Thursday, 26 May 2016

ஒப்பனை முகங்கள்

சவுக்குக் கழிகளால் கட்டப்பட்டிருந்த அந்தச் சார மேடையின் மீது நின்று கொண்டு ஒவ்வொரு செங்கலாய் கொத்தனார் வரிசைப்படுத்திக் கொண்டிருந்ததைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் இராமலிங்கம். அறுபது வயதைக் கடந்து விட்ட அவருக்கு அது ஒன்றும் அற்புதமான, வியக்கத்தக்க காட்சியல்ல. ஆனால், செங்கல்களாலும், சிமெண்ட் கலவையாலும் எழுந்து வரும் அந்தக் கட்டத்தின் ஒவ்வொரு நாள் வளர்ச்சியும் அவருக்குள் ஒரு ஆத்ம திருப்தியை அளித்துக் கொண்டே இருந்தது. மாலையில் வேலை முடிந்து பணியாளர்கள் கிளம்பிய பின் இரவு நேரக் காவலுக்காக கட்டிடத்திற்கு வரும் பெரியவரை எதிர்பார்த்து இருக்கையில் சாய்ந்த படி உட்கார்ந்திருந்தார்

ஒரு நடுநிலைப் பள்ளியின் ஆசிரியராய் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்த இராமலிங்கத்திற்கு மனைவியின் ஊரான இந்தக் கிராமமும், இங்கிருக்கும் உறவினர்களும் கற்றுக் கொடுத்த விசயங்கள் அவரின் வாழ்நாளில் மறக்க முடியாதவைகள்.

தங்களுக்குப் பிறந்த நான்கு குழந்தைகளும் ஆண்பிள்ளைகள் என்பதாலோ என்னவோ சொத்துகள் வாங்குவதிலும், நகைகள், பாத்திரங்கள் சேர்ப்பதிலும் அவரும், அவர் மனைவியும் அக்கறை காட்டாததைப் போலவே தங்களுக்கென சொந்த வீடு கட்டிக் கொள்வதிலும் ஆர்வம் கொள்ளவில்லை. ஆனால், ஒரு துயரமான நிகழ்வின் தொடர்ச்சி தனக்கென ஒரு சொந்த வீடு இல்லாததை அவர் உணரும் படிச் செய்து விட்டது.

தன் சட்டையைத் தானே கழற்றி எறிந்து புதுப்பித்துக் கொள்ளும் சர்ப்பம் போல வருடங்களில் தன்னைப் புதுப்பித்துக் கொண்ட காலத்தோடு ஒட்டி வளர்ந்திருந்த பிள்ளைகளில் மூத்தவன் டிப்ளமோ முடித்து விட்டு வேலைத் தேடலில் இருந்தான். படிப்பும் அதன் மூலம் கிடைக்கும் வேலையும் பிள்ளைகளைக் காப்பற்றி விடும் என்பது இராமலிங்கத்தின் சித்தாந்தம்.

பள்ளிக்கூட வேலை சம்பந்தமாக பக்கத்து ஊருக்குக் கிளம்பிச் சென்று விட்டு மறுநாள் காலை வீட்டிற்கு வந்தவர் தன் வீட்டைச் சுற்றித் தெருவில் குடியிருப்பவர்கள் எல்லாம் நின்று கொண்டிருப்பதைக் கண்டதும் நடக்கக் கூடாத ஏதோ ஒன்று நடந்து விட்டதோ? என்று நினைத்தார். இத்தனை வருடங்களில் விசும்பிக் கூட பார்த்திராத தன் மனைவி பெருங்குரலெடுத்து அழும் சப்தமும் அவரின் காதுகளை நிரப்பியது. வழிப்பறித் திருடர்கள் பிரச்சனை தீவிரமாக இருந்த சமயம் என்பதால் கழுத்தில் போட்டிருந்த நகை எதையும் பறி கொடுத்து விட்டாளோ? என்று சந்தேகப்பட்டவர் பெரிதாகப் பதறவில்லை. அதற்காக ஏன் இப்படித் தெருவைக் கூட்டி வைத்து அழுது கொண்டிருக்கிறாள்? என்று மட்டுமே நினைத்தார். ஒரு மின்னல் வெட்டாய் வெட்டி மறைந்த எண்ணத்தோடு வாசலில் நின்ற கூட்டத்தை விலக்கிக் கொண்டு நுழைய முயன்றவரை வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த அவரின் நண்பர் உள்ளே போக விடாமல் தடுத்து ”பதற வேண்டாம்” என்று  சொன்னதில் இருந்த பதற்றம் நினைத்ததற்கு மாறாய் ஏதோ நடந்திருக்கிறது என்று நினைக்கச் செய்தது.

போர்வையில் போர்த்திய படி மாடியில் இருந்து சிலர் எதையோ தூக்கி வருவதைக் கண்டதும் அவருக்கு விசயம் பிடிபடத் தொடங்கியது.

”அவனுக்கு என்ன ஆச்சு?” எனக் கேட்டுக் கொண்டே முன்னோக்கி வந்தவரைக் கண்டதும் ”நம்மள விட்டுட்டு போயிட்டாங்க” என்று தலையில் அடித்துக் கொண்ட மனைவியைப் பக்கத்தில் இருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தினர்.

”நேற்று அவனோடு பேசிக் கொண்டிருந்து விட்டுத் தானே சென்றேன். அதற்குள் என்னவாயிற்று? அதுவும் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என்ன பிரச்சனை? அவ்வளவு கோழை இல்லையே அவன்!” என வார்த்தைகளை வெளியிடாமல் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு அருகில் சென்று மகனைப் பார்க்க இயலாதவராய் அங்கேயே சரிந்து அமர்ந்தார்.

பொத்திப் பொத்தி வளர்த்த பிள்ளையை பிணவறைக்குள் அனுப்பி விட்டு இறப்பிற்கான காரணமறியா காரணத்தைத் தனக்குள்ளேயே நினைத்து, நினைத்து எதுவும் பிடிபடாமல் வெறுமையோடு அங்கிருந்த வேப்பமரத்தின் கீழ் அமர்ந்திருந்தவரிடம், ”தம்பி….எல்லாம் முடிஞ்சிருச்சு. இனி வீட்டிற்கு எடுத்துப் போக வேண்டாம். நேரே காட்டுக்குக் கொண்டு போகலாம்” என உறவினர் ஒருவர் கூற பாடையில் போகும் மகனின் பின்னால் ஒரு நடைப் பிணமாய் சென்று நெருப்புக்குத் தின்னக் கொடுத்து விட்டு வீடு திரும்பியவர் இரண்டு தினங்களாகத் திண்ணையிலேயே அமர்ந்திருந்தார்.

உறவுகளைப் பிடித்திருந்த துக்கம் மெல்ல அகல அவரவர் பழைய வாழ்க்கைக்குக் கிளம்ப ஆயத்தமாயினர். இறப்பின் துயரை முழுமையாக உணர முடியாத வயதில் துக்கம் விசாரிக்க வருபவர்களின் முகத்தையும், அம்மாவின் அழுகையையும் பார்த்து அழுது கொண்டிருக்கும்  மற்ற பிள்ளைகளைக் கவனிப்பதற்காகவாது அந்தத் துயரில் இருந்து மெல்ல மீள வேண்டும் என நினைத்தார்.

அழுது, அழுது கண்ணீர் வற்றி, விழிகள் சுருங்கி உரித்துப் போட்ட வாழை மட்டையாய் தரையில் சுருண்டு கிடந்த மனைவியின் அருகில் சென்று மெல்லத் தொட்டார். அந்தத் தொடுதலில் இருந்த புரிதலை, கணவனின் எண்ணத்தை அறிந்தவளாய் எழுந்து முகம் கழுவி காப்பியைத் தயார் செய்தவள் பிள்ளைகளோடும், சில உறவுகளோடும் கூடத்தில் அமர்ந்திருந்த கணவனிடம் கொடுத்த கையோடு, ”ஏங்க………நாம இந்த ஊரை விட்டுட்டு வேற எங்கேயாவது போயிடலாமா?” என்றாள்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் “படிப்பெல்லாம் சம்பாதிக்கிறவனுக்கு. சம்பாதிக்கிற புருசனை கவனித்துக் கொண்டு குடும்பத்தை நடத்துறவளுக்கு கொணம் தான் முக்கியம்” என்ற கொள்கையோடு வளர்க்கப்பட்டவளைப் போல எழுத்தின் அடிச்சுவடு கூட அறியாது இருந்தவளோடு திருமணம் முடிந்த சில தினங்களிலேயே தான் வேலை செய்து கொண்டிருந்த ஊருக்குக் குடி வந்தார்.

தான் பிறந்த ஊரும், புகுந்த ஊரும் அங்கிருந்து மூன்று மணிநேரத்தில் போய் வரக் கூடிய தொலைவிலே இருந்த போதும் அவைகளோடு அவர் கொண்டிருந்த உறவு கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாய் தான் இருந்தது.

இங்கு வந்த இத்தனை ஆண்டுகளில் அவள் ஒரு தடவை கூட இப்படிக் கேட்டதில்லை. அவளுக்குப் பிடித்த ஊராகவே அது இருந்தது. இப்போது திடீரென இப்படிக் கேட்கிறாள் என்றால் அதை அலட்சியப் படுத்தி விடக்கூடாது என நினைத்தார்.

நினைத்தாரேயொழிய எங்கே போவது? என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இருக்கவில்லை. ”எங்கே போறது?” என்று மனைவியிடமே திருப்பிக் கேட்க, ”எங்க அம்மா வீட்டிற்குப் போகலாங்க”.

”அக்கா, தங்கச்சி, சொந்த பந்தம்னு நாழு சனம் வந்து போனா அவளுக்கும் கொஞ்சம் மாற்றமா இருக்கும். அதுனால அவ கொஞ்ச நாளைக்கு ஊருல வந்து இருக்கட்டும்னு” அருகில் இருந்த அவளின் அம்மாவும், மற்றவர்களும் சொல்ல அவரும் சம்மதித்தார்.

அடுத்த சில தினங்களில் மனைவியின் ஊருக்குக் குடும்பத்தை இடம் மாற்றினார். தன் பெற்றோரோடு இருந்தாலும் தனி சமையல் செய்து கொள்ளப் போவதாகவும், ”அதுதான் சரியாக இருக்கும்” என்றும் மனைவி அழுத்தமாய் சொன்ன விதம் அவருக்கு ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.

எட்டு மாதங்கள் கடந்திருந்த நிலையில் ”வெளிநாட்டில் இருக்கும் தன் தம்பிக்கு திருமணம் பேசி முடித்திருப்பதால் நாம் வீட்டைக் காலி செய்து கொடுக்க வேண்டுமாம்” என மனைவி சொன்னதைக் கேட்டதும் நிற்கதியற்ற நிலைக்காகத் தன்னைத் தானே நொந்து கொண்டவர், ”யார் காலி செய்யச் சொன்னா?” என்றார்.

கண்கள் பனிக்க, ”எங்க அப்பாவும், அம்மாவும் தான்”

”காலி செய்து கொடுத்துடலாம். ஆனால் பிள்ளைகள் படிப்பு பாதிலேயே நின்று விடுமே. அதுவும் சின்னவன் பத்தாவது படிக்கிறான். இடையில் போனால் வேறு பள்ளிக்கூடத்துல சேர்க்க முடியாது. அதுனால அவனுக்குப் படிப்பு முடியிற வரைக்கும் இருப்பதற்குக் கேட்டுப் பாரேன்”.

பெத்த பிள்ளையை பெத்தவங்களிடமே பிச்சை கேட்கச் சொல்வதைப் போல தன் மனைவியை கேட்கச் சொன்னதை நினைத்து இரவெல்லாம் உறக்கம் கொள்ளாமல் படுக்கையில் புரண்டபடியே கிடந்தவரிடம் ”சும்மா போட்டு மனசை அலட்டிக்காதீங்க. நீங்க சொன்ன மாதிரி எல்லாம் போய் கேட்க வேணாம். இப்போதைக்கு இங்கேயே வாடகைக்கு ஒரு வீடு பார்த்துப் போயிடலாம். தம்பிக்கு கல்யாணம் முடிந்ததும் என் பங்குச் சொத்தாக வரும் மனையில் ஒரு வீட்டைப் போட்டுக்கலாம்” என்றாள்.

அது தான் கெளரவமாகவும் இருக்கும் என நினைத்தவர் விடிந்ததும் வழக்கமாகச் செல்லும் டீ கடைக்குச் சென்று அங்கு வந்த உறவினர்களிடமும், நண்பர்களிடம் தனக்கு வாடகைக்கு ஒரு வீடு வேண்டியிருப்பதாகச் சொன்ன போது ”அரண்மனை மாதிரி மாமனார் வீடு இருக்கும் போது எதுக்கு வாடகைக்கு வீடு தேடுறீங்க? என்று பலரும் கேட்க ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்குப் பதில் சொல்லிச் சமாளிப்பதே சங்கட்டமாக இருந்தது.

சொல்லி வைத்தவர்களிடம் இருந்து சாதகமான பதில் இல்லாததோடு சிலர் சொல்லத் தயங்கிய விதமும் சரியெனப் படாததால் தானே நேரடியாக விசாரித்து வீடு தேடுவது என முடிவு செய்தார். நெசவு ஆசிரியருக்குச் சொந்தமான வீடு காலியாக இருப்பதை அறிந்ததும் அவரைச் சந்தித்துக் கேட்டார்.

அண்ணே………தப்பா எடுத்துக்காதீங்க. உங்களிடம் மத்தவங்க சொல்ல சங்கடப்பட்டிருக்கலாம். நீங்களே நேரில் கேட்டு வந்துட்டதால சொல்றேன்.

”உங்க மாமனாரும், உங்க சகலையும் உங்களுக்கு வாடகைக்கு வீடு தரக் கூடாதுன்னு கூப்பிட்டுச் சொல்லிட்டாங்க. பல வருசமா தாயா, புள்ளையா நாங்க இங்கின பழகிட்டோம். உங்க குடும்பத்துக்குள்ள என்ன பிரச்சனைன்னு தெரியல? சொந்த மகளுக்கே வீடு தரக்கூடாதுன்னு அவரு சொல்லுறப்ப நாங்க அவங்கள முறிக்க முடியாதுண்ணே” என்றார்.

வாழ்க்கை மனிதர்களை வைத்து நடத்தும் பாடம் எப்பொழுதுமே இயல்பாய் இருப்பதில்லை. சமயங்களில் அது புலப்படாத சில திகிலையும் சேர்த்தே அடையாளப்படுத்துகிறது. அதிர்ந்து பேசிப் பழகியிராத தன் மனைவி மீது அவளைப் பெற்றவர்களுக்கு அப்படி என்ன கோபம்? அவர்களோடு சகலையும்  சேர்ந்து கொள்ள என்ன காரணம்? கேள்விகள் மட்டுமே மனதில் நிற்க, “நன்றி தம்பி” எனச் சொல்லிவிட்டு கிளம்பினார்.

சில நாட்களுக்குப் பின் அதற்கான விடைகள் அவருக்குக் கிடைத்தது. வீட்டைக் காலி செய்யச் சொன்ன போது ஏற்பட்ட பிரச்சனையில், “மகனைப் பறி கொடுத்துட்டு வந்து நிக்கிற என்னைய உடனே வீட்டைக் காலி பண்ணச் சொன்னா எங்கே போவேன்? நான் காலி பண்ணனும்னா எனக்கான பங்கைப் பிரிச்சுக் கொடுங்க. அதுல ஒரு வீட்டை கட்டிக்கிட்டுப் போயிடுறேன். இல்லைன்னா என் கையெழுத்து வாங்காம உங்க இரண்டாவது மக புருசன் பேருல சொத்து எழுதிக் கொடுத்திருக்கிறதுக்கும் சேர்த்து கோர்ட்டுல கேஸைப் போட்டு எல்லோரையும் தெருவுல கொண்டாந்து நிப்பாட்டிடுவேன்” என தன் மனைவி சொன்னதன் எதிரொலி தான்  என்பதை அறிந்த போது அவருக்கே ”சீ” என்றாகிப் போனது. 

அடுத்த இரு மாதங்களில் மகனின் பள்ளி இறுதித் தேர்வுகள் முடிந்து விட  வீட்டைக் காலி செய்த நாளன்று ”கடைசி, கடைசின்னு பொறந்த மன்ணுல கூட நிக்க முடியாம போச்சே” என கண்கலங்கிய படித் தன்னைப் பெற்றவர்களையும், உடன் பிறந்தவர்களையும் தவிர மற்ற எல்லோரிடமும் வீடு தேடிப் போய் தன் மனைவி சொல்லி விட்டு வந்ததைப் பார்த்தவர் எப்படியும் ஒரு சொந்த வீட்டைக் கட்டி விட வேண்டும் என்று நினைத்தார்.

தான் வேலை செய்து கொண்டிருக்கும் ஊரே இனி தனக்குச் சொந்த ஊர் என முடிவு செய்தவர் அங்கேயே இடம் வாங்கி வீடு கட்டும் வேலையையும் ஆரம்பித்தார். ”வீட்டைக் கட்டிப்பார்” என்ற பழமொழி போல் வீடு கட்டுவது ஒன்றும் அவருக்குப் பெரிய விசயமாக இருக்கவில்லை. பணம் இருந்தால் அதுவே காரியத்தை நடத்தி விடாதா என்ன?

சில மாதங்களிலேயே உயிர் பெற்று நின்ற சொந்த வீட்டிற்குள் நுழைந்த பின் எதார்த்தமான பேச்சின் போது ”என்ன வாழ்க்கை இது? இருந்தும் இல்லாதவங்க மாதிரி ஒரு சொந்த, பந்தமில்லாம தனியா வந்து இங்கின உட்கார்ந்திருக்கோம். நாம தான் எல்லாத்தையும் ஒதுக்கிட்டு விலகி நின்னுட்டோம். பிள்ளைகளுக்காது கிடைக்கும்னு பார்த்தேன். இது தான் சொந்த வீடுன்னு ஆனதுகப்புறம் அதுக்கும் இப்ப வழியில்லாம போயிடுச்சு” என்று அங்கலாய்த்துக் கொண்ட மனைவியிடம் “உங்க ஊரில் குடியிருந்தால் மட்டும் பிள்ளைகளுக்கு எல்லாம் கிடைத்து விடுமாக்கும்?” என்றார் சற்றே எரிச்சலுடன்.

”ஏங்க கிடைக்காது? தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்னு சும்மாவா சொன்னாங்க. என்னைப் பெத்தவங்களும், என் கூடப் பொறந்தவங்களும் தான் உறவா? இருபது வருசமா அங்கே வாழ்ந்திருக்கேன். அந்த ஊரே உறவுங்க”.  கட்டியவனுக்காக தன் விருப்பங்களை எல்லாம் புதைத்துக் கொண்டவள் இப்போதும் கூட பிள்ளைகளின் மீதான அக்கறையாகவே தன் ஆசையையும், எண்ணத்தையும் சொல்வது அவருக்கு வியப்பாகத் தான் இருந்தது. 

உறவுகளைப் புறந்தள்ளி எந்த ஊரை விட்டு வெளியேறினாரோ அதே ஊருக்குள் மனைவியின் விருப்பம் என்ற ஒரே காரணத்திற்காக மீண்டும் காலடி எடுத்து வைத்தவருக்கு  உறவல்லாத ஒருவர் உதவினார். குளமும், கோயிலும் சூழ அவரிடம் விற்பனைக்கு இருந்த ஒரு இடத்தை வாங்கி வீட்டைக் கட்டும் வேலையையும் ஆரம்பித்தார்.

ஒவ்வொரு நாளும் கட்டிட வேலைக்காக வரும் பணியாளர்களோடு தானும் வந்திருந்து அவர்களோடு அமர்ந்து, பேசி வீட்டை வார்த்தெடுப்பதில் அவருக்கு ஒரு ஆனந்தம் இருந்தது. கடந்த கால நினைவுகளோடு கலந்திருந்தவரை இரவு நேரக் காவலுக்கு கட்டிடத்தில் உறங்க வந்த பெரியவரின் குரல் நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது.

”என்னப்பு பலத்த யோசனை? ஒன் மனசப் போல வீடும் நல்லா வரும்யா.  ஊருல பிள்ளைக காத்துக்கிட்டு இருக்கப் போகுதுக. கால காலத்துல கிளம்பிப் போ”. என்றார்.

அடுத்த நான்கு மாதத்தில் மார்பிளும், மரமுமாய் வீடு எழுந்து நின்றது. குடிபுகுதலை பத்திரிக்கை அடித்துச் சிறப்பாகச் செய்யலாம் என்ற பிள்ளைகளின் விருப்பத்திற்கு மறுப்புச் சொன்னவர் மனைவியை அழைத்து, “உன் ஊரில் யாரை எல்லாம் அழைக்க விரும்புகிறாயோ அவர்கள் எல்லோரின் வீட்டிற்கும் சென்று சொல்லி விட்டு வா. அது போதும்” என்றார்.

எதிர்பார்த்ததற்கும் அதிகமான உறவினர்கள் வந்திருந்தனர், அத்தனை முகங்களிலும் ஒரு ஏமாற்றுத்தனம் இருப்பதாகவே அவருக்குத் தோன்றியது. அழைத்து விட்டார்கள் என்பதற்காக எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் எப்படி இவர்களால் படியேறி வர முடிகிறது? என்று நினைத்துக் கொண்டவர் தன் விருப்பம் நிறைவேறிய மகிழ்வோடு தனக்கும், தன் குடும்பத்திற்கும் உதவாது, உதாசீனம் செய்த உறவுகள் சூழ இருக்கும் மனைவியின் சந்தோச முகத்தைப் பார்ப்பதற்காக சமையலறைப் பக்கமாக வந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

”உங்களுக்கு மட்டும் தான் தெரியுமாக்கும்? என் சொந்தக்காரனுகளைப் பற்றி இன்னைக்குப் படியேறி வந்திருக்கிற அத்தனை பேரும் தங்களின் உண்மையான முகத்தை ஒப்பனை செய்து கொண்டு வந்திருக்கும் கூட்டம். இவர்களைக் கவனிக்கிறதை விட்டுட்டு வேற வேலை இருந்தா போய் பாருங்க” எனச் சொல்லாமல் சொல்வதைப் போல வந்திருந்தவர்களைக் கவனிப்பதில் பெரிதாக அக்கறை காட்டாமல் “ஏங்க துணி ஊற வைக்கப் போறேன். காலையில நீங்க போட்டிருந்த வெள்ளைச் சட்டை வாழைக் கறையா இருந்துச்சு. அதை எடுத்துக் கொடுங்க” என்ற படியே தன் வழக்கமான வேலைகளைச் செய்ய ஆரம்பித்திருந்தாள்.

நன்றி : மலைகள்.காம் 

Monday, 23 May 2016

தேவதைகளின் அட்டகாசம் - 8

சும்மா, சும்மா காசு கேட்கக் கூடாதுன்னு நீங்க சொன்னதால ஒரு டிராயிங் (DRAWING) வரைஞ்சு அம்மாக்கிட்ட கொடுத்துட்டு காசு கேட்டேன். நல்லா இருக்குன்னு மட்டும் சொல்லி வாங்கி வச்சுக்கிட்டு காசு தர மாட்டேங்கிறாங்க டாடி.


உனக்காக தினமும் அம்மா எல்லாம் செய்றா. அவளுக்குச் சும்மா கொடுத்ததா நினைச்சுக்க.


டாடி... தாத்தாவுக்குக் கொடுத்த டிராயிங்கை விட அம்மாவுக்குக் கொடுத்த டிராயிங்ல நிறைய கலர் கொடுத்து அட்டையில ஒட்டி சுவத்துல தொங்கப் போடுறது மாதிரி ஓட்டை போட்டு நூல் கோர்த்து செமையா செஞ்சு கொடுத்திருக்கேன் டாடி. அதுக்காகவாது ஏதாவது தரலாம்ல.

சரி
. எவ்வளவு தரச் சொல்ல?

தாத்தா இருபது ரூபா கொடுத்தாங்க.

அவ்வளவு எல்லாம் உங்க அம்மா தரமாட்டா.

அப்ப...பத்து ரூபா?

அதுக்கும் முடியாதுன்னு சொல்லிடுவா. இன்னும் குறைச்சு சொல்லு.

அஞ்சு ரூபா?

இன்னும் கொஞ்சம் குறைச்சா நானே சொல்லி தரச் சொல்றேன். 

ஒரு ரூபா?

இப்பவே தரச் சொல்றேன்.

டாடி...ஒரு ரூபாய்க்கு டீ கூட குடிக்க முடியாது. டிராயிங் எப்படி இருந்துச்சுன்னு நீங்களே அம்மாக்கிட்ட கேட்டு்ட்டு அப்புறமா சொல்லுங்க.

சரி...இரண்டு பேருக்கும் பொதுவா அஞ்சு ரூபாய்னு வச்சுக்கலாம். அம்மாக்கிட்ட சொல்லி தரச் சொல்றேன்.


அம்மாவுக்காக தான் அஞ்சு ரூபாய்க்கு ஒத்துக்கிறேன்.

Saturday, 21 May 2016

தகுதி

தொண்டர்கள் சூழ 
சிலைகளுக்கு மாலையிட்டவனுக்குத் 
தோன்றாமலே போனது.
அடுத்த முறையேனும்
அதற்காகத் தன்னை
தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற 
எண்ணம் மட்டும்!

நன்றி : முத்துக்கமலம்.காம்

Thursday, 19 May 2016

உங்களுக்கு நீங்களே!

சிவப்பு விளக்கு எரியும் போது சாலையைக் கடப்பது தவறு என வகுப்பறையில் படித்து விட்டு வரும் குழந்தையை பள்ளியிலிருந்து அழைத்து வரும் தந்தை சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போதே சாலையை விருட்டென கடந்து போவதைக் கண்டு குழம்பிப் போன அந்த குழந்தை, “அப்பா………இது தப்பில்லையா? சிவப்பு லைட் எரியும் போது போனா தப்புன்னு மிஸ் சொன்னாங்களே” என்றாள். அதற்கு அந்த மகா புத்திசாலி தந்தை அவசரத்துக்கு இப்படி போகலாம் தப்பில்லை என்றான். இப்படியான ரோல்மாடல்களோடு தான் நாமும், நம் குழந்தைகளும் வளர வேண்டியிருக்கிறது. அதனால் தானோ என்னவோ குழந்தைகள் பின்னாளில் அவசரம், அவசியம், கொள்கை, விருப்பம், தேவைகள் என ஏதோ ஒன்றின் பொருட்டு தங்களுடைய தனித்தன்மைகளை இழந்து நிற்கின்றனர். கலங்கரை விளக்காய் ஒளி தர வேண்டியவர்கள் சிமினி விளக்காய் மண்ணெண்ணெய்க்கு ஏங்கி நிற்கிறார்கள். நீங்கள் வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், அர்த்தமுள்ள வாக்கையை நீங்கள் வாழ வேண்டுமானால் அதற்கு “தனித்தன்மை” என்பது அவசியம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அது அவசியமான ஒன்று. அந்த அவசியத்தை உணர்ந்திருந்ததால் தான் தன் மகனோடு இருந்த தன் படைத்தளபதி தன்னைக் கண்டதும் எழுந்து நின்று மரியாதை செலுத்த போனபோது அதை நெப்போலியன் தடுத்தான். தனித்தன்மை என்று சொன்னதும் அது ஏதோ ஒரு பெரிய விசயமென நினைத்து விடாதீர்கள். உங்களுடைய பழக்கத்தால், நடவடிக்கையால் உங்களை மற்றவர்களுக்கும், உங்களுக்கும் விருப்பமானவராக மாற்றிக்கொள்ளுவது மட்டுமே!

ஈரானை ஆண்டுவந்த நெளஷர்கான் என்கின்ற பாதுஷா வேட்டையாடுவதற்காக காட்டுக்குப் போனார். அவருடன் சென்றிருந்த சமையல்காரர் ஒருநாள், “மன்னா! சமையலுக்கு உப்பில்லை” என்றார். பக்கத்து ஊருக்கு போய் விலை கொடுத்து வாங்கி வா. இல்லையென்றால் ஊரே பாழாகிவிடும்” என்றார் பாதுஷா. மன்னா……..ஒரு பிடி உப்பை விலை கொடுக்காமல் வாங்கினால் ஊர் முழுவதும் எப்படி பாழாகும்? என்று விளக்கம் கேட்டார் சமையல்காரர். அதற்கு ஷா, “தன் குடிமக்களிடம் அரசன் ஒரு பிடி உப்பை இனாமாக வாங்கினால் அவன் கீழ் உள்ள அதிகாரிகள் மறுநாள் அந்த ஊரையே முழுங்கி விடுவார்கள்” என்றார்.  

உபதேசங்களிலேயே மிகப்பெரிய உபதேசம் உபதேசித்தபடி உபதேசித்தவன் வாழ்ந்து காட்டுவது. அப்படி வாழ்ந்து காட்டியவர்களிடம் தான் வாழ்க்கை அடங்கிப் போயிருக்கிறது. வாழ்க்கையை இப்படி தான் வாழ வேண்டும் என உபதேசிப்பவர்களில் எத்தனை பேர் அப்படி வாழ்கிறார்கள்? தங்களுடைய தனித்த அடையாளங்களால் தன்னை தனித்துவமுடையவர்களாக மாற்றிக் கொண்டு தன் வாழ்க்கை முழுவதும் அப்படி வாழ்ந்து காட்டியவர்கள் வரலாறாகியும் வாழ்கின்றனர்.

இரஷ்யாவை ஆண்ட லெனின் முடி வெட்டிக் கொள்வதற்காக முடி திருத்தும் நிலையத்திற்கு சென்றார். அங்கு ஏற்கனவே நீண்ட வரிசை காத்திருக்கிறது. லெனினைக் கண்டதும் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். லெனினோ கடைசியாக இருப்பவர் யார்? என்று கேட்டார். அங்கு வரிசையிலிருந்தவர்கள் அரசாங்கத் தலைவராகிய நீங்கள் வரிசையில் காத்திருக்ககூடாது என்று கூறினர். அதற்கு லெனின், “உங்கள் மதிப்புக்கு நன்றி. எல்லோரும் வரிசையில் வர வேண்டும் என்பது நடைமுறை. அந்த நடைமுறையை நானும் பின்பற்றவே விரும்புகிறேன்” என்றார்.

காலஞ்சென்ற பேரறிஞர் விசுவேசுவரய்யா அவர்களுக்கு பாரத ரத்னா பட்டம் கொடுக்க வேண்டும் என 1955 ம் ஆண்டு இந்திய அரசாங்கம் முடிவு செய்தது. அப்போதைய குடியரசுத்தலைவர் இராஜேந்திர பிரசாத்தின் விருப்பத்திற்கிணங்க விசுவேசுவரய்யா குடியரசுத்தலைவர் மாளிகையிலேயே தங்கி இருந்தார். மூன்று நாட்கள் சென்றதும் நான்காவது நாள் தான் வேறொரு விடுதியில் சென்று தங்கப்போவதாகவும், தன்னை அதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் விசுவேசுவரய்யா கேட்டார். பட்டம் பெறுகிற வரையில் இங்கேயே தான் நீங்கள் தங்கி இருக்க வேண்டும் என்றார் இராஜேந்திர பிரசாத். மூன்று நாட்களுக்கு மேல் எந்த விருந்தாளியும் குடியரசுத்தலைவர் மாளிகையில் தங்கக்கூடாது என சட்டம் இருக்கிறதே என்றார் விசுவேசுவரய்யா. தங்களைப் போன்ற பெரியவர்கள் அந்த விதிமுறைப்படி நடக்க வேண்டியதில்லை என இராஜேந்திரபிரசாத் சொன்னதும் சற்றும் தாமதிக்காமல்  விசுவேசுவரய்யா சட்டத்தை மீறி இங்கு நான் தங்க இங்குள்ள வசதிகளை அனுபவிக்க மாட்டேன் எனச் சொல்லி வேறிடத்துக்கு சென்று தங்கினார். இந்த சம்பவம் நடந்தபோது விசுவேசுவரய்யாவுக்கு வயது 94. இன்று இப்படியான தலைவர்கள் அபூர்வம்! இருந்தால் ஆச்சர்யம்!!

புத்தனின் சீடரான ஆனந்தன் ஒருநாள் காட்டுப்பாதை வழியே சென்று கொண்டிருந்தார். கடுமையான வெயிலால் தாகம் ஏற்பட்டு அவரின் தொண்டை வறண்டு போனது. எங்காவது குடிக்கத் தண்ணீர் கிடைக்காதா? என்று கவனித்த படியே நடந்து சென்றார். அப்போது எதிர் திசையில் ஒரு பெண் தண்ணீர் குடத்தை சுமந்து வந்தாள்.

ஆனந்தன் அவளிடம் “அம்மா! ரொம்ப தாகமாக இருக்கிறது. குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்“ என்று கேட்டார். அதற்கு அந்தப்பெண் “ஐயா! நான் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவள்” என்றாள். உடனே ஆனந்தன் ”அம்மா! நான் உன் குலத்தைக் கேட்கவில்லையே. தண்ணீர் தானே கேட்டேன் என்றதும் அந்த பெண் மனமகிழ்வோடு தண்ணீர் கொடுத்தாள். இந்தப் பெண்ணைப் போல தான் நாம் பல நேரங்களில் சூழலுக்கு சம்பந்தமில்லாத விசயங்களை நாமாகவே நினைத்துக் கொண்டு தனக்குத் தானே தாழ்த்திக் கொள்கிறோம். ஆனால், வெற்றியாளர்கள் எந்த நிலையிலும் தங்களை தாழ்த்திக் கொள்ளவோ மற்றவர்கள் அப்படி செய்யவோ அனுமதிப்பதில்லை. எந்த சூழ்நிலையிலும் தனக்காகவோ, மற்றவர்களுக்காகவோ தன்னையும், தன் நிலையையும் அவர்கள் தாழ்த்திக் கொள்ள சம்மதிப்பதில்லை.

அதுவரையிலும் இந்தியப்பிரதமராக இருந்தவர்களை “மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்” என்றழைப்பதே மரபாக இருந்தது. அந்த மரபிற்கு இந்திராகாந்தி வடிவில் சோதனை வந்தது. அதுவரைக்கும் பிரதமராக ஆண்களே இருந்தனர். இப்போது பெண்பிரதமர் என்பதால் அவரை எப்படி அழைப்பது என்ற குழப்பம் பிரதம அலுவலக அதிகாரிகளுக்கு வர அவர்களின் சங்கடத்தைப் புரிந்து கொண்ட இந்திரா சொன்னார். என்னையும் ”மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்” என்றே அழையுங்கள். தன்னைத் தாழ்த்திக் கொள்ளாத இந்திராவின் துணிச்சல் அவரை இந்தியாவின் இரும்பு பெண்மணியாக்கியது.

வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காந்தியடிகள் இலண்டனுக்கு சென்றார். அதில் கலந்து கொள்ள வேண்டுமானால் மேலைநாகரீக உடையணிந்து தான் செல்ல வேண்டும் என சொன்னார்கள். காந்தியோ அசரவில்லை. ஒரு இந்திய பிரஜையின் ஆடையில் தான் கலந்து கொள்வேன் என உறுதியாகச் சொன்னார். அவர்களுக்காக காந்தி தான் கொண்டிருந்த கொள்கையை தாழ்த்திக் கொள்ளவில்லை. அந்த உறுதி அவரை அவர் விரும்பிய வண்ணமே அம்மாநாட்டில் கலந்து கொள்ள வைத்தது.

உடல்நிலை காரணமாக தனக்கென விசேசமாக வடிவமைக்கப்பட்ட படுக்கையை கவர்னர் ஜெனரலாக இருந்த போது இராஜாஜி பயன்படுத்தி வந்தார். அவர் கல்கத்தா கவர்னர் மாளிகையை விட்டு சென்றபின் அந்த படுக்கையை நேரு இராஜாஜிக்கு கொடுத்தனுப்பினார். நேரு எவ்வளவோ சொல்லியும் இராஜாஜி அதற்கான செலவு தொகையைக் கொடுத்தனுப்பிய பின்பே படுக்கையை எடுத்துக்கொண்டார். உங்களை நீங்கள் தாழ்த்திக் கொள்ளும்போது தான் உங்களின் தனித்தன்மையும் தாழ்ந்து போகிறது. உங்களை நீங்கள் தாழ்த்திக் கொள்ளாத வரையில் தான் லெனின், காந்தி, இந்திரா, விசுவேசுவரய்யா, இராஜாஜி போல தனித்தன்மையுடன் மிளிர முடியும். மற்றவர்களை ரோல்மாடலாக ஏற்றுக் கொள்வதற்கு முன் உங்களுக்கு நீங்களே ரோல்மாடலாக இருக்க பாருங்கள். பழகுங்கள். பக்குவப்படுங்கள். முன்மாதிரி என்பது உங்களிடமிருந்து தொடங்கட்டும். அந்த தொடக்கம் கடைசி வரையிலும் இருக்க, நீடிக்க வேண்டுமானால் அதற்கு உங்களின் நிலையிலிருந்து எதன் பொருட்டும் உங்களை தாழ்த்திக் கொள்ளாதீர்கள். ”காலம் காலமாக இருந்து வருபவைகளை பின்பற்றுபவன் அரசு ஊழியனைப் போன்றவன், அவர்கள் சட்டங்களை பின்பற்றுபவர்கள். வகுப்பவர்கள் அல்ல” என்கிறார் ஓஷோ. யார் மாதிரி இருக்கிறீர்கள் என்பதை விட யாராக உருவாகிறீர்கள் என்பதில் தான் வெற்றியின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. தனித்தன்மை என்ற ராஜபாட்டையின் மேல் அந்த வெற்றி சூட்சுமத்தை நிலை நிறுத்துங்கள்.  நீங்களும் வெற்றி நடை போட்டு பவனி வரமுடியும்.

நன்றி : பாக்யா வார இதழ்

Tuesday, 17 May 2016

Sunday, 15 May 2016

தேவதைகளின் அட்டகாசம் - 7

டாடி..

ம்……….நல்லா இருக்கியா?

நல்லாவே இல்ல.

ஏன்? அப்படி இல்லைன்னாலும் ஒரு ஃபார்மாலிட்டிக்காது நல்லா இருக்கேன்னு தான் சொல்லனும்.

அதெப்படி? நடக்கயில இடிச்சு கால் விரல்ல வீங்கி வலிக்குதுல.

அதுக்கு என்ன செய்றது?

எனக்கும் தெரியல.

உங்க அம்மாக்கிட்டச் சொல்லி மருந்து போடச் சொன்னியா?

அவங்க மருந்து போடுறேன்னு தேய்ச்சி விட்டதுல இன்னும் வீங்கிடுச்சு டாடி.

சரி விடு. நான் சொல்றேன்.

அதோட இன்னொன்னையும் சொல்லிடுங்க.

என்ன அது?

எனக்கு மொட்டை போட்ட சமயத்துல தாத்தா ஒரு கைச்செயின் கொடுத்தாங்களாம். அது என்னுட்டு தானே. அதை எடுத்துத் தரச் சொல்லுங்க.

இப்ப அதெல்லாம் நீ யூஸ் பண்ணக் கூடாது. உனக்கு எப்ப தரணுமோ அப்ப தருவோம்.

அத யூஸ் பண்ணுறதுக்குக் கேக்கல டாடி. பார்த்துட்டு தரத் தான் கேட்டேன்.

பார்க்கிறதுக்குன்னா உங்க அம்மா தந்திருப்பளே,

தரமுடியாதுன்னுட்டாங்க. அந்த சமயத்துல எடுத்த போட்டோவுல பார்த்து தெரிஞ்சுக்கன்னு சொல்லிட்டாங்க. போட்டோவுல பார்த்தா தெளிவா தெரியாதுல டாடி.

சரி. நீ என்ன கேட்டு வச்சிருக்கேன்னு எனக்குத் தெரியல. எதுக்கும் உங்க அம்மாக்கிட்ட சொல்லிப் பார்க்கிறேன்.

சொல்லிலாம் பார்க்காதீங்க. சொல்லிடுங்க.

Thursday, 12 May 2016

அன்பென்னும் ஆயுதம்!

இவ்வுலகில் இன்று பலருக்கும் கிடைக்காத விசயமாக பலரும் ஏங்கக்கூடிய விசயங்களில் ஒன்றாக இருப்பது அன்பு தான்! விலைகொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லாத நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற இந்த அன்பை நாம் பரிமாறிக் கொள்வதில்லை. ஏதோ ஒரு காரணம் சொல்லிக் கொண்டு பெற்றோர்கள் பிள்ளைகளிடம், உயரதிகாரிகள் தன் சகஊழியர்களிடம், கணவன் மனைவியிடம், மனைவி கணவனிடம், அண்டைவீட்டார்களிடம், சகமனிதர்களிடம் அன்பை வெளிப்படுத்தாமல் முரண்பட்டு நிற்கின்றோம். ”அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்பதை மறந்து போனதன் விளைவாக நம் மனக்கதவுகளோடு நம்மைச் சுற்றியிருப்பவர்களின் மனக்கதவுகளையும் மூட வைத்து விட்டோம். இன்று வீடு தொடங்கி பணியிடங்கள் வரை விரிந்து கிடக்கும் விரிசல்கள் எல்லாமே இதன் வெளிப்பாடு தான்.

அன்பிற்கும், வெற்றிக்கும் என்னய்யா சம்பந்தம்? என கடிந்து கொள்ளாதீர்கள். சம்பந்தம் இருக்கிறது. நன்கு கூர்தீட்டப்பட்ட கத்தியைக் கொண்டு வீட்டில் சமையலுக்கு தேவையான காய்கறியும் வெட்டலாம். ஒரு உயிரைக் காக்கும் அறுவை சிகிச்சையும் செய்யலாம். ஏறக்குறைய அன்பும் கத்தி மாதிரியானது தான். அதை நீங்கள் எங்கு, எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அதன் பலன் கிடைக்கும்.

மனைவியிடம் அன்பை காட்டினால் அது அக்கறையாக மாறும். குழந்தைகளிடம் காட்டினால் பாசமாக மாறும். உறவுகளிடம் காட்டினால் உங்களின் வெற்றிக்கான ஒரு வாய்ப்பாக மாறும். ஒருவழிப்பாதையாக இல்லாமல் இருவழிப்பாதை போல் பலனுக்கு பலன் தரக்கூடிய அன்பை வெறும் வாய் வார்த்தைகளாக சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதை வெளிப்படுத்துவதிலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு கடத்துவதிலும் தான் அது ஆளுமையாக மாறி பலன்களைத் தரும். அப்படி அன்பை ஆளுமையாக மாற்றிக் காட்டியவர் புத்தர்.

ஒருநாள் காட்டில் அவர் தன் சீடர்களுடன் தங்க வேண்டிய சூழ்நிலையாகி விட்டது. அவரோடு அவருடைய சீடர்களும் தங்கினர். இரவில் அவர்கள் உறங்கிய சமயத்தில் அவ்வழியே வந்த ஒரு திருடன் அவர்களிடமிருந்த கிண்ணம் ஒன்றை திருடிக் கொண்டு ஓடினான். தற்செயலாக விழித்துக் கொண்ட ஒரு சீடன் திருடன் கிண்ணத்துடன் ஓடுவதைக் கண்டு புத்தரை எழுப்பினான். கிண்ணம் இருந்த இடத்தைப் பார்த்த புத்தர் அடடா….. அவன் ஓட்டைக்கிண்ணத்தை அல்லவா எடுத்துக் கொண்டு ஓடுகிறான். நீ உடனே அவனை துரத்திச் சென்று இந்த நல்ல கிண்ணத்தைக் கொடுத்து விட்டு வா என்றார். சீடனும் திருடனை விரட்டிச் சென்று பிடித்து புத்தர் கூறியதைச் சொல்லி நல்ல கிண்ணத்தை அவனிடம் கொடுத்த நொடி காலம் காலமாய் திருட்டுத் தொழிலை செய்து வந்த அந்த திருடன் தன் தொழிலையே விட்டுவிட்டு திருந்தினான். புத்தரின் அன்பு ஒரு திருடனை மடைமாற்றி நல்லவனாக்கியது.

காந்தியடிகள் பயணம் செய்து கொண்டிருந்தபோது வழியில் ஒரு தொழுநோயாளி வேதனையில் அவதியுறுவதைக் கண்டார். உடனே அவனருகில் சென்று அவனுடைய புண்ணுக்கு மருந்திட்டு தன் ஆடையிலேயே துடைத்தும் விட்டார். பலரும் தடுத்த போதும் காந்தியடிகள் அவனை சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்து வந்து தன் படுக்கையிலேயே படுக்க வைத்து நாள்தோறும் மருந்திட்டு வந்தார். உங்களுக்கும் அவனுடைய நோய் ஒட்டிக்கொள்ளப்போகிறது என பலரும் கூறியதைக் கேட்ட காந்தி, “இந்த நோயால் இவனுடைய குடும்பம், மனைவி, பிள்ளைகள் எல்லோரும் வெறுத்து ஒதுக்கியதால் தான் வீதிக்கு வந்துவிட்டான். அவனை நாமும் அவர்களைப் போல் ஒதுக்கி விட்டால் எங்கு போவான்” என திருப்பி கேட்டார். இப்படியான அன்பின் வெளிப்பாடான நடவடிக்கைகள் காந்தியை மகாத்மாவாக போற்ற வைத்தது.

தன் இல்லத்து குழந்தைகளுக்காக ஏந்திய கையில் எச்சில் உமிழ்ந்தவனிடம் அன்னை தெரசா காட்டிய அன்பு கலந்த பேச்சு அவனின் அகங்காரத்தை உருவி எறிந்தது. ஆனி என்கின்ற ஆசிரியை காட்டிய அன்பு கண்பார்வையை இழந்து இருளில் மூழ்கிக் கிடந்த ஹெலன் என்ற சிறுமியை விஞ்ஞானியாக்கியது. திரெளபதி கண்ணனிடம் காட்டிய அக்கறை கலந்த அன்பு அவளுடைய மானத்தை காப்பாற்ற உதவியது.  இப்படியான மாற்றங்களை தரக்கூடிய அன்பு என்பதற்கு தனித்த வரையறை ஏதுமில்லை. அது ஒரு வெளிப்பாடு. வெளிப்படுத்தும் முறை. மற்றவர்களிடத்தில் நீ அன்பு செலுத்துகின்றாய் என்றால் அதை அவர்களை புகழ்வதினால் காட்ட வேண்டியதில்லை. அவர்களுக்கு தொண்டு செய்வதன் வழி காட்டு என்கிறார் விவேகானந்தர். அப்படி காட்ட நீங்கள் புத்தனாகவோ, காந்தியாகவோ, தெரசாவாகவோ மாறவேண்டியதில்லை. நீங்களாகவே இருந்து அன்பை அக்கறையுடன் வெளிப்படுத்தினாலே போதும்.

வீட்டில் ஓடித்திரியும் ஒரு குழந்தை ஏதாவது கதவு, கட்டில் தட்டி அழ ஆரம்பித்ததும், குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடி வரும் அம்மா அந்த குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு கால்களை நீவிவிட்டு வலிக்குதாடா செல்லம்….….அம்மா மருந்து போட்டு விடுறேன். வலி போயிடும் என சொன்னவுடன் குழந்தையின் கண்ணில் அருவியாய் ஓடிய கண்ணீர் சட்டென நின்றுவிடும். காரணம் அம்மாவின் அன்பு மட்டுமல்ல. அதை வெளிப்படுத்திய விதம்! இப்படி அன்பை வெளிப்படுத்தும் விதத்தை வளர்ந்து நிற்கும் அம்மாக்களிடம் மட்டுமல்ல வளர்ந்து வரும் குழந்தைகளிடமும் கூட கற்றுக் கொள்ள முடியும். தலைவலிக்குது என படுத்துக் கிடக்கும் மனைவியிடம் மாத்திரை எடுத்துக்க….…..கொஞ்சம் ரெஸ்ட் எடு…………சரியாயிடும் என அன்பை போதனையாக தரும்போது அது தப்பு என்பதைப் போல தலைவலியோடு படுத்துக் கிடக்கும் அம்மாவின் தலையை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு தன் பிஞ்சுக்கரங்களில் தலைவலி தைலத்தை அள்ளி எடுத்து தடவத்தெரியாமல் தடவி அன்பை வெளிக்காட்டி நம்முடைய வெற்றுவார்த்தை போதனைகளை தூக்கி குப்பையில் போடச் சொல்லுகின்ற குழந்தைகள் நமக்கு அன்பை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்ற வித்தையை கற்றுத்தருகின்றனர். நாம் தான் கற்றுக்கொள்வதே இல்லையே!

பரஸ்பர அன்பு என்பது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், துயரங்களின் போது தோள் கொடுத்தல், சந்தோசங்களின் போது அவர்களைக் கொண்டாடுதல் எனபதில் தான் அடங்கி இருக்கிறது. இப்படியான வெளிப்பாடு அமைய வேண்டுமானால் நீங்கள் மற்றவர்களை உங்களைப் போலவே மதிக்கவும், நேசிக்கவும் பழகுங்கள். அவனோ – அவளோ எனக்குரியவர் என்ற எண்ணம் கொள்ளுங்கள். இந்த மனப்பக்குவம் வந்து விட்டால் நீங்களும் புத்தனாக, காந்தியாக, தெராசாவாக மாறமுடியும். அந்த மாற்றத்தோடு அம்மாவைப் போல, குழந்தையைப் போல அன்பை வெளிப்படுத்தும் விதத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு வெற்றி கிடைக்கும் போது உற்சாகம் தரவும், தோல்வி கிடைக்கும் போது தோள் கொடுக்கவும் உதவும்.

நன்றி : பாக்யா வார இதழ்