Monday, 28 September 2015

நினைக்க மட்டுமே முடிகிறது!

தமிழில் இன்னும் நான்கு போர்சன் (PORTION) நடத்தவே இல்லை. அதற்குள் காலாண்டு தேர்விற்கான டைம் டேபிள் சொல்லிட்டாங்க என மகள் சொல்லி வருத்தப்பட்டதாக மனைவி என்னிடம் சொன்னதும், ”இதுல வருத்தப்பட என்ன இருக்கு? நடத்துனதை மட்டும் படிக்கச் சொல்லு. அது போதும்” என்றேன். மகளோ, ”அது எப்படி டாடி.? நூறு மார்க்குக்கு கொஸ்டின் வரும்ல. அப்ப நடத்தாத போர்சன்ல கொஸ்டீன் வந்தா எப்படி அட்டண்ட் பண்றது? என்றாள். இப்படியெல்லாம் கேள்வி கேட்டா என்ன பதில் சொல்றது?ன்னு நினைத்துக் கொண்டே, ”தேர்வுக்கு முன்னாடி நடத்திடுவாங்கம்மா” என்று சொல்லி வைத்தேன். அதன்பின்னர் அதைப் பற்றி அவளிடம் எதுவும் கேட்காமல் இருந்தேன். 

நேற்று வழக்கம் போல பேசிக் கொண்டிருந்த போது, ”டாடி, தமிழ்ல நடத்தாம இருந்தாங்கன்னு சொல்லி இருந்தேன்ல. அந்தப் போர்சனை எல்லாம் நடத்தி முடிச்சிட்டாங்க” என்றாள், ஆச்சர்யம் மேலிட பதினைந்து நாளைக்குள்ளையா? என்றேன். அதாவது பரவாயில்லை டாடி. அந்த நான்கு போர்சனையும் நாளைக்கே படிச்சிட்டு வரச் சொல்லிட்டாங்க என்றாள். உன்னால என்ன முடியுமோ அதை மட்டும் படிச்சிட்டு போம்மா. ரொம்ப ரிஸ்க் எல்லாம் வேணாம் என்றேன். கடமைக்காக பாடங்களை நடத்தி முடித்து கட்டாயமாய் மதிப்பெண்கள் வாங்க வைக்கும் முயற்சியில் ஆசிரியர்களும், பள்ளிக்கூடங்களும் இறங்கி விட்டது என்ற குற்றச்சாட்டு பொய்யில்லை போலும்  என்ற நினைவோடு படுத்து எழுந்து காலையில் வேலைக்கு வந்ததும் அழைத்த மகளிடம் அதற்குள் எழுந்து விட்டாயா? என்றேன். ஐந்தரைக்கே எழுந்துட்டேன் டாடி. அம்மா கூட இருந்து சொல்லித் தந்ததால ஒருவழியா நான்கு போர்சனையும் படிச்சிட்டேன் என்றாள். குழந்தைகளை நிர்பந்திக்கும் இந்தக் கல்வி முறை குறித்து வருத்தப்படும் அதே நேரம் ஆசிரியர்கள் பாடப்புத்தகங்களைக் காப்பாற்றும் வேகத்தில் குழந்தைகளை கிழித்தெறிந்து விடக் கூடாதே என்றும் நினைத்துக் கொண்டேன்.  இப்படி நினைக்க மட்டுமே முடிகிறது!

நன்றி : பாக்யா வார இதழ்

Wednesday, 23 September 2015

உன்னில் இருந்து தொடங்கு!

பண்டைய பாரதத்தில் பெண்களுக்குப் பெருமதிப்பு இருந்தது. அந்தப்புரத்தைத் தாண்டி ஆட்சியாளராக, படைத்தளபதியாக, போர்க்களச் சாரதியாக, அவைக்களப் புலவராக, தூதுவராக இருந்ததைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. பெண்ணைப் பெண்ணாய் போற்றிய பாரதத்தின் இடைக்காலத்தில் நிகழ்ந்த சமூக மாற்றங்களாலும், சாதியப் பிளவுகளாலும் மேலெழும்பிய ஆணாதிக்கத்தனத்தால் பெண்கள் ஒடுக்கப்பட்டனர். அவர்களின் மீது பலவித கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை ஆகியவைகளை வீட்டிற்குள்ளேயே கொடுத்து ஒரு குறுகிய சட்டத்திற்குள் அடைக்கப்பட்டனர். ஆரம்ப காலத்தில் பெண்களைக் கொண்டாடிய சமூகம் அவர்களைப் பூட்டிவைத்து பீடு நடை போடும் குறை சமூகமாய் சுருங்கிக் கொண்டிருந்த வேளையில் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு பொறுக்க முடியாமல் விடுதலைப் போராட்டக் களத்தில் நின்ற தலைவர்களில் சிலர் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

கல்வி, சொத்து உரிமை மறுப்பு, பாலிய விவாகம், விதவைத் திருமண மறுப்பு, உடன்கட்டை ஏறுதல், எனப் பெண்களைச் சூழ்ந்திருந்த சிலந்தி வலையிலிருந்து அவர்களை மீட்க வேண்டும் என முற்போக்குச் சிந்தனை கொண்ட பெண்களோடு அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆணாதிக்கச் சமூகத்திலிருந்து இராஜாராம் மோகன்ராய், பாரதியார், விவேகானந்தர் போன்றோரின் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. அதன் விளைவாகப் பனி மூட்டமாய் பெண்களைச் சூழ்ந்திருந்த திரை மெல்ல விலக ஆரம்பித்தது. அதன்பின் அம்பேத்கார், பெரியார் ஆகியோர் மிகத் தீவிரமாக பெண்களின் சுதந்திரத்திற்குக் குரல் கொடுத்ததன் விளைவாகக் கட்டுப்பெட்டியாய் பெண்களைக் கட்டிவைத்திருந்த கயிறுகள் அறுபட ஆரம்பித்தன.

விடுதலைக்கு மகளிரெல் லோரும்
வேட்கை கொண்டனர் – என்ற பாரதியின் வரி வேகம் பிடித்து எழுந்ததில் தங்களுக்கான சுதந்திரத்தின் அவசியம் குறித்து உணரத் தொடங்கிய பெண்கள் தடைகளைத் தகர்த்தெறிந்து ஆணுக்குப் பெண் சமம் என்னும் நிலைக்கு உயர்ந்தனர்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண் – என்ற பாரதியின் வாக்கு இருபதாம் நூற்றாண்டுக்கு முன்னரே பலிக்க ஆரம்பித்தது. அது இன்று கிளையாய், விழுதாய், வேராய் விரவி விரிந்து பரந்து நின்ற போதும் பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடைகளாய் அன்று இருந்தவைகள் இன்று வேறு முகங்கள் கொண்டு தலை தூக்க ஆரம்பித்தன. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சக பெண்களாலயே நிகழ ஆரம்பித்தன. பெண்களுக்கு எதிராகப் புற்று நோய் கட்டியாய் வளர்ந்து நின்ற வரதட்சணைக் கொடுமைகளை நிகழ்த்துவதில் ஆண்களை விடப் பெண்களே முன் நின்றதில் “பெண்களுக்கு பெண்களே எதிரி” என்ற நிலை உருவானது. மாமியார், நாத்தனார் என்ற உறவு முறைகள் ஒரு பெண் இன்னொரு பெண்ணை அடக்கி வைக்க உதவும் கடிவாளங்களாக மாறின.

கடுமையான சட்டங்களும், தனிக்குடித்தன வாழ்க்கை முறையும், பொருளாதார பலமும் வரதட்சணைக் கொடுமைகளிலிருந்து பெண் சமூகத்தை ஓரளவுக்கு மீட்டெடுத்தது. அதன் பின்னர் இருபதாம் நூற்றாண்டின் நவீனமாய் பெண்கள் மீதான அடக்குமுறைகளும், எதிர்ப்புணர்வுகளும், வன்முறைகளும் வீட்டிற்குள் உறவு முறை சார்ந்தவர்களாலும், சமூகத்தில் உறவு முறை சாராதவர்களாலும் புதிய வடிவங்களை எடுக்க ஆரம்பித்தது.

பெண்களைத் தெய்வமாய் மதித்த நிலை மாறி இன்று சக மனுசியாகக் கூட மதிக்க மறுக்கும் சமூகத்தில் வேலை செய்யுமிடத்தில் உயரதிகாரிகள், வீட்டில் கணவன், சமூகத்தில் தன்னைக் கடந்து போகும் சக ஆண்கள், தன் சக நண்பர்கள் என தன்னைச் சுற்றியிருப்பவர்களிடமிருந்து எப்பொழுதும் அபாயத்தை எதிர் கொள்ள வேண்டியவர்களாகவே பெண்கள் இருந்து வருகிறார்கள். இத்தகைய சுழல்களிலிருந்து கடந்து வருவதற்கான நம்பிக்கையையும், துணிச்சலையும் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் கல்வி நிறையவே கொடுத்திருக்கிறது. ஆனால், துரதிருஷ்டவசமாகக் கல்வி மூலம் கிடைத்த அந்த நம்பிக்கையையும், துணிச்சலையும் அவர்கள் தங்களின் முன்னோக்கிய பயணத்திற்குப் பயன்படுத்திய அதே வேகத்திற்கு இணையாக ஆணாதிக்க சமூகத்திற்கும், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எதிர் வினையாகவும் பயன்படுத்த ஆரம்பித்ததால். பெண்களின் ஒவ்வொரு அசைவையும் சமூகம் கோணக்கண் கொண்டு பார்க்கும் நிலை உருவானது.

போதைப்பழக்கம், புகைப்பழக்கம், அங்கங்கள் துருத்தித் தெரிய அணியும் ஆடைகள், ஆண் நண்பர்களோடு பொது இடங்களில் எல்லை மீறிய நடவடிக்கைகள், நம்பிக்கையற்ற நிலையில் ஆண் நண்பர்களோடு தனித்த பயணங்கள், நவீனம் என்ற பெயரில் எதிர் பாலினத்தவரோடு தங்குதல், குடும்ப அமைப்பில் சிக்கல்கள் உருவாகும் போது விவாகங்களை விவாகரத்து நோக்கி நகர்த்துதல், காரணமே இல்லாமல் உரிய பருவங்களில் திருமணம் செய்ய மறுத்தல் என ஆண்களுக்குக் கொஞ்சமும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காட்ட பெண்கள் செய்த, செய்யும் செயல்களும், நடவடிக்கைகளும் அவர்களையே கூர் பார்க்க ஆரம்பித்தன. 

புரிதலின்மையால் நிகழும் இப்படியான நிகழ்வுகளைச் சரிசெய்து கொண்டால் மட்டுமே தங்களின் வளர்ச்சியும், முன்னேற்றமும் சமூகத்தோடு இயைந்த ஒன்றாய் நிகழும் என்பதைப் பெண்கள் உணர வேண்டும். அதேபோல, ”பெண்கள் இந்நாட்டின் கண்கள்” என்பதை வெறும் வார்த்தை ஜாலமாக மட்டுமே வைத்துக் கொண்டு வெறும் காட்சிப்பதுமையாய், காமத்தின் குறியீடாய் தங்களை ஊடகங்கள் காட்சிப்படுத்துவதை உணர்ந்து  தங்களை இகழும்படியானவைகளில் ”கலை” என்ற பெயரில் பங்களிப்பதைப் புறக்கணிக்க வேண்டும்.

”மண்ணில் கிளர்ந்து விண்ணில் எழுந்தோம்” என்ற உச்ச நிலைக்கு வந்து விட்ட பின்பும் பெண்களின் மனநிலை இப்படித் தான், இந்த எல்லைக்குள் தான் இருக்கும் என்ற பொதுப்புத்தி சமூகத்தில் மாறாத கறையாய் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அழகுக் குறிப்பையும், சமையல் குறிப்பையும் தாண்டிய வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளாததே இப்படியான மனநிலை உருவாவதற்கு முக்கிய காரணம்! பெண்கள் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ”பாட நூல்களுக்கு வெளியேயான வாசிப்பு சுவராசியமானது” என்பதை இலக்கிய வாசிப்பின் வழி பழக வேண்டும். மேலை நாடுகளின் கலாச்சாரங்களை அறியக் காட்டும் ஆர்வத்தில் கால் பங்காது அவர்களின் வாழ்வியல் முன்னேற்ற நிலையை அறிந்து கொள்ளப் பயன்படுத்தினாலே செல்ல வேண்டிய தூரம் தெரிந்து விடும்.

குடும்பம் என்ற கூட்டிற்குள் அடங்கி விடாமல் வாய்ப்புக் கிடைக்கும் சமயமெல்லாம், நேரமிருக்கும் போதெல்லாம் தங்களுக்குப் பிடித்த விசயங்களில் கவனம் செலுத்தலாம், புதிய விசயங்களைக் கற்றுக் கொள்ளலாம். மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஆக்கப்பூர்வமான சமூக நல மன்றங்களில் இணைந்து செயல்படலாம். புறத்தோற்ற அழகையும், ஆடை, அணிகலன்களையும் தாண்டி தன் திறமைகளைத் தன் அடையாளமாய் மாற்றிக் கொள்ள முனையலாம். இத்தகைய செயல்பாடுகள் தன்னம்பிக்கையோடு அன்றாட பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கான மனமாற்றத்தையும் தரும்.

இது தவிரவும், சொல்லால், செயலால் பெண்களை இழிவுபடுத்துவதை நிறுத்துவதற்கான முயற்சியை ஒவ்வொரு பெண்ணும் தன் வீட்டில் இருந்தே துவங்கலாம். தன் வீட்டு ஆண்களோ, குழந்தைகளோ அத்தகைய செயல்களில் ஈடுபடும் போது கண்டும், காணாமலும் இருப்பது தான் இது போன்ற நிகழ்வுகளுக்கான ஆரம்பமாக உள்ளது. அந்த ஆரம்பப் புள்ளியை வீட்டிலேயே துடைத்தெறிவதன் மூலம் சமூகத்தில் இத்தகைய நிகழ்வுகள் நிகழாதவாறு தடுக்க முடியும்.

”அடுத்த வீட்டுக்குப் போகிறவளுக்கு கல்வி எல்லாம் காசுக்குப் பிடிச்ச கேடு” என்று நினைக்கும் போக்கு மாறி பெண்குழந்தைகளுக்கு முழுமையான கல்வியை வழங்கப் பட வேண்டும். அதேபோல வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதில் பெண்களுக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். பெண்பிள்ளைகளுக்கு வரன் தேடும் போது தங்களின் தேவையிலிருந்து அவர்களின் துணையைத் தேடாமல் அவர்களின் விருப்பத்தில் இருந்து தங்களின் தேடலைத் தொடங்க வேண்டும். இப்படியாக தன்னில் இருந்தும், தன் வீட்டில் இருந்தும் சுதந்திரமாய் வெளியேறும் பெண்களுக்கு பொது இடங்களில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், கழிவறை உள்ளிட்ட கட்டாயத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தல், தொழில் துறைகளில் பெண்கள் ஈடுபடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக வங்கிக் கடனுதவி திட்டங்களை எளிமைப்படுத்துதல், கல்வி, வேலை வாய்ப்புகளில் இடமளித்ததைப் போல ஆட்சி அதிகாரங்களில் குறிப்பிட்ட சதவிகிதம் பங்கு பெற வாய்ப்பளித்தல் ஆகியவைகளின் மூலம் அரசாங்கமும் பெண்களின் முன்னேற்றத்திற்கான வாசலை இன்னும் அகலத் திறந்து விடலாம்.

தங்களின் கடந்த காலப் பிம்பங்களை உடைத்தெறிந்து முன்னேறிய சமுதயத்தில் தங்களையும் ஒரு அங்கமாக முன்னிலைப்படுத்திக் கொள்வதற்கான முயற்சியை ஒவ்வொரு பெண்ணும் தன்னில் இருந்தே தொடங்க வேண்டும். அந்தத் துவக்கம் மட்டுமே துவண்டு கிடக்கும் பெண் சமூகத்தை இன்னும் வேகத்தோடு துளிர் விட்டு எழ வைக்கும். விலங்கிடப்பட்ட சுதந்திரத்தோடு இருக்கும் நிலையை தகர்த்தெறிந்து பாரதியும், பெரியாரும், விவேகானந்தரும் கோரிய பெண்விடுதலையைச் சாத்தியமாக்கித் தரும்.

படம் : இணையம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வலைப்பதிவர் திருவிழா- 2015 புதுக்கோட்டை, தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின் தமிழ் இலக்கியப் போட்டியின்  பிரிவு (3) பெண்கள் முன்னேற்றம் குறித்த கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது. “உன்னில் இருந்து தொடங்கு!” எனும் தலைப்பில்  எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை  எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்  மு. கோபி சரபோஜி

Monday, 21 September 2015

கண்ணை விற்றா சித்திரம் வாங்குவது?

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய சுற்றுப்புறக் காரணிகளால் பின்னப்பட்டிருக்கும் பிரபஞ்சமானது அக்காரணிகளில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப நம் வாழ்வியல் முறையிலும் தாக்கங்களைப் பிரதிபலிக்கின்றது. அப்படியான மாற்றங்களைச் சுற்றுச்சூழலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நம் அறியாமையாலும், அலட்சியத்தாலும், புரிதலின்மையாலும் உருவாக்கிய படியே இருக்கிறோம். தொழிற்சாலைக் கழிவு, கதிரியக்கக் கசிவு, வாகனங்களின் சப்தம், புகை, பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்களின் பயன்பாடு, மலைகள், காடுகள் அழிப்பு, பூச்சிக்கொல்லி, இரசாயண மருந்து பயன்பாடு ஆகியவைகளின் வழி நாம் ஏற்படுத்தும் மாற்றங்களுக்குப் பதிலடியாக இயற்கையும் மிகக் கடுமையான எச்சரிக்கை சமிஞ்கைகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் நாமோ அதை உணராமல் எச்சரிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகிறோமே ஒழிய அப்படியான நிகழ்வுகள் மீண்டும் நிகழாதவாறும், அதன் தீவிரம் அதிகரிக்காதவாறும் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதில்லை.

நமக்கான வேராக இருக்கக்கூடிய பூமியின் நாசித்துவாரங்களை மக்காத குப்பைகளாலும், இரசாயண பூச்சிக் கொல்லி மருந்துகளாலும் அடைத்து விடுகின்றோம். சுவாசத்தை இழந்து கிடக்கும் பூமியில் நாம் சுவாசிப்பது அத்தனை எளிதல்ல என்பதை மறந்து விட்டு நாகரீகம் என்ற பெயரில் நாள்தோறும் அதன் சுவாசத்தை இறுக்கிப் பிடிக்கின்றோம். ஒவ்வொரு இந்தியனும் சராசரியாக நாள் ஒன்றுக்கு ஐந்து கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதாய் ஒரு புள்ளி விபரத் தகவல் சொல்கிறது. பயன்பாட்டிற்குப் பின் தூக்கி எறிப்படும் பிளாஸ்டிக் பொருட்களும், நெகிழிப் பைகளும் பூமியில் மக்காமல் பல நூறு ஆண்டுகள் அப்படியே தங்கி விடுகின்றன. நெகிழிப் பைகளின் வர்ணத்தால் ஈர்க்கப்பட்டு அதை உணவாக உட்கொள்ளும் விலங்குகளும், பறவைகளும் அதில் கலந்திருக்கும் நச்சுப் பொருட்களால் இறக்கின்றன. அவைகளைத் தின்று செரிக்கும் ஆடு, மாடு ஆகியவைகளின் பால், இறைச்சி வழி மனிதர்களுக்குள்ளும் அந்த நச்சுகள் நுழைந்து பலவித தீங்குகளை உருவாக்குகின்றன.

தாரளமயமாக்கல் மூலம் சுக வாழ்க்கை நிலைக்கு  பழக்கப் பட்ட பின் நகரமயமக்கல் என்ற வாழ்க்கைக்கு அடிமையாகி அதற்காகக் காடுகளை வெட்டி எறிகின்றோம். தன் சுகபோக வாழ்விற்காக காடுகளை அழித்து அங்கு வாழும் ஜீவராசிகளின் வாழ்வியலை, அவைகளின் வாழ்வாதாரங்களை அழித்து விடுகிறோம். அதனால் தான் தன் வாழ்விடங்களை இழந்த விலங்குகள் மனிதர்களைப் போலவே நகரங்களுக்குள் குடி புகுந்து தன் வாழ்விடங்களைத் தகர்த்தெறிந்து வரும் மனிதர்களை வேட்டையாடுகின்றன. இயற்கைச்சமநிலை சீர்குலைவுக்கு காடுகளின் அழிப்பே முதல் காரணமாய் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தேவைகளுக்காக அழிக்கப்படும் காடுகளை விடவும் பல மடங்கு பரப்பளவுள்ள காடுகள் காட்டுத்தீயால் வருடம் முழுக்க அழிக்கப்படுகின்றன. இந்தக் காட்டுத்தீ சம்பவங்கள் நிகழ்வதற்கு மனிதத் தவறுகளே காரணமாக இருக்கின்றன. அணைக்கப்படாமல் போடப்படும் சிகரெட் துண்டுகள், வீசி எறியப்படும் மதுபானப் புட்டிகளின் கண்ணாடிச் சிதறல்களில் சூரிய ஒளி குவிவதால் உருவாகும் வெப்பம் இவைகளோடு சமூக விரோத நடவடிக்கைகளுக்காக திட்டமிட்டு வைக்கப்படும் தீ ஆகியவைகளால் காடுகளோடு வளிமண்டலமும் நாசமடைகிறது, காற்றுமண்டலத் தூய்மைக்கேட்டால் நுரையீரல், சுவாசக் கோளாறுகள் உருவாகின்றன.

பூமிக்கும், வானுக்கும் நீரிணைப்பைப் போல் இருக்கின்ற மரங்களையும், காடுகளையும் அழித்து விடுவதால் அவைகளுக்கிடையேயான தொடர்பு அறுந்து போய் பூமியின் வெப்பம் அதிகமாகி துருவப் பகுதிகளில் உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகள் உருக ஆரம்பிக்கின்றன. கடல் மட்டம் உயர, உயர அதன் சீற்றம் அதிகமாகி சுனாமியாய் மாறி ஊரைச் சுருட்டிப் போகிறது அதன் தொடர்ச்சியாக நிகழும் பருவநிலை மாற்றங்களால் மழை பொழிவு குறைந்து வறண்ட விளை நிலங்களைக் காணப் பொறுக்காமல் விவசாயி தற்கொலை செய்து கொள்கிறான்.

சுற்றுசூழல் பாதுகாப்பிற்கென செய்ய வேண்டிய வசதிகளை முறையாகச் செய்யாத தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் இரசாயணக்கழிவு நீரால் அத்தொழிற்சாலைகளுக்கு அருகில் இருக்கும் தாவரங்கள், விலங்குகளோடு மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர். தோல் சார்ந்த நோய்களையும், சுவாச நோய்களையும், மலட்டுத் தன்மையையும் உருவாக்கும் இத்தகைய இரசாயணக் கழிவு நீர் கடலில் கலக்கும் போது கடல்வாழ் உயிரினங்கள் பெருமளவு மடிகின்றன. அவைகளை உணவாக உட்கொள்ளும் மனிதர்களுக்கு அந்நோய்கள் பரவுகின்றன.

2020 ம் ஆண்டில் நுரையீரல் தொடர்பான நோய்கள் உயிர் பறிக்கும் நோயாக மாறும் அபாயம் இருப்பதாக சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை தான் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. தவிர, வீடுகளில் பயன்படுத்தும் நவீன கண்டுபிடிப்புகளான மின் சாதனப் பொருட்கள், குளிர்சாதனக் கருவிகள் ஆகியவைகளிலிருந்து வெளியேறும் வாயுக்களால் பூமி வெப்பமடைவதோடு காற்றுமண்டலமும் மாசுபடுகிறது. பசுமைக்குடில் வாயு என்றழைக்கப்படும் மனிதர்களுக்குத் தீங்கு செய்யும்  கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஓசோன், நீர் வாயுக்கள் தொழிற்சாலைகளை விட வீடுகளிலிருந்தே அதிகமாக வெளியேற்றப்படுகின்றன.


அதிவேகமாக மாறிவரும் வாழ்க்கைச் சூழலில் ஒவ்வொரு மாற்றமும் இலவச இணைப்பாய் தன் பங்கிற்குச் சுற்றுச்சூழல் சீர்குலைவுகளையும் தருகின்றன.. அந்தச் சீர்குலைவுகளைச் சரிசெய்து கொண்டே புதிய மாற்றங்களுக்கு நம்மை உட்படுத்திக் கொள்ளும் போது தான் வாழ்க்கை நவீனமாகிறது. நாடு நல்ல நாடாகிறது. இதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர்
கேடு அறியாக் கெட்ட இடத்தும் வளம்குன்றா
நாடு என்ப நாட்டின் தலை – என்ற குறளில் கேடு வராமலும், அப்படியே வந்தால் அதைச் சரிசெய்து வளங்கள் குன்றாமலும் காத்துக் கொள்ளும் நாடே சிறந்த நாடு என்கிறார். சுற்றுசூழல் மாசுபாடுகளால் வளம் குன்றி கிடக்கும் பூமியை நல்ல பூமியாக சரிசெய்து கொள்வதற்கு -  
  • நகர விஸ்தரிப்பு பணிகளுக்காக அரசாங்கம் மரங்களை வெட்டி வீழ்த்துவதற்குப் பதிலாக மேலை நாடுகளில் செய்வதைப் போல மரங்களை வேரோடு பிடுங்கி வேறு தகுந்த இடங்களில் நடலாம். வெட்டப்படும் மரங்களுக்கு நிகராக புதிய மரக்கன்றுகளை வழங்கி சமூக நல நிறுவனங்கள் மூலம் அதைப் பராமரித்து வர ஏற்பாடு செய்யலாம். சாலைகளின் ஓரத்தில் மரக்கன்றுகளை வளர்ப்பதோடு ”வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்ற கோசத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்து வீடுகளில் மரங்கள் வளர்க்க ஊக்குவிக்கலாம்.
  • மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் ஆகியவைகளுக்கான தனித்தனி தொட்டிகளை வீதிகளில் வைப்பதோடு அவைகளின் மறு சுழற்சியைக் கட்டாயமாக்கலாம். செயற்கை உரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், நெகிழிப் பைகள் போன்றவைகளின் அதிகப் பயன்பாட்டை கூடுதல் வரிவிதிப்பு, குறைந்த பட்ச தண்டனை, அபராதங்கள், வாடிக்கையாளர்களிடம் அதற்கென தனிக் கட்டணம் வசூலிப்பது ஆகியவைகளின் மூலம் தடுக்கலாம். பேப்பர் பைகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முகமாகப் பேப்பர் பைகள் தயாரிப்பை குடிசைத் தொழிலாக அறிவித்து வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். இதனால் பயன்படுத்தப்பட்ட காகிதங்கள் மறுசுழற்சி பெறும்.
  • வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரை பிரத்யேக தொழில்நுட்பங்கள் மூலம் மறுசுழற்சி செய்து தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தலாம். தங்கள் தொழிற்சாலைக் கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கும், மாசுக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தி அதற்கானச் செயல்முறைகளை முறையாகப் பின்பற்றும் நிறுவனங்களுக்கும் சில சலுகைகள் வழங்கி உற்சாகப்படுத்தலாம். மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை கடுமையாக்குவதன் மூலம் வீணாகும் மழைநீரைச் சேகரித்து நிலத்தடி நீரை அதிகரிக்கலாம்.
  • வாகனங்களில் மாசுக் கட்டுப்பாட்டுக் கருவிகளை பொருத்துதல், ஒலி அளவுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகிய சட்டங்களைக் கடுமையாக்குவதுடன்  மெட்ரோ இரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் வாகனப் புகையினால் ஏற்படும் மாசுகளையும், தீமைகளையும் கட்டுப்படுத்தலாம்.
  • பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழலைப் பாடமாக்குவதன் மூலம் இளைய சமுதாயத்திடம் சுற்றுசூழல் விழிப்புணர்வை உருவாக்கலாம். அரசாங்க விவசாயப் பண்ணைகளின் மூலம் குறைந்த விலையில் மரக்கன்றுகள் வழங்குவதோடு, அரசு விழாக்களில் இலவச மரக்கன்றுகளைத் தரலாம்,
இப்படி சட்டம் மற்றும் அதிகாரங்கள் மூலம் சுற்றுச்சூழலைக் காக்கும் முயற்சியில் அரசாங்கத்தோடு சமூக நல அமைப்புகளும் பங்கு கொள்ளலாம். தனிநபராய் நாமும் நம்முடைய பங்களிப்பை -
  • அதிக வெப்பம் தரக்கூடிய குண்டு பல்ப்பிற்கு பதிலாக புளோரசெண்ட் விளக்குகளைப் பயன்படுத்துதல், தேவைக்கதிகமாக மின் சாதனப் பொருட்கள், சமையல் வாயு, இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவதைக் குறைத்தல், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல், பயன்படுத்திய நீரை அருகில் இருக்கும் மரம், செடிகளுக்குப் பயன்படுத்துதல், கழிவுநீரைப் பொதுக் கழிவுநீர் பாதைகளில், அருகில் இருக்கும் நீர்நிலைகளில் சேர்க்காமலிருத்தல், மக்காத குப்பைகளைத் தனியே சேகரித்து வைத்தல், புகையிலைப் பயன்பாடுகளைக் குறைத்தல், கட்டிடக் கழிவுகளை மறு பயனீட்டுக்கு உள்ளாக்குதல், பிளாஸ்டிக் மற்றும் நெகிழிப்பைகள் பயன்பாட்டைக் குறைத்தல், வீட்டு விசேசங்களின் போது மரக்கன்றுகள் தருதல் ஆகியவைகளின் மூலம் செய்யலாம்.
பிள்ளையவும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டு”வதைப் போல சுற்றுச்சூழலை மாசடையச் செய்வதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் நாமே செய்து விட்டு அதன் அபாயங்கள் பற்றி அலறிக் கொண்டிருப்பதால் ஒருபயனும் இல்லை.  ”பெரும் பயணத்திற்கான ஆரம்பம் எடுத்து வைக்கும் முதல் அடியில் இருந்து தான் துவங்குகிறது” என்பதற்கேற்ப சுற்றுச்சூழலைக் காக்கும் பெரும் பயணத்தில் முதல் அடியை அரசாங்கத்தோடு சேர்ந்து நாம் ஒவ்வொரு வரும் எடுத்து வைக்க வேண்டும். அப்படி எடுத்து வைக்கும் போது தான் இயற்கையை எதிர்கொண்டு வாழும் இன்றைய நிலை மறைந்து இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கை நமக்கு வாய்க்கும்.

படங்கள்: இணையம்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வலைப்பதிவர் திருவிழா- 2015 புதுக்கோட்டை, தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின் தமிழ் இலக்கியப் போட்டியின்  பிரிவு (4) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது. “கண்ணை விற்றா சித்திரம் வாங்குவது?” எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்மு. கோபி சரபோஜி

Thursday, 17 September 2015

கலியுகத்தில் சிக்கிக் கொண்ட கடவுள்!

காஸ்யப முனிவருக்கும், மாயைக்கும் பிறந்த சூரபத்மன் வரங்கள் வேண்டி சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவத்தை மேற்கொண்டான். ஆண்டுகள் பலவாகியும் சிவபெருமான் காட்சி தராததால் கடுப்பானவன் தன் உடல் உறுப்புகளை ஒன்றன் பின் ஒன்றாய் அறுத்து யாக குண்டத்தில் போட்டு எரித்துக் கொண்டு தானும் அதிலேயே விழுந்தான். அவனின் தம்பிகளான சிங்கமுகன், தாரகன் ஆகியோரும் அவ்வாறே செய்ய சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி காட்சியளித்ததோடு தேவர்களுக்கெல்லாம் தலைவனாக வேண்டும். எத்திசையும் செல்ல இந்திரஞாலத் தேர் வேண்டும். அழியாத யாக்கை வேண்டும் என சூரபத்மன் கேட்ட வரங்களையும் கொடுத்தார்.

வரம் வாங்கியதும் கடலுக்குள் தனக்கான தலைநகரான வீரமகேந்திரபுரத்தை அமைத்தான். தேவலோகத்தின் மீது படையெடுத்து வென்றான். அவனிடமிருந்து தப்பிய தேவலோகத் தலைவனான இந்திரன் தன் மனைவியோடு சீர்காழிக்கு வந்து சேர்ந்தான். அங்கு ஒரு நந்தவனத்தை அமைத்து மூங்கில் மரத்தில் மறைந்து வாழ்ந்த படியே தன்னைக் காத்தருளுமாறு தன் பதவிக்கே வேட்டு வைத்த சிவபெருமானை வேண்டி நின்றான்.

இந்திரனின் மனைவியான இந்திராணியின் அழகைப் பற்றி அறிந்த சூரபத்மன் தனக்கு ஏவல் செய்ய அவளையும், அவளோடு சேர்த்து இந்திரனையும் அரண்மனைக்குப் பிடித்து வாருங்கள் என தன் படைத் தளபதிகளுக்கு உத்தரவிட்டான். கைது ஆணை பிறப்பிக்கப்பட்டதும் நான்கு திசைகளிலும் தேடுதல் வேட்டையை சூரபத்மன் படைகள் மேற்கொண்டிருந்த நிலையில் கலகக்காரரான நாரதர் இந்திரனைச் சந்தித்து வளரொளி நாதரை அணுகி அவர் பாதம் பணிந்தால் மட்டுமே உன் தலை தப்பும் எனச் சொல்ல தேவேந்திரன் உள்ளிட்ட தேவர்கள் தங்களின் குடும்பத்தோடு வளரொளி நாதரிடம் வந்து தஞ்சம் புகுந்தனர். தஞ்சம் அடைந்தவர்களின் தலைக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டதும் மகிழ்ந்து போன தேவேந்திரன் தேவதச்சனை அழைத்து வளரொளி நாதருக்கு ஒரு கோயில் கட்டும் படி பணித்தான். அந்த இடம் தான் இன்று காரைக்குடி பக்கத்தில் இருக்கும் ”வயிரவன் பட்டி”!

அடையாளம் காட்டிக் கொள்ளாத உளவாளிகளாய் எங்கும் ஊடுருவி தேடுதல் வேட்டையை நடத்திய சூரபத்மனின் ஒற்றர்கள் தேவேந்திரனோடு தேவர்கள் அனைவரும் வயிரவன் பட்டியில் தஞ்சம் அடைந்திருப்பதை அறிந்து தலைமைக்குத் தகவல் அனுப்பினார்கள். தகவல் கிடைத்த உடனையே சூரபத்மனின் படைத்தளபதிகள் தத்தம் அசுரப்படைகளை வயிரவன்பட்டியை நோக்கிச் செலுத்தினர். செய்தியறிந்த தேவர்கள் பயந்து போய் ஆலயத்திற்குள் சென்று பதுங்கினர். தான் உயிர் உத்தரவாதம் கொடுத்திருக்கும் தேவர்களைத் தன் எல்லைக்குள்ளேயே நுழைந்து தாக்க தயாராகி நின்ற அசுரப்படைகளின் மீது பதில் தாக்குதல் நடத்த வளரொளி நாதர் முடிவு செய்தார். தன் படைகளுக்குத் தலைமையேற்றுச் செல்ல ஒப்புக் கொண்ட நந்தி தேவர் போர்க்களத்தில் விநாயகர் முன்னே செல்ல அவரின் பின்னால் படைகள் அணிவகுத்தால் நன்றாக இருக்கும் என அபிப்ராயம் சொல்ல உடனடியாக விநாயகரிடம் பேசி ஒப்புதல் பெற்றுக் கொடுத்த வளரொளி நாதர் தன் படைகளுக்கு வயிரவர் கோலம் தாங்கிய திருவுருவம் காட்டி களத்திற்கு அனுப்பி வைத்தார். நந்தி தேவரின் தலைமையில் நால்வகைப் படைகளும் அணிவகுத்து நிற்க விநாயகர் தன் பூதப்படைகள் சூழத் தேர் ஏறினார். நந்தி தேவரின் தலைமையிலான படைகளும், விநாயகரின் பூதப் படைகளும் போர்க்களத்தில் முகாமிட்டிருந்த அசுரப்படைகளைச் சுற்றி வளைத்து தாக்க ஆரம்பித்தன.

தன் பூதப்படைகளுடன் விநாயகர் களத்திற்கு வந்திருப்பதை அறிந்து கோபம் கொண்ட கும்பாண்டகன் என்ற அசுரப் படைத்தளபதி நேரடியாக பூதப்படைகளைத் தாக்கும் படி தேவகண்டன் என்ற தன் துணைத்தளபதிக்கு உத்தரவிட்டான். அவன்  தலைமையில் களம் புகுந்த அசுரப்படைகளின் தாக்குதலில் சிக்கி பூதப்படைகள் சிதறி ஓடத் துவங்கின. பூதப்படையில் இருந்த விநாயகரின் தொண்டனான பிரளயனின் தேரை தேவகண்டன் அம்பால் வீழ்த்திச் சாய்த்தான். தன் பக்தர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் விடுவாரா விநாயகர்? தேரில் ஏறி நேரே அப்பகுதிக்குள் நுழைந்தார். அதுவரையில் உள்ளூர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து வம்பு செய்து கொண்டு இருக்கும் கலவரக் கும்பல் அதிரடிப்படை வந்ததும் தெறித்து ஓடுவதைப் போல விநாயகர் கூடுதல் படைகளோடு வந்து சேர்ந்ததும் பூதப்படைகளின் தாக்குதலில் அசுரப்படைகள் நாலாபுறமும் சிதறி ஓடின. தன் பக்தனை அம்பால் வீழ்த்திய தேவகண்டனைத் தாக்கிய விநாயகர் அவனின் ஆயுதங்களை இழக்க வைத்து நிராயுதபானியாக்கினார்.

தனித்து நிற்பவனைத் தாக்கி அழிப்பது போர் தர்மம் அல்ல என்கிறபோது தான் செய்தால் அது தர்மமாகவே இருக்காது என நினைத்த விநாயகர் ”இன்று போய் நாளை வா” என அவனை உயிரோடு அனுப்பி வைத்தார். இப்படித் தனக்குத் தரப்பட்ட உயிர்பிச்சை தன் திறமைக்கே அவமானம் என நினைத்த தேவகண்டன் ஆயுதமில்லாவிட்டல் என்ன? அசுரபலத்தைக் காட்டுகிறேன் பார் என அருகில் இருந்த ஒரு மலைக்குன்றைப் பிடுங்கி விநாயகரை நோக்கி எறிந்தான். உயிர்பிச்சை கொடுத்தது எவ்வளவு முட்டாள்தனம் என நினைத்த விநாயகர் தன்னை நோக்கி வந்த மலையை உடைத்தெறிந்த கையோடு அவன் தலையையும் கொய்து எறிந்தார்.

துணைத்தளபதியின் தலை கொய்து எறியப்பட்ட செய்தி அறிந்து அங்கு வந்த கும்பாண்டகன் பின் வாங்கி நின்ற அசுரப் படைகளை முன்னோக்கிச் சென்று தாக்குமாறு கட்டளையிட்டான். தளபதியின் நேரடி உத்தரவு என்பதால் அசுரப்படைகள் முன்னிலும் வேகமெடுத்துப் பாய்ந்தன, அந்தப் பாய்ச்சலில் விநாயகரின் பூதப்படைகளோடு நந்தி தேவரும் நடுநடுங்கிப் போனார். நிலைமை சிக்கலானதால் மீண்டும் களத்துக்கு வந்த விநாயகர் அசுரப்படைகளின் தாக்குதலை தடுத்து நிறுத்தியதோடு இம்முறை உயிர் பிச்சை எல்லாம் தரமுடியாது எனச் சொல்லி விட்டு கும்பாண்டகன் தலையை வெட்டி எறிந்தார்.

தங்கள் தளபதிகளின் தலைகளைக் காவு கொடுத்து விட்டு அசுரப்படைகள் கலங்கிப் போய் நிற்க விக்கிரதமிட்டிரன் என்ற அசுரத்தலைவன் தன் வலிமை முழுவதையும் திரட்டி மிகப்பெரிய மலை ஒன்றைப் பிடுங்கி விநாயகரின் மீது எறிந்தான். அம்மலை அவரின் மீது மோதி விடாமல் தடுத்து நிறுத்திய பூதப்படைகள் அம்மலையைக் குகை போல வடிவமைப்புச் செய்ய அதில் எழுந்தருளி தன் படை வீரர்களுக்குக் காட்சி தந்து அருள்பாளித்த விநாயகர் இப்படி ஒரு சிம்மாசனம் தந்ததற்குக் கைமாறாக விக்கிரதமிட்டிரனையும் போட்டுத் தள்ளினார். ஆனாலும், ஓயாத அலையாய் அடுத்தடுத்து அசுரப்படைகள் வந்த படியே இருந்தன.

எத்தனை பேரைத் தான் தானே போட்டுத் தள்ளுவது? தலைமையேற்று வரும் தளபதிகளை எல்லாம் தானே அழித்து விட்டால் படைகளை வழிநடத்தி வந்த நந்தி தேவருக்குக் களங்கம் வந்து விடாதா? என நினைத்த விநாயகர் வயிரவப் படைகளுக்கு உதவியாகத் தன் பூதப்படைகளின் ஒரு பிரிவைக் களத்திலேயே இருக்கச் செய்து விட்டுத் தான் எழுந்தருளிய மலைக்குன்றிலேயே தங்கி விட்டார். அப்படி அவர் தங்கிய தலம் தான் “பிள்ளையார் பட்டி”!
பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் ஆலயம்

காரைக்குடியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் இவ்வூரில் எழுந்தருளியிருக்கும் இந்த விநாயகர் ”கற்பக விநாயகர்” என்றழைக்கப்படுகிறார். ”கல்” என்றால் ”பாறை”, ”பகு” என்றால் ”பகுத்தல்” – ”பிளத்தல்”. பாறையைப் பிளந்து எழுந்தருளி இருப்பவர் என்பதால் கற்பக விநாயகர் எனப் பெயர் பெற்றார். நவக்கிரகங்களால் பிடிக்க முடியாத இரு கடவுளர்களுள் ஒருவர் விநாயகர். இன்னொருவர் ஆஞ்சநேயர். நவக்கிரகங்களால் பிடிக்க முடியாத விநாயகரை பக்தன் சாணத்திலோ, மஞ்சளிலோ, சர்க்கரையிலோ பிடித்து விட முடியும் என்பதால் தான் ”பிடித்து வைத்தால் பிள்ளையார்” என்றழைக்கப்பட்டார்.

தனக்குத் தானே நாயகராய், கடவுளுக்கெல்லாம் முதல்வராய் இருந்தும் குளத்தங்கரையிலும், முச்சந்தியிலும், தெருமுனைகளிலும் ”ஏழை”க் கடவுளாய் எழுந்தருளி பக்தனுக்காகத் தன்னை எளிமைப் படுத்திக் கொண்ட விநாயகருக்கு உகந்த பல விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி நாளில் அவரை மண்ணில் செய்து நீர்நிலைகளில் கரைப்பதற்குப் பெயர் “விசர்ஜனம்”. மனதில் நாம் பல உருவங்களைச் செய்து கொள்கிறோம். அவற்றை ஒரு காலத்தில் உடைத்தெறிய வேண்டும். உருவங்களை வழிபடுபவன் வழிபடு பொருளின் நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற உன்னதத்தைத் தன்னையே விசர்ஜனம் செய்து கொண்டு விநாயகர் நமக்கு உணர்த்துகிறார். நாமோ அதையெல்லாம் உணராமல் அந்நாளில் பூஜை அறையில் இருக்கும் விநாயகரை சாலைகளில் இறக்கிக் கலர், கலர் மையிட்டு அழகுபடுத்தி சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறோம். கடற்கரைக்குக் கரைக்கக் கொண்டு போகிறேன் பேர்வழி என கலவரங்களை உண்டு பண்ணுகிறோம். ”ஏழை”க் கடவுளை “ஏழரை”க் கடவுளாக ஆக்கியதன் விளைவு பக்தனைக் காக்க வேண்டிய கடவுளை காவலர்கள் காக்க வேண்டிய நிலை உருவானது.

பக்தனுக்குச் சோதனை வந்தால் கடவுளிடம் முறையிடலாம். அந்தக் கடவுளுக்கே சோதனை வந்தால் அவர் யாரிடம் போய் முறையிடுவார்? இதையெல்லாம் யோசித்தால் பக்தனுக்கு மட்டுமல்ல அவன் வழிபடும் கடவுளுக்கும் அது நல்லது. பக்தனோடு கடவுளும் சிக்கிக் கொண்ட கலியுகத்தில் இறைவழிபாட்டை மத வெறியாக மாற்றிக் கொண்டிருப்பவர்களிடம் இதை எப்படிச் சொல்லி புரிய வைப்பது?

நன்றி : வல்லமை.காம்


Monday, 14 September 2015

வாழ்வைச் செதுக்கும் எழுத்து

எழுத்தை தவமாய், வரமாய், வருவாயாய் செய்து கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் என் எண்ணங்களை வெளியிடக் கிடைத்த தளமாய் நினைத்து அதில் இயங்க ஆரம்பித்தேன். கல்லூரிக் காலங்களில் கையில் கிடைத்த துண்டுச் சீட்டு துவங்கி நூலகத்தில் இருந்து எடுத்து வரும் நூல்கள் வரை வகைப்பாடுகளின்றி வாசிக்க, வாசிக்க அச்சமயத்தில் டைரியில் ”கவிதை” என்ற பெயரில் (காதல் கவிதைகள் அல்ல) எழுதி வைத்திருந்தவைகளைத் தொகுத்து நூலாக்கிப் பார்க்கும் ஆசை வந்தது. பதிப்பகங்கள், நூல் விற்பனை ஆகியவைகளைப் பற்றி மருந்துக்குக் கூட எதுவும் அறிந்திராத நிலையில் என் தந்தையிடம் பணம் வாங்கி முதல் கவிதை நூலை வெளியிட்டு அதை நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கொடுத்து அதற்காகச் செலவிட்ட தொகையை எடுத்தேன், அதில் கிடைத்த நம்பிக்கையும், தொடர் வாசிப்பு தந்த இன்னொரு பரிணாமமும் பதிப்பகங்கள் வழி நூல் கொண்டு வரும் ஆவலைத் தூண்டியது. 1999 ல் வெளியான முதல் கவிதை நூலும் அதன் தொடர்ச்சியாக வெளியான நூல்களும் தமிழக நூலகங்களுக்குத் தேர்வாகின, அப்படித் தேர்வாகிச் சென்ற நூல்களில் ”துரத்தும் நிஜங்கள்” என்ற என் நாவலும் ஒன்று.


2001 ல் வெளிவந்த இந்த நாவல் தான் இப்போது வரை நான் எழுதி வெளிவந்த முதல் மற்றும் இறுதி நாவலாய் இருக்கிறது. அதன் பின் முகநூலில் பல வருடங்கள் கழித்து எதேச்சையாக எனக்கென்று கணக்கைத் துவங்கிய போது பல புதிய நண்பர்கள் பல்வேறு தளங்களில் இருந்தும் கிடைத்தார்கள். முண்ணனிப் பதிப்பகங்கள் மூலம் வெளியான என் நூல்களை அவர்களுக்கு அறிமுகம் செய்யும் களமாக முகநூலை நான் பயன்படுத்தத் தொடங்கி இருந்த சமயத்தில் 2014 ம் ஆண்டு ஒரு பின்னூட்டம் வழி ”நீங்கள் அந்த நாவல் எழுதியவரா?” என்ற கேள்வியோடு எனக்கு அறிமுகமானார் செ.சுவாதி.(அவரின் வலைப்பக்கம் http://swthiumkavithaium.blogspot.com/)

”துரத்தும் நிஜங்கள்” நாவலை நூலகத்தில் படித்ததாகவும், இத்தனை வருடங்களுக்குப் பின்னும் அந்த நாவல் தன் நினைவில் இருப்பதாகவும் சொல்லி ஆச்சர்யம் தந்தார். ஏறக்குறைய பதிமூன்று ஆண்டுகளுக்குப் பின் நான் எழுதிய நாவல் பற்றி நான் அறியாத ஒருவர் நினைவூட்டிப் பேசிய சந்தோசம் எழுத்தின் பலத்தை எனக்கு அப்போது சுட்டியது.

பள்ளியின் தலைமையாசிரியர், கவிஞர், இருபத்தி நான்கு நூல்களை எழுதியிருக்கும் எழுத்தாளர், கலைஞர் தொலைக்காட்சியில் வாரந்தோறும் கவிதை வாசிப்பவர்,வலைப்பதிவர் என பன்முகத்திறன் கொண்ட தோழியாய் சுவாதி அவர்கள் என் நட்புப் பட்டியலில் இருந்தாலும் இதுவரை அவரை நேரில் சந்தித்ததில்லை. அலைபேசியில் பேசியதில்லை. முகநூலுக்குத் தான் வரும் சமயமெல்லாம் எழுத்து சார்ந்து நான் இடும் நிலைத்தகவலில் தன்னுடைய எதிர்வினைகளையோ, கருத்துகளையோ இட்டுச் செல்லுவார். சமீபத்தில் வாசிப்பும், எழுத்தும் சார்ந்து என்னில் அக்கறை கொண்டவரின் எதார்த்த பேச்சால் இருந்த மனநிலையை  நிலைத்தகவலாய் இட்டிருந்த போது பின்னூட்டமாய் அவர் சொன்ன தகவல் எழுத்தின் பலத்தை மட்டுமல்ல நட்பின் நம்பிக்கையையும் எனக்குச் சுட்டியது.

அவர் மீது பிரியமும், அன்பும் கொண்ட ஒரு தம்பதி தன் குழந்தைக்குப் பெயர் வைக்கச் சொன்னபோது ”கோபி சரபோஜி” என உங்கள் பெயரை வைத்தேன். உங்களைப் பற்றிய விபரங்களைக் காட்டி அந்தக் குழந்தையின் பெற்றோரிடம் சம்மதம் பெற்றேன் என அவர் எழுதி இருந்த பின்னூட்டத்தை வாசித்த போது அந்த நிலைக்கு நான் தகுதியானவனா? என என்னை நானே கேட்டுக் கொண்டேன். அந்த உயரத்திற்கு நான் தகுதியுடையவனா? என்று தெரியாத போதும் இப்போது இருக்கும் தன்மையிலிருந்து கீழானவாக ஒருபோதும் மாறி விடக்கூடாது என்பதே என் விருப்பமானது.

பொருளாதார ரீதியாக ஒரு பயனுமில்லையென வாசிப்பின் மீதும், எழுத்தின் மீதும் ஒருவித அயர்ச்சி வரும் போதெல்லாம் எங்கிருந்தோ நேரில் முகம் பார்க்காதவர்களிடமிருந்து, அலைபேசியில் அறிமுகமாகதவர்களிடமிருந்து வரும் நம்பிக்கைகளும்,, உந்துதல்களும் இன்னும் ஈரமாய் வாழ்வை வைத்திருக்க உதவுகிறது. பிழையற்ற வாழ்வை வாழும் மனநிலையைக் கொடுக்கிறது. எழுத்து அன்றாடச் செலவினங்களுக்கு எதுவும் தரவில்லை என்றாலும் வாழ்வியலுக்குத் தேவையான இப்படிப் பட்ட அன்பையும், பிரியங்களையும் திகட்டத் திகட்டத் தந்த படியே தான் இருக்கிறது. 

Saturday, 12 September 2015

கிளையிலிருந்து வேர்வரை - காலத்தின் நீட்சி

 
ஈரோடு கதிர் அவர்களின் நாற்பத்தைந்து கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு கிளையிலிருந்து வேர்வரை”. அவருடைய வலைப்பக்கத்தில் எழுதப்பட்டவைகளில்  இருந்து தேர்வு செய்யப்பட்ட  இத்தொகுப்பின் பல கட்டுரைகளை இணையம் வழி முன்னரே வாசித்திருந்த போதும் ஒரு தொகுப்பாக வாசிக்கும் போது அவைகள் உருவாக்கும் தாக்கத்தை, விட்டுச் செல்லும் சில மென் புரட்டல்களை, புரிந்தும் - அறிந்தும் அசை போட முடிகிறது.

முதல் கட்டுரையின் இரண்டாவது நிகழ்வைச் சிங்கப்பூரில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் அவரே நேரடியாக விவரித்ததைக்  கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரின் அந்தச் சொல்லாடல் மனநிலையைச் சற்றும் மாறாமல் அப்படியே எழுத்தில் வடித்திருக்கிறார்.  நிகழ்வுகளுக்கு மையத்தில் நம்மை நிறுத்தி நமக்கான சொல்லாடலையும், காட்சிப்படுத்தலையும் அவருக்கான மொழியில் சொல்லும் கதிரின் இந்தத் திறன் தான் கட்டுரைகளை வெறும் செய்தியாக ஆக்காமல் வாழ்வியலாகப் பார்க்க வைப்பதோடு தன் இறுப்பையும் நம்மிடம் உறுதி செய்து விடுகிறது. தாய் தந்தையாதல் சாத்தியம். ஆனால் ஒரு தந்தை தாயாவது அத்தனை சாத்தியமான விசயமில்லை. ஆனால் குழந்தைகள் வளர்ப்பில் தந்தையும் தாயாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசும் முதல் கட்டுரையில் வேரை நோக்கிய விரவல் தொடங்குகிறது..

”தேர் நோம்பி” கட்டுரையில் நம் தலைமுறையில் மிச்சமாகவும், நம் குழந்தைகள் தலைமுறையில் முழுவதுமாகவும் தொலைந்து நிற்கும் கிராமத்துத் திருவிழாக்களையும் அதையொட்டி விரியும் கிராமத்தையும் காட்டும் அதேநேரம் நகரத்தின் தாக்கத்தால் தகர்ந்து நிற்கும் கிராமச் சூழலையும் சுட்டிக் காட்டுகிறார். கட்டுரையை வாசித்து முடித்ததும் இருப்பவைகள் வழியும், இழந்து கொண்டிருப்பவைகள் வழியும் ஒரு கிராமத்துத் திருவிழாவுக்குச் சென்று வந்த உணர்வு நமக்குள் வந்து உட்கார்ந்து விடுகிறது.

இதுவரை எந்தத் தலைமுறையும் கொண்டாடாத அளவிற்குக் குழந்தைகளைத் தாங்கிக் கொண்டாடும் இந்தத் தலைமுறை எனத் தொடங்கி குழந்தை வளர்ப்பில் நாம் எங்கே பாதை மாறுகிறோம்? எது அதற்கான திருப்பத்தை நமக்குள் நிகழ்த்துகிறது? என்பதை அழகாகச் சுட்டிக் காட்டும் “தங்கக்கூண்டு” கட்டுரை பெற்றோர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை என்பேன்.

தொகுப்பின் முகப்பை அலங்கரித்து நிற்கும் கட்டுரை நடவு நடுவதில் தொடங்கி நெல் மணிகளை உதிர்த்து அரிசியாக்குவது வரையிலான ஒரு நெடிய உழைப்பை அழகிய சித்திரமாய் நமக்குள் தீட்டுகிறது. விளைநிலங்கள் எல்லாம் மனைநிலங்களாக மாறிவிட்ட நிலையில் எதிர்காலத்தில் விவசாயம் பற்றி நம் குழந்தைகளுக்குச் சொல்லவும், எனக்கும் விவசாயம் தெரியும் என நம் பிள்ளைகளிடம் காட்டிக் கொள்ளவும் இந்த ஐந்து பக்கக் கட்டுரையை அப்படியே மனனம் செய்து வைத்துக் கொள்ளலாம்!

மனிதாபிமானம் என்ற வார்த்தை இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அது நம்மைச் சுற்றி இருக்கும் எளிய மனிதர்களிடமிருந்தே நமக்கும் – இந்தச் சமூகத்திற்கும் போதிக்கப்படுகிறது என்ற உண்மையை உரக்க மட்டுமல்ல தன் செயலின் வழி காட்சிப் படுத்தியும் ஞான போதியாய் ஒளிர்ந்தும் நிகழ்த்திக்காட்டிய அந்த ஒற்றைக் கண் பெண்ணைப் போன்ற மனிதர்கள் நம் அருகிலும் வசிக்கவே செய்கிறார்கள். நாம் தான் அவர்களைக் கவனித்தும் கவனியாமல் பயணித்துப் போகிறோம். ஆனால் கதிர் அவர்களைக் கவனித்ததோடு மட்டுமில்லாமல் அத்தகையவர்களை இப்படியான கட்டுரை வழி நம்மிடம் கவனப்படுத்தவும் செய்கிறார்.

வைத்திருந்து, வைத்திருந்து புழங்கியவர்கள் என்ற அடையாளத்தைத் தொலைத்து நிற்கும் நாம் “யூஸ் அண்ட் த்ரோ” என எல்லாவற்றையும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம், நம்மில் நுழைய ஆரம்பித்திருக்கும் இந்த அழுகல் மனநிலையானது சக மனிதர்களைக் கையாளும் விசயத்திலாவது ஊடுருவாமல் இருக்க வேண்டும் என்ற கதிரின் கவலை கவலையாகவே இருக்க வேண்டும் என நினைக்கத் தோன்றினாலும் எதார்த்த நிலையோ அந்தக் கவலை மோட்சமடையும் நாள் அத்தனை தொலைவில் இல்லை என்பதாகவே இருக்கிறது.

மனிதர்களுக்காக, அவர்களின் வாழ்வியல் நிலைகளுக்காக மட்டுமே பேசும் கலியுகத்தில் விலங்குகளுக்காகவும் இத்தொகுப்பில் உள்ள கட்டுரை பேசுகிறது. விலங்குகளின் வாழ்வியல் முறையைச் சிதைத்துச் சிரிக்கும் மனித மனம் குறித்து ”நீர்த்துப் போகும் சுயம்” கட்டுரையில் யானையின் வாழ்வியலில் நாம் செய்த சுயநல வன்மத்தை பந்தி வைக்கிறார். விலங்குகளின் வாழ்வியலை நாம் சிதைத்தெறிந்து திரியும் நிலைக்கு ஒரு சோறு பதமாய் இக்கட்டுரை இருக்கிறது.

தொலைபேசியால் உறவுகளைத் தோற்கடித்தும் அலைபேசியால் அதை இன்னும் தொலைவாக்கியும் காக்கைகளின் சகுனத்திற்கே சனி பிடிக்க வைத்த நாம் தான் உறவுகள் விசயத்தில் தோற்கடிக்கப்பட்டவர்களாக இருந்து கொண்டிருக்கிறோம். வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் ”காக்கைச் சகுனம்” கட்டுரையில் அலசுகிறார்.

பொதுவான கட்டுரைகளில் கூட வழமையான விசயங்களைத் தவிர்த்து சில புதிய விசயங்களைச் சொல்ல வேண்டும் என்பதில் கதிர் அதிக அக்கறை காட்டி இருக்கிறார். அதற்கென மெனக்கெட்டிருக்கிறார் என்பதற்கு சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளின் பயணக் கட்டுரைகளையும், நம்முடைய அலட்சியம் மற்றும் அறியாமை மீதான எதிர்வினைகளின் தீவிரத்தைச் சொல்லும் சினிமா சார்ந்த கட்டுரையையும் உதாரணமாகச் சொல்லலாம்,

”கேரி பேக்” கட்டுரையில் விஞ்ஞானத்திற்குத் தண்ணீரைச் சிதைத்துச் சீரழிக்கத் தெரியும். புதிதாய் ஒரு சொட்டுத் தண்ணீரை உருவாக்கத் தெரியுமா? என்று எழும்பி நிற்கும் கேள்வி விழிப்புணர்வின்மையால் மண்னின் சுவாசக்குழாய்கள் மீது நம் கால்களை அழுத்திச் சாகடிக்கும் துயரை மாற்றுமா? என்ற இன்னொரு கேள்வியாகத் தொக்கி நின்றாலும் மாற்ற வேண்டும் என்றே தோன்றுகிறது. அந்த மாற்றம் நிகழாது போனால் ஒரு உலக யுத்தத்தை தண்ணீருக்காக நாம் நிகழ்த்த வேண்டி இருக்கும் என்ற அச்சம் நிச்சயமாகி விடும்.

பசிக்குச் சாப்பிடு என்றார்கள். அதுவே வேக வாழ்க்கையிலும் பணப் புழக்கத்திலும் ருசிக்கச் சாப்பிடு என்ற பரிணாமம் கொண்டு மெல்லக் கிளை பரப்பியதில் பசி  திணிக்கப்படும் விசயமாகி விட்டது. ”திணிக்கப்படும் பசி” என்ற கடைசிக் கட்டுரையில் ஒரு ஸ்டெயிலிசான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என மற்றவர்களுக்குக் காட்டிக் கொள்ளும் முகமாக நமக்கு நாமே திணித்துக் கொள்ளும் பசியால் வீணடிக்கப்படுவது உணவு மட்டுமல்ல இன்னொருவனின் பசி என்பதில் எத்தனை உண்மை.

”எல்லா நாட்களும் ஒன்றேயல்ல” என்ற கட்டுரையில் ஒரு நாளை எப்படிக் கடக்கலாம் அல்லது கடத்தலாம்? எனக் கேள்வி கேட்டு அதற்குக் கதிர் சொல்லும் பல பதில்களில் ஒன்றாய் ”இந்தத் தொகுப்பை வாசித்தும் கடத்தலாம்” என்பதையும் சேர்த்தே எனக்குப் படிக்கத் தோன்றியதைப் போல. 165 பக்கங்களைக் கடந்து நீங்கள் இந்தத் தலைப்புக்கு வரும் போது உங்களுக்கும் தோன்றக்கூடும்.

மரணம் சார்ந்த அம்சங்கள் - குழந்தை வளர்ப்பு - சக மனிதர்களால் சூழப்பட்டு நிற்கும் வாழ்க்கையை நாம் எதிர்கொள்ளும் தன்மை - காலச்சக்கரத்தின் வேகத்தில் நாம் தொலைத்த, தொலைக்கும் விசயங்கள் என்ற நான்கு அடுக்கில் நிரல்பட நிற்கும் இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளின் முடிவு வரிகள் நம்மைப் புரட்டிப் போடுகின்றன – புடம் போடுகின்றன – புன்னகை பூக்கச் செய்கின்றன. வாசிக்கும் மனநிலைக்கேற்ப கணித வரைபடங்களின் பரிணாமங்களை வரைந்து செல்கின்றன. பிழைத்தலை விட வாழ்தலின் அவசியத்தைப் புரிய வைக்கின்றன

வாழ்வை எத்தனை முரண்களோடு அணுகிக் கொண்டும், வாழ்ந்து கொண்டும் இருக்கிறோம் என்பதைத் தொகுப்பு முழுக்க விதைக்கப்படிருக்கும் வார்த்தைகளின் வழி கடந்து கடைசிப் பக்கத்திற்கு வந்து சேரும் போது இரண்டாவது கட்டுரையின் இறுதியில் இத்தனை எளிமையாக்கப்பட்ட பிறகும் நாம் ஏன் இத்தனை ”பிசி”யாகவே இருக்கின்றோம்? என்ற கேள்விக்குப் பதிலும் கிடைத்து விடுகிறது.

இப்படியான தொகுப்புகளில் படைப்பாளியின் தனிப்பட்ட நிகழ்வுகள் சார்ந்த விசயங்கள் தானாகவே நுழைந்து நிரப்பிக் கொள்ளும் என்ற பொது அபாயத்தில் இருந்து இத்தொகுப்பும் தப்பவில்லை என்ற போதும் கிளையிலிருந்து வேர் வரை காலத்தின் நீட்சியாக நகர்வதோடு நம்மையும் நகர்த்திப் போகிறது.

நன்றி : சொல்வனம்.காம்

Tuesday, 8 September 2015

அயல் பசி – அற்புத போஜனம்

2012 ம் ஆண்டிற்கான சிறந்த பண்பாட்டுக் கட்டுரையாக அயல் பசியை எஸ். இராமகிருஷ்ணன் தேர்வு செய்திருந்த சமயத்தில் அதன் சில கட்டுரைகளை இணையத்தில் நொறுக்குத் தீனியாய் அசை போட்டிருந்தாலும் எல்லாக் கட்டுரைகளையும் ஒரு சேர வாசித்து ருசிக்க சமீபத்தில் தான் நேரம் வாய்த்தது.

உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றும் மனித வாழ்வியலுக்கான அடிப்படைச் சாதனங்களாக மட்டுமல்லாமல். மனித குல வரலாற்றில் நிகழ்ந்த மாற்றங்களினால் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவைகளில் உண்டாகிய தாக்கங்களையும், சிதைவுகளையும் வரலாற்றில் பதிவு செய்யும் கருவிகளாகவும் இருந்து வருகின்றன. அத்தகைய கருவிகளுள் ஒன்றான உணவு சார்ந்து வந்திருக்கும் இந்நூல் ஜப்பான், தென்கிழக்காசியா மற்றும் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா கண்டங்களில் இருக்கும் உணவு வகைமைகள், அதைத் தயார் செய்யும் முறைகள், பரிமாறும் விதங்கள் உள்ளிட்ட பல தகவல்களைத் தரும் இந்த நூற்றாண்டில் முக்கிய ஆவணம் எனலாம்.

பத்தி எழுத்துக்கே உரிய கவர்ச்சித் தலைப்பாக மட்டும் இல்லாமல் கட்டுரையின் மொத்த சாராம்சத்தையும் ஒரே வரியில் சொல்லும் மாவடு போன்ற சுரீர் தலைப்புகளில் காலம் காலமாக மனிதர்கள் உணவின் மீது காட்டிய ஈடுபாடு, தீரா வேட்கை ஆகியவைகளைப் பற்றிப் பேசும் இந்நூலில் முகலாயச் சக்கரவர்த்தி பாபர், அக்பர், ஜார்ஜ் வாஷிங்டன், ஸ்டாலின், ஹிட்லர், செங்கிஸ்கான், நிக்கோலே, இடிஅமீன், ரோமின் நீரோ, மாசேதுங், ஆப்ரகாம் லிங்கன், சர்ச்சில், ரீகன், மண்டேலா, டயானா, ஒபாமா, ஐசக் நியூட்டன், கிரகாம்பெல், பிக்காசோ, பில்கேட்ஸ், பீத்தோவன், கன்பூசியஸ், இராமகிருஷ்ண பரமஹம்சர் எனச் சகலரும் வலம் வருகிறார்கள்.

ஆம்லேட் என்று பெயர் வந்த காரணம், சலாடு (CAESAR SALAD) உருவான விதம் ஆகியவைகளோடு ஹவாய், இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பெயரும் மேதான்  நகரின் பெயரும் உருவான விதம், உடுப்பி கிருஷ்ணா ராவ், ஆப்பிரிக்க – அமெரிக்க உணவுத் தொழிலில் சாதித்த ஆர்தர் கேஸ்டன் (ARTHUR G.GASTON) ஆகியோரின் வெற்றிக் கதைகள் வருகின்றன.

சிங்கப்பூரின் பிரபலமான ”முள்நாறிப் பழம்” (டூரியன்), பலரின் சூரிய உதயத்தை உயிர்பிக்கும் காப்பியின் கதை பேசும் ”ஆனந்தக் கசப்பு” ஆகிய கட்டுரைகளின் வழியாக  ப. சிங்காரத்தின் புயலிலேயே ஒரு தோணி நாவலும், எழுத்தாளர் தஞ்சை பிரகாஷின் வடிகால் வாரியம் கதையும் வருகிறது. இவைகள் தான் இந்நூலை வழக்கமான நூல்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. ஷாநவாஸின் தேடல்களையும், மெனக்கெடல்களையும் நமக்குப் பந்தி வைக்கின்றன.

ஆடு, மாடு, பன்றி, கோழி என நாம் அறிந்த, சுவைத்துப் பழகிய அசைவ உணவுகளால் மட்டும் உலகம் சூழப்படவில்லை. சட்டெனப் பிடித்துப் பட்டென சமைத்துத் தின்று விடுவதில் மனிதன் எப்பொழுதும் திருப்தி அடைவதில்லை. பிரான்சின் தென்மேற்கு வட்டாரங்களில் ஒரு பாடும் பறவையை விரும்பிச் சாப்பிடும் மக்கள் அதைப் பிடித்து வெளிச்சம் கிடைக்காத வகையில் ஒரு இரும்புப் பெட்டிக்குள் போட்டு அடைத்து விடுவார்களாம். இன்னும் விடியவே இல்லை என்ற நினைப்பில் அந்தப் பறவை நான்கு நாட்களாகத் தூங்கித் தூங்கியே தன் எடையை நான்கு மடங்காக்கிக் கொண்டதும் அதன் தலையைத் திருகி எறிந்து விட்டு அந்தக் குருவியின் கொழுப்பிலேயே வருத்துத் தின்பார்களாம்.

பிரான்ஸ் மக்கள் தான் இப்படி என்றால் ரஷ்யர்கள் முழு ஒட்டகத்தின் வயிற்றைச் சுத்தமாக்கி அதனுள் ஒரு ஆடு, அந்த ஆட்டின் வயிற்றில் இருபது கோழிகள், அந்தக் கோழிகளின் வயிற்றில் முட்டை, அரிசி ஆகியவைகளை வைத்து அவித்துச் சாப்பிடுவார்களாம். இப்படியாகத் தொகுப்பு முழுக்க விரிந்து கிடக்கும் தகவல்களை வாசிக்கும் போது உணவு இரசனை என்பது மனிதனுக்கே உரிய ஆறாம் அறிவின் உற்பத்தியாகத் தனித்து நிற்கும் வியப்பு மெல்ல நம்முள்   ஊடேறுகிறது.

குறிப்பிட்ட சிலவகை உணவுகளை நாம் சாப்பிட மறுப்பதற்கான காரணத்தையும், நமக்கு ஒவ்வாத போது சிலவகை உணவுகளை விரும்பிச் சாப்பிடுவதற்கான காரணத்தையும் ”கிளாடியேட்டர்களின் இரத்தம்” என்ற கட்டுரையில் அலசும் ஷாநவாஸ்  உணவு விசயத்தில் மனிதன் கொண்டிருந்த நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள் பற்றியும் விரிவாகவே எழுதிச் செல்கிறார். ஆண்மைத்தன்மையை அதிகரிக்கச் செய்யவும், இன்ன பிற உடல்ரீதியான காரணங்களுக்காகவும் கரப்பான் பூச்சி, பாம்பு, புழு, எறும்பு, பூனை, நாய், கழுதைப்புலியின் தலைக்கறி ஆகியவைகளைச் சாப்பிட சாமானிய மனிதன் விரும்புவதைப் போல நீண்ட நாட்கள் தான் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக வட கொரியாவின் ஆட்சியாளராக இருந்த இரண்டாம் கிம் ஜோங் ஏழு செண்டி மீட்டருக்குக் குறையக்கூடாது என்ற நிபந்தனையோடு நாயின் உறுப்பைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாராம். இப்படிச் சாமானியனில் தொடங்கி உலகத்தலைவர்கள் வரை பலரும் உணவு விசயத்தில் கொண்டிருந்த நம்பிக்கைகளை நூல் முழுக்க அறியத் தருகிறார்.

பெரும்பாலான உலகத் தயாரிப்புகளில் சீனர்களின் ஆதிக்கம் தொடர்வதைப் போல உணவு விசயத்திலும் சீனர்கள் அப்போதிருந்தே சகட்டு மேனிக்கு ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கின்றனர். ஒருவேளை பலகாரம், இரண்டு வேளை சோறு என உணவு அட்டவணையை வைத்திருக்கும் நம்மில் பலருக்கும் அவர்களின் உணவுக் கலாச்சாரமும், உணவு முறைகளும் நிச்சயம் திகிலூட்டுபவைகளாக இருக்கும். ”நகரும் எதையும் தன் வயிற்றிற்குள் நகர்த்தி விடுவார்கள்” என்று சீனர்கள் பற்றிச் சொல்லப்படும் வாய்வழிச் செய்தியை எழுத்தின் வழி அவர்களின் உணவுக் கலாச்சாரத்தோடு இந்நூல் தெளிவாய் விவரிக்கிறது.

இன்றைக்கு உடல் பருமனைக் குறைக்க டயட்டில் இருப்பதாய் சொல்லிக் கொள்கிறோம். இருபத்தோராம் நூற்றாண்டின் அடையாளமாகவும் அது மாறி வருகிறது. பருமனைக் குறைப்பதற்கான மருத்துவ ஆய்வுகள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் நாடாப்புழுவை விழுங்குதல், நீலநிறக் கண்ணாடி அணிந்து கொள்ளுதல், தினமும் 5 தடவை குளித்தல் போன்ற நம்பிக்கைகளின் வழி மனிதர்கள் தாங்களே செய்து கொள்ளும் சுய பரிசோதனை முயற்சிகளை ”ஆபரேஷன் டயட்” கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார்.  

சமையல் கலையைக் கற்றுத் தரும் நூல்கள் குவிந்து கிடக்கும் அளவுக்கு  உணவின் வழியாகக் கலாச்சாரப் பதிவுகளைத் தரும் இது போன்ற நூல்கள் தமிழில் மிக, மிகக் குறைவு. வெகு அரிதாக வரும் இப்படியான நூல்களை எழுதுவது என்பது சிரமமான விசயம்.  கயிறு மேல் நடக்கும் வித்தை போன்றது. கொஞ்சம் பிசகிப் போய் சுவராசியம் குன்ற ஆரம்பித்தால் வாசிப்பாளன் தயவு தாட்சண்யமின்றி நூலை ஓரங்கட்டி விடுவான்.  ஆனால் அப்படியான சுவராசியக் குறையுணர்வு தோன்றா வகையில் பிரபலங்களின் உணவு முறைகள், பேட்டிகள், தான் சந்தித்த, தன்னைச் சந்தித்த நபர்கள், தன் அனுபவத்தோடு நண்பர்களின் அனுபவங்கள், தன் பயணங்கள்,  வாசிப்புகள் ஆகியவைகளின் வழி உணவும், உணர்வுமாய் தனக்கே உரிய தனித்த, எழுத்து நடையில் ஷாநவாஸ் எழுதி இருக்கிறார்..

கலாச்சாரப் பிண்ணனியோடு தேசங்களின் உணவு வகைமைகளையும், முறைகளையும் அதன் மீதான அம்மக்களின் பெரு விருப்பங்களையும், நம்பிக்கைகளையும் விரிவாய் சொல்வதற்காக இந்நூலில் எடுத்தாளப்பட்டிருக்கும் தகவல்களும், விவரணைகளும் விலகியோ, துருத்தியோ தெரியாமல் அமைந்திருப்பது நூலின் பலம்,

ஜப்பான், இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளுக்கும், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா கண்டங்களுக்கும் பயணம் மேற்கொள்பவர்கள் அங்குள்ள உணவுக் கலாச்சார முறைகளை அறிந்து கொள்ள இந்நூலை தயங்காமல் வாசிக்கலாம்.  

உணவைத் தயார் செய்வதற்காகச் சமையலறையில் பயன்படுத்தப்படும் விதவிதமான கத்திகள், அவைகளைக் கையாளும் விதம் குறித்து பேசும் கட்டுரைகளில் புறநானூற்றுப் பாடல் வழி பண்டைத் தமிழன் ஆமை ஓட்டில் வைத்து கத்தியைக் கூர் செய்ததையும், அகநானூறு, மலைபடுகடாம், பட்டினப்பாலை ஆகியவைகளிலிருந்து சரிவிகித உணவு குறித்தும், 16 ம் நூற்றாண்டில் புரந்தரதாசர் பாடிய பாடலில் இருந்து கருமிளகு பயன்பாடு பற்றியும் அறியத் தரும் இந்நூலில் தமிழக உணவு பற்றிய தனிக்கட்டுரை ஏதும் இல்லாதது ஏமாற்றமே!

பத்திக்குப் பத்தி அபூர்வமான, வியக்க வைக்கும் தகவல்களால் ஆன இந்நூலில் இருக்கும் கட்டுரைகளைப் பருந்துப் பார்வையில், நுனிப்புல் மேயும் வேகத்தில் வாசித்துக் கடக்காமல். பசித்தும், இரசித்தும், ருசித்தும் புசிப்பதைப் போல வாசித்துக் கடந்தால் மட்டுமே முழு விசயங்களையும், வாசிப்புணர்வையும் பெற முடியும். வெறும் சமையல் சார்ந்த விசயங்களைப் பேசும் ரெசிபி (RECIPE) தொகுப்பாக இல்லாமல் உணவின் வழி நாடுகளின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவைகளை அடையாளம் காட்டும் அயல் பசி வாசிக்க, வாசிக்கத் தான் அற்புதம். அருமையான போஜனம்.

நன்றி : மலைகள்.காம்