Thursday, 31 March 2016

தேவதைகளின் அட்டகாசம் - 3

பள்ளியில் திருப்புதல் தேர்வு (MIDTERM EXAM) ஆரம்பமாகி இருந்தது. முதல் நாள் தேர்வு தமிழும், இந்தியும்! (என்னே ஒரு காம்பினேசன்). தேர்வு எழுதிவிட்டு வந்த மகளிடம் தமிழ் தேர்வு எப்படி இருந்தது? என்றேன். நல்லா எழுதி இருக்கேன். ஆனால் நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும்னு நினைக்கிறேன் என்றவள், "டாடி..... தமிழ்ல அருஞ்சொற்பொருள் தானே ஈசி (EASE). கஷ்டமானதை எல்லாம் எழுதிட்டு ஈசியானதை எழுதாமல் விட்டுட்டு வந்திருக்கான் என மகன் தேர்வு எழுதிய விதத்தைப் பற்றிச் சொன்னாள். காரணம் தெரிந்து கொள்ளலாமே என மகனை அழைத்துக் கேட்டேன். அவனோ, ”டாடி..... இலக்கியா பிள்ளைக்கு ஈசின்னா எனக்கும் ஈசியா இருக்குமா? எல்லாமே ஈசின்னு அது சொல்லுது. எனக்குத் தெரியலைல. அதான் எழுதாமல் விட்டு விட்டேன்என்றான். அதானே...எல்லாருக்கும் அருஞ்சொற்பொருள் ஈசியா இருக்கனுமா என்ன?


நீயும்தம்பியும் செய்ற விசயங்களுக்கெல்லாம் நான் சப்போர்ட் பண்ணிக்கிட்டே இருக்கேன்ஒருநாள் இல்ல ஒருநாள் கடுப்பாகி உங்க அம்மா எனக்குச் சோறு போடாமல் போகப் போறா பாரேன்.

டோண்ட் ஒரி டாடி…..நான் சோறு போடுகிறேன்


”அட்வான்ஸ் ஹேப்பி வாலண்டைன்ஸ் டே” டாடி.
எனக்கு நீ என்ன வாங்கித் தரப் போற?
அம்மாவுக்கு நீங்க முதலில் ஏதாவது வாங்கிக் குடுங்க”!
குட்நைட்”.


அப்பாவை உங்களுக்குத் தந்துடுறேன்
எவ்வளவுக்கு?
ஃப்ரியாவே தாரேன்வச்சுக்கங்க.


பள்ளியில் இருந்து திரும்பிய மகள் சாப்பிட்டுக் கொண்டே அலைபேசியில் பேசினாள். ஒன்னு சாப்பிடு, இல்லை பேசு என்றேன். மனைவி சொன்னாள் அவ பேசி கதையடிச்சிட்டு அப்புறம் சாப்பிட ஆரம்பிச்சா டியூசனுக்கு எப்பப் போறது? பேசிக்கிட்டே சாப்பிடட்டும் அப்பத்தான் சீக்கிரமா கிளம்புவா.....குழந்தைகள் உலகத்துக்கு வந்த சாபக்கேடு இந்த வாழ்வியல் முறை!

Wednesday, 30 March 2016

சலனக்கிரீடம்


மாறுபட்ட சந்தர்ப்பங்களில், மனநிலைகளில், தாக்கங்களில், வாழ்வியல் நெருக்கடிகளில் என்னைச் சலனப்படுத்திய விசயங்களே கவிதைகளாக இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இக்கவிதைகள் எனக்கு மட்டுமேயான அனுபவங்களாக இல்லாமல் இருப்பதும்,  உங்களின் அனுபவங்களை இந்தக் கவிதைகளின் வழியாக நீங்களும் நீட்டிப் பார்க்க முடியும் என்பதும் இத்தொகுப்பின் பலம் என நினைக்கிறேன். 

இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கவிதைகள் அனைத்தும் பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் வெளியானவைகள். 


இங்கே சொடுக்கி நூலைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Monday, 28 March 2016

ஆட்டத்தை ஆரம்பியுங்கள்!

நாம் ஒவ்வொருவருமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என விரும்புகிறோம். வெற்றியாளராக வலம் வர ஆசைப்படுகிறோம். இவ்விரண்டுமோ அல்லது இவ்விரண்டில் ஒன்றோ நிகழ வேண்டுமானால் அதற்கு “இலக்கு” என்ற ஒன்று அவசியம் வேண்டும். அந்த ஒன்றை நோக்கி செயல் படுகின்ற போது தான் வெற்று வாழ்க்கை வெற்றி வாழ்க்கையாக மாறுகின்றது. “இலட்சியத்துக்காக பாடுபடாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை அல்ல” என்கிறார் மாஜினி.

இலக்கு குறித்து நம்மில் பலருக்கும் ஒரு தெளிவு இருப்பதில்லை. அது ஏதோ தனிப்பட்டவர்களுக்கும், ஆசீர்வதிக்கப்பட்டவர்களுக்கும் உரியதாய் எண்ணிக் கொள்கின்றனர். விண்ணில் ஏவுகணை ஏவுவதும், புதிய கண்டுபிடிப்புகளை செய்வதும், தன் ஆற்றலுக்கும், திறமைக்கும் மீறிய விசயங்களைச் செய்து காட்டுவதும் மட்டுமே இலக்கு என வரையறையற்ற இலக்குகளை குறிப்பிட்ட வரையறைகளுக்குள் வைக்கப் பழகி விட்டதன் விளைவாக நாம் வாழும் வாழ்க்கையை மிகச் சாதாரணமானதாகவும், மகிழ்ச்சியற்றதாகவும் ஆக்கிக் கொள்கின்றோம்.

எல்லைகளற்ற பரப்பில் நமக்கு நாமே, உங்களுக்கு நீங்களே உருவாக்கிக் கொள்கின்ற எல்லை தான் இலக்கு! ஓட்டப்பந்தயத்தில் ஓடுகின்ற ஒருவனுக்கு எப்படி  ஒரு எல்லைக்கோடு அவசியமோ அதுபோல வாழ்க்கை என்ற ஓட்டத்தில் வெற்றி, மகிழ்ச்சி, நிறைவு இவைகளைப் பெறுவதற்கும் ஒரு எல்லைக்கோடு அவசியம்.

உங்களின் ஒட்டு மொத்த செயல்பாட்டையும் இலக்கை நோக்கியே வைத்திருக்கப் பழகுங்கள். இலக்கை நிர்ணயிக்கும் முன் மற்றவர்களிடமிருந்து யோசனைகளைப் பெறுங்கள். ஆனால், முடிவை நீங்கள் மட்டுமே எடுங்கள். ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டேன்……….எனக்கு அப்பவே தோணுச்சு………அவன் சொன்னான்னு செஞ்சது தான் நான் செய்த முட்டாள் தனம்….இப்படி சிலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள் அல்லது நீங்களே கூட புலம்பியிருப்பீர்கள். இப்படியான புலம்பல்களுக்கு அடுத்தவர்களின் யோசனைகளைக் கேட்டு உருவாக்கிக் கொண்ட தெளிவற்ற இலக்குகள் தான் காரணம்!

நீங்கள் உருவாக்கிக் கொண்ட இலக்கை நோக்கி செயல்படப்போவது நீங்கள் தான் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். பிரபல அமெரிக்க தன்னம்பிக்கை எழுத்தாளர் நெப்போலியன் ஹில், "வெற்றிக்காக ஒரு மனிதன் முழு நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருந்தால் அது அவனுக்கு கட்டாயம் கிடைக்கும்” என்கிறார். 

உங்களுடைய இலக்கினை உருவாக்கும் போது கீழ்கண்ட விசயங்களையும் கவனத்தில் கொள்ளுங்கள். அது உங்களின் இலக்கு வெற்றி இலக்காக அமைவதற்கான சாத்தியங்களை அதிகப்படுத்தித் தரும்
1. உங்களின் இலக்கு உங்களுக்கு விருப்பமானதில் இருக்கிறதா?
2. உங்களின் ஆற்றலுக்கும், திறன்களுக்கும் உட்பட்டு இருக்கிறதா?
3. தெளிவாக, மிகச் சரியான வரையறைகளுடன் இருக்கிறதா?
4. சவாலானதாகவும், சாத்தியமாகக்கூடிய அளவிலும் இருக்கிறதா?
5. அடையும் வழிமுறைகளைக் கொண்டதாக இருக்கிறதா?
6. விவரித்து எழுத, பேசக்கூடியதாக இருக்கிறதா?
7. குறிப்பிட்ட கால அளவைக் கொண்டிருக்கிறதா?
என்ற இந்த ஏழு கேள்விகளின் வழி வெற்றிக்கான, மகிழ்ச்சிக்கான உங்களின் இலக்கை அமையுங்கள். இப்படியான வழிமுறைகளோடு இலக்கை உருவாக்கி விட்டால் மட்டும் போதுமா? அந்த இலக்கை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும். அதற்கு அந்த இலக்கை எட்ட வேண்டும். 

ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவன் அதன் எல்லைக்கோட்டை அடையும் போது தான் அவனாலும், மற்றவர்களாலும் வெற்றியாக கொண்டாடப்படுகிறது. அதுபோல வாழ்க்கை என்ற ஓட்டப்பந்தயத்தில் ஓடுகின்ற நீங்கள் இலக்கு என்ற எல்லைக்கோட்டை எட்டும் போது தான் அது வெற்றியாக கொண்டாடப்படும். இலக்கை எட்டிப்பிடிப்பதற்கு ”திட்டமிடுதல்” என்பது அவசியம். மிகச் சிறந்த திட்டமிடலின் மூலம் தான் உங்களுடைய இலக்கை மிகச் சரியான வழிகளில் அடைய முடியும். ஒரே நாளில் எதுவும் சாத்தியமாகி விடாது. 

திட்டமிடுவதற்கு முன் நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் இலக்கின் கால அளவைப் பகுதி பகுதியாக உடையுங்கள். உதாரணமாக, ஐந்து ஆண்டுகளில் உங்களின் இலக்கு எட்டப்படுவதாக இருப்பின் ஐந்தாண்டுக்குமாகத் திட்டமிடாமல் அவைகளை ஐந்து தனித்தனி ஆண்டுகளாக பிரித்துத் திட்டமிடுங்கள். “ரோம் நகரம் ஒரே நாளில் கட்டப்படவில்லை” என்பதன் அர்த்தம் உணர்ந்து திட்டமிடுங்கள். அப்படித் திட்டமிடும் போது - 

1.ஒவ்வொரு ஆண்டும் செய்ய வேண்டியவைகள் என்ன?
2.அதைச் செய்வதற்கு சாத்தியமான வழிமுறைகள் என்ன?
3.அந்த வேலைகளைச் செய்வதில் இருக்கும் பிரச்சனைகள் என்ன? அதை எப்படி எதிர்கொள்வது?
4.தொழில் முறை ஆலோசகர்களின் ஆலோசனை தேவையா?
5.பொருளாதார வளம் போதுமான அளவு உள்ளதா? இல்லையெனில் அதைத் தேவைக்கேற்பத் திரட்டுவதற்கான வழிமுறைகள் என்ன?
6.பிறருடைய உதவிகள் தேவைப்படுமா? தேவையெனில் அதை யாரிடமிருந்து பெறுவது?
7.ஒருவேளை எதிர்பார்த்தவர்களிடமிருந்து உதவிகள் கிடைக்காத நிலையில் அதற்குரிய மாற்று வழிகள் என்ன?
8.தனிப்பட்ட முயற்சி போதுமா? அல்லது கூட்டு முயற்சி வேண்டுமா? கூட்டு முயற்சி எனில் அதை எவ்வளவு காலத்திற்குத் தொடர்வது?
9.இலக்கை நோக்கிய செயல்பாட்டிற்காக ஒரு நாளில் செலவழிக்க வேண்டிய நேரம் எவ்வளவு? அந்த நேரத்தை எப்படி ஒதுக்குவது?
10.முதலாண்டுக்குரிய இலக்கின் அளவை எட்டிய பின் அடுத்த ஆண்டிற்கான வேலையை உடனே தொடங்க வேண்டுமா? இல்லையெனில் எவ்வளவு காலம் கழித்து ஆரம்பிப்பது?
11.இந்த வழிமுறைகளைப் பின்பற்றிச் செல்வது ஐந்தாண்டுகளில் அடையப் போகும் என்னுடைய இலக்கிற்கு எந்த அளவில் பயன் தரக் கூடியதாக இருக்கும்? – போன்ற கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். அதன் வழி உங்களுக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு பதிலும் மிகச்சிறப்பான திட்டமிடலுக்கும் அதன்வழி நீங்கள் சிறப்பாக செயல்படவும் உதவும். தெளிவான இலக்கு, மிகச்சரியான திட்டமிடல் இரண்டும் இருந்தால் போதும். அது மகிழ்ச்சியோடு கூடிய வெற்றிக்கான உங்களின் முதல் அகல் விளக்கை ஏற்றி வைக்கும்.

Sunday, 27 March 2016

விரியும் வனம்

வாசிப்பு எதைத் தரும்? எனக் கேட்டால் அதற்கு அறுதியிட்ட பதிலைச் சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்குள்ளும் அது கிளர்த்தும் விசயங்கள் ஒவ்வொரு விதமாய் இருக்கும். அப்படி பல்வேறு காலகட்டங்களில் நான் வாசித்த நூல்கள் எனக்குள் கிளர்த்திய எண்ணங்களே இத்தொகுப்பில் கட்டுரைகளாக இடம் பெற்றுள்ளன. 

பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இக்கட்டுரைகள் வெளிவந்திருந்த போதும் சம்பந்தப்பட்ட நூல்களை இன்னும் சிலருக்குக் கொண்டு செலுத்த வேண்டும் என்பதே மின்னூலாக்கம் செய்வதற்கான தூண்டுதலாக அமைந்தது.


இங்கே சொடுக்கி நூலைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Friday, 25 March 2016

எப்பொழுதும்!

உன் மெளனத்தால்
என் சப்தங்களைத் தூண்டுகிறாய்.
என் சப்தங்களோ
உன் மெளனத்தை
துண்டாட முனைகின்றன.
தூண்டலுக்கும், துண்டாடலுக்குமான
முடிவற்ற முரண்களோடு
அச்ச உணர்வற்று நகரும்
உனக்கும், எனக்குமான
நம் பொழுதுகள்
எப்பொழுதும் ஒழித்து வைத்திருக்கிறது
நாம் சேர்ந்திருப்பதற்கான
ஏதோ ஒரு சூட்சுமத்தை!

நன்றி : கல்கி வார இதழ்

Monday, 21 March 2016

Please do something……. save me


Ur Abi teach Karate to me. Force to me to learn……Please do something….save me இப்படியான குறுஞ்செய்திகள் வழக்கமாக மகளிடமிருந்து வரும். நேற்று மனைவியிடமிருந்து வந்தது.

ஆரம்பிச்சுட்டானா? என நினைத்துக் கொண்டு மகனை அழைத்து ”டே….இப்ப இலக்கியா பிள்ளைய விட்டுட்டு உங்க அம்மாவ வம்புக்கு இழுத்துக்கிட்டு இருக்கியா? எனக்கு SMS அனுப்பி இருக்கா” என்றேன்.

வம்பெல்லாம் இழுக்கல டாடி…கராத்தேக்கு தான் வரச் சொன்னேன்.

இனிமே அவ கராத்தே கத்துக்கிட்டு என்னடா செய்யப் போறா? அவதான் வரலைன்னு சொல்றால.

நான் எனக்காக மட்டும் கூப்பிடல டாடி. அம்மாவுக்கும் சேர்த்து தான்

அம்மாவுக்கும் சேர்த்தா?

ஆமாம். நான் கராத்தே சொல்லிக் கொடுக்கும் போது எனக்கு ஸ்டெப்ஸ் எல்லாம் ஞாபகம் வந்துடும். அதேமாதிரி அம்மா கத்துக்கும் போது இப்ப குண்டா இருக்கிற மாதிரி இல்லாம ஒல்லியா ஆகிடுவாங்க. அதுனால தான் கராத்தே சொல்லித் தாரேன்னு கூப்பிட்டேன். நீங்க எனக்கிட்ட கராத்தேக்கு டெய்லி வரச் சொல்லி அம்மாக்கிட்ட சொல்லுங்க.

அவன் சொல்றதும் சரியா தானே இருக்கு என்று மனைவியிடம். சொன்னதற்கு அப்பாவுக்கும், மகனுக்கும் என்னைய ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கனும். உனக்கிட்ட சொன்னேன் பாரு என்றாள் கோபமாக. இப்படியெல்லாமா சிக்கல் வரணும்?

Friday, 18 March 2016

கவிதை பிறந்த கணம்

இணைய இதழ்களில் எழுதத் தொடங்கிய பின் புதிய, புதிய இணைய இதழ்களைத் தேடுவதும், வாசிப்பதும் வழக்கமாகிப் போனது. அப்படியான சந்தர்ப்பம் ஒன்றில் கவிஞர். ரியாஸ் குரானா அவர்களின் முகநூல் பக்கம் வழியாக “பதாகை” இதழ் பற்றி அறிந்தேன். இதழை வாசிக்க, வாசிக்க வாசிப்பின் வழி நான் அறிந்திடாத பக்கங்களை அறிந்து கொள்ள முடிந்தது. வாசிப்பின் வழியாகப் பயணிக்க வேண்டிய திசைகளையும் எனக்கு மெலிதாய் சுட்டியது. ஆளுமைகள் குறித்தான அதன் சிறப்பிதழ்கள் அவர்கள் குறித்து இன்னும் அறிந்து கொள்ள உதவின, ஒரு படைப்பாளியாய் நானும் அந்த இதழில் பங்கு கொள்ள முயன்றதில் வழக்கம் போல தோல்விகளே மிஞ்சியது. இந்த வருடம்  ஒரு கவிதை வழியே அந்த முயற்சி வெற்றி பெற்றது, ஒரு சிக்கலான மனநிலையில் எழுந்த மன உணர்வை கவிதையாக்கி அனுப்பிய பின் இதழில் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. இந்தக் கவிதை எழுந்த சூழலைத் தர முடியுமா? என்று கேட்டிருந்தார்கள். இதழுக்கு எழுதி அனுப்பினேன். அதுவும் கவிதையோடு பிரசுரமானது, கவிதையைப் புரிந்து கொள்ள பலருக்கும் உதவிய அந்தச் சூழல் -
புலம் பெயர்ந்து வேலைக்காகச் செல்லும் வாழ்க்கை  என்பது மாயக் கூண்டுக்குள் நுழைவது மாதிரி. ஒரு வருடமோ இரண்டு வருடமோ மட்டும் அந்த வாழ்க்கையை வாழ்ந்து கொஞ்சம் சம்பாதித்து வந்து ஊரில் குடும்பத்தோடு இருந்து விட வேண்டும் என்றும், தான் செய்ய நினைத்ததைச் செய்து விட வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டு விமானம் ஏறுபவர்கள் அதன் பின் தன் வாழ்நாளின் பாதியை அப்படியான வாழ்க்கை முறையிலேயே வாழ்ந்து தீர்க்க வேண்டியதாகிப் போவது மிகப் பெரிய துயரம்!

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நுனிப்புல்லாய் சில வசதிகளை அந்த வாழ்க்கை கொடுத்திருப்பதாய் தெரிந்தாலும் இளமையின் பெரும்பகுதியைத் தொலைத்து விட்ட சூழலில் வேலை இல்லை என தான் வேலை செய்யும் நிறுவனங்களால் திடுமென அவர்கள் ஊருக்குத் திருப்பி அனுப்பப்படும் சூழலில் அவர்கள் படும் மனவேதனையும், மனக்குழப்பங்களும் சொல்லி மாளாதவைகள்!

ஆரம்பகாலத்தில் தான் செய்து பார்க்க நினைத்த முயற்சிகள், தொழில்கள் எல்லாம் கால ஓட்டத்தில் காலத்திற்கு ஒவ்வாதவைகளாகவும், போட்டித் தன்மை மிக்கதாகவும் மாறி விட்ட நிலையில் எழும் அச்ச உணர்வும், குடும்பத்தின் தேவைகள், குழந்தைகளின் கல்வி போன்ற கட்டாயப் பொருளாதாரத் தேவைகளும் அவர்களை மீண்டும் அதே வாழ்க்கை முறைக்கே பயணப் பட வைக்கிறது.

என்ன செய்வது? எனத் தெரியாத குழப்ப நிலையில் தற்காலிகத் தீர்வாய் இப்படி வாழ்நாள் முழுக்கப் பயணிப்பவர்களின் மனமானது அவர்கள் தங்களின் ஆரம்பகாலத்தில் செய்ய நினைத்த விசயங்கள், தொழில்கள் பற்றிய சிந்தனைகளைத் தாங்கி. குடும்பத்தோடு தொடர்ந்து இருக்க முடியாத துயருடனே நீள்கிறது,

இந்த நாட்டில்  இன்னும் இரண்டு வருடம் மட்டும் தான் இருப்பேன், அதன் பின் ஊருக்குச் சென்று குடும்பத்தோடு இருந்து நினைத்த தொழிலை, விசயத்தைச் செய்வேன் என ஒவ்வொரு பயணத்தின் போதும் அவர்கள் நினைக்கும் எண்ணங்கள் அனைத்துமே கானல் நீர் போல வெறும் நினைப்பாக மட்டுமே அமைந்து விடுகிறது, பொருளீட்டல் சார்ந்த புலம் பெயர்தலின் ஊடாக ஒரு பெண்டுலம் ஆரம்பத்திற்கும், முடிவுக்குமாய் நிற்காது அசைவதைப் போல அவர்களின் மனம் வாழ்நாள் முழுக்க இரண்டு நிலைகளுக்கும் அசைந்த படியே இருக்கிறது.

அவர்களில் ஒருவராய் நானும் இருக்கிறேன். 

பெண்டுல” மனசு
-----------------------------------
தவிர்த்திருக்கக் கூடிய
சாத்தியங்கள் இருந்தும்
தர்க்க ரீதியாய் ஏற்றுக் கொண்ட
சுவடுகளில் குதித்து ஓடுகிறது காலம்.

ஆண்டுகளைத் தின்று
செரித்துப் புதைந்த பாதத்தின்
ஆறாம் விரல்களின் வெற்றிடத்தை
மறைத்து நிற்கின்றன கரையோரப் புற்கள்.

குழுமைக்குள் விட்டு வந்தவைகளில்
மக்கி உளுத்தது போக
உள்ளங்கைகளில் உறைந்தவைகள்
காலத்திற்கு ஒவ்வாதவைகளாகின.

தன் வேரடியின் மீது
தடம் பதித்த பேருந்தின் கூரையில்
கிளை உதறிய மலராய்
இன்னொரு வேரடி தேடி நீள்கிறது பயணம்.
  
புலப்பட்டு பயணித்த புள்ளிக்கும்
கானலாகி எழும் புள்ளிக்கும் இடையே
முட்களின் முனங்களோடு நகரும்
பெண்டுலமாய் ஆடிக் கொண்டிருக்கிறது மனசு!

நன்றி : பதாகை.காம்

Tuesday, 15 March 2016

ஒரு சராசரி குடிமகனின் கவலை!

மல்லையா அரசாங்கத்திற்கும், வங்கிகளுக்கும் வைத்த ஆப்பை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் வங்கிகள் சார்ந்து ஏதாவது ஒரு அனுபவம் கட்டாயம் இருக்கும். அப்படியான ஒரு அனுபவம் எனக்கும் உண்டு.

நண்பன் ஆவின் பால் ஏஜெண்ட் எடுத்திருந்தான். அது சார்ந்த விரிவாக்கத்திற்காகவும், சுய தொழில் ஒன்றை ஆரம்பிக்கும் நோக்கத்துடனும் சில வருடங்களுக்கு முன் அவனும், நானும் எங்கள் ஊரில் இருந்த ஒரு அரசாங்க வங்கிக் கிளையை அணுகினோம். இதற்கு முன் அதே வங்கியில் சில சுயதொழில் திட்டங்களின் கீழ் அவன் கடன் (லோன்) வாங்கி முறையாகச் செலுத்தி இருந்தான். எங்கள் இருவருக்குமே அந்த வங்கியில் சேமிப்புக் கணக்கும் இருக்கிறது. இருவருக்கும் வேறு எந்த வங்கிகளிலும், கடன் நிறுவனங்களிடமும் லோன் நிலுவைகள் இல்லை. தவிர, இருவரும் பட்டதாரிகள் என்பதால் எங்களின் கல்லூரிச் சான்றிதழ்கள், எங்கள் இருவர் பெயரிலும் இருந்த L.I.C.பத்திரங்கள் ஆகியவைகளை ஈடாகத் தருகிறோம், (L.I.C.பத்திரங்களுக்கான பிரிமியத்தை தவணைத் தேதி தாண்டாமல் கட்டிவந்திருந்தோம். அதில் லோன் எடுக்குமளவுக்குப் பிரிமியம் செலுத்தி இருந்த போதும் லோன் எதுவும் எடுத்திருக்கவில்லை) என்று விரிவான எங்கள் தரப்புச் சாத்தியங்களைச் சொல்லி அரசு திட்டங்களின் கீழ் எங்களுக்குக் குறைந்த பட்சத் தொகையைக்(!) கடனாகத் தர ஏதும் வாய்ப்பிருக்கிறதா? என்று கேட்டோம். முடியுமா? என்று கேட்கவில்லை. வாய்ப்பிருக்கிறதா? என்று மட்டுமே கேட்டோம். அவரோ, “அதெல்லாம் சாத்தியமில்லை. வேுறு எதுவும்....”என்று சிம்பிளாக சொல்லி விட்டு ஒரு பார்வை பார்த்தார். உட்காரக் கூடச் சொல்லவில்லை. உடனே என் நண்பனிடம்,மாப்ள இவனுக வேலைக்கு ஆக மாட்டானுக. கிளம்பு போகலாம்” என்றேன். அதன் பின் பொருளாதார நெருக்கடிகளால் வேலைக்கான அடியாட்களாக ஆளுக்கொரு தேசம் சென்றோம். இன்றும் அவனின் அந்த பால் பூத் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இருவருக்கும் அந்த வங்கியில் சேமிப்புக் கணக்கும் இருக்கிறது

ஒரு வேளை லோன் அன்றைக்குக் கிடைத்தி்ருந்தால் அதைக் கட்ட வேண்டும்(!) என்ற கட்டாயத்தின் பேரிலாவது போராடிக் காலூன்ற முயன்றிருப்போம். விரும்பிய தொழிலைச் செய்து பார்த்திருப்போம். பள்ளி காலம் தொடங்கிய எங்களின் நட்பில் இன்னும் சில சுவராசியங்கள் இருந்திருக்கும் என நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். அரசுத் திட்டத்தின் கீழ் கடன் பெறக் கூட தகுதியில்லாத நிலையில் இருக்கிறோமே என்றெல்லாம் நினைத்ததுண்டு.

படித்த, பொருளாதார வசதியற்ற இளைஞர்கள் சுய தொழில் செய்வதன் மூலம் தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளவும், ஒரு தொழில் முனைவோராக மாறவும் கடனுதவி கேட்டு  வங்கிகளை அணுகும் போது செய்யும் எகத்தாளங்களைக் காட்டாமல் கடன் என்ற பெயரில் கோடிகளில் அள்ளிக் கொடுத்து விட்டு ”வராக்கடன்” என்ற பட்டியலை மட்டும் வருடா வருடம் சொல்லிக் கொண்டு அதை வாங்க அடியாட்களை அனுப்புவதற்கும் முடியாமல் சட்டத்தின் முன் உட்கார்ந்திருக்கும் வங்கிகளின் பட்டியல்களைப் பார்க்கும் போது எனக்குள் இருந்த வருத்தம் எல்லாம் வடிந்தது போலவே இருந்தது. கூடவே பாரதி சொன்னதைப் போல…காறி உமிழ்ந்து விடவே தோன்றுகிறது,

வங்கிகளில் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த பணத்திற்கு ஐந்து காசு கூடுதல் வட்டி கிடைத்து விடாதா? எனக் கவலைப்படும் சராசரி இந்தியக் குடிமகனால் இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?