Wednesday, 23 December 2015

தையல் மிஷின்

ஜானகி என்ற பெண்ணிற்கும் அவளோடு முப்பத்தைந்து ஆண்டுகள் இணைந்து பயணித்த தையல் மிஷினுக்குமான உறவைச் சொல்லும் கதை. தையல்மிஷின் என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இக்கதையின் ஆசிரியர் நூர்ஜஹான் சுலைமான்.

ஜானகியின் வாழ்வியல் நிகழ்வுகளைச் சற்றும் மிகைப்படுத்தாத வகையில் ”மிஷின் மக்கர் பண்னும் போது குழந்தையை அதட்டுவது போல செல்லமாக அதட்டிய படி தைக்க ஆரம்பிப்பாள்” போன்ற நுட்பமான அவதானிப்புகளோடு இழைத்திருப்பது கதையின் மிகப்பெரிய பலம்.

இந்தப் பழைய தையல் மிஷினிற்குப் பதில் சப்தம் எழுப்பாத புதிய தையல் மிஷின் வாங்கித் தருவதாய் மகன் சொல்லும் போது ”உன் அம்மாவும் பழசு தான்  என்னையும் வீசிடுவியோ” என்ற ஜானகியின் எதார்த்தக் கேள்வியும் ”எல்லாருக்கும் நீ தையல் மிஷினாகத் தெரியுறே. ஆனா……யாருக்கும் தெரியாது நீதான் என்னோட குலசாமின்னு” என்ற ஆதங்கமும் அவளுக்கும் அவளின் தையல் மிஷினிற்குமான உறவை இயம்பி விடுகிறது,

ஒவ்வொரு கால கட்டத்திலும் தன்னை விட்டு விலகாமல் பயணித்து வந்த தன் தையல் மிஷினை ஜானகி இழக்கத் தயாராவதில் நிகழும் கதையின் திருப்பமானது அதற்காக அவள் தனக்குத் தானே சொல்லிக் கொள்ளும் சமாதானம் கதையை உச்சமடையச் செய்கிறது. அவளின் அந்தச் சமாதானம் அவளுக்கு மட்டுமல்ல வாசிக்கும் நமக்கும் ஏற்புடையதாகவே இருக்கிறது.

தன்னுடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாகி இருக்கும்  தையல் மிஷின் தன் காலத்திற்குப் பின்னர் எப்படிப் பட்ட நிலையில் இருக்க வேண்டும் என நினைக்கும் ஜானகியின் மனநிலையை வருங்காலத்தில் பிள்ளைகள் எப்படி இருக்கப் போகிறார்களோ? என நினைக்கும் பெற்றோரின் அக்கறைக்கு இணையாகச் சுட்டலாம்.

ஜானகியின் ஆரம்பகாலத் துயரங்களின் வீச்சை வாசகனிடம் கொண்டு சேர்க்க அவளின் பிரதான உறவினர்களின் இறப்பை மட்டுமே ஆதர்சனமாகக் காட்டியிராமல் அவள் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்வியல் சிக்கல்களையும் பயன்படுத்தி இருந்தால் இன்னும் அடர்வாய் இருந்திருக்கும்..

ஒரு சாதாரண நிகழ்வை மையமாக்கி நேர் கோட்டு முறையில் கதையை அமைத்திருந்தாலும் அதைச் சொல்லி உள்ள விதத்தால் அசூசையின்றி வாசிக்க முடிகிறது

கைத்தொழில் ஒன்று கைவசமிருப்பின் எத்தகைய வாழ்வியல் சிக்கலையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியும் என்ற படிப்பினையைப் பதியமிடும் கதை.

ஆசிரியர்  : நூர்ஜஹான் சுலைமான்
    கதை     : தையல்மிஷின்
 வெளியீடு: தங்கமீன் பதிப்பகம்

Saturday, 19 December 2015

அப்பாவின் படகு

சிங்கப்பூரில் இயங்கும் தங்கமீன் பதிப்பகம் கடந்த வருட தனது வாசகர் வட்டச் சிறுகதைகளை “அப்பாவின் படகு” என்ற பெயரில் தொகுப்பாக மலரச் செய்திருக்கிறது. இத்தொகுப்பில் பத்துப் படைப்பாளிகளின் பதினைந்து கதைகள் உள்ளன,

ஒரு படைப்பை வாசிப்பிற்காகத் தேர்ந்தெடுக்கும் வாசகன் அதில் தொடர்ந்து பயணிக்க அப்படைப்பானது அவனைத் தன்னுள் இறுத்திக் கொள்ளும் தகவமைப்புகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் வலக்கையால் எடுத்ததை இடக்கையால் புறந்தள்ளிப் போய் விடுவான். வாசிப்பாளனின் இந்தப் புறந்தள்ளலை, புறக்கணித்தலை எப்பொழுது ஒரு படைப்பு புறந்தள்ள வைக்கிறதோ அப்பொழுது அந்தப் படைப்பு வெற்றியின் முகத்துவாரத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. இப்படி நிலை நிறுத்தல்களுக்கான கூறுகளைக் கொண்டிருக்கும் படைப்பாக இத்தொகுப்பின் கதைகள் சிங்கப்பூரின் வாழ்வியல் சார்ந்தும், சிங்கப்பூரைக் களமாகக் காட்டியும் விரிந்து நிற்கின்றன.

காற்றடைக்கப்பட்ட பலூன் மேலே கிளம்பக் கிளம்ப ஒரு குழந்தை அண்ணாந்து பார்த்த படி ஆர்வம் குன்றாமல் அதை எப்படிப் பின் தொடர்கிறதோ அதே ஆர்வத்தை ஒரு வாசிப்பாளனிடம் தருவதற்குக் கதைக்களங்கள், அது கட்டமைக்கப்படும் விதம், சொல்லும் முறை பயன்படுத்தப்படும் சொல்லாடல்கள் அவசியம். இந்த அவசியத்தின் பல அம்சங்களைத் தன்னுள் கொண்டு கடைசி வரி வரைக்கும் எதிர்பார்ப்போடு நகர்த்தி வரும் “ஒற்றைக் கண்”, அமானுஷ்யத்திற்கான வழக்க அனுமானங்களை உடைத்துக் கட்டமைக்கப்பட்ட “பச்சை பங்களா”, மன உணர்வுகள் சார்ந்தும், நம்பிக்கை சார்ந்தும் ஊடேறும் “அப்பாவின் படகு”, ”இது வேறு வீடு”, “ஒரு கிளினிக்கின் காத்திருப்பு அறை”, குழந்தை வளர்ப்பில் ஏற்படும் சிக்கலைப் பேசும் “பித்துக்குளி மாமா” ஆகிய கதைகள் தொகுப்பை நிறைவாக்குகின்றன.

கதை தனக்கான முடிவைத் தானாகவே நிரப்ப எத்தனிக்கும் போது மட்டுமே படைப்பாளியின் முடிவும் வாசகனின் முடிவும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன, அதுவே படைப்பாளியின் முடிவோடு தன்னுடைய முடிவைப் பொறுத்திப் பார்த்து விவாதங்களை நிகழ்த்த வாசகனுக்கு வாய்ப்பளிக்கிறது. இந்த நிலை முடிவிலிருந்து முன் நோக்கிப் பாயும் கதைகளில் நிகழ்வதில்லை. காரணம், கதையின் ஓட்டம் முன்னரே அறுதியிட்ட முடிவை நோக்கி ஆற்றொழுக்காய் சென்று கொண்டே இருக்கும், தொடர் வாசிப்பாளனால் இதை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். நீண்டு செல்லும் இருப்புப்பாதை எங்கோ தொலைவில் ஒரு புள்ளியில் மையலிடுவது போல் தெரிந்தாலும் அது சந்தித்துக் கொள்வதில்லை என்பதே உண்மையாக இருப்பது போல முடிவிலிருந்து முன் நோக்கிப் பாயும் கதைகள் தன் மீதான விவாதங்களை எழுப்பிக் கொள்வதில்லை, ”ஏமாற்று”, “இணையும் இணையம்”, “சந்திரன் கோப்பிக்கடை” ஆகிய கதைகள் இந்த வகைமையானவை..

நுட்பமான கதைக் கருவையோ, வாசகனுக்குள் ஊடாடும் நிகழ்வுகளையோ கொண்டிராத போதும் சொல்லப்பட்டிருக்கும் விதத்தால் ஒரு அழகியல் கதையாக ”பூனைக் கண்” கதையை வாசிக்க முடிகிறது. ”காய்ந்த காட்டுக் கொடியில் தீயேறுவது போல”, “மஞ்சள் நிற பாலித்தீன் தாள் போர்த்தியது போல மரங்கள்”, ”அகன்ற கால்வாயில் தேங்கியிருந்த நீர் வானைப் பார்த்து அமைதியாய் படுத்திருந்தது” என அறிந்த விசயங்களும், பார்த்துக் கடந்து போகின்ற காட்சிகளும் மொழி நடையால் அழகான உவமைகளாகி கதை முழுக்க விரவிக் கிடக்கிறது. இதற்கு நேர் மாறாக உவமைகளற்ற எதார்த்த மொழி நடையில் சுவராசியம் குன்றாத வாசிப்பனுபவத்தை நகைச்சுவையின் ஈரம் காயாமல் “வயிற்றுவலி வரவைப்பது எப்படி?” என்ற கதை வாசிக்கத் தருகிறது

அறிவுரைகள், போதனைகள் மூலம்  தன்னுடைய மையத்தை பிரதிநிலைப்படுத்தும் கதைகள் நூலளவு பிசகினாலும் போதனையாக மாறிவிடக் கூடிய அபாயங்கள் உடையவை. சொல்லும் முறையினாலும், சொற்களை இடைவெளியற்று கட்டமைக்கும் முறையாலும் நிரல் படுத்தப்படும் இப்படியான போதனைக் கதைகள் தன்னுடைய நிலைபாட்டைப் பொறுத்திப் பார்ப்பதற்கான வாய்ப்புகளை வாசகனுக்குத் தருவதில்லை. அல்லது அதற்கான இடம் அங்கு இல்லாமலே போய்விடுகிறது, தேர்ந்த ஒருவரின் வழியே வாழ்வின் தேடல் முனைகளைக் கண்டடையும்  யுக்தியைச் சொல்லும் ”ஒரு வானம் பல விண்மீன்கள்” கதையை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும்.

கதை அதன் முடிவு நிலையை எட்டிய பின்னர் பிரயோகிக்கப்படும் சொற்கள் வாசகனுடையதாக மட்டுமே இருக்க வேண்டும். படைப்பாளி அதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. வாசகன் நிறைவு செய்ய வேண்டிய இடத்தைப் படைப்பாளி தன் சொற்களால் நிறைக்கும் போது அந்தக் கதை பலவீனமடைய ஆரம்பிக்கிறது. உதாரணமாக “அம்மாவென்ற நான்”, “மண் குதிரைகள்” ஆகிய கதைகளைச் சுட்டலாம், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இவ்விரு கதைகளும் அதற்கான நிலையை மிகச் சரியாகச் சென்றடைந்திருக்கும் சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது.

அனுமானிக்கக் கூடிய முடிவுகளைக் கொண்டிருத்தல், கூறியது கூறல், ஆர்வ மிகுதியால் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி விட முயலுதல், வாசகனுக்கான வெற்றிடங்களைத் தானே இட்டு நிரப்புதல், பட்டவர்த்தனமாக விரித்துச் சொல்லி  தன் எண்ணத்தை வாசிப்பாளனிடம் கடத்த எத்தனித்தல், தேய்வழக்குச் சொற்களைக் கையாளுதல் என எந்த ஒரு படைப்பும் சிக்கிக் கொள்ளும் பலவீனங்களுக்குள் இந்தத் தொகுப்பும் பயணித்தே மீண்டிருக்கிறது.

ஆரம்ப கால நிகழ் பரப்பை உதிர்த்து அடுத்தடுத்த தளங்களுக்குள் சிறுகதை தன்னை நுழைத்துக் கொண்ட நிலையில் பலரும் கையாண்டிருக்கும் கருக்களை தன் மொழியில் படைப்பாக்கிப் பார்க்கும் நிலையை நீக்கி இன்னும் சொல்லப்படாத பக்கங்களை படைப்பாளி கண்டடைந்து வாசகனுக்குத் தர வேண்டும். அந்தக் கண்டடைவிற்காகவே இன்னும் பல எழுதப்படாத கதைகள் காத்திருக்கின்றன, அதற்கான வாய்ப்புகள் சிங்கப்பூர் வாழ்வியல் சூழலில் நிறைய இருக்கின்றது, உதாரணமாக புலம் பெயர்ந்து வரும் பணிப்பெண்கள் குறித்து எழுதப்பட்ட கதைகள் அளவுக்கு மணிக்கு இத்தனை டாலர் ஊதியம் எனத் தன்னைச் சுருக்கிக் கொண்டு வாழும் புலம் பெயர்ந்த இளந்தலைமுறைகளின் துயரங்கள், அவர்கள் எதிர் கொள்ளும் வாழ்வியல் சிக்கல்கள் பேசப்படவில்லை.

அதேபோல, நிரந்தர குடியுரிமை பெற்றுப் புதிதாகக் குடியேறியவர்களின் வருகை சிங்கப்பூர்வாசிகளிடம் ஏற்படுத்திய மாற்றங்கள், தாக்கங்கள் பற்றியும், வளர்ந்து நிற்கும் சிங்கப்பூரைப் பேசப்பட்ட அளவுக்கு அது எழுந்து நிற்கப் பலியான  அன்றைய மக்களின் வாழ்வியல் முறைகள் பற்றியும் புனைவுகளில் அதிகம் பேசப்படவில்லை.  இவைகளையும் கவனத்தில் கொண்டு இந்தத் தொகுப்பின் படைப்பாளிகள் நகர்ந்தால் அது இன்னும் சிறப்பான படைப்புகளைப் பிரசவிக்கும்,

”அப்பாவின் படகு” ஆரம்பம் மட்டுமே! அது பயணிக்க வேண்டிய தூரத்தை இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் படைப்பாளிகள் தங்களின் தொடர் இயக்கத்தின் வாயிலாகக் கண்டடைவார்கள் என நம்பலாம். 

நன்றி : மலைகள்.காம்

Sunday, 13 December 2015

குழந்தைகளின் மீதான வன்முறை!

மகனும், மகளும் ஒரே பள்ளியில் பயில்கிறார்கள். மகளுக்குச் சொல்லிக் கொடுத்த, கொடுக்கின்ற ஆசிரியர்களே மகனுக்கும் பாட ஆசிரியர்களாக இருக்கிறார்கள். இதனால் மகளின் செயல்பாடுகளோடு மகனின் செயல்பாட்டை ஒப்பீடு செய்து பார்ப்பது அவர்களுக்கு எளிதான விசயமாக அமைந்து விடுகிறது. ஆசிரியர் - பெற்றோர் சந்திப்பிற்குப் பள்ளிக்குச் சென்று திரும்பும் போதெல்லாம் மனைவியின் பேச்சில் இதன் தாக்கம் தெரியும். “உன்னை மாதிரி உன் தம்பி இல்லைஎன மிஸ் சொன்னதாய் மகள் சொல்லும் போதெல்லாம், ”ஏன் உன்னையைப் போல இருக்க வேண்டும்? அப்படி அவன் இருப்பதில் எனக்கு இஷ்டமில்லைஎனச் சொல்லி விட்டு மகனிடம்உனக்கு என்ன முடியுமோ? அதை மட்டும் செய். ஆனால் சரியாகச் செய். அது போதும்என்பேன். இப்படியான ஒப்பீடுகள் அவனை அறியாமலே அவனுக்குள் ஒருவித தாழ்வுணர்ச்சியைக் கொடுத்து விடுமோ? என்ற அச்சத்தில் அதற்கான வழிகளை ஒவ்வொருமுறையும் அடைத்துக் கொண்டே வரும் போதெல்லாம் ஏதோ ஒரு ரூபத்தில் அது புதிதாய் முளைத்து விடுகிறது

பெற்றோராலும், ஆசிரியர்களாலும் செய்யப்படும் இப்படியான ஒப்பீடுகளுக்கும், ஆயுதமற்ற வன்முறையைக் குழந்தைகளின் மீது பிரயோகிப்பதற்கும் பெரிய வித்தியாசமில்லை! குழந்தைகள் மிகச் சரியாகப் பயணிக்க ஒப்பீடுகளின் வழியேயான வழிகாட்டலை விட அவர்களின் சுயத்தின் மீதான வழிகாட்டல்களே தேவை என்பதை பள்ளிகளில் ஆசிரியர்களும், வீடுகளில் பெற்றோரும் எப்பொழுது உணரப்போகிறார்களோ?

Friday, 11 December 2015

அம்மாவென்ற நான்

குடும்பம், குழந்தைகள்  எனத் தன் வாழ்வின் பெருங்காலத்தைக் கடத்தி விட்ட ஒரு பெண் தன் உண்மையான அடையாளத் தேடலைத் தொடங்க வேண்டிய அவசியம் குறித்து உணர்ந்த சூழலைப் பற்றிப் பேசும் கதை “அம்மாவென்ற நான்”. அப்பாவின் படகு என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள இக்கதையின் ஆசிரியர் கிருத்திகா,

வழக்கமான கதைக்கருவை தன்னுடைய மொழி நடையில் படைப்பாக்காமல் புதிய விசயத்தைக் கருவாக்கி இருக்கிறார். திருமணத்திற்குப் பின் ஒரு பெண் அடையும் மாற்றங்களுக்கு அவளுடைய பெயரும் தப்புவதில்லை. இன்னாரின் மனைவி, இன்னாரின் அப்பா, இன்னாரின் பாட்டி என யாரோ ஒருவரின் இணைப்பிலேயே அவளின் வாழ்நாள் முழுக்கக் கழிந்து விடும் துயரத்தைச் சிறுகதைக்குள் கொண்டு வந்து தந்திருக்கும் முயற்சி பாராட்டுக்கு உரியது..

தன் பெயரைப் பேத்தி கேட்டவுடன் என் பெயர் என்ன? தன்னைக் கடைசியாகப் பெயர் சொல்லிக் கூப்பிட்டது யார்? என்ற கேள்விகளோடு அப்பெண் யோசிக்கும் விசயங்கள் நம்மையும் ஒரு முறை வரிசைப்படுத்திப் பார்க்க வைத்து உண்மையான அடையாளங்களைத் தேடிப் பயணப்பட வைக்கின்றது. இப்படித் தன் சுய அனுபவங்களை, வாழ்வியலை கதை முழுக்க இணைத்துப் பார்ப்பதன் மூலம் நாமும் அதில் பங்கேற்பாளனாக மாறும் வாய்ப்புகளை கதையை நிறைத்து நிற்கும் அதிகமானச் சொல்லாடல்கள் தடுத்து விடுகிறது.

கதையின் கடைசிப் பக்கங்களில் கிட்டும் மன உணர்வை அதன் ஆரம்பப் பக்கங்களில் பெற முடியவில்லை. கதை மாந்தரோடு இணைந்து பயணிப்பதில் ஏற்படும் இந்தச் சிக்கலைக் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் தவிர்த்திருக்கலாம்.

தான் நினைக்கின்ற அத்தனை விசயங்களையும் படிப்பவர்களிடம் கடத்தி விட வேண்டும் என்ற நினைப்போடு கதையைச் சொல்லிச் செல்வதில் ஆசிரியர் காட்டிய வேகமும் -

ஆற்றொழுக்காய் முடிவை நோக்கி மட்டுமே நகர்ந்து செல்ல  முனையும் முன் உணர்வும் –

ஒரு நேர்த்தியின்றி சிதறலாய் நிற்கும் காட்சி அமைப்புகளும் கதையின் பலவீனம்.

கதை இயல்பாகவே ஒரு முடிவை எட்டி விட்ட நிலையில் தொடர்ந்து கதையை நீட்டிச் செல்லும் வரிகள் செயலற்ற வார்த்தைகளாகவே இருக்கின்றன, வாசகன் தன் அளவில் எழுதிக் கொள்ள வேண்டியதை ஆசிரியரே செய்ய முனைந்திருப்பது ஏமாற்றம் தருகிறது.

கதைக்கு இன்னும் அணுக்கமான தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். 

“அம்மாவென்ற நான்” அம்மாக்களை மட்டுமல்ல புற, அக அடையாளங்களால் இயற்பெயரைத் தொலைத்து நிற்கும் நம் அத்தனை பேரையும் யோசிக்க வைக்கிறது,

ஆசிரியர்  : கிருத்திகா
      கதை : அம்மாவென்ற நான்
வெளியீடு : தங்கமீன் பதிப்பகம்

Tuesday, 8 December 2015

இடமும் இருப்பும்

இராமநாதனின் எழுத்துலக வாழ்வில் மிக முக்கியமானதொரு தினமாய் அன்றைய நாள் மலர்ந்திருந்தது. அவரின் நாவல் தென்கிழக்காசியாவில் தமிழ் மொழிக்கென வழங்கப்படும் உயரிய விருதுக்குத் தேர்வாகி இருந்தது. விருது வழங்கும் நாளுக்குச் சில வாரங்கள் இருந்த நிலையில் உள்ளூர் இலக்கிய அமைப்புகள் நடத்த ஆரம்பித்திருந்த பாராட்டு விழாக்களும், அதன் பொருட்டு நாளிதழ்களில் வரும் விளம்பரங்களும் தினமும் பார்க்கும் மனிதர்களிடம் கூட அவரைப் புகழுக்குரியவராக மாற்றி இருந்தது உள்ளூர் தொலைக்காட்சியில் வெளியான முழு நேர்காணல் அதை இன்னும் அதிகப்படுத்தி வைத்தது. அஞ்சல் பெட்டியை நிரப்பும் வாழ்த்துகளோடு, மின்னஞ்சலிலும் வாழ்த்துகள் குவிய ஆரம்பித்தன. சில வாரங்களுக்கு முன்பு வரை இவருடையதும், மனைவியுடையதுமான ஒரு ஜோடிச் செருப்புகளும், நடைப்பயிற்சிக்கு அணிந்து செல்லும் சப்பாத்துகளும் கிடக்கும் வாசல் முகப்பை இப்போதெல்லாம் பல ஜோடிச் செருப்புகளும், சப்பாத்துகளும் ஆக்கிரமிப்பதும், விலகுவதுமாய் இருந்தன, 

அத்தகைய ஆக்கிரமிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வழக்க நிலைக்குத் திரும்பியிருந்த சமயத்தில் நடைப்பயிற்சியை முடித்து விட்டு வந்த  இராமநாதன் வாசலில் புதியதாய் இரு ஜோடிச் செருப்புகள் கிடப்பதைக் கண்டு இந்தக் காலை நேரத்தில் யார் வந்திருக்கக்கூடும்? என்ற கேள்வியோடு வீட்டிற்குள் நுழைய சோபாவில் அமர்ந்திருந்த அவரின் மகன் திவாகர் ”வாங்கப்பா” என்றான். அடுக்களையிலிருந்து வெளியே வந்த மருமகள் ”வாழ்த்துகள் மாமா” என்றாள். எதையும் காதில் வாங்காதவராய் ஓட்டிற்குள் தலையை உள்ளிழுத்துக் கொள்ளும் நத்தையைப் போல எதிரில் இருந்த அறைக்குள் தன்னை நுழைத்துக் கொண்டார்.

வார இறுதி நாட்கள் தவிர்த்த மற்ற நாட்களில் விருந்தினர்கள் வந்தால் மட்டுமே ஈரச்சந்தைக்குப் போய் ஊர்வன, பறப்பன, நீந்துவன இவைகளில் ஏதேனும் ஒன்றை இராமநாதன் வாங்கி வருவார், இன்று ஈரச்சந்தைக்குச் சென்று வருவதாகச் சொன்னதும் மகன் மீது அவருக்கு இருக்கும் கோபம் குறையவில்லை என்பதை அவரின் மனைவி புரிந்து கொண்டாள்,

அவர் வெளியேறியதும் தன் அம்மாவின் அருகில் வந்தமர்ந்த திவாகர், “அப்பா எங்களைப் பற்றி ஏதும் கேட்பாராம்மா? கருவுற்றிருக்கும் மருமகளைக் கூடப் பார்த்தும், பார்க்காதது போலப் போய்விட்டாரேம்மா? என்றான்.

உனக்கிட்ட பேசலைங்கிறதை விட உன் பொண்டாட்டிக்கிட்ட பேசலைன்னு தான் இப்ப கவலையாக்கும்? என்றவள் இத்தனை வருசமாக வராமல், ஒரு  போன் செய்து பேசக் கூட மனசில்லாமல் இருந்த உங்களிடம் அவர் வந்து பேசனுமா? நீங்க பேசுனா அவர் பேசனும். போன்னு சொன்னா போயிடனும்னு நினைக்கிறீங்களா? வைராக்கியத்துக்குப் பொறந்த மனுசன்,

என்ன இருந்தாலும் அப்பாவை நீ விட்டுக் கொடுக்காமல் தான் பேசுவேன்னு தெரியும். அதுக்காக வீட்டிற்கு வந்த எங்களை இப்படி அவமானப்படுத்தனுமா? என்று சொன்னதும் சற்றே கோபத்துடன் ”டே நாங்க செய்றது அவமானம்னா? நீ எங்களுக்குச் செய்ததுக்குப் பெயர் என்ன? பழசை எல்லாம் மறக்கனும்னு தான் தள்ளி நிக்கிறோம். பிள்ளைகள் தூக்கி எறிந்தாலும் பெத்தவங்க மனசு அவர்களை வெறுப்பதில்லை. ஆனால் பிள்ளைகள் அப்படியா? பெத்தவங்களை ஈசியா உதறிட்டுப் போயிடுறீங்க” என்று கண்கள் கலங்கச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இராமநாதனின் வருகையை பெருமழைக்கு முந்திய சாரலாய் அவரின் காலணிச் சப்தம் அறிவித்தது..

மீன் துண்டுகள் இருந்த பையை மனைவியிடம் கொடுத்து விட்டு அறைக்குள் வந்தமர்ந்தவரின் மனமானது ஒரு எழுத்தாளன் தன்னைச் சார்ந்தவர்களிடமிருந்து எதிர் கொள்ளும் சங்கடங்களைப் பற்றியும், அப்படியான எதிர்கொள்ளல் தன்  வாழ்க்கையில் நிகழ்த்திய விசித்திரங்கள் குறித்தும் நினைக்கத் தொடங்கியது,   

இராமநாதனின் அப்பா ஆடைகள் விற்பனையகத்தைத் தொடங்கிய போது வியாபாரத்திற்கு உதவியாக இராமநாதனையும் கடையிலேயே வைத்துக் கொண்டார், அதனால் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத போதும் வாசிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் நண்பர்களிடமிருந்தும், பழைய புத்தக வியாபாரிகளிடமிருந்தும் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கித் தன் வாசிப்புக்குத் தீனி போட்டுக் கொண்டே இருந்தார். அந்தத் தீராத வாசிப்பு தனக்குள்ளும் ஒரு எழுத்தாளன் ஒளிந்து கொண்டிருப்பதை இராமநாதனுக்குக் காட்டிக் கொடுத்தது, இதழ்களிலும், சஞ்சிகைகளிலும் தொடர்ந்து படைப்புகள் வெளியானதில் அவரின் பெயரும் இலக்கிய உலகில் கவனம் பெறத் தொடங்கியது. நூற்றுக்கணக்கான புத்தகங்களையும், சஞ்சிகைகளையும், நாளிதழ்களில் இருந்து சேகரித்த குறிப்புகளையும் பொக்கிசங்களைப் போலப் பாதுகாத்து வந்தார். தந்தையின் மறைவுக்குப் பின் தொழிலில் கவனம் செலுத்தியதால் எழுதுவதை ஏறக்குறைய விட்டிருந்த அவரால் வாசிப்பை மட்டும் விட முடியவில்லை.  அதுவே தன்னை உயிர்ப்புடன் வைத்திருப்பதாய் நினைத்தார். சில வருடங்களுக்குப் பின் வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்பால் முதலாளியாக இருந்தவர் தொழிலாளியாக மாறும் நிலை உருவானது,

கப்பல் பட்டறை நிறுவனம் ஒன்றில் கிடைத்த வேலை நிரந்தர வருவாய்க்கு வழி வகுக்க மீண்டும் எழுதுவதில் ஈடுபாடு காட்டத் தொடங்கியவர் உள்ளூர் இலக்கிய நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு தன் இறுப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.. வைப்பு அறையில் காகிதக் குவியல்களாய் கட்டி வைத்திருந்த நூற்றுக்கணக்கான புத்தகப் பொக்கிசங்களை தன்னுடைய அறையிலும், வரவேற்பறையிலும் குடியேற்றி அதுவரையிலும் வெறும் வசிப்பிடமாக மட்டுமே இருந்து வந்த தன் வீட்டைப் புத்தகங்களாலான வீடாக மாற்றினார். பூச்சிகளாலும், கரையான்களாலும் புத்தகங்கள் அங்குமிங்கும் சிதிலமடைந்திருந்த போதும் அவைகளில் பல இன்று விற்பனையில் இல்லாதவைகளாக இருந்ததால் அவைகளைக் கைவிட அவருக்கு மனம் வரவில்லை. அவரின் வீட்டிற்குள் புதிதாய் வருபவர்களுக்கு ஒரு பழைய புத்தகக் கடைக்குள் நுழைந்த பிரமை தோன்றி விடும், புத்தகங்களுடனான புழக்கம் நெருக்கமாக, நெருக்கமாக அவருக்குள்  பூனையைப் போல அவ்வப்போது தலை தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்த எழுத்தின் மீதான ஆசை பாம்பைப் போல சீறி எழ ஆரம்பித்தது,

”எமக்குத் தொழில் எழுத்து” என பாரதி சொன்னதைப் போல தனக்கும் இனி எழுத்து மட்டுமே தொழில் என முடிவு செய்தவர் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்தார். முழுநேர எழுத்தாளராகப் போகிறேன் என்று சொன்னதும் முதல் பிரளயம் அவரின் மனைவியிடமிருந்து கிளம்பியது. அந்தப் பிரளயத்தின் வீச்சைப் பல வருடங்களாகப் பார்த்துப் பழகி இருந்ததால் தன் முடிவிலிருந்து அவர் பின் வாங்கவில்லை.  

அவசிய, அவசரச் செலவுகளுக்குக் கையிருப்பில் இருந்த சேமிப்போடு,  நண்பர்களிடமிருந்து கடனாகப் பெற்ற பணமும் கை கொடுக்க பிரசுரக் கவலை ஏதுமில்லாமல் தொடர்ந்து எழுதிக் குவித்தார். கடல் தாண்டிப் போன பல படைப்புகள் கடலில் போட்ட கல்லாய் கிடந்த போதும் தமிழகத்தில் இருந்த சில பதிப்பகங்கள் அவரின் கட்டுரைகளையும், கதைகளையும் தொகுப்பாகக் கொண்டு வர சம்மதித்திருந்தன, மனைவியும், பிள்ளைகளும் ”குப்பை” என்று வருணிக்கும் தன் புத்தகச் சேமிப்புகளைப் பார்க்கும் போதெல்லாம் அவருக்குள்ளேயே ஒரு கர்வம் பிறக்கத் துவங்கி விடும்,  அதற்கும் ஒருநாள் சோதனை வந்தது.  

நடைப்பயிற்சியை முடித்து விட்டு தமிழ்முரசு நாளேட்டோடு வீட்டிற்குள் வந்தமர்ந்த இராமநாதனிடம் உங்களிடம் கொஞ்சம் பேசனும் என்றாள் அவரின் மனைவி.

இப்படிச் சொல்லும் ஒவ்வொரு முறையும் மகனுடனோ அல்லது ஈசூனில் இருக்கும் மகள் வீட்டிலோ ஏதோ பிரச்சனை என நினைத்துக் கொள்ளலாம். இன்னைக்கு என்ன? என்ற படி நாளிதழ் வாசிப்பில் முனைப்புக்காட்டியவரிடம் திவாகர் ஒரு விசயம் சொன்னான். அவனுக்குத் தெரிஞ்ச நிறுவனத்துல உதவியாளர் வேலை ஒன்னு காலியா இருக்காம். மாசம் மூவாயிரம் வெள்ளி சம்பளமாம் என்றாள்,

”நான் வேலை இல்லாமல் இருக்கேன்னு யாரு சொன்னா? சும்மா இருக்குறவன் தான் வேலைக்குப் போகணும். நான் முழு நேர எழுத்தாளரா வேலை செய்துக்கிட்டு இருக்கேன். அன்னைக்கே உனக்கிட்ட சொன்னேன்ல” என்று சீறினார்.

எழுதுனா என்ன பெரிசா வருமானம் வரப் போகுதுங்கிறான்? அவன் கேட்கிறதுலயும் தப்பில்லை. இப்ப வாங்கி வச்சிருக்குற கடனைக் கட்டவாது நீங்க வேலைக்கு போகலாம்லங்க? எத்தனை காலத்துக்குத் திவாகர் கையை எதிர்பார்த்துக்கிட்டு இருக்க முடியும்? கல்யாணம் பண்ணிக்கிட்டு தனியாகப் போயிட்டான்னா நம்ம நிலைமை என்னாகும்னு யோசிச்சுப் பார்த்தீங்களா?

அப்படி ஒரு நிலைமைக்கு எழுத்து என்னைக் கொண்டு வந்து விடாது. உள்ளூர் இதழ் ஒன்றில் ஆசிரியரா இருக்கச் சொல்லி கேட்டிருக்காங்க, அது ஒத்துவந்தா மாசம் மாசம் ஒரு தொகை கிடைச்சிடும். அதுதவிர, பதிப்பகங்கள், இதழ்கள், இலக்கியக் கூட்டங்கள் மூலமாகவும் வருமானம் வரும். அதுக்கெல்லாம் கொஞ்சக்காலம் ஆகும். உடனே கை நிறைய வருமானம் என்பது எழுத்தாளனுக்கு எப்பவுமே எட்டாக்கனி! எழுத்துங்கிறது நீங்கள் எல்லாம் நினைக்கிற மாதிரி வெறும் பணம் மட்டும் சார்ந்த விசயமில்லை. எழுதுபவன் மனதோடு, வாசிப்பவனின் மனதையும் சுத்திகரிக்கும் மந்திரம். ஆத்ம திருப்தியைத் தரும் விசயம். இதெல்லாம் உனக்கு எங்கே தெரியப் போகுது? என்று சொல்லி மனைவியின் வாயை மூடச் செய்தார்,.

மாலையில் பணி முடிந்து திரும்பிய திவாகர் அப்பாவிடம் பேசினியாம்மா? என்றான்.

”அது அவருக்குச் சரியா வராதாம். அவர் இப்போ எழுத்தாளரா வேலை பார்க்குறாராம். அதுனால வேலைக்குப் போக முடியாதுன்னு சொல்லிட்டாருடா” என்றாள்,

பத்திரிக்கையில நிரந்தர வேலை பார்க்கிறவனுகளே சம்பளம் போதலைன்னு பகுதி நேரமா வேற வேலை பார்த்துக்கிட்டு இருக்கானுக. இவரு எழுதிச் சம்பாதிக்கப் போறாராமாக்கும். இங்குன உட்கார்ந்திருக்கிறதுக்கு அங்குன போய் உட்கார்ந்திருந்தா வருமானம் வரும். வீடும் குப்பை மாதிரி இல்லாமல் இருக்கும் என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “உங்களுக்கெல்லாம் நான் வீட்டுல இருக்குறது பிரச்சனையா? இல்லை எழுதுறது பிரச்சனையா?” என்று கேட்ட படி அறைக் கதவைத் திறந்து கொண்டு இராமநாதன் வெளியே வந்தார்.

பார்த்த வேலையை விட்டுட்டு எழுதுறேன். படிக்கிறேன்னு மூட்டை கட்டிப் போட்டிருந்த குப்பைகளை வீடு முழுக்கப் பரப்பி வச்சிருக்கீங்க, வீட்டுக்கு வரும் என் நண்பர்கள் உங்க வீட்டை ஏன் இவ்வளவு குப்பையா வச்சிருக்கீங்க? என்று கேட்கிறார்கள். போதாக்குறைக்கு பூச்சி, கரையான்னு வீடு முழுக்க ஊறிக்கிட்டுத் தெரியுது. இந்த வயசுல எழுதி என்ன சாதிக்கப்போறீங்க? குடியிருக்குற வீடு மாதிரியா இருக்கு? ஒருநாளைக்கு எல்லாத்தையும் அள்ளி தோம்புல* போடப்போறேன் என அவன் சொன்னதைக் கேட்டுக் கோபம் கொண்ட இராமநாதன் கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனைன்னு சும்மாவா சொல்லி வச்சாங்க? இந்தப் புத்தகங்களோட அருமை தெரிஞ்சா தோம்புல அள்ளிப் போடுவேன்னு சொல்லுவியா? என பதிலுக்கு எகிற ஆரம்பித்தார்.

நான் கழுதைன்னா நீங்க மட்டும் என்னவாம்? என திவாகர் திருப்பிக் கேட்ட அடுத்த விநாடி மின்னல் கீற்றாய் அவன் கண்ணத்தில் ஓங்கி அறைந்த இராமநாதன் இந்த வீடும், என் வாழ்க்கையும் இந்தப் புத்தகங்களோட தான் இருக்கும். இஷ்டம்னா இரு. இல்லைன்னா எங்காவது சேவாக்கு* வீடு பார்த்துட்டு உன் வசதிப்படி இருந்துக்க எனச் சொல்லி விட்டுத் தன் அறைக்குள் சென்று விட்டார்.  

என்னையத் தேடி இனி வராதீங்க. நானும் உங்களிடம் இனி வரமாட்டேன் என உருண்டோடும் கண்ணீரோடு தன்னுடைய உடைமைகளைப் பெட்டியில் அள்ளி வைத்துக் கொண்டிருந்தவன் சமாதானப்படுத்துவதற்காகத் கைகளைப் பிடித்து இழுக்க முயன்ற தன் அம்மாவைக் கோபத்தில் தள்ளி விட்டு விட்டு வெளியேறிச் சென்றான். தடுமாறி அருகில் இருந்த மேசையின் விளிம்பில் சரிந்து விழுந்தவளின் குரலைக் கேட்டு அறையில் இருந்து வெளியே வந்த இராமநாதன் தரை முழுக்க விரவிக் கொண்டிருந்த இரத்தத்தைக் கண்டதும் அவசர ஊர்திக்கும், காவல் துறைக்கும் தகவல் கொடுத்தார்,

அடுத்த அரைமணிநேரத்தில் நண்பர்களோடு கடைத் தொகுதி ஒன்றில் இருந்த திவாகரைக் காவல் துறை அதிகாரிகள் விசாரணைக்காக விலங்கிட்டு அழைத்துச் சென்றனர். நண்பர்கள் முன் தனக்கு விலங்கிடப்பட்டதைக் கண்டு அவனுக்கு அழுகையும், ஆத்திரமும் குமுறிக் கொண்டு வந்தது. வழக்கறிஞராக இருக்கும் தன் காதலியின் அண்ணன் மூலம் குறைந்த பட்சத் தண்டனையோடு வெளியே வந்தவன் ”தனக்கும், தன் பெற்றோருக்கும் இனி எந்த உறவும் இல்லை. அவர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தனக்கு எந்த வித பாத்தியமும் இல்லை” என்று அவர்களின் புகைப்படத்தோடு நாளிதழில் மறுநாளே விளம்பரம் கொடுத்தான்,

பிள்ளையை உத்தமனாகவும், தன்னைக் கல் நெஞ்சக்காரனாகவும் ஏசும் மனைவி மற்றும் மகள், மருமகனின் பேச்சுகளால் கடும் மன வருத்தம் கொண்டிருந்த இராமநாதன் நாளிதழில் இப்படி ஒரு விளம்பரம் கொடுத்து தன் மகன் தனக்கு மிகப்பெரிய தண்டனையைத் தந்து விட்டதாக நினைத்தார். இதுவரைக்கும் உங்களைப் பார்த்துக் கொள்ள ஒருத்தன் இருந்தான். அவனையும் போலீசுல பிடிச்சுக் கொடுத்து விரட்டி விட்டுட்டீங்க. இனி யாரு உங்களைப் பார்த்துக்கப் போறா? என்று கேட்ட மகள் எல்லாத்துக்கும் இந்தக் ”குப்பைகள்” தான் காரணம் என்றவாறு வரவேற்பறை அடுக்கில் இருந்த புத்தகங்களைத் தரையில் சரித்துப் போட்டாள், அதுவரை பொறுமையாக இருந்த இராமநாதன், ”வாயை மூடு. அப்பனுக்கே புத்தி சொல்றதா நினைப்பா? எங்களைக் கவனித்துக்கொள்ள எவர் தயவும் வேண்டியதில்லை. உன் வீட்டுக்குக் கிளம்பு” என்றதும் மகளும், மருமகனும் கோபத்தோடு அங்கிருந்து வெளியேறினர்.

இந்த நிகழ்வுக்குப் பின் இராமநாதனுக்கு மகன், மகள் இருவரிடமுமான தொடர்பு முழுவதும் அறுந்து போனது, மனைவியும் தேவைக்குப் பேசும் வேலைக்காரி போல மாறியிருந்தாள். புத்தகங்கள் மட்டுமே இராமநாதனின் புகலிடமாகிப் போனது. நேரம் போவதே தெரியாமல் வாசிப்பதிலும், பதிப்பகங்களுக்குப் புதிய நூல்களை எழுதிக் கொடுப்பதிலும் பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டு வந்தார். ஒரு நாள் நடைப்பயிற்சியில் இருந்தவரிடம் அவருடைய நண்பர் திவாகருக்கும், உங்களுக்கும் என்ன பிரச்சனை? தன் கல்யாணப்பத்திரிக்கையை நேற்று வீட்டுக்கு கொண்டு வந்தவன் எனக்கும், என் பெற்றோருக்குமான உறவு எப்பொழுதோ செத்துப் போய்விட்டதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசினான். கேட்கவே சங்கடமாக இருந்தது என்று சொன்னதைக் கேட்டுக் குறுகிப் போனார், பிள்ளையின் கல்யாணச் செய்தியை இன்னொருவர் மூலம் அறிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் தன் துயரத்தை மனைவியிடம் பகிர்ந்து கொண்ட போது ”எனக்கு முன்னமே தெரியும். மகள் போனில் சொன்னா, அப்பா, அம்மான்னு சொல்லிக்கிட்டு யாரும் வரக்கூடாது. நீயும், மச்சானும் மட்டும் வந்தா போதும். உங்க இரண்டு பேரின் பெயரை மட்டும் தான் பத்திரிக்கையில் போட்டிருக்கேன்னு சொல்லிட்டானாம். பெத்த பிள்ளைக்கும், கட்டுன புருசனுக்கும் இடையில மாட்டிக்கிட்ட எனக்கு எந்தக் கொடுப்பினையும் இல்லாமல் போச்சு. அப்படி என்ன  இருக்குன்னு இந்தப் புத்தகங்களைக் கட்டிக்கிட்டு அழுறீங்க? வெறும் காகிதத்துக்குக் கொடுக்கும் மரியாதையைப் பெத்த பிள்ளைகளின் பேச்சுக்குக் கொடுக்க உங்களுக்கு மனசு வரல. அவன் இப்படிச் செஞ்சது தப்பில்லையோன்னு தோனுது” என்று சொல்லி விட்டு விருட்டென்று எழுந்து சென்ற மனைவியைப் பார்த்த படி இருந்தவரின் மனமானது வேதனையின் குரூரத்தில் விரவி நின்றது.

வீட்டின் சுவர்களை ஒட்டி ஆளுயர அடுக்குகளில் இருந்த புத்தகங்களை ஒரு முறை நோட்டமிட்டார். இவையெல்லாம் வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதங்களா? சரித்திரங்களையும், பல தனி மனிதர்களின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்ட இந்த ஆயுதங்களைக் ”குப்பைகள்” என இவர்களால் எப்படிச் சொல்ல முடிகிறது, எழுத்தாளனுக்குப் புத்தகங்கள் தான் மூலதனம். எல்லா நேரங்களிலும் நூலகங்களிலிருந்து மட்டுமே அவனால் அதைப் பெற முடியாத நிலையில் சில நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டியதும், பராமரித்து வருவதும் கட்டாயம். தனக்கான கச்சாப்பொருளாக இருக்கும் புத்தகங்களைத் தொலைத்து விட்டு எப்படி ஒரு எழுத்தாளனால் இயங்க முடியும்? வாசிக்கும் இடங்களாக நூலகங்களைப் பார்ப்பவர்கள் அந்த நூலகம் வீட்டில் இருப்பதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள், இவர்களுக்கு எப்படி இதைப் புரிய வைப்பது? என நினைத்தவர் புரிய வைத்துத் தான் என்னவாகப் போகிறது? எனத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டார், தன்னைப் புதுப்பிக்க உதவிய நூல்களே இப்பொழுது பாரமாக மாறி விட்டதைப் போல அவருக்குத் தோன்றியது.

அகம், புறம் சார்ந்து எதிர்கொள்ளும் இப்படியான துயரங்களைக் கடக்க முடியாமல் வாழ்க்கையையும், தன்னையும் தொலைத்துக் கொண்ட படைப்பாளிகளின் வாழ்வைத் தன் நினைவிலிருந்து மீட்டுக் கொண்டிருந்த இராமநாதனின் சிந்தனையை வேலையா இருக்கீங்களா? என்ற மனைவியின் குரல் நிகழ்காலத்திற்குத் திருப்பியது. ஏதோ சொல்லத் தயங்கி நின்றவளிடம் என்ன விசயம்? என்றார்.

நம்ம திவாகர் அவன் வீட்டோட நம்மளையும் வந்து தங்கிக்கச் சொல்றான். இந்தப் புத்தகங்களையும் அங்கேயே கொண்டு போயிடலாங்கிறான். மருமகளும் வரச் சொல்லிக் கூப்பிடுகிறாள்.. நாமளும் ஏன் இங்கே தனியாக் கிடக்கனும், வீட்டை சேவாக்குக் கொடுத்துட்டு பிள்ளையோட சேர்ந்து இருக்கலாம்ல என்றாள்.

இத்தனை வருசம் தனித்திருந்த நமக்கு இனியும் இருக்க முடியாதா?  விருது கிடைக்காமல் போயிருந்தால் இந்த வீட்டு முகவரி கூட அவர்களுக்கு ஞாபகத்தில் வந்திருக்காது. பெத்தவங்களே இல்லைன்னு போனவனுக்கு இப்ப மட்டும் அக்கறை கொள்ளும் ஞானதோயம் எங்கே இருந்து வந்துச்சு? ஒரு நல்ல வேலைக்காரியையும், விருதின் புகழ் வெளிச்சத்தையும் எதிர்பார்த்து வந்திருக்கும் இந்தத் திடீர் பிரியத்தையும், அக்கறையையும் நம்பி நானும், புத்தகங்களாலான இந்த வீடும் தன் சுயத்தை இழக்கத் தயாராய் இல்லை. பெத்தவங்களுக்குக் கிடைக்கும் பலனை அனுபவிக்கும் கொடுப்பினை எங்களுக்குத் தேவையில்லைன்னு சொல்லிட்டுப் போனவர்களிடம் இதைப் பற்றிப் பேச இனி எதுவுமில்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை என்றவர் மின்னஞ்சலில் வந்திருந்த புதிய வாழ்த்துக்குப் பதில் எழுத ஆரம்பித்தார், திவாகரிடம் இதை எப்படிச் சொல்வது? என்ற தயக்கத்தோடு அறையிலிருந்து வெளியே வந்தவள் வீட்டை விட்டு வெளியேறத் தயாரானவனை இம்முறை தடுக்கவோ, சமாதானம் செய்யவோ முயலவில்லை, வாசல் வழக்க நிலைக்குத் திரும்ப ஆயத்தமானது. 

நன்றி : தி சிராங்கூன் டைம்ஸ்