Tuesday, 29 November 2016

நழுவும் நங்கூரம்!


காலை வரை தன்னிடமிருந்த சந்தோசம் சர்ப்பமாய் நழுவுவதைப் போலிருந்தது சுமதிக்கு. இப்பவும் கூட அவள் மனம் அதை ஏற்கத் துணியவில்லை.  ஆனால் எல்லா நேரங்களிலும் நிஜம் நினைப்பது போல இருப்பதில்லையே! அப்படித்தான் அவள் விசயத்திலும் இருந்தது. மனம் முழுக்க வெறுமை சூழ்ந்தவளாய் வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருந்தாள். சோபாவின் ஓரத்தில் இருந்த சிறு அலங்கார மேசையின் மீது சட்டமிடப்பட்ட பலகையில் இளங்கோவும் அவளும் காதலர்களாக இருந்த போது எடுத்துக் கொண்ட புகைப்படமும், திருமணத்தன்று எடுத்துக் கொண்ட புகைப்படமும் ஒரு சேர இருந்தது. அந்த மேசையைச் சுத்தம் செய்யும் ஒவ்வொரு முறையும் அதைக் கையில் எடுத்துப் பார்த்து துடைத்து வைத்தது தான் என்றாலும் இன்று அதை எடுத்த போது அவளை அறியாமலயே கைகள் மெலிதாக நடுங்கத் தொடங்கியது, பெருமழைக்கு முன் விழும் சிறு துளி போல அவளின் கண்களிலிருந்து விழுந்த சிறு துளிகள் கையை நனைத்தது.

தன் முந்தானைச் சேலையால் புகைப்படத்தில் இருந்த இளங்கோவின் முகத்தைத்  துடைத்தாள். ஒரு பட்டுச் சேலையின் முந்தானை தான் அவனுடனான சந்திப்பிற்குக் காரணமாக இருந்தது. அவர்களின் சந்திப்பு நடந்த முதல் தினம் தீபாவளி. தன் அம்மாவின் வற்புறுத்தலால் வழக்கமான ஆடையை அணியாமல் பட்டுச் சேலையைக் கட்டிக் கொண்டு தோழியின் வீட்டிற்குச் செல்லப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தாள். யாரோ தன் சேலை நுனியைப் பிடித்து இழுப்பது போல் இருக்க சட்டெனத் திரும்பியவளின் காலருகில் சிரித்த படி கையில் சாக்லெட்டுடன் ஒரு குழந்தை நின்று கொண்டிருந்தது. கன்னத்தில் அதிர்ஷ்டக்குழியும், மலர்ந்த முகமுமாய் நின்ற  அந்தக் குழந்தையைக் கண்ட மாத்திரத்தில்  தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள்,

”சிபி” என்ற குரல் அவளின் கவனத்தைத் திருப்பியது. அவளிடமிருந்து தாவிய குழந்தையை இரு கைகளையும் ஏந்தித் தன் பக்கமாக வாங்கிக் கொண்டவன்   இளங்கோ எனச் சொல்லி அறிமுகம் செய்து கொண்டான், அவளும் சுமதி என கைநீட்டினாள். தீபாவளி வாழ்த்துகளைச் சொன்னவன் நிறுத்தத்தில் வந்து நின்ற அங் மோ கியோ செல்லும் பேருந்தில் ஏறினான். தான்  செல்ல வேண்டிய பேருந்து நிறுத்தம் வழியாகத் தான்  அந்தப் பேருந்தும் செல்வதால் அவளும் அதே பேருந்தில் ஏறினாள்.

விடுமுறை தினம் என்பதால் நிறைய கூட்டம். கிடைத்த இருக்கையில் அமர்ந்தவள் அவன் கையில் இருந்த குழந்தையை வாங்கி மடியில் வைத்துக் கொண்டு அரைகுறையாக பிரிக்கப்பட்டிருந்த சாக்லெட் உறையை நன்றாக நீக்கி  தின்பதற்கு வசதியாய் கையில் கொடுத்தாள். இதைக் கவனித்துக் கொண்டு வந்த இளங்கோ இப்ப மட்டும் ஒரு ஐந்து சாக்லெட்டாது தின்றிருப்பான் என்றான்.

இளங்கோ சிரித்த போது அவனுக்கும் கன்னத்தில் அதிர்ஷ்டக்குழி விழுந்தது. அவனின் வசீகரம் அவளுக்குப் பிடித்திருந்தாலும் இந்தக் குழந்தையின் அப்பாவாக இருப்பானோ? என்ற நினைப்பும் வந்து நின்றது. குழந்தையின் அம்மா வரலையா? எனக் கேட்க மனம் விரும்பினாலும் சிறுநிமிட சந்திப்பில் அப்படிக் கேட்பது சரியல்ல என நினைத்தாள்.

என்ன சிபி ஆண்ட்டி டிரெஸ்சை எல்லாம் அழுக்குப் பண்ணிக்கிட்டு எனச் சொல்லிக் கொண்டே அவள் தோளில் இருந்த குழந்தையின் கையை உயர்த்திப் பிடித்தவன், “சாரி…….சாரி……..சாக்லெட்டை சேலையெல்லாம் இழிவிட்டான். துடைச்சுக்கோங்க” என தன் பாக்கெட்டில் இருந்த கைக்குட்டையை எடுத்துக் கொடுத்தான், முதுகுக்குப் பின் கையைக் கொண்டு சென்று துடைக்க அவள் சிரமப்பட கைக்குட்டையை வாங்கி அவனே துடைத்து விட்டதோடு அவளிடமே திருப்பித் தர அவளும் வாங்கிக் கொண்டாள். சாக்லெட் தின்ற வடுவும், வாயுமாய் இருந்த குழந்தையின் கையையும், வாயையும் தன்னிடமிருந்த டிசு பேப்பரால் துடைத்துக் கொண்டே, ”குழந்தை தானே செய்தான். பரவாயில்லை” என்றாள்,

சில நிறுத்தங்கள் தாண்டி வந்த நிறுத்தத்தில் இளங்கோ குழந்தையுடன் இறங்கினான். அவன் இறங்கிய பின்னரே தன் கையில் அவனுடைய கைக்குட்டை இருப்பதைக் கவனித்தாள். தனக்குள்ளேயே சிரித்த படி கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள். சில தினங்களுக்குப் பின் தேக்கா மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தவளின் கவனத்தைச் சுமதி என்ற குரல் திசை திருப்பியது. குரல் வந்த திசையில் அவளுக்கு எதிர்புறத்திலிருந்து கேரி பேக்கோடு இளங்கோ வந்து கொண்டிருந்தான். இரண்டாவது சந்திப்பு எதிர்பாராத சந்திப்பாய் அமைய பரஸ்பர வணக்கங்களுக்குப் பின் சிபி வரலையா? எப்படி இருக்கார்? என்றாள்,

இல்லைங்க. நான் மட்டும் தான் வந்தேன். வாங்களேன் ஒரு காபி குடிக்கலாம் எனத் தொலைக்காட்சி விளம்பர பாணியில் அவன் அழைக்க மறுப்புச் சொல்லாமல் சென்றாள். அவளின் ஆடையை சிபி அழுக்காக்கியதற்காக இன்றும் மன்னிப்புக் கேட்டான். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவனைப் பற்றி அறிந்து கொள்ள நினைத்தாள். அவனோ வேறு பல விசயங்கள் பேசுவதில் ஆர்வம் காட்டினான். ஆனாலும் தன் முயற்சியிலிருந்து பின் வாங்காதவளாய் சிபிக்கு எத்தனை வயசு? என்றாள். இரண்டரை வயசு. எங்கள் குடும்பத்துச் செல்லப்பிள்ளை. தவமிருந்து வரமாய் வந்தவன் என்றான்.

தவமிருந்தா? என்றாள் நக்கலாய்.

ஏங்க அதுக்காக காட்டுக்குப் போய் தவமா இருக்க முடியும்? ஒரு பேச்சுக்கு அப்படிச் சொல்றது தான்! என் அக்காவுக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகளாக குழந்தை இல்லை. அக்காவும், மாமாவும் மருத்துவத்தை நாட அப்பாவும், அம்மாவும் கோவில், கோவிலாய் நடக்கப் பிறந்தவன். அதனால் எப்பொழுதும் வீட்டில் செல்லப்பிள்ளை.

உங்களுக்குத் திருமணம்………என அவள் முடிக்கும் முன்பே இல்லை என்று இவன் சொன்ன பதிலில் அவளுடைய முகம் கிழக்கு நோக்கிய சூரியகாந்தியானது.

அதன் பின்னர் நாள் தவறாது அலைபேசியில் உரையாடிக் கொண்ட போதும் வார இறுதி நாட்களில் தேக்காவிலோ அல்லது ஏதாவது மால்களிலோ சந்தித்துக் கொண்டனர். பெரும்பாலான விசயங்களில் இருவருக்குமான ரசனைகள் ஒரே மாதிரியாக இருந்ததால் தொடர் சந்திப்புகளும், உரையாடல்களும் அவர்களுக்குச் சுவராசியமாகவே இருந்தது. தவிர, இளங்கோவின் குணம், பழக்க வழக்கங்கள் பிடித்துப் போக ஓராண்டாகப் பழகிய நட்பைக் காதலாக மாற்ற முடிவு செய்தாள், “காதல்” எனப் பெயரிட்டு தன் விருப்பத்தை அவனிடம் அவள் கொடுத்த போது அவனும் மறுக்கவில்லை. இரு வீட்டார் சம்மதத்துடன் நிகழ்ந்த திருமணத்திற்குப் பிந்திய இல்லறத்தில் சந்தோசத்திற்கும் குறைவிருக்கவில்லை.

திருமணத்திற்கு முன்பு பணி செய்த நிறுவனத்தில் ஒரு பிரிவிற்கு மட்டுமே மேலாளராக இருந்த இளங்கோவுக்குத் திருமணத்திற்குப் பின் பொதுமேலாளராகப் பதவி உயர்வு கிடைத்தது. அவன் உள்பட எல்லோரும் நீ வந்த நேரம். என அவளைப் புகழ ஆரம்பித்தனர். அந்த சமயத்தில் ஷாப்பிங்கிற்காக செலவழித்திருந்த நேரம் தான் அவர்கள் இருவரும் வெளியில் ஒன்றாகச் சேர்ந்து செலவிட்ட அதிகபட்ச நேரமாக இருந்தது. அதன் பின் ஏறக்குறைய ஒன்றரை வருடமாக வேலைப் பளு எனச் சொல்லிக் கொண்டு வீட்டில் செலவிடும் நேரத்தை நான்கு நம்பர் சீட்டின் அதிர்ஷ்டமாய் சுருக்கிக் கொண்டிருந்தான்.

வாரக்கடைசியில் எங்காவது வெளியில் போகலாமா? என்று எப்பொழுதாவது அவள் கேட்கும் சமயங்களில் ”பார்க்கலாம்” என்ற ஒற்றை பதிலை மட்டும் சொல்வான். ”முடியாது” என்பதை மென்மையாய் அவன் சொல்லும் விதம் தான் அந்த பதில் என்பது பழகிப் போயிருந்ததால் அவளும் அவனிடம் பெரிதாகக்  குறைபட்டுக் கொள்வதில்லை.

கடந்த இரண்டு மாதங்களாய் எப்படி இருந்த இளங்கோ இப்படி ஆயிட்டானே எனச் சொல்லும் படியாக அவனின் நடவடிக்கைகளில் சில மாற்றங்களை உணர்ந்தாள். அலுவலகத்தில் இருந்து விரைவிலேயே வீட்டிற்கு வருவதும், அவளோடு அதிக நேரங்களைச் செலவழிப்பதுமாக இருந்தான். சில நாட்களில் அலுவலகமே செல்லாமல் வீட்டில் இருந்த படியே கோப்புகளைப் பார்த்து வந்தான். பல நேரங்களில் தன் அறைக்குள்ளேயே அமர்ந்திருப்பான். தனிமையில் இசை கேட்கிறேன் என அவன் சொன்னாலும் இசை கேட்பதாய் சொல்லிக் கொண்டு தனிமையில்  இருக்கிறானோ? என்ற சந்தேகம் வரும் படியாகவே அவனுடைய இறுப்பு அவளுக்குத் தோன்றும். கேட்டால் ஒன்றுமில்லை என மழுப்பி விட்டு அவள் அருகில் வந்து அமர்ந்து கொள்வான். வழக்கத்திற்கு மாறான அவனின் நடவடிக்கைகள் உள்மனதில் புலப்படாத கலக்கத்தை அவளுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தது.

ஒரு நாள் வருமான வரிப் பிரச்சனைக்காக தன் பெயரில் உள்ள பங்குகளை எல்லாம் உன் பெயருக்கு மாற்ற வேண்டும் எனச் சொல்லி பெயர் மாற்றம் செய்வதற்கான படிவத்தில் அவளின் கையெழுத்தை வாங்கியவன் அதற்கடுத்த நாள் வங்கிக்கு அழைத்துச் சென்று அனைத்துச் சேமிப்புகளிலும் அவளை வாரிசுக்குரியவளாய் உறுதி செய்தான். வேலைக்குச் சேர்ந்த காலத்தில் இருந்தே சுய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்பது அவனுடைய கனவு. பொது மேலாளர்  பதவிக்குத் தேர்வான பின்பும் கூட சுயதொழில் விருப்பத்தை விடாமலே இருந்தான். அதற்காக இந்தியாவில் தன் அப்பா வழி வந்த குடும்பச் சொத்துக்களை எல்லாம் விற்றும், தன் தந்தைக்கு அங்கு கிடைத்த  பணி நிறைவுத்தொகையை டாலராக மாற்றியும் இங்குள்ள வங்கியில் முதலீடு செய்து வைத்திருந்தான்.

முன்பெல்லாம் அதுபற்றி அவளிடம் அடிக்கடிப் பேசுவான். சமீபத்தில் அப்படிப் பேசியது குறைவு என்பதை விட அதில் அவன் ஆர்வம் இல்லாமல் இருப்பது போல அவளுக்குத் தோன்றியது. ஒருநாள் அது பற்றி அவள் கேட்டபோது இப்ப இருக்குற வேலையைப் பார்க்கவே நேரம் சரியா இருக்கு கொஞ்ச காலம் போகட்டும். செய்யலாம் எனச் சொல்லி இருந்தான். ஆனால் இன்று அந்தப் பெருந்தொகையையும் தன் வங்கிக் கணக்கிற்கு அவன் மாற்றியதைக் கண்டதும் “ஏங்க சொந்தக் கம்பெனி ஆரம்பிக்கனும்னு தானே உங்க பேருல சேமிச்சு வச்சீங்க. இப்ப என் பெயருக்கு ஏன் மாத்துறீங்க? வேற எதுவும் பிரச்சனையா? இவ்வளவு அவசரமாய் ஏன் இதெல்லாம் செய்றீங்க?” என்ற அவளின் கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை. தொடர்ந்து அவள் வற்புறுத்திக் கேட்டதும் யார் பெயரில் இருந்தா என்ன? என் பெயர் இருந்த இடத்தில் உன் பெயரும், உன் பெயர் இருந்த இடத்தில் என் பெயரும் இருக்கிறது. அவ்வளவு தான். ஒன்னும் ஒரி பண்ணாதே என அவள் தலையைத் தடவிக் கொடுத்தவனின் முகத்தில் ஏதோ ஒன்றை இறக்கி வைத்த திருப்தி.

மறுநாள் அலுவலகம் சென்றிருந்தவனின் அறையில் திறந்திருந்த அலமாரியைச் சாத்துவதற்காக சென்றவள் கீழ் தட்டில் ஒரு வண்ணக் காகித உறையில் தன் பெயர் எழுதியிருப்பதைக் கண்டாள். ஒட்டப்படாமலிருந்த அந்தக் கடித உறையினுள்  இன்னும் முழுதாய் எழுதி முடிக்கப்படாமல் இருந்த கடிதத்தோடு  வீடு, கார், வங்கி இருப்பு ஆகியவைகளின் விபர அட்டவணையும் இணைக்கப்பட்டிருந்தது. கடிதத்தை வாசிக்க, வாசிக்க அவளின் தொண்டைக் குழிக்குள் தக்கை ஒன்று வந்தமர்வதைப் போல் உணர்ந்தாள், மருத்துவர் சொல்லி இருக்கும் கெடுவுக்கு இன்னும் சில…….. என்ற வரியோடு முடிக்கப்படாமல் இருந்த கடிதத்தின் கடைசி வரியை வாசித்து முடித்தவள் சுனாமியில் சிக்கிக் கொண்டவளைப் போல அலறினாள். அவளின் அலறல் அவளைத் தவிர யாருமற்றிருந்த அந்த வீட்டுச் சுவரில் பட்டு  அவளிடமே திரும்பியது.

கண்களின் வெளிச்சத்தை கண்ணீர் மறைக்க எடுத்த இடத்திலேயே கடிதத்தை வைத்து விட்டுக் கூடத்தில் இருந்த சோபாவில் வந்து அமர்ந்தாள். மடியில் வைத்திருந்த அவளும், அவனுமாய் இருக்கும் புகைப்படத்தின் மீது அவளின் கண்ணீர் துளி பட்டு நாலாபுறமும் சிதறியது.

அலுவலகத்தில் இருந்து திரும்பும் அவனின் வருகைக்காக எப்பொழுதும் அன்பின் ஈரம் கசியக் காத்திருக்கும் அவளின் கண்கள் இன்று கண்ணீர் கசிய வாயிலை நோக்கிக் கொண்டிருந்தது. தன் முகத்தில் இருக்கும் வழக்கமான புன்னகை இல்லாதிருப்பதைப் பார்த்து அவன் சந்தேகப்பட்டு விடக்கூடாது. தனக்குத் தெரியாது என நினைத்திருப்பவனின் மனதில் சந்தேகத்தை உண்டு பண்ணி அவனை இன்னும் குலைய வைத்து விடக்கூடாது என அவளின் புத்தி எச்சரித்த போதும் மனம் அதற்கு உடன்பட மறுத்து முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது. இந்தச் சூழலை வென்று தான் ஆக வேண்டும். அப்பொழுது தான் அவனோடு இன்னும் இணக்கமாய், இயல்பாய் இருக்க முடியும் என நினைத்தவள் புற்றுநோய் முற்றிய நிலையில் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பவனை எதிர் கொள்ளும் தைரியத்தைத் தனக்குத் தருமாறு இறைவனைப் பிரார்த்திக்கத் தொடங்கினாள். மயான அமைதி சூழ ஆரம்பித்திருந்த அந்த வீட்டு வாசலில் வந்து நின்ற இளங்கோவின் நிழல் அவளின் மடிவரை நீண்டிருந்தது.. 

Sunday, 27 November 2016

சேலத்தில் இருந்து சேலத்திற்கு.....


படைப்பாளி தரும் படைப்பை பட்டி, டிங்கரிங் பார்த்து செழுமைப்படுத்துவதற்கான அனுமதியை அவரிடம் வாங்கி நூலாக்குவது ஒரு வித அவஸ்தை என்றால் அதை விட பெரிய அவஸ்தை அதற்கான வெளியீட்டு விழாவை நடத்துவது! ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கே நாக்குத் தள்ளி விடும் சூழலில் நண்பரும், கவிஞருமான ஏகலைவன் பதினைந்து புத்தகங்களுக்கான வெளியீட்டு விழா ஏற்பாடுகளை  முன்னெடுத்திருந்தார். அலைபேசியில் பேசுந்தோறும் அது பற்றிய முன்னெடுப்புகளைச் சொல்லிக் கொண்டிருந்தவர் தீபாவளித் திருநாளன்று  மகனோடு மத்தாப்பு கொழுத்திக் கொண்டிருந்த சமயத்தில் அழைத்தார். மேடையில் வெளியீடு காணும் நூல்களில் ஒன்றின் முதல் பிரதியை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியுமா? எனக் கேட்டார். அந்த அளவுக்கு நம்ம ஒர்த்தா? என உச்சந்தலையில் ஒரு மத்தாப்பு எரிந்தது. பிகுவெல்லாம் பண்ண வேண்டாம் என மனசு எச்சரிக்க மறுதலிக்காது ஒப்புக் கொண்டேன்.

விழா நாள் நெருங்க, நெருங்க தனியே பயணிக்க வேண்டிய துயரம் ஆட்கொண்டது. அதற்காகத் துணைக்கு அனுஷ்கா, நயன்தாராவை எல்லாம் அழைத்துக் கொண்டா போக முடியும்? அதற்கான வசதியும், வளமும் இல்லை. இந்த ஆதங்கம் இருக்கட்டும். துயரத்துக்குக் காரணம் பயண தூரம்! விழா அரங்கில் உட்கார்ந்திருக்கப் போகும் நேரம் மட்டுமே இடைநிறுத்தமாய் எனக்கு இருந்தது. மறுநாள் அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம். தனியே…………தன்னந்தனியே…………என்ற நிலையில் இருந்த பயண மனநிலையை, ”நீங்கள் மதுரையில் இருந்து லேனா சாரோடு சேலம் வருகிறீர்களா?” என்ற குறுஞ்செய்தியில் கொண்டாட்டமாக மாற்றினார் ஏகலைவன்.

”திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குனு மாப்பிள்ளை யோகம் வந்ததாம்” மாதிரி வந்த வாய்ப்பை பிடித்துக் கொண்டேன். விழாவிற்குச் செல்வதற்கு முதல் நாள் இரவில் புதிய நம்பரில் இருந்து வந்த அழைப்பில், ”நான் லேனா பேசுகிறேன். நாளை சரியாக பன்னிரெண்டு மணிக்கு வந்து விடுங்கள். என்னோடு மதிய உணவுக்கு இருக்கப் பாருங்கள். இருவரும் சேர்ந்து சேலம் செல்வோம்” என லேனா சார் சொல்ல அனுஷ்கா, நயன்தாரா துணையெல்லாம் நமத்துப் போக மனம் கொண்டாட்டத்தோடு பயனத்துக்கு ஆயத்தமானது.

மதுரையில் நேரமேலாண்மை பயிற்சி வகுப்பை லேனா சார் முடித்திருந்த நேரத்தில் நானும் அந்த அரங்கிற்குள் என்னை நுழைத்துக் கொண்டேன். பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் அவரைச் சூழ நின்றிருந்தவரின் அருகில் சென்று ஒரு வணக்கத்தை வைத்தேன். கடந்த வருடம் சிங்கப்பூருக்கு வந்திருந்தவரை விமானநிலையத்தில் வரவேற்கச் சென்றிருந்த போது சந்தித்திருந்தேன். சட்டென அடையாளம் கண்டு ”சரபோஜி தானே” என்றார். கட்டணம் செலுத்தி பயிற்சி வகுப்பை முடித்திருந்தவர்களோடு ”ஓசி”யில் நான் மதியச் சாப்பட்டை முடித்துக் கொண்டேன்.

லேனாவுக்கு நானே சாரதியாய் வருகிறேன் என ஓய்வு பெற்ற தாசில்தார் ஒருவர் வர லேனா சாரோடு நானும் இணைந்து கொண்டேன். பயணத்தின் இடையில், “சார்…….…நீங்கள் சொன்ன படி மூன்றை முப்பதாக்கும் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன்” என்றேன். ”வாழ்த்துகள்” என கைகுலுக்குயவரிடம் என் நூல்கள் சிலவற்றை அவர் பார்வைக்குத் தந்தேன். ஆதாரம் முக்கியமில்லையா?

மதுரையிலிருந்து சேலம் வரைக்குமான பயணத்தில் அவர் கவனிக்கும் - கவனித்த விசயங்கள், உடைக்கும், உரைக்குமாய் நிகழ்வுக்கு முன் அவர் தயாராகும் விதம், தன்னோடு பயணிப்பவர்களின் வழி அவர் பெறும் தகவல்கள் என அங்குல அங்குலமாய் அவரின் செயல்பாடுகள் கற்றுத் தந்த பாடத்தை கிரகித்த படியே இருந்தேன். கறுப்புக் கண்ணாடி போடாத லேனா தமிழ்வாணனுடன்! அப்படியே ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா? எனக் கேட்கும் தைரியம் தான் வரவில்லை.

சேலத்திற்குள் நுழைந்ததும் நாங்கள் வந்த வாகனம் ஒத்துழையாமை இயக்கம் நடத்த லேனா சார் ஒரு ஆட்டோ பிடித்து நிகழ்வுக்குச் சென்றார். எங்களின் சாரதிக்கு ஒரு மெக்கானிக் கிடைக்கும் வரைக் காத்திருந்து விட்டு நானும் ஒரு ஆட்டோவைப் பிடித்தேன். அலைபேசி திரையில் அழைப்பிதழைக் காட்டினேன். போயிடலாம் என்றவர் போய்க் கொண்டே இருந்தார். விழா அரங்கிற்கிற்கான வழி தெரியாமல் ஆட்டோ டிரைவர் என்னை உட்கார வைத்து அழைந்து திரிந்தார். விழா அமைப்பாளர்களிடமும், ஏகலைவன் அவர்களிடமும் வழி கேட்டு வந்து சேர்ந்ததும் ஆட்டோ டிரைவர் கேட்ட வாடகை தான் விழி பிதுங்க வைத்து விட்டது. ”முந்நூற்றி ஐம்பது ரூபாய்” கொடுங்கள் என்றார்.

இராமநாதபுரத்தில் இருந்து சேலத்துக்கு பஸ்ஸிற்கே இவ்வளவு வராதே? ”சேலத்தில் இருந்து சேலத்திற்கு” முந்நூற்றி ஐம்பது அதிகமில்லையா? என்றேன். அதெல்லாம் இல்லை என்பதைப் போல ”முந்நூறாக் கொடுங்க” என்றார். கொடுத்துவிட்டு அரங்கிற்குள் நுழைந்தேன். அரங்கு நிறைந்த கூட்டம் இருந்தது. ”இருக்கைகள் விழாவைக் கண்டு இரசித்தன” என்ற துயரம் நிகழாமல் இருந்தது ஏகலைவனின் அன்பிற்கும், முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகவே எனக்குப் பட்டது.

முகநூலில் மட்டுமே நண்பர்களாக அறிமுகமாகியும்,  அளவளாவியும் கொண்டிருந்த சேலம் தோழமைகளைச் சந்தித்துப் பேசிய பின் விடைபெறும் தருணத்தில் வரலாறு முக்கியம் என்பதற்காக ஒரு புகைப்படப் பதிவை எடுத்துக் கொண்டேன். லேனாசாரிடம் “உங்க அச்சு எழுத்துகள் எனக்கிட்ட இருக்கு. உங்க கையெழுத்து வேணும்” என அரங்கில் வாங்கிய ”வீழ்வதற்கல்ல வாழ்க்கை” என்ற அவரது நூலை நீட்டினேன். அவர் கையொப்பம் இட்டுக் கொண்டிருந்த போது அருகில் நின்ற ஒருவர் லேமினேசன் செய்த ஒரு சிறு துண்டுச்சீட்டை எடுத்து நீட்டினார். லேனா சாரோடு நானும் அசந்து போனேன். முன்னெப்போதோ இது மாதிரியான ஒரு நிகழ்வில் அவர் கையொப்பமிட்டுக் கொடுத்த சிறு காகிதம் அது! இப்படியான மனிதர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். நமக்கெல்லாம் அப்படியான மனிதர்கள் அமைவதில்லை. நாமும் அப்படி இருப்பதில்லை!

இன்னொரு முறை ஆட்டோ எடுத்து சேலத்தில் இருந்து சேலத்திற்கு முந்நூறு தர வசதி இல்லை என்பதாலும் மூன்று நாளாய் முதுகு வலிக்க வங்கி வாசலில் நின்று வாங்கிய நூறு ரூபாய் தாள்களை இழக்க மனமில்லாததாலும் தெளிவாக பஸ் ரூட் கேட்டுக் கொண்டதில் சேலத்தில் இருந்து சேலம் ஏழு ரூபாயில் முடிய குளிரை துணைக்கு வைத்துக் கொண்டு பிறந்த ஊர் வந்து சேர்ந்தேன்.


Tuesday, 15 November 2016

தேவதைகளின் அட்டகாசம் - 11

ஏன் இப்படி இளைக்கிற?

ஸ்கூல்ல என்னையும், என் ஃப்ரண்டையும் டான்ஸ்க்குச் சேர்த்திருக்காங்க டாடி. ஆனா, முதல்ல ஆடிக்காட்டனும்னு மேடம் சொல்லியிருக்காங்க. அதுனால டான்ஸ் ப்ராக்டிஸ் செஞ்சுக்கிட்டு இருக்கேன்.

அக்காக்கிட்ட கேட்டா அது சொல்லித் தரும்ல.

அது சொல்லித் தருகிற மாதிரி எல்லாம் ஆட முடியாது டாடி. 

ஏன்?

அது ஹிப்பை (HIP) வேக, வேகமா ஆட்டி டான்ஸ் ஆடுது. இலக்கியா ஒன்னும் திங்காமல் ஒல்லிக்குச்சியா இருக்குறதால அப்படி ஆட முடியாது. என்னால அப்படி ஆட முடியல.

வேற மாதிரி மூவ்மெண்ட்ஸ் கேட்க வேண்டியது தானே?

அதெல்லாம் சரியா வராது டாடி. ஆம்பளப்பசங்க ஆடுற மாதிரியான மூவ்மெண்ட்ஸ் பார்த்து நானே ஆடிக்கிறேன்.


Sunday, 13 November 2016

உந்துதல் தந்த உபதேசங்கள் - 6

அடுத்து என்ன செய்யப் போகிறாய்? என்பதற்கான பதில் உன்னிடம் இல்லாது போனதற்காக வருத்தப் படாதே. எதுவும் செய்யாமல் இருக்கப் போவதில்லை என்பதில் திடமாய் இரு. அது போதும்.

நேரத்தின் அருமை தெரியாதவனிடம் வழிகாட்டலைப் பெறக் காத்திருப்பதற்குப் பதி்லாக அதை வேறு வழிகளில் பெறுவதற்கு முயற்சி செய்.

உண்மையற்ற ஒன்றை வெகு இயல்பாய் சொல்ல ஆரம்பிப்பவனிடம் கவனமாய் இரு. அவனுடைய தந்திரங்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உன்னையவும் கூர் பார்க்கக் கூடும்.

உன்னைக் கடந்து போவதற்கும், நீ கடந்து போவதற்குமான வித்தியாசத்தை உணர்ந்து கொள். முன்னது அறிவுரை. பின்னது அனுபவம்.

எந்த வித அக்கறையுமின்றி இருப்பவர்களுடன் இணைந்து வேலைகள் செய்ய நேரும்போது கவனமாய் இரு. அப்படிப்பட்டவர்களால் உன்னுடைய திறன் மீது உனக்கே அவநம்பிக்கை உருவாகலாம்.
செய்கின்ற வேலையில் இருக்கும் கவனம் மீட்டெடுக்க முடியாத வகையில் சிதறுகிறது என எப்பொழுது நினைக்கிறாயோ அப்பொழுதே அந்த வேலையைச் செய்வதிலிருந்து நீயாகவே விலகி விடு,

நிறைகுடம் என்பது சுவராசியமல்ல. குறைகுடத்தைத் தொடர்ந்து நிறைகுடமாக்கும் முயற்சியே சுவராசியம்

காரணமின்றி எவருக்காகவும் காத்திருக்காதே. அதற்காகச் செலவிடும் ஒவ்வொரு நாளும் பனிக்கட்டியின் மீது நின்று கொண்டிருப்பதற்குச் சமம்.

"துயரங்களால் ஆன வாழ்க்கை" -  "துயரங்களைத் தூக்கிச் சுமக்கும் வாழ்க்கை" - இவைகள் இரண்டும் வெவ்வேறானவைஇதில் எந்த வாழ்க்கையை நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்பதை முதலில் அடையாளம் கண்டு கொள்.

உனக்கான வேலையை இன்னொருத்தர் செய்ய சம்மதிக்கும் அதே நேரம் அந்த வேலைக்கான முடிவுக்கு நீயே பொறுப்பு என்பதையும் நினைவில் வைத்துக் கொள்.

Friday, 11 November 2016

படிப்பில் இருந்து வாசிப்பிற்கு

ஆங்கிலத்தில் ரீடிங் (READING) என்ற ஒரு சொல்லைத் தமிழில் பயன்பாட்டு நோக்கில் ”படித்தல்”, ”வாசித்தல்” என்ற இரு சொற்களாகப் பயன்படுத்துகிறோம். இவ்விரு சொற்களும் மிக நுட்பமான வேறுபாடுகளைத் தனக்குள் பொதிந்து வைத்திருக்கின்றது. இதை உணராமலே பயன்படுத்திக் கொண்டிருக்கும் அதேநேரம் இவ்விரண்டிற்குமான  வித்தியாசத்தை அறிவது வாசிப்பு நிலையில் இருப்பவர்களுக்கு  மிகவும் அவசியம்.  

படிப்பதை எல்லோராலும் எந்த மெனக்கெடலுமின்றி செய்து விட முடியும். அதற்கு இருப்பதை அப்படியே ஏற்றுச் செல்வதற்குரிய அளவில் மொழி அறிவு இருந்தால் போதும். படிக்கும் போது அதில் முரண் கொள்ள, வாதிட எந்த வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் இல்லை, அப்படியே இருந்தாலும் அதைச் செய்ய முடியாது. பாடப்புத்தகங்கள், “எப்படி” என்ற வழிகாட்டல்களைத் தரும் புத்தகங்கள் உள்ளிட்டவைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், ஒரு படைப்பிலக்கியத்தை பாடப்புத்தகங்கள், பாட்டுப் புத்தகங்களை படிப்பதைப் போல அணுக முடியாது, காரணம் அது வாசகனுக்குக் கட்டற்ற சுதந்திரத்தைக் கொடுக்கிறது. தன் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறது. அதனால் தான்  ஒரு படைப்பை அப்படியே ஏற்று ஒரு வாசகன் கொண்டாடும் போது இன்னொரு வாசகனுக்கு அது முரணாக எழுந்து நிற்கிறது. ”ஒரு புத்தகத்தை இருவரால் ஒரே மாதிரி வாசிக்க முடியாது. அப்படி வாசித்து விட்டால் புதிய வரலாறே பிறக்கிறது” என்கிறார் ஜிப்ரில். இப்படியான மாறுப்பட்ட எழுச்சியை வாசகனுக்குள் கிளர்த்தக் கூடிய வலிமை இருப்பதாலயே படைப்பிலக்கியத்திற்குள் நுழையும் போதே ”படிப்பு” என்பது ”வாசிப்பு” என்ற நிலைக்கு வந்து விடுகிறது.  இந்த நுட்பத்தை வெளிப்படுத்தும் முகமாகவே படைப்பிலக்கியம் சாராத நாளிதழ் போன்றவைகளை வாசித்துக் கொண்டிருப்பவரைப் பார்க்கும் போது அனிச்சையாகவே பேப்பர் வாசிக்கிறீர்களா? எனக் கேட்காமால் பேப்பர் படிக்கிறீர்களா? எனக் கேட்கிறோம்.

படிப்பைப் போல வாசிப்பை வலிந்த மூர்க்கத்தனமான நிகழ்வின் வழி நிகழ்த்த முடியாது. அது தன்னிச்சையாக நிகழ வேண்டிய விசயம். இந்த இயல்பைக் கட்டுடைக்க எத்தனிக்கும் போது வாசிப்பின் மீது ஒருவித சலிப்பும், அயர்ச்சியுமே மிஞ்சும். புறக்கணித்து விட்டுப் பயணிக்கவே மனம் எத்தனிக்கும். இதன் காரணமாகவே வாசிப்பிற்குச் சூழலும், மனநிலையும் முக்கியம் என அறிவுறுத்துகின்றனர். ஒர் ஆரம்ப கட்ட வாசிப்பாளன் எத்தகைய நூல்களை தன் முதல் வாசிப்பிற்கு எடுத்துக் கொள்ளலாம் என ஆளுமைகள் ஆலோசனைகள் தருகின்றனர்.

மிகத் தீவிர, தேர்ந்த வாசிப்பனுவம் கொண்டவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ”ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்” என்ற சொல்லை இன்று சர்வ சாதாரணமாகப் பலரும் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இப்படிச் சொல்லிக் கொள்வது  ஒரு பேஷனாகி (FASHION) வருகிறது. உண்மையில் இப்படியான வாசிப்போடு பகிரப்படும் கருத்துகளும், எழுதப்படும் விமர்சனங்களும் சம்பந்தப்பட்ட படைப்பை இன்னும் சிலருக்கு அறிய வைக்க வேண்டுமானால் உதவுமே ஒழிய படைப்பின் மீது ஆக்கப்பூர்வமான விவாதத்தை உருவாக்க ஒருநாளும் உதவாது. நுனிப்புல் மேய்ந்து செல்வதை வாசிப்பாகக் கொள்ளாமல் படைப்பை உள்வாங்கி அது தனக்குள் கிளர்த்தியதின் வழி ஏற்றும், முரண்பட்டும் நின்று அதன் பிறகு அந்தப் படைப்பு குறித்துப் பேசுபவனே நல்ல வாசிப்பாளனாகவும், அவன் மூலம் வரும் விமர்சனமே ஏற்கத்தக்கதாகவும் இருக்கும். இருக்க முடியும். அப்படியான வாசிப்பே நல்ல வாசிப்பனுபவத்தையும் அதன் ஊடாகப் புதிய தேடல்களையும் தரும். இவை எதையும் தராத ஒன்றைச் செய்து விட்டு வாசிப்பதாக நினைத்துக் கொள்கிறோம். இப்படி நினைப்பதும் முகநூலில் எழுதப்படும் தூள், சூப்பர், அற்புதம், அருமை, டக்கர் என்ற பின்னூட்டங்களும் ஏறக்குறைய ஒன்றே எனலாம்.

அச்சிடப்பட்ட எழுத்துக்களை அப்படியே மனதளவில் கடந்து செல்வதற்குப் பெயர் வாசிப்பல்ல. துரதிருஷ்டவசமாக அப்படிக் கடந்து போவதையே வாசிப்பு என நினைத்துக் கொண்டு அதையே செய்து கொண்டும் இருக்கின்றோம். அதனால் தான் அவ்வப்போது படைப்பிலக்கியங்களை வாசிக்கின்ற ஒருவனின் மனநிலையையும், பார்வைக் கோணங்களையும் நாள்தவறாது நாளிதழ்கள் வாசிக்கும் ஒருவனால் பெற முடிவதில்லை, வாசிப்பு நம்மை நாமே சுத்திகரித்துக் கொள்ள உதவுகிறது. ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு இட்டுச் செல்கிறது. அப்படி இட்டுச் செல்வதன் வழி நம்மை உடைத்து மறுகட்டுமானம் செய்கிறது. அவநம்பிக்கையோடு  துவங்கும் நடையை நம்பிக்கையோடு கூடிய ஓட்டமாக மாற்றித் தருகிறது. அறுதியிட்ட கற்பனா சக்தியின் வழியாக இழந்த காலத்தை எதிர்காலத்தில் மீட்டெடுக்கச் செய்கிறது. இவையெல்லாம் வாசிப்பின் பலம். வாசிப்பால் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்பதாலயே வாசிப்பு இயக்கங்களை அரசாங்கங்கள் ஊக்குவிக்கின்றன.

எழுத்துக்களின் வழியாக பின்னப்பட்டிருக்கும் நாம் அறிந்த – அறிந்திராத உலகத்திற்குள், மாந்தர்களுக்குள், வாழ்வியலுக்குள் நம்மை நுழைத்துக் கொள்ளும் வாசலாக இருக்கும் வாசிப்பை படிப்பின் வழியாக ஒருநாளும் பெற முடியாது. உணர்ந்தும், கலந்தும், காட்சிப்படுத்தியும், முரண்பட்டும், சிலாகித்தும் பயணிக்க வேண்டிய ஒரு வாசிப்பனுபவத்தை எழுத்துக்களுடன் நிகழ்த்தும் வெறும் உரையாடல்கள் வழியாகப் பெற முடியாது. வாசிப்பை அத்தனை எளிதான விசயமாக நினைத்துக் கொண்டதன் விளைவு வாசிப்பவர்களை விட எழுதுபவர்களின் எண்ணிக்கை இன்று அதிகமாகி விட்டதைப் போல எழுத்தை விடவும் அதிக உழைப்பைக் கோருவது வாசிப்பு என்ற எதார்த்த நிலையால் வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து விட்டது.

வாசிப்பின் வழியாக மட்டுமே படைப்பாளியாக உருவாக முடியும் என்பதாலயே இளம் மற்றும் ஆரம்ப காலப் படைப்பாளிகளுக்குத் தரப்படும் பல அறிவுரைகளில் அச்சரம் பிசகாமல் ”நிறைய வாசியுங்கள்” என்ற அறிவுரை நிச்சயம் இருக்கும். சமீபத்தில் புதிய எழுத்தாளர்களுக்கென நடந்த பயிலரங்கில் நாவல் என்ற படைப்பிலக்கியத்தை வாசிப்பின் வழியாக அணுகக் கூடிய முறை குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினேன். ”வாசிப்பதற்கு என்ன வழிமுறை வேண்டியிருக்கு”? என்ற தொனியிலேயே பலரும் எதிர் கேள்வியைக் கேட்டனர். ”புத்தகத்தைப் பிரித்து வாசிக்க வேண்டியது தானே” என்பதாகவே அவர்களின் பதில்கள் இருந்தது. உண்மையில் இது ஆரோக்கியமற்ற வாசிப்பின் அறிகுறி எனலாம். வெறுமனே நிறைய வாசியுங்கள் என்று சொல்வதை விடவும் எப்படி வாசிப்பின் வழியாக ஒரு படைப்பை அணுக வேண்டும்? என்று சொல்லித் தருவது முக்கியம். வாசிப்பின் வழி நாம் எதை எல்லாம் கண்டடைய முடியும்? எதையெல்லாம் கண்டடையத் தவறுகிறோம்? என்பதைச் சுட்டிக்காட்டி அதை எப்படி கைக் கொள்ளலாம் என்பதைக் கற்றுத் தரும் வழிமுறைகளின்றி வெறுமனே வாசித்தால் போதுமென்பது சிறந்த வாசிப்பாளனாய் ஆக்கிக் கொள்ள ஒரு நாளும் உதவாது.

இப்படித் தான் படிக்க வேண்டும் என்று சொல்வதைப் போல இப்படித் தான் வாசிக்க வேண்டும் என்று எந்த வரைமுறைகளையும் யாரும் எவருக்கும் சொல்ல முடியாது. அதை வாசகனின் மனநிலையே முடிவு செய்கிறது. ஆனால், வாசிப்பின் போது சில விசயங்களைக் கவனத்தில் கொள்ளச் செய்வதன் மூலமாக நல்லதொரு வாசிப்பனுபவத்தைப் பெற வைக்க முடியும். அப்படிப் பெறுவது என்பது
  • வாசிப்பிற்கு முந்தைய முன் முடிபுகள் ஏதுமின்றியும் -
  • வாசகனுக்காகப் படைப்பில் இட்டு நிரப்பத் தரப்பட்ட இடங்களை கண்டறிந்து அதில் நிரப்பிக் கொண்டும் –
  • வாசிப்பிற்காகக் கூடுதல் உழைப்பைப் படைப்பு கோரும் பட்சத்தில் அதற்கான நேரத்தைக் கொடுத்தும் –
  • வாசிப்பின் வழியாக ஊடேறும் நிகழ்வுகளின், சம்பவங்களின் தாக்கங்கள் மீது அறுதியிட்ட வகையில் இல்லாமல் ஒட்டு மொத்த பார்வையைச் செலுத்தியும் -   
  • வாசித்துச் செல்லும் போதே முரண்பட்டு நிற்காமல் வாசிப்பிற்குப் பிந்தைய மனநிலையில் அந்த முரண்பாடுகளின் மீது உள்முகமாக மீள் உரையாடல்களை நிகழ்த்தியும் –
  • ஒப்பீட்டளவில் இல்லாமல் தனித்தன்மை உணர்ந்தும், ஈடுபாட்டோடும் - 

வாசிப்பை முன் நகர்த்திச் சென்றால் மட்டுமே சாத்தியமாகும். ஆரம்பக்கட்டத்தில் இது கொஞ்சம் சிக்கலான விசயமாகத் தெரியலாம். மனம் உடன்படாமல் முரண்டு பிடிக்கலாம். ஆனால் அதைக் கைவரப் பெற்று விட்டால் அதன் பின் வாசிப்பு உங்களை தனக்குள் இருத்தி வைத்துக் கொள்ள ஆரம்பித்து விடும். இந்த நிலையில் தான் தன்னுடைய கற்றலின் வழியாகவும், வாசிப்பனுபவத்தின் துணையோடும் வாசிப்பாளனாக இருப்பவன் எழுத்தாளன் என்ற புதியதொரு பரிணாமத்தை எடுக்க ஆரம்பிக்கிறான். அதன் தொடர்ச்சியாக வாசிப்பு – எழுத்து என்ற சக்கரம் அவனுக்குள் நிகழ்த்தும் சுழற்சியில் தனக்குரிய இடத்தைத் தானே கண்டடைந்தும் கொள்கிறான்.

வாசிப்பின் சுவை அறியாத, வாசிப்பனுபவம் இல்லாத ஒருவரால் ஒருநாளும் சுமாரான படைப்பாளியாகக் கூட உருவாக முடியாது என்ற எதார்த்த நிலையையும் –

கற்றுக் கொடுத்தலின் மூலம் படைப்பாளிகள் உருவாக்கப்படுவதில்லை மாறாக, அவர்கள் சரியான நிலைகளில் இருந்து பயணப்பட வைக்கப்படுகிறார்கள் என்ற நிஜத்தையும் - உணர்ந்து பயணிக்கும் போது மட்டுமே சராசரி வாசகன், தேர்ந்த வாசிப்பாளனாகவும், தேர்ந்த வாசிப்பாளன் ஒரு படைப்பாளியாகவும் பரிணாமம் செய்து கொள்வது இயல்பாக நடக்கும்.. இயல்புக்கு மீறிய எதுவுமே வளர்ச்சிக்குக் கேடு என்பது விதி. அந்த விதி படைப்பிலக்கியத்திற்கும் பொருந்தும் என்றே நம்புகிறேன். 

நன்றி : தி சிராங்கூன் டைம்ஸ்