நமக்கான விசயங்களைப் பேசும் பொழுது அது மற்றவர்களுக்குத் தொல்லை தராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அது நாகாரீகம் மட்டுமல்ல. நல்ல பண்பும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நன்றி : தமிழ்முரசு நாளிதழ்

Saturday, 4 April 2015

பதறாமல் முன்னேறுங்கள்

நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற ஒரு செயலின் முடிவு எதிர்பார்த்தபடி இல்லாமல் போய்விடுமோ, குறித்த நேரத்தில் செய்து முடிக்க முடியாமல் ஆகிவிடுமோ என்ற நினைப்பு உங்களுக்குள் எப்பொழுது தோன்றுகிறதோ அந்த வினாடியே பதற்றமும் உங்களைப் பற்றிக் கொண்டு விடுகிறது. இந்த நினைப்பு தவறானதாகக் கூட இருக்கலாம். ஆயினும், இத்தகைய சந்தேக நினைப்பானது அந்தச் செயல் முடியும் வரை காத்திருப்பதில்லை. மாறாக, உங்களின் மீது ஆதிக்கம் செலுத்தி செயல்களின் ஒருங்கிணைப்பை சிதறடித்து விடுகிறது. அதனால் தான் ”பதறிய காரியம் சிதறும்” என்றார்கள்.

காரியம் சிதறாமல் இருக்க வேண்டுமானால் முதலில் பதற்றத்தை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள். அதை உங்களுக்குள்ளேயே வைத்திருந்து செயல்பாட்டுக்கான ஊக்கமாக மாற்றுங்கள். அப்படி மாற்ற முடியாவிட்டாலும் கூட எந்தச் சூழ்நிலையிலும் உங்களின் பலவீனமாக வெளிக் காட்டிக் கொள்ளாதீர்கள். ஏனெனில் அது உங்களின் மீதான மதிப்பீட்டைக் குறைத்து விடும். “ஐயோ….அவரிடமா? வேலையைச் சொன்னாலே பதறிடுவாரு. எப்படி செஞ்சு முடிப்பாரு?” என்ற சந்தேகப்பட்டியலில் உங்களின் பெயரை நீங்களே சேர்த்துக் கொள்ள அனுமதிக்காதீர்கள்.

செயலின் மீதானவைகளின் நடவடிக்கைகள், அப்போதைய நெருக்கடிகள், சூழ்நிலைகள் இவைகள் தான் பதற்றம் உருவாக முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. பதற்றமே இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் அதைச் சமாளிக்க முடியும். அதற்கு அப்படியான சூழ்நிலைகளில் எப்படிச் செயல்படலாம் என்ற நெறிமுறைகளை வைத்துக் கொண்டு அவைகளை நம்முடைய ஒவ்வொரு செயலின் போதும் பின்பற்றப் பழகிக் கொண்டோமானால் பதற்றத்தின் மூலம் ஏற்படக்கூடிய எதிர்விளைவுகளை வெகுவாகக் குறைத்து விட முடியும். இத்தகைய நெறிமுறைகளை “மாற்று ஏற்பாடு” என்ற பெயரில் வெற்றியாளர்கள் பின்பற்றுகின்றனர். அவர்களது திட்டமிடல் படிவங்களைப் பார்த்தீர்களேயானால் ஒவ்வொரு திட்டத்தின் அருகிலும் மாற்று ஏற்பாடு என்ற பெயரில் இணைப்புத் திட்டம் ஒன்றை நிரப்புவதற்கான கட்டங்கள் இருக்கும். இன்றைய வேக வாழ்க்கையில் நவின வியாதிகளின் பட்டியலில் பதற்றத்தையும் மருத்துவ உலகம் சேர்த்து விட்டது. எப்படி? யாரால்? எங்கே? எந்த சமயத்தில்? எதற்கா? பதற்றம் ஏற்படும் என்பது தெரியாத நிலையில் அத்தகைய ஒருநிலையைச் சமாளிக்க நாம் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்.

பதற்றத்தை உங்களுக்குள் ஏற்படுத்தக் கூடிய வகையில் ஒரே நேரத்தில் பல செயல்களைச் செய்வதிலும், பல பிரச்சனைகளைக் கையாள்வதிலும் ஈடுபடாதீர்கள். அதேபோல, நெருக்கடியான சூழல் சார்ந்து முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் தயங்கி நிற்காதீர்கள். அவரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்ற உப்புச் சப்பான காரணங்களால் முடிவெடுக்க வேண்டிய நேரங்களில் முடிவு  எடுக்காததால் பல வெற்றிகள் தோல்வி நிலைக்கு நகர்ந்திருக்கின்றன. நீங்கள் எடுக்கின்ற முடிவு அந்தச் செயலின் இறுதித் தீர்வு அல்ல! அந்தச் செயலின் செயல்பாட்டு நிலையில் ஏற்படக்கூடிய நெருக்கடியைச் சமாளிக்க மேற்கொணட ஒரு மாற்று ஏற்பாடு மட்டுமே! எனவே நீங்கள் மேற்கொண்டிருக்கும் செயல்களுக்கான செயல்பாடுகள் சார்ந்து எப்பொழுதும் ஒரு மாற்று ஏற்பாட்டை கைவசம் தயாராய் வைத்திருங்கள். கட்டாயம் என்ற நிலையில் உண்டாகக்கூடிய பதற்றம் ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் விபரீதமானதாக மட்டுமல்ல விசித்திரமானதாகவும்  இருக்கும். அது உங்களையே உங்களுக்குத் தெரியாத ஒரு நிலையை ஏற்படுத்தி விடும் என்பதற்கு ஒரு உண்மைச் சம்பவம் சொல்கிறேன்.

ஆகாசவாணியின் தமிழ்செய்திகள் வாசிக்கும் அறை அது. செய்தி அறிக்கைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தயாராக இருந்தன. செய்தி வாசிப்பாளர் மட்டும் தான் வர வேண்டி இருந்தது. அவர் வரவை எதிர்பார்த்து மற்ற ஊழியர்கள் காத்திருந்தனர். காத்திருந்த நேரத்தில் மாற்று ஏற்பாடு பற்றி எதுவும் யோசிக்கவில்லை. எவருக்காகவும் காத்திருக்காத நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. செய்தி வாசிப்பாளர் அந்த நேரம் வரை வராததால் மற்றவர்களுக்கு பதற்றம் உண்டாகி விட்டது. குறிப்பிட்ட நேரத்தில் செய்தியை ஒலிபரப்புச் செய்தாக வேண்டுமே என்ற அவசரத்தில் செய்தி வாசிப்பதற்கு ஏற்ற குரல்வளம் அங்கு இருப்பவர்களில் யாருக்கு இருக்கிறது? எனக் கண்டறிய நேரமிருக்கவில்லை,. அதேநேரம் யாரையாவது கூப்பிட்டு செய்தி வாசிக்க வைக்கவும் முடியாது. பதற்றத்தில் ஒவ்வொருவரும் ஒரு முடிவெடுக்க கடைசியாக அங்கிருந்த செய்தி மொழிபெயர்ப்பாளரை வாசிக்க வைப்பது என தீர்மானிக்கப்பட்டது. 

செய்தி அறிக்கைகளை அள்ளிக்கொண்டு அவரும் ஸ்டுடியோவிற்குள் சென்று மைக்கின் ஃபேடரைத் திறந்து ஆகாசவாணி……….செய்திகள் வாசிப்பது என பேப்பரைப் பார்த்து வாசிக்க ஆரம்பித்தார். ஆனால் அதற்கு அடுத்து வெறும் இடைவெளி மட்டும் இருந்தது,. யார் செய்தி வாசிப்பது என கடைசிவரை முடிவாகததால் செய்தி அறிக்கையைத் தயார் செய்தவர் வாசிப்பவர் பெயரை எழுதாமல் கொடுத்து விட்டார்.  செய்தி வாசிப்பவர் மொழிபெயர்ப்பிற்கான லைசென்ஸ் பெற்ற தகுதியுடையவராய் இருந்த போதும் அவரால் அந்த இடத்தில் உடனே அவர் பெயரைச் சொல்ல முடியவில்லை. சொல்ல முடியவில்லை என்பதை விட தன் பெயரை பதற்றத்தில் மறந்தும் போனார். தன் பெயரை நினைத்துப் பார்க்கும் குழப்பத்திலும், பதற்றத்திலும் மைக்கின் ஃபேடரை மூடி விட்டு திரு திருவென விழித்துக் கொண்டிருந்தார்.

மைக்கில் தான் ஏதோ பிரச்சனையாகி விட்டதோ என நினைத்து அறையின் கதவைத் திறந்த எஞ்சினியர் ஒருவர் இவர் பெயரைச் சொல்லி அழைத்து மைக்கைத் தவறுதலாக மூடிவிட்டீர்ள் போலிருக்கிறது. உங்கள் குரல் வெளியில் கேட்கவில்லை. ஆரம்பத்தில் இருந்து படியுங்கள் என ஃபேடரைக் காட்டிச் சொன்ன பின்பே இவருடைய பெயர் இவருக்கே ஞாபகம் வந்திருக்கிறது. அதன்பின் வாசிப்பவர் பெயரோடு ஆகாசவாணி செய்தி ஒலிபரப்பானது. பதற்றத்தில் பெயரை மறந்தவர் மறைந்த பூர்ணம் விஸ்வநாதன்.

பதற்றத்தில் அவர் பெயரை மறந்ததும் அவருடைய மனதில் ஏற்பட்ட நிகழ்வுகளை அவர் சொல்லிய நடையிலேயே கேட்போம். “என் பெயர் எனக்கு ஞாபகம் வரவில்லை என்ற கொடுமையோடு அணி, அணியாக வேறு எத்தனையோ பெயர்கள் போட்டி போட்டுக் கொண்டு என நினவில் வந்து மோதின. தற்போது என்னோடு வேலை செய்பவர்கள் பெயர்களோடு எப்பொழுதோ நான் சந்தித்த, என்னைச் சந்தித்த நண்பர்கள் பெயர்களும் வந்து குழப்பியடித்தன”.

இப்படியான குழப்ப மனநிலையில் அவசரப்பட்டு செய்கின்ற சில செயல்களால் உண்டாகும் எதிர்வினைகளினால் கோபம், விரக்தி எரிச்சல், வெறுப்பு போன்றவைகள் ஏற்பட்டு செயலின் மீதான இயக்கத்தைப் பாதிக்கிறது.  பதற்றமில்லா அமைதியில் தான் எதையும் சிந்தித்து செயல் படுத்த முடியும். அவசரத்தில் செய்கின்ற செயல்களில் வேகம் இருக்குமேயொழிய வெற்றிக்கான முடிவு இருக்காது. பல பெரிய கண்டுபிடிப்புகள் அவசரமில்லா அமைதியில் தான் கண்டறியப்பட்டன. நியூட்டன் புவீஈர்ப்பு விசையைக் கண்டறிந்ததும், ஆர்க்கிமிடிஸ் தன்னுடைய தத்துவக் கோட்பாட்டைக் கண்டறிந்து வெளியிட்டதும் அமைதியான நிலையில் தான்!

உடனே……..உடனே……….என நீங்கள் என்னதான் ஓடி, ஓடி உழைத்தாலும் அமைதியில்லா அவசரம் என்பதன் பலன் பூஜ்யமாகவோ அல்லது சாதாரனமானதாகவோ தான் இருக்கும் உலகையே தன்னுடைய படைகளாலும், நடவடிக்கைகளாலும் மிரள வைத்துக் கொண்டிருந்த ஹிட்லரின் சாவு அவருடைய அவசரத்தால் தான் தீர்மானிக்கப்பட்டது. எப்படியும் இரஷ்யாவை வீழ்த்தி விட வேண்டும் என்பதில் அவர் காட்டிய அவசரம் இரஷ்ய பனிமலைகளில் ஜெர்மானிய படைகளை தோல்வியடையச் செய்தது. அமைதியான குளத்தில் மீன்பிடிப்பது எளிது. அதை விடுத்து கலங்கிய குட்டையில் என்ன தான் நீங்கள் கஷ்ட்டப்பட்டு தூண்டில் வீசினாலும் மீன்கள் அகப்படுவது அரிது!

நீங்கள் திறமைசாலியாக, பல்துறை வித்தகராக இருக்கலாம். ஆனால் உங்களின் வெற்றி என்பது செயலின் மீதான நடவடிக்கையில் தொடங்கி அதை முடிக்கும் வரை சீராக, திட்டமிட்டபடி கொண்டு செல்வதில் தான் இருக்கிறது. எனவே, சுற்றுபுறச் சூழ்நிலைகளினால் உங்களின் சொந்த செயல்பாடுகளினால் பதற்றமான சூழல் ஏற்பட்டால் அதிலிருந்து தப்பி ஓட முயலாதீர்கள். அவசரத்தில் எடுத்தேன், கவிழ்த்தேன் என ஏனோ தானே வென அந்தச் செயலைச் செய்வதை விட்டு விட்டு அமைதியுடன் அணுகுங்கள். தேவைப்பட்டால் கூடுதல் நேரம் எடுத்து திட்டமிட்டதை விடச் சிறப்பாகச் செய்யப் பழகுங்கள். மாறாக, அதிலிருந்து தப்பிக்கும் அவசரத்தில் செயல்களின் சாதக, பாதகங்களை ஆராயாமல் முடிவெடுத்தீர்களேயானால் அது இலட்சியத்தையே மாற்றி விடும். எனவே உங்களின் வெற்றிப் பயணத்தின் ஆரம்பத்தில் மட்டுமல்ல தொடர் ஓட்டத்திலும் கூட பதற்றமோ அதன் மூலம் அவசரமோ காட்டாதீர்கள். ”அவசரம் அபாயகரமானது” என்ற வெற்றியாளர்களின் வேத சூத்திரம் உங்களுக்குள் ஒரு மந்திரமாகவே ஒலித்துக் கொண்டிருக்கட்டும்!

நன்றி : முத்துக்கமலம்.காம்

Thursday, 2 April 2015

காமராஜர் - வாழ்வும் - அரசியலும்

கர்மவீரர், ஏழைகளின் தெய்வம், மதிய உணவு தந்த மக்கள் நாயகன், கறுப்பு காந்தி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட நம் மண்ணின் மைந்தர் காமராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், அவரின் அரசியல் பிரவேசம் மற்றும் அதன் விளைவுகளையும் அலசுகிறது இந்த நூல்.

பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதில் உள்ள சிக்கல் என்னவென்றால் அவரை எந்த இடத்திலும் குறை சொல்லமுடியாது மற்றும் பலருக்கும் தெரியாத விஷயத்தைச் சேர்ப்பது. இந்த நூலிலும் பல விஷயங்கள் ஏற்கெனவே பல பத்திரிகைகளிலும், பல பேச்சாளர்கள் பேச்சிலும், முகநூலிலும் வந்த சில செய்திகள் வந்துள்ளன. இதைத் தவிர்த்துப் பார்த்தால் காமராஜரைப் பற்றி எளிதில் அறிந்துகொள்ள பல விஷயங்கள் இதில் உள்ளன.
காமராஜரின் பாட்டி அவருக்கு வைத்த பெயர் “காமாட்சி”. அவர் அம்மா வைத்த பெயர் “ராஜா”. இந்த இரண்டும் இணைந்து வந்ததுதான் “காமராஜர்” என்பது புதுத் தகவல். இதுபோல பல சிறு சிறு தகவல்கள் இந்த நூல் முழுவதும் பரவிக்கிடக்கிறது.
தெரியுமா உங்களுக்கு?
காமராஜரின் சாதிக்காரர்களுக்கு இவரின் அரசியல் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. (அடுத்த சாதிக்கு ஆதரவாக இருந்தால் யாருக்கு பிடிக்கும்?)
நீதிக் கட்சி இவரை ஒருமுறை கடத்திச் சென்றனர். இவருக்கு ஆதரவாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரல்கொடுத்ததும் பயந்துபோய் விட்டுவிட்டனர்.
எப்படியாவது, ஏதாவது போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை செல்லவேண்டும் என்பது இவரின் ஆரம்பகால ஆசை.
1957 நவம்பர் மாதம் மதிய உணவுத் திட்டத்தைத் துவங்கினார். பசியுடன் படிக்க யாரும் வரமாட்டார்கள் என யோசித்து பசியைப் போக்கி கல்வி தந்தார்.
தமிழாசிரியர்கள் பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்ற முடியாது என்ற சட்டத்தை நீக்கி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றினார்.
இப்போ எல்லாம் பிழைப்புக்கு மட்டும் தமிழ் தமிழ் என குரல் கொடுக்கும்போது அப்போதே தமிழில் முதல் வரவுசெலவு கணக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்தார்.
அதிகாரிகள் இடவசதியில்லை என சொல்லி நிராகரித்த பெல் நிறுவனம் இவரின் திறமையால் நமக்குக் கிடைத்தது.
அண்ணாவைப் பார்க்க அனுமதிக்காத அமெரிக்க அதிபர் நிக்சனை தானும் பார்க்கமாட்டேன் என சொன்னவர்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆட்களையே தன் மந்திரிசபையில் சேர்த்தவர்.
பெரியார் அவரின் தொண்டர்களின் குழந்தைக்கு நல்ல பெயர் வைக்கவேண்டும் எனில் காமராஜர்னுதான் வைப்பார்.
ஜீவா தனது மரணப்படுக்கையில் சொன்ன கடைசி வார்த்தை “காமராஜர்க்கு போன் போடு” என்பதுதான்.
கம்யூனிஸ்ட் கூட காமராஜர் சேரப்போவதாக பத்திரிகைகளில் வந்த கார்ட்டூன் செய்தியை அவர் பார்வைக்குக் கொண்டு சென்றபோது அவர் சொன்னது, “பொம்மையைக் கண்டு பயப்படாதே, உண்மைக்கு மட்டும் பயப்படு.”
கடைசிக் காலத்தில் இவர் வங்கி இருப்பு வெறும் 125 ரூபாய். (இப்போலாம் சாதாரண வார்ட் மெம்பரே லட்சக்கணக்கில் வைத்துள்ளார்.)
இதுபோல நமக்குத் தெரியாத பல தகவல்கள் இதில் உள்ளன. கடைசிப் பக்கத்தில் வருடவாரியாக அவரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதுபோல இதில் வரும் தகவல்கள் எந்த மூலத்தில் இருந்து எடுக்கப்பட்டது எனவும் சொல்லியுள்ளார் நூலாசிரியர்.
சில பக்கங்களில் அதிகமான தகவல்கள், புள்ளிவிவரங்கள் உள்ளன. இது என்னவோ பாடப்புத்தகம் படிக்கும் நினைவைத் தருகிறது. படிக்கும் ஆட்கள் அதைத் தவிர்க்கக் கூடும். எனவே அது போன்ற விவரங்களை கொஞ்சமாக அல்லது கடைசியில் சில பக்கங்களில் சொல்லலாம். அல்லது ஒவ்வொரு அத்தியாயத்திலும் சின்ன கட்டம் கட்டி போடலாம்.
இறுதியாக, இந்த நூலைப் படித்தபின் இப்படிப்பட்ட ஒருவரின் ஆட்சி இனி வருமா என ஏங்க வைக்கிறது. அரசியல் வாழ்விலும் பொது வாழ்விலும், நேர்மையும் தூய்மையும் கடைப்பிடித்த ஏழை மக்களின் துயரைப் போக்க வந்த கடவுளாக காமராஜரை ஏன் மக்கள் வணங்கினர் எனத் தெரிகிறது.
நமது குழந்தைகளுக்கு கண்டிப்பாக வாங்கிக்கொடுத்து படிக்கச் சொல்லவேண்டிய நூல் இது.
 ஷக்தி
நன்றி : மதிப்புரை.காம்