Monday, 20 June 2016

வாசல்கள் திறந்திருக்கட்டும்!

உங்களுடைய பிரச்சனைகளுக்கு நீங்களே தீர்வு காண்பது ஒரு வகை எனில் உங்களைச் சுற்றியிருப்பவர்கள், உங்களைச் சார்ந்தவர்களிடமிருந்து தீர்வுகளைப் பெறுவது இன்னொரு வகை. தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும்? என்னை விட இவன் அறிவாளியா? என் படிப்பென்ன? இவன் படிப்பென்ன? இவனுக்கெல்லாம் இதைப் பத்தி சொல்ல என்ன அறுகதை இருக்கு? என்பன போன்ற அகங்கார கேள்விகளால் அத்தகைய தீர்வுகளை பல நேரங்களில் பெறாமலே போய்விடுகின்றோம். ஆனால் வெற்றியாளர்களும், அதற்கான முயற்சிகளில் இருப்பவர்களும் ஒரு போதும் அப்படி செய்வதில்லை. தன்னுடைய பிரச்சனைக்கான தீர்வுகளை மட்டுமே அவர்கள் பார்க்கின்றனர். அது யாரிடமிருந்து வருகிறது? யார் சொன்னார்கள்? என்றெல்லாம் பார்ப்பதில்லை.

இன்றைக்கு உலகின் மிகப்பெரிய கார் நிறுவனமான டயோட்டாவின் தொழிற்சாலை இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க விமானங்களின் கடும் தாக்குதலுக்கு உள்ளானது. போர் முடிந்தவுடன் கார் உற்பத்தியை தொடங்க உதிரிபாகங்கள் வாங்க அதிக முதலீடு செய்ய நிறுவனத்தால் முடியவில்லை. இதனால் கார் உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று விழிபிதுங்கி நின்ற நிர்வாகம் ஊழியர்களிடமே அதற்கான யோசனையைக் கேட்டது.

உதிரிபாகங்களை நமக்கு சப்ளை செய்பவர்கள் தினமும் காலையில் தான் சப்ளை செய்கின்றனர். அதனால் அவைகளை முன் கூட்டியே வாங்கி இருப்பில் வைக்கத் தேவையில்லை. உற்பத்தி தொடங்கிய மூன்றாம் நாளில் கார் விற்பனைக்கு சென்று விடும். பணமும் உடனே கிடைத்துவிடும். அதனால் உதிரி பாகங்களை அதிகமாக கொள்முதல் செய்வதற்கு பதில் அன்றைய உற்பத்திக்கு தேவையானவைகளை மட்டும் வாங்கி கையிருப்பில் வைத்துக் கொண்டால் போதும். இன்று உலகம் முழுக்க உள்ள தொழில் நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படும் JUST IN TIME என்ற இந்த வழிமுறையை டயோட்டா நிர்வாகத்திற்கு சொன்னது அங்கு வாசலில் பணிபுரிந்த வாட்ச்மேன்!

இன்னொரு சம்பவம் சொல்கிறேன். சில வருடங்களுக்கு முன் நான் பணிபுரிந்த கம்பெனியின் கிளீனிங் (HOUSE KEEPING) பிரிவில் ஒரு பிரச்சனை. எங்கள் கம்பெனி அரசு அலுவலகங்களில் துப்புரவு செய்யும் பணியை குத்தகைக்கு எடுத்திருந்தது. எட்டுமணிக்கு தொடங்கும் அலுவலகத்தில் துப்புரவு பணியை ஆறரை மணிக்கே தொடங்கிய போதும் எட்டு மணிக்குள் ஊழியர்களால் அங்கு வேலையை முழுமையாக செய்து முடிக்க முடியவில்லை. இதனால் கம்பெனிக்கு தொடர்ந்து கம்ப்ளைண்ட் வந்து கொண்டே இருந்தது. காரணங்கள் தேடியதில் ஒவ்வொரு டேபிளையும் துடைக்கின்ற ஒரு ஊழியர் அப்படி துடைத்தபின் அந்த துணியை அலசுவதற்காக வாஷ்பேசனுக்கு சென்று வருவதில் நிறைய நேரம் செலவாகிறது என்பது தெரிய வந்தது. பலவித வழிமுறைகள், கூடுதல் கண்காணிப்பாளர்கள், வேகமாக செயல்படுதல் என பலவித முயற்சிகளும் கையாளப்பட்ட போதும் அவைகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. நிலைமையை சமாளிக்கவும், குத்தகையைத் தக்க வைக்கவும் கூடுதல் ஊழியர்களை அங்கு அனுப்ப வேண்டிய நிலை உருவானது. ஆனால் இதற்குக் கட்டாயம் ஒரு தீர்வு இருக்கும் என்பதில் உறுதியாக இருந்த எங்கள் மேலாளர்  அந்த மாதம் நடந்த ஊழியர் கூட்டத்தில் நிலைமையை சொல்லி கூடுதல் ஊழியர்களை அங்கு அனுப்பாமல் இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு வழி இருந்தால் சொல்லலாம் என்ற அறிவிப்பை கொடுத்தார். 

கூட்டத்தில் இருந்து எழுந்த ஒரு ஊழியர், “சார்......நாம் வழக்கமாக டேபிள்களை துடைக்கப் பயன்படுத்தும் துணியை நான்காக மடித்து பயன்படுத்த முடியும். ஆனால் நம் ஊழியர்கள் அதை இரண்டாக மடித்துத் தான் பயன்படுத்துகிறார்கள். இதனால் உள்ளும், புறமுமாக அதை நான்கு தடவை அதாவது நான்கு டேபிள்களை துடைக்க மட்டும் தான் பயன்படுத்த முடிகிறது. அதையே நான்காக மடித்துப் பயன்படுத்தும் போது உள்ளும், புறமுமாக எட்டு தடவை அதாவது எட்டு டேபிள்களை துடைக்கப் பயன்படுத்த முடியும். அதனால் அந்தத் துணியை ஒரு ஊழியர் அலசுவதற்காகச் செல்லும் நேரம் இரண்டு தடவையிலிருந்து ஒரு தடவையாக குறையும். இதன் காரணமாக நிறைய நேரவிரயம் குறைவதால் குறிப்பிட்ட ஊழியர்களைக் கொண்டே அந்த வேலையைச் செய்து முடிக்க முடியுமென்று சொன்னார். எங்கள் மேலாளர் மட்டுமல்ல கூடியிருந்த எல்லா ஊழியர்களிடையையும் ஒரே நாளில் அந்த ஊழியர் ஹீரோவாகிப் போனார். உடனடியாக இந்த யோசனையை நடைமுறைப்படுத்துங்கள் என மேலாளர் உத்தரவிட்டு அந்த ஊழியரை அங்கேயே கெளரவப்படுத்தினார். இந்த யோசனையை சொன்ன ஊழியர் பள்ளிப் படிப்பைக்கூட முழுதாய் முடிக்காதவர்!

மாருதி கார் நிறுவனத்தில் இதேபோல் ஒரு பிரச்சனை. உற்பத்தி செய்து கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கார்களை அங்கிருந்து வெளியே கொண்டுவரும்போது அடுக்கின் உயரத்தை விட வாயிலின் உயரம் ஒரு அங்குலம் குறைவாக இருந்தது. கார்களை உள்ளே ஏற்றும் போது வராத பிரச்சனை வெளியே எடுக்கும் போது வந்ததால் அங்கிருந்த அனைவரும் என்ன செய்வது என தடுமாறினர். அவரவர் தகுதி நிலைக்கேற்ப காரின் மேல்புறம் விழும் கீறல்களை பெயிண்ட் அடித்து மறைத்து விடலாம். வாயிலின் மேற்பகுதியை கொஞ்சம் இடித்து விடலாம் என யோசனை சொல்லிக் கொண்டிருக்க இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த கிடங்கின் காவலாளி அடுக்கில் உள்ள எல்லா கார்களின் காற்றையும் இறக்கி விடுங்கள். பிரச்சனை தீர்ந்து விடும் என்றார். இதைக்கேட்டு அங்கிருந்த மெத்தப்படித்தவர்கள் அசந்து போயினர். காவலாளியின் யோசனைப்படி கார்கள் கிடங்கிலிருந்து வெளியேற்றப்பட்டன.

பல வண்ண வடிவமைப்புகளில் வானைத்தொடும் கட்டிடங்களில் ஓடிக் கொண்டிருக்கும் மின் தூக்கிகள், கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான இயற்கை நறுமணப் பொருட்களை கண்ணாடி குப்பிக்குள் தேங்காய் எண்ணெயுடன் வைத்து விற்பனைக்கு வந்திருக்கும் கூந்தல் தைலங்கள் என எல்லாமே அந்தந்த நிறுவனங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களால் சொல்லப்பட்ட தீர்வுகளின் வழி உருவானவைகள் தான். அதனால் தான் இன்றும் வளர்ந்த, வளர்ந்து கொண்டிருக்கும் பல நிறுவனங்கள் கடைநிலை ஊழியர் தொடங்கி உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள் வரை FEED BACK என்ற பெயரில் மாதம் தோறும் ஆலோசனைகளைப் பெற்று தகுதியானவகளைச் செயல்படுத்தி வருகின்றன.

கில்லெட்டு, சோய்ச்சிரோ போல உங்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நீங்களே தேடுங்கள். முடியவில்லையா? முடங்கிப் போகாதீர்கள். டயோட்டா நிர்வாகம் போல, மேலாளாரைப் போல தீர்வுகளை நாடிச் செல்லுங்கள். மாருதி நிர்வாகம் போல் மற்றவர்களின் கருத்துக்களை காது கொடுத்துக் கேட்கத் தயாராக இருங்கள். உங்கள் பிரச்சனைக்கான தீர்வுகள் தானே உங்களை நோக்கி வர ஆரம்பிக்கும். கேட்க மறுப்பதால் பல நல்ல விசயங்களை இழந்து விடுகிறீர்கள். வாய்ப்புகளை தவற விட்டு விடுகிறீர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு எப்பொழுதும், தீர்வுகளில் கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள் என்று கூறுகிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். செயல்பாட்டின் போது பிரச்சனைகள், தடைகள் வரும்போது அது யாரால் வந்தது? அதற்கு யார் காரணம்? என்பனவற்றையெல்லாம் கண்டறிந்து சம்பந்தபட்டவர்களைத் தண்டிக்கும் மனப்போக்கு கொள்ளாதீர்கள். அத்தகைய மனநிலை உங்களின் நோக்கத்தைச் சிதற வைத்துவிடும். மாறாக அதற்கான தீர்வுகளைக் கண்டறிந்து கடந்து வருவதில் கவனம் செலுத்துங்கள். வெற்றி வசமாகும்.

நன்றி : பாக்யா வார இதழ்

Thursday, 16 June 2016

எதற்காக எழுதுகிறேன்?

எதற்காக எழுதுகிறேன்? என்ற கேள்வியை முன் வைத்து விடை தேட முயன்ற போது அதற்கானக் காரணங்களைத் தேடி மனம் கடந்த காலங்களுக்குள் நுழைய ஆரம்பித்தது. பாரதி எடுத்துக் கொண்ட சுய உறுதி போல ”எழுத்து எமக்குத் தொழில்” என்ற உறுதிப்பாட்டோடு எல்லாம் எழுத வரவில்லை என்ற போதும் எழுத்து எனக்கு வசப்படுவதைக் கண்டடைந்த பருவம் நினைவில் இருக்கிறது. பள்ளிக் காலத்திலேயே வாசிப்புப் பழக்கம் இருந்தது. இலக்கிய வாசிப்பெல்லாம் இல்லை. கையில் கிடைக்கும் புத்தகத்தை, இதழ்களை வாசிப்பது என்ற அளவில் மட்டுமே! கல்லூரியின் இறுதி ஆண்டில் அந்த வருட ஆண்டுமலருக்காக படைப்புகள் கேட்ட போது ஒரு கவிதையை எழுதிக் கொடுத்தது தான் முதல் எழுத்து. அது ஆண்டுமலரில் வந்ததும் நண்பர்கள் சிலாகித்ததைத் தொடர்ந்து எழுதிப் பார்த்த கவிதைகள்  நாட்குறிப்பேட்டிற்குள்ளேயே கிடந்து தவித்தன.

கொஞ்சம் கொத்தாய் சேர்ந்த கவிதைகளை என் தந்தையிடம் வாசிக்கத் தந்த போது அவர் அதை ஒழுங்கு படுத்தி புத்தகமாக்கும் யோசனையைத் தந்ததோடு அவரே அதற்கான முதலீட்டையும் செய்தார். வெளியீட்டு விழா, அறிமுக விழா என அந்த நூல் சார்ந்து அவர் செய்த ஏற்பாடுகளில் கிடைத்த பாராட்டுகளும், பரிசுப் பொருட்களும், கையில் திணிக்கப்பட்ட பணக் கவர்களும் எனக்குள் எழுத்தின் மீது ஒரு வசீகரத்தை உண்டு பண்ணச் செய்திருந்தது.

பத்திரிக்கைகளுக்கு துணுக்குகள் எழுத ஆரம்பித்த சமயத்தில் என் வாசிப்பு தன்னம்பிக்கை நூல்களின் பக்கம் சாய ஆரம்பித்திருந்தது. அதன் உந்துதலில் எழுதிய தன்னம்பிக்கைக் கட்டுரைகள் தொடராக நாளிதழ் ஒன்றில் வந்த போது நண்பர்கள் வட்டத்தில் ஒரு தனித்த அடையாளம் கிட்டியது. போதாதென்று பத்திரிக்கையில் இருந்து வந்த சொற்பத் தொகைக்கான காசோலையும் எழுத்தின் மீதான ஆர்வத்திற்குத் தூபம் போட்ட படியே இருந்தன.

பதிப்பகம் மூலம் புத்தகங்களை வெளியிட்டால் உலகம் முழுக்க நம் பெயர் தெரிந்து விடும் என்ற அந்த வயதிற்கே உரிய ஆசை பதிப்பகங்களைத் தேட வைத்தது. பதிப்பக வெளியீடுகளுக்காகவே புதிய நூல்களை எழுதும் முயற்சியைச் செய்ததில் வெற்றியும் கிடைத்தது.  தீராத ஆசையும், திகட்டாத முயற்சியும் பதிப்பகங்கள் வழி நூல்களைக் கொண்டு வர வைத்தது.  புத்தகம் போட்டதில் நட்டம் என எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில் பணத்தைப் போட்டுக் கையைச் சுட்டுக் கொள்ளாததும், வெளியாகிய நூல்கள் தமிழக நூலகங்களுக்குத் தேர்வான செய்தியும் ஒரு சேர எனக்கு நிகழ்ந்தது. தொடர்ந்து நான்கு நூல்கள் எழுதி வெளியானதுமே  ”ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்” என்ற கதையாய் தொடர்ந்து எழுதும் ஆசை மடை திறந்த வெள்ளம் போல வடிந்து விட்டது. அதன்பின் பல மாதங்கள் ஒன்றுமே எழுதாமல் இருந்தேன்.

அந்தச் சமயத்தில் புதிய வேலை வாய்ப்புகள் தேடியும், பொருளாதாரத் தேவைகளுக்காகவும் நண்பர்கள் வெவ்வேறு ஊர்களுக்கும், அந்நிய நாடுகளுக்கும் செல்லத் தொடங்கினர்.  வாசிப்பும், நண்பர்களுடனான அரட்டைகளுமே எனக்கான பொழுதுபோக்காக இருந்து வந்த நிலையில்  படித்ததை, கேட்டதை, பாதித்தவைகளைப் பகிர்ந்து கொள்ளப் பயன்பட்டு வந்த நண்பர்களின் இடப்பெயர்வு மனதில் பெரும் பாறையாய் கிடந்து அழுத்திக் கொண்டே இருந்தது. இதற்கு ஒரு மாற்றுத் தீர்வாக என் கோபங்களை, சங்கடங்களை, அழுத்தங்களை, சந்தோசங்களை எழுத்தாக்க ஆரம்பித்தேன். எனக்கே எனக்கான எழுத்துக்களாக அவைகள் இருந்தன. எந்தக் கட்டாயமும், வரையறைகளுமின்றி அவைகள் தன் போக்கில் இயங்கிக் கொண்டிருந்த போதும் மனதில் இருந்த அழுத்தம் குறையவில்லை. அப்படிக் குறைய வேண்டுமானால் அதை என்னில் இருந்து வெளியில் கடத்த வேண்டும் என்று தோன்றியது. அப்படிக் கடத்தி விடுவதற்காக படைப்பிலக்கியத்தின் பல்வேறு தளங்கள் எனக்குப் பெரும் உதவியாக இருந்தன. நான் கடந்து போகின்ற, என்னைக் கடத்திப் போகின்ற அனைத்தையுமே கதை, கவிதை, கட்டுரை என பல்வேறு தளங்களில் தொடர்ந்து பதிவு செய்ய ஆரம்பித்ததில் எழுத்து என்னை இன்னும் இறுகப் பிடித்துக் கொண்டது.

என் எழுத்து வெளியீடாக வருமா? வராதா? படைப்பாக அங்கீகரிக்கப் படுமா? அல்லது கேலி செய்யப்படுமா? சன்மானம் கிடைக்குமா? கிடைக்காதா? என்றெல்லாம் நான் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. வாசிக்கிறவனிடம் மாற்றத்தை ஏற்படுத்தியே தீர வேண்டும் என்ற. அவஸ்தை எல்லாம் இல்லாமல் என் எழுத்து எனக்கு வடிகாலாக, கொண்டாட்டத்தைத் தருவதாக இருந்தால் போதும் என்ற மனநிலையோடு மட்டுமே எழுதுகிறேன். சில நேரங்களில் என் படைப்புகளின் வழியாக மற்றவர்கள் என்னோடு உரையாட மாட்டார்களா? எனக் காத்திருப்பதும் உண்டு. அவ்வாறே சில புத்தகங்களைப் படிக்கும் போது இந்த நடையில் எழுதி இருந்தால் நன்றாக இருந்திருக்குமே எனத் தோன்றும். அந்த நடையில் புதிய மற்றும் சரியான தரவுகளைத் தேடி அப்படியாக எனக்கு நானே எழுதி வாசிக்கிறேன். அதையே நூல்களாக்கி மற்றவர்களுக்கும் வாசிக்கத் தருகிறேன். நான் மற்றவர்களோடு உரையாடலுக்கு அமரும் ஒரு திண்ணையாக மட்டுமே இன்றளவும் என் படைப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.  

எழுத்தின் வழியாக வாழ்வாதாரத்துக்குத் தேவையான  பொருளாதாரம் கிடைக்கும் என ஆரம்பகாலத்தில் நான் நம்பியது    தவறு என்பதை எழுத ஆரம்பித்த அடுத்த சில ஆண்டுகளில் கண்டு கொண்டேன். அந்த எதார்த்த நிலையைக் கண்டு கொண்ட பின்பு எழுத்தின் வழி என்ன கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பு முற்றிலும் போய் விட்டது. இந்த எதிர்பார்ப்பற்ற நிலை எழுத்தைக் கட்டற்ற சுதந்திரத்தோடு கையாள்வதற்கு உதவியது,

எதற்காகவும், எவர் பொருட்டும் வலிந்து எழுதவில்லை என்றாலும் என் கோபத்தை, இயலாமையை, சந்தோசத்தை, சங்கடத்தை, சலிப்பை பல்வேறு வகைமைகளில் பிரித்து அடுக்கி மற்றவர்களின் வாசிப்பிற்கேற்ற வகையில் கொடுப்பதற்காக நிறைய மெனக்கெடுகிறேன். அந்த மெனக்கெடல் மூலமாக ஒரு வித திருப்தியான, சஞ்சலமற்ற உணர்வைப் பெற முயல்கிறேன். அந்த முயற்சி நூறு சதவிகிதம் வெற்றி தரவில்லை என்ற போதும் இப்போதைக்கு எனக்கு அது போதுமானதாக இருக்கிறது. அதனால் தான் எழுதியே தீர வேண்டும் என்ற வேட்கை இன்றி எழுதவும், மனம் விரும்பாத பட்சத்தில் எதுவுமே எழுதாமல் வாரக் கணக்கில் சும்மா இருக்கவும் என்னால் முடிகிறது. ஒருவேளை எழுத்து எனக்குள் நிகழ்த்தும் மாற்றத்தை அதன் மூலம் நான் கண்டடைந்து கொண்டிருப்பதை வேறு ஏதேனும் ஒன்றின் வழியாக என்னால் பெற முடியும் என்ற நம்பிக்கை வந்து அது வாய்க்கப் பெருமானால் இன்னும் சந்தோசம் அடைவேன். படைப்பாளியாய் இருக்கும் அவஸ்தையில் இருந்து தப்பிப்பதற்கான அற்புத சந்தர்ப்பமாக அதை எடுத்துக் கொள்வேன். படைப்பாளியும் வாசகனுமாய் பயணிக்கும் இரட்டைக் குதிரைச் சவாரியைக் கைவிட்டு நல்ல வாசகனாய் மட்டும் ஒற்றைக் குதிரைச் சவாரியைச் செய்யவே விரும்புவேன். விரும்புகிறேன். 

நன்றி : பதாகை இணைய இதழ்

Sunday, 12 June 2016

தேவதைகளின் அட்டகாசம் - 9

இன்னைக்கு அபி என்ன செஞ்சான்னு தெரியுமா டாடி?

சொன்னாத் தானே தெரியும்.

நானும், அம்மாவும் பாத்ரூமுக்குக் குளிக்கப் போனோம். இவன் அந்த சைடு நின்னு விளையாடிக்கிட்டு இருந்தான். இரண்டு GIRLS இருக்குற இடத்துல ஒரு BOY க்கு என்ன வேலை? அந்தப் பக்கமா போடான்னு சொன்னேன் டாடி. அதுக்கு அவன் ஒரு BOY இருக்குற இடத்துல இரண்டு GIRLS க்கு என்ன வேலைன்னு சொல்லிட்டு டிரெஸ் எல்லாம் எடுக்காமல் குளிக்கப்போறேன்னு பாத்ரூமுக்குள்ள போய் நின்னுக்கிட்டு எங்களை வெளிய போகச் சொல்லி சண்டை போட்டான் டாடி. 

திருப்பி நீங்களும் சண்டை போட வேண்டியது தானே?

அதெல்லாம் செய்யல. அவன் குளிச்சிட்டு வரும் வரைக்கும் வெயிட் பண்ணிட்டு நிண்டோம்.

இப்ப எங்க அவன்?

ஏங்க?

சொல்லு. உனக்கு என்னடி பஞ்சாயத்து?

என்ன சேட்டை செய்றான்னு தெரியுமாங்க? கடையில கிடக்குற அட்டைப்பெட்டியை எல்லாம் அள்ளிக்கிட்டு வந்து அது செய்றேன், இது செய்றேன்னு வீடு முழுக்க குப்பையா ஆக்குறான். இப்பத்தான் எல்லாத்தையும் கிளீன் பண்ணி முடிச்சேன். திருப்பி அட்டைப்பெட்டி எடுத்துட்டு வரக் கடைக்குப் போயிருக்கான்.

Thursday, 9 June 2016

பிரச்சனைகள் தரும் தீர்வுகள்

தன்னுடைய கடன் சுமை, நோய், வாழ்க்கைச் சிக்கல், தனக்கு பிறர் செய்த நம்பிக்கைத் துரோகம் என எல்லா பிரச்சனைகளையும் மூட்டையாக கட்டிக் கொண்டு அவ்வூரிலிருந்த மகானிடம் ஒருவன் வந்தான். தன் மூட்டையிலிருக்கும் பிரச்சனைகளைச் சொல்லி அவரிடம் அழுது புலம்பினான்.

அவன் கூறியவைகளைக் காது கொடுத்துக் கேட்ட அந்த மகான், “அன்பனே! என்னால் உன் பிரச்சனைகளைக் கேட்க மட்டும் தான் முடியுமேயொழிய வேறு எந்த உதவியும் செய்ய முடியாது. வேண்டுமானால் உனக்கு ஒரு யோசனை சொல்கிறேன். அதோ அந்த அறைக்குள் உன்னைப் போலவே பிரச்சனை மூட்டைகளோடு வந்தவர்கள் தங்கியிருக்கிறார்கள். அங்கு சென்று உன் பிரச்சனை மூட்டையை யாரிடமாவது கொடுத்து விட்டு அவர்களிடமிருந்து வேறு ஒரு சிறிய மூட்டையை பெற்றுக்கொள்ள முயற்சி செய்” என்றார்.

அவனும் அவர் சொன்னபடி செய்வதற்காக அந்த அறைக்குள் நுழைந்தான். அங்கோ இவன் மூட்டையை விடப் பெரிய மூட்டையைத் தலைக்கு வைத்துக் கொண்டு பலரும் படுத்திருப்பதைக் கண்டான். அடுத்த விநாடி எவரிடமும் எதுவும் கேட்காமலே தன் மூட்டையைத் தூக்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான். பிரச்சனைகளே இல்லாமல் இவ்வுலகில் யாரும் இல்லை. பிரச்சனைகளே இல்லாமல் வாழ வேண்டுமென நீங்கள் நினைப்பீர்களேயானால் உங்களால் மிகச் சாதாரண வாழ்க்கையைக் கூட வாழ முடியாது.

பல ஆண்டுகள் அனுபவத்தில் மூத்த விஞ்ஞானிகள் இருந்த போதும் எஸ்.எல்.வி. ப்தாஜெக் என்ற மிகப்பெரிய திட்டத்தின் திட்டஇயக்குனர் பொறுப்பை பேராசிரியர் சதீஷ் தவான் அந்த முப்பத்தொன்பது வயது இளைஞனிடம் கொடுத்தார். ஒரு இராக்கெட்டை உருவாக்குவதும், செயற்கைக்கோளை உருவாக்குவதும் எளிய பணியில்லை என்பதால் என்னால் இதை சரியாக செய்ய முடியுமா? என்ற அச்சம் அந்த இளைஞனிடம் ஏற்பட்டது. அந்த இளைஞனின் தயக்கத்தை புரிந்து கொண்ட தவான், “உனக்கு பிரச்சனைகள் வரக்கூடாதென்றால் நீ எந்த வேலையையும் செய்யாமலிருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே உனக்கு பிரச்சனைகள் வராது, மிகப்பெரிய பணிகளில் எப்போதும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அதை எதிர்கொண்டு பிரச்சனைகள் உன்னை ஆளாமல் அவற்றை நீ ஆளப்பார்க்க வேண்டும். அச்சமின்றி அதை எதிர் கொள்ள வேண்டும்” என்று அறிவுரை கூறினார். அந்த அறிவுரையைப் பெற்ற அந்த இளைஞன் அதன்பின் தன்னுடைய முயற்சிகளை நோக்கி வந்த பிரச்சனைகளை எல்லாம் தூள் தூளாக்கி அளவிட முடியாத உயரங்களை தொட்டான். அந்த இளைஞன் “அக்னி” தந்த அப்துல்கலாம்!

உங்களுடைய இலக்கை அடையும் முன்னேற்றத்தில் ஏற்படக்கூடிய தடைகளைக் கண்டு தேங்கி விடாமல் தொடர்ந்து முன்னேறுங்கள். ஒருபோதும் அத்தகைய முயற்சிகளிலிருந்து பின்வாங்காதீர்கள். இத்தகைய செயல் சார்ந்த நடவடிக்கைகள் தான் உங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். நவகாளி யாத்திரையின் போது காந்தியும், நேருவும் சென்று கொண்டிருந்த பாதையில் ஒரு சிறு கால்வாய் குறுக்கிட்டது. நேரு சற்று தூரம் பின்னால் சென்று ஓடிவந்து கால்வாயைத் தாண்டினார். ஆனால் காந்தியோ அப்படி செய்யாமல் கால்வாயின் நடுவில் கிடந்த ஒரு கல்லின் மீது காலை வைத்து கால்வாயைக் கடந்தார். இதைக் கண்ட நேரு காந்தியிடம், பாபுஜி…..இந்த கால்வாயை உங்களால் தாண்ட முடியவில்லையே என்றார். அதற்கு காந்தி நான் நினைத்திருந்தால் தாண்டி இருக்க முடியும் என்றார். ஏன் நினைக்கவில்லை? என்று நேரு கேட்டதும்” நீ இந்த மூன்றடி கால்வாயைத் தாண்ட ஆறடி பின் வாங்கிச் செல்ல வேண்டி இருந்தது. நான் பின்வாங்கவில்லை. போர் முனையில் பின்வாங்குவது கூடாதல்லவா?” என்றார் காந்தி. வெற்றிக்கான போராட்டமும் ஏறக்குறைய போர்களம் தான்! அதில் ஜெயித்தால் மட்டும் தான் கொண்டாடப் படுவீர்கள். எனவே பிரச்சனைகளை முதலில் இனம் காணுங்கள். பெரும்பாலான பிரச்சனைகள் நீரின் மேல் மிதக்கும் நீர் குமிழிகள் போன்றவை தான். அதை நீங்கள் ஊசியால் குத்தி உடைக்கிறீர்களா? அல்லது வாயால் ஊதி காற்றைக் கொண்டு உடைக்கிறீர்களா? என்பது அந்த நேர மனநிலையை, சூழ்நிலையை சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் அந்த நீர்குமிழிகளை உடைத்துக் கொண்டு முன்னேறிச் செல்வதில் தான் உங்களின் அடையாளமும், வெற்றியும் அடங்கி இருக்கிறது.

கப்பல் வேலைக்கு ஒரு இளைஞன் விண்ணப்பித்திருந்தான். நேர்காணல் அன்று அவனை நேர்காணல் செய்தவர் ”புயல் வருமானால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன் ”நங்கூரத்தை நாட்டுவேன்“ என்றான். அதைவிட பெரிய புயல் வந்தால் என்ன செய்வீர்கள்? என்றார் நேர்காணல் செய்தவர். அப்பொழுதும் நங்கூரத்தை நாட்டுவேன் என்றான் அந்த இளைஞன். இப்படியே அவர்களுக்குள் தொடர்ந்த கேள்வி பதில் உரையாடல் முடிவிற்கு வந்ததன் அடையாளமாய் நேர்காணல் செய்தவர் இவ்வளவு நங்கூரத்தையும் எங்கிருந்து பெறுவீர்கள்? என்றார். அசராத இளைஞன் சட்டென சொன்னான் நீங்கள் எங்கிருந்து அத்தனை புயல்களையும் பெற்றீர்களோ அங்கிருந்து தான் நானும் பெறுவேன். இந்த இளைஞனைப் போன்ற மனநிலை கொண்டவர்களுக்கு செயல் சார்ந்த பிரச்சனைகள் எப்பொழுதும் தடைக்கற்களாக இருப்பதில்லை.  சாதிக்க வேண்டும் – வெற்றி பெற வேண்டும் – தன் வாழ்வில் மாற்றங்களை உண்டாக்கி விட வேண்டும் என நினைப்பவர்களுக்கு பிரச்சனைகள் புதிய, புதிய  வாசல்களை திறக்கும் சாளரங்களாகின்றன. அவர்கள் தங்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கான தீர்வுகள் அந்த பிரச்சனைகளுக்குள்ளேயே ஒளிந்திருப்பதாக நம்புகின்றனர்.

பிரச்சனைகளுக்குள் சிக்கும் போது தான் அதுவரையிலும் சும்மா இருந்த மனம் தேடல்களை துவங்குகிறது. அந்த தேடல்கள் பிரச்சனைகளை புதிய கோணத்தில் அணுக வைக்கிறது. பல புதிய கண்டுபிடிப்புகள் நிகழ இந்த அணுகுமுறை தான் காரணமாக இருந்திருக்கிறது. இருந்தும் வருகிறது.

அந்தக்காலத்தில் மக்கள் சவரக்கத்தி கொண்டு தங்களுக்குத் தாங்களே சவரம் செய்து கொண்டிருந்தனர். அப்படி சவரம் செய்யும் போது ஏற்பட்ட வெட்டுக் காயங்கள் கில்லெட்டிற்கு ரணவேதனையைக் கொடுத்தது. அதேநேரம் சவரம் செய்யாமலும் அவரால் இருக்க முடியாது. வெட்டுக்காயமில்லாத வகையில் சவரம் செய்வதற்கான வழியை அவரது மனம் தேடத் தொடங்கியது. விளைவு - சேப்டிரேசர் என்ற புதிய கண்டுபிடிப்பு உருவானது. இன்று உலகம் முழுக்க விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் கில்லெட்டின் சேப்டிரேசர் ஒரு பிரச்சனைக்கான தீர்வால் உருவானது தான்!

ஒரு காலத்தில் ஆடம்பர பொருளாக மதிக்கப்பட்டு இன்று எல்லோர் வீட்டிலும் அவசியம் இருக்கின்ற பொருளாக மாறிப்போன ஒரு வாகனம் மோட்டார் சைக்கிள். இதைக் கண்டுபிடித்தவர் சோய்ச்சிரோ ஹோண்டா. இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் ஜப்பானில் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் வாகனங்களை இயக்குவதற்கு தேவையான எரிபொருளுக்கு எங்கே போவது? தன்னிடம் ஒரு மோட்டார் வாகனமிருந்த போதும் எரிபொருள் இல்லாததால் அதைப் பயன்படுத்த முடிய வில்லையே என்ற வருத்தம் ஒருபுறமிருக்க, வாகனமில்லாமையால் தினமும் மார்க்கெட்டிற்கு சென்று வருவதும் ஹோண்டாவுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது. என்ன செய்யலாம்? என யோசித்தார். வீட்டில் நின்ற பழைய சைக்கிள் கண்ணில் பட்டது. தன்னிடமிருந்த புல் வெட்டும் இயந்திரத்தில் பொருத்தி பயன் படுத்தக்கூடிய மோட்டரை எடுத்து சைக்கிளில் மாட்டினார். இயக்கி பார்த்தார். மோட்டார் சைக்கிள் உருவானது. அதன் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு தான் இன்றைய ஹோண்டா பைக்!

நம்மில் பலரும் பிரச்சனைகளைக் கண்டு அஞ்சுகிறோம். எனக்கு மட்டும் இப்படி வருகிறதே என் புலம்பிக் கொண்டு மற்றவர்களிடம் பச்சாதாபம் தேட முயல்கிறோம். எப்படியும் அதிலிருந்துந்து தப்பி விட வேண்டும் என மெனக்கெடுகிறோம். ஆனால், உண்மையில் நமக்கு மட்டும் என நாம் நினைப்பதைப் போல இல்லாமல் பிரச்சனைகள் எல்லோருக்குமே இருக்கத்தான் செய்கிறது. அதிலிருந்து நாம் தப்பிப்பதற்கு செய்யும் முயற்சிகளை வெற்றியாளர்கள் அதற்கு தீர்வு காண்பதற்காக செய்கிறார்கள். சராசரிகள் பிரச்சனைகளைக் கண்டு அஞ்சுகின்றனர். சாதிக்க நினைப்பவர்கள் அதை எதிர்கொள்கின்றனர். நீங்கள் எப்படி?

நன்றி : பாக்யா வார இதழ்

Saturday, 4 June 2016

புலம்பல்களை புறந்தள்ளுங்கள்

எனக்கு மட்டும் அந்த ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்நேரம் என்னவெல்லாம் செய்திருப்பேன் தெரியுமா? யாருக்கெல்லாமோ வாய்ப்பு கிடைக்குது. எனக்கு ஒன்னும் அமையவே மாட்டேங்குது……..என புலம்பிக் கொண்டே வருடங்களை நாட்களால் கழித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வாழ்க்கையும் புலம்பல்களாகத் தான் இருக்கும். சாதாரண வாழ்க்கையிலிருந்து விலகி வர வேண்டுமானால் முதலில் இந்த வெற்று புலம்பல்களை ஒதுக்கித் தள்ளுங்கள்.

வெற்றி பெறுவதற்கும், உங்களை மற்றவர்கள் முன் அடையாளப்படுத்திக் கொள்வதற்குமான சூழலும், வாய்ப்புகளும் தானாக அமையாது. சிலருக்கு அப்படியான வாய்ப்புகள் கிடைத்திருக்கலாம். ஆனால், பெரும்பாலான வாய்ப்புகளும் அதற்கான சூழலும் சம்பந்தப்பட்டவர்களால் அமைத்துக் கொள்ளப்படுகின்றன என்பதே உண்மை. இந்த உண்மையை, எதார்த்தத்தை உணராமல் உட்கார்ந்திருப்பீர்களேயானால் காலம் உங்களின் கனவுகளை பகல் கனவாக்கி விட்டு போய்விடும்.

குருசேத்திரயுத்தகளத்தில் பீஷ்மரும், துரோணரும் அடுத்தடுத்து பாண்டவர்களால் வீழ்த்தப்பட்டனர். அவர்களையடுத்து கர்ணனை சேனாதிபதியாக்கிய துரியோதனன், ”கர்ணா! எனக்காக போரிடும் உனக்கு எல்லாம் தர நான் கடமை பட்டவன். என்ன வேண்டும் கேள்” என்றான்.

தனக்கும் ஒருநாள் அரச குலத்தில் பிறந்தவனை தேரோட்ட வைப்பேன் என சபதம் பூண்டிருந்த கர்ணன் இந்த சந்தர்பத்தை விட்டால் தன்னுடைய சபதத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாது என நினைத்து அந்த சூழலை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முடிவெடுத்தான். உடனே துரியோதனனிடம் தனக்கு பாண்டவர்களின் தாய்மாமனான சல்லியன் தேரோட்ட வேண்டும் எனக் கேட்டான். அதற்கு சல்லியன் மறுத்து பேசுவது ஒருபுறமிருக்க அந்த சமயத்தில் கர்ணனின் உதவி தேவை என்பதால் துரியோதனனே சல்லியனிடம் சமாதானம் பேசி தேரோட்ட அனுப்பி வைத்தான். இது சந்தர்ப்பவாதமில்லையா? இப்படி செய்தது முறையா? என்றெல்லாம் மண்டையை போட்டு உடைத்துக் கொள்ளாதீர்கள். அது நமக்குத் தேவையில்லாத ஒன்று. வாய்ப்பு இருக்கு என்றதும் அதை சிக்கென பிடித்துக் கொண்ட கர்ணனின் செயல் தான் இங்கு கவனிக்கப் படவேண்டியது. அந்த வாய்ப்பை தவறவிட்டிருந்தால் கர்ணனுக்கு வேறு சந்தர்ப்பம் வாய்த்திருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். கர்ணனைப் போலவே தனக்கு கிடைத்த வாய்ப்பை சிக்கென பிடித்துக் கொண்டவர் லூயி பாஸ்டர்!

வெறிநாய்கடி நோய்க்கு மருந்து கண்டுபிடித்து அதை முயலுக்கு கொடுத்து வெற்றி கண்ட லூயி பாஸ்டர் அதை மனிதர்களுக்கு எப்படி கொடுத்து பார்த்து சோதிப்பது என்று யோசனை செய்து கொண்டிருந்தார். அச்சமயத்தில் ஜோசப் மெய்ஸ்டர் என்ற ஒன்பது வயது சிறுவனுக்கு வெறிநாய் கடித்து அவன் சாகும் நிலையில் இருந்தான். இதைக் கேள்விபட்ட லூயி பாஸ்டர் தான் கண்டுபிடித்த மருந்தை அந்த சிறுவனுக்கு கொடுத்து சோதித்து பார்க்க அனுமதி கேட்டார். அந்த சிறுவனுக்கு ஏதாவது நிகழ்ந்தால் தனக்கு மரண தண்டனை தான் கிடைக்கும் என்பதை அறிந்திருந்த போதும் தான் கண்டுபிடித்த மருந்தை மனிதனுக்கு கொடுத்து சோதித்து பார்ப்பதற்கு இதை விட ஒரு நல்ல வாய்ப்பு வராது என நினைத்தார். வாழ்வா? சாவா? என்ற நிலையிலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை லூயி பாஸ்டர் தவற விட விரும்பவில்லை. அந்த வாய்ப்பு தான் அவருக்கும், அவருடைய கண்டுபிடிப்புக்கும் உலகப்புகழைப் பெற்றுத் தந்தது.

சொந்த அனுபவம் ஒன்று சொல்கிறேன். அதிக சிக்கல் நிறைந்த இடத்தில் செய்ய வேண்டிய வேலை என்பதால் கூடுதல் வேலையாட்கள் தேவைப்படுவார்கள், வேலைக்குத் தேவையான மூலப் பொருட்கள் அதிகம் செலவாகும், வளர்ந்து வரும் நிறுவனம் என்பதால் பணப்பட்டுவாடா உடனே இருக்காது என அடுக்கப்பட்ட காரணங்களால் அந்த நிறுவனம் கொடுத்த வேலைக்கான ஒப்பந்தத்தை எடுக்காமல் சில பெரிய நிறுவனங்கள் ஒதுங்கி விட்டன. அந்த சமயத்தில் நான் பணிபுரியும் நிறுவனத்துக்கு அந்த வேலையை செய்ய முடியுமா? என கேட்டு கடிதம் வந்தது. அது சம்பந்தமாக நடத்தப்பட்ட கலந்தாய்வில் மற்ற நிறுவனங்கள் அந்த வேலையை எடுக்காததற்கு சொல்லப்பட்ட காரணங்களை போலவே பல காரணங்களை சம்பந்தப்பட்ட வேலை சார்ந்த எங்கள் நிறுவன நிர்வாகிகளும் சொன்னார்கள். எல்லாவற்றையும் கேட்ட எங்கள் பொதுமேலாளர் அந்த வேலையை நாம் செய்யலாம் என முடிவு செய்தார். வேலையை ஆரம்பித்த போது கலந்தாய்வில் நிர்வாகிகள் சுட்டிக் காட்டியிருந்ததை விடவும் அதிகமான சிக்கல்கள் இருந்த போதும், எதிர்பார்த்த அளவு இலாபம் இல்லாத போதும் அந்த வேலையை செய்து முடித்தோம். அதன்பின் சில மாதங்கள் கழித்து நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பொதுமேலாளர் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்தின் பெயரைச் சொல்லி இனிமேல் அங்கிருந்து தரப்படும் எல்லா வேலைகளிலும் நமக்கு தான் முன்னுரிமை. நாம் வேண்டாம் என சொன்னால் மட்டுமே அடுத்த நிறுவனங்களுக்கு வாய்ப்பு தரப்படும் என அவர்களின் சேர்மன் மீட்டிங்கில் முடிவு செய்திருக்கிறார்கள். அன்று நாம் அந்த வேலையை இலாபம் குறைவு என சொல்லி செய்து தந்திருக்காவிட்டால் நமக்கு இன்று இந்த முன்னுரிமை கிடைத்திருக்காது என்றார். இன்று நான் பணிபுரியும் நிறுவனத்தின் இலட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள வேலைகள் அந்த நிறுவனத்தால் வழங்கப்பட்டவைகள் தான்! தங்களுக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு விட்டோமே என்று இன்றும் மற்ற நிறுவனங்களின் மேலாளர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன் எப்பொழுதும் விழிப்போடு இருங்கள்.

அப்போதைக்கு என்ன கிடைக்கும் என்று மட்டும் யோசிக்காமல் தொலைநோக்கு சிந்தனையோடு எதையும் அணுகுங்கள். அப்போது தான் உங்களுக்கான வாய்ப்புகளை பெறவும், உருவாக்கிக் கொள்ளவும் முடியும். வெற்றியை தொடர்ந்து தக்க வைப்பதற்கு இது மிகவும் அவசியம்.

நீங்கள் சொல்வதெல்லாம் சரி. ஆனால் எனக்கு அப்படியான ஒரு சூழலும் வரவில்லையே என்கிறீர்களா? கவலையை விடுங்கள். அதற்காக காத்திருங்கள். அந்த காத்திருக்கும் நேரத்தில் உங்களை வளப்படுத்திக் கொண்டே இருங்கள். உங்களின் இலக்கு சார்ந்த பயணத்திற்கு தேவையான அனுபவங்களைப் பெறுங்கள். அந்த அனுபவ சேகரிப்பு என்பது நீங்கள் எதில் வெற்றி காண, சாதிக்க விரும்புகிறீர்களோ அதில் இருக்க வேண்டியது முக்கியம். அப்பொழுது தான் அதை உங்களின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதனால் தான் வெற்றியாளர்களாக அடையாளப்படுத்தப் படுபவர்களின் ஆரம்ப காலம் அவர்கள் ஜெயித்த துறையிலேயே தொடங்கி இருக்கும்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு வரையிலும் ஏ.ஆர். ரகுமான் இசை சார்ந்த துறையான விளம்பர துறையில் செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஓபராய் தன்னுடைய ஹோட்டல் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்புவதற்கு முன் சிம்லாவின் சிசிலி ஹோட்டலில் தன் பணியை செய்து கொண்டிருந்தார். நீங்களும் ஏ.ஆர். ரகுமானைப் போல. ஓபராயைப் போல அனுபவ அறிவை சேகரித்த படியே இருங்கள்.  பரந்து விரிந்த ஏரியில் காத்திருக்கும் கொக்கைப் போல பரந்து விரிந்த உலக வெளியில் நீங்களும் காத்திருங்கள். மேற்சொன்ன மூன்றின் வழி உங்களுக்கான வாய்ப்புகள் கடந்துபோகும் போது தவறாமல் கவ்விப்பிடித்து அனுபவ அறிவின் வழி முன்னேறுங்கள். அது உங்களின் வெற்றி வாசலை மட்டுமல்ல அதிலிருந்தே புதியதொரு வாய்ப்பிற்கான வாசலையும் திறக்க ஆரம்பிக்கும்.

Wednesday, 1 June 2016

உந்துதல் தந்த உபதேசங்கள் - 5

பட்டை தீட்டியும், மெருகேற்றியும் மதிப்புறு ஆபரணங்களாக மாற்றுவதற்கான திறமைகளைத் தேடி அலையாதே. அது உனக்குள்ளேயே இருக்கிறது. எப்பொழுதும் அதைக் கண்டறிவதற்கான விழிப்போடு இரு.

ஒவ்வொருவருக்குள்ளும் பல கதைகள் இருக்கிறது. யார் கதைகளுக்குப் பக்கங்கள் குறைவாக இருக்கிற்தோ அவருடைய வாழ்க்கையைவரம்என சொல்லிக் கொண்டிருக்கிறோம். வரமின்றி எவர் வாழ்வுமில்லை!

பேசுவதற்குத் தயாராவதை விடக் கேட்பதற்கு தயாராகு.

முன்னோக்கி நகர்வதை விட எதை நோக்கி நகர்கிறாய்? என்பதில் கவனமாய் இரு. அப்பொழுது தான் உன் முன் இருக்கும் பிரச்சனைகளைக் கடந்து போவதற்கான வழிகளைக் கண்டறிய முடியும்.

மீன்களைக் குறிவைத்து மட்டுமே வலைகள் வீசப்படுகின்றன. அதில் தக்கைகளும், தனக்குப் பயன்படாதவைகளும் கிடைக்கின்றன என்பதற்காக மறுமுறை மீனவன் வலைகளை வீசாமல் இருப்பதில்லை.

உன்னாலான தேவைகள் குறையும் போது உன்னோடு பயணித்தவர்கள், உடனிருப்பவர்கள் அந்நியப்படும் போது அதை எதிர் கொள்வதற்கான தைரியம் அதன் பொருட்டு உனக்குள் எழும் மனப் போராட்டங்களை முறியடிப்பதில் தான் தொடங்குகிறது.

உன் வண்டியின் அச்சாணியைக் கழற்றி வைத்துக் கொண்டு நிச்சயம் உன்னால் முடியும் என்று நம்பிக்கை தர முயல்பவர்களிடமிருந்து எப்பொழுதும் விலகியே இரு.

சலனமற்று நகரும் நதியின் மீது எப்பொழுதும் கல்லெறிந்து கொண்டே இருப்பது மனித சுபாவம். அதற்காக நதிகள் சலசலத்து எவரையும் மிரள வைப்பதில்லை.

சுமையாய் இல்லை என்பதற்காக எல்லாவற்றையும் தூக்கித் திரிய வேண்டியதில்லை.

எல்லா நேரங்களிலும் உன் புரிதலைப் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. சில சமயங்களில் புரிதலை வார்த்தைகளை விடவும் மெளனம் இயல்பாய் உணர்த்தி விடும்.