Friday, 20 January 2017

”மின்னூல்” எனும் கனவு!


இரண்டு வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த போது மலைகள் இதழின் ஆசிரியரும், நண்பருமான சிபிச்செல்வன் ”கிண்டில்” பற்றிக் கேட்ட போது அப்படின்னா என்ன? எனக் கேட்டேன். புத்தகங்களை எப்படி படிக்கிறீங்க? என அடுத்த கேள்வியை வீசினார். சம்பந்தமில்லாத கேள்வியா கேட்கிறாரே என நினைத்துக் கொண்டு நூலகத்தில் இருந்து எடுத்து வந்து வாசிக்கிறேன் என்றேன். அந்த பதிலில் என் நவீனத்தின் ஞானத்தை அவர் கண்டுபிடித்திருப்பார் என்றே நினைக்கிறேன். “கிண்டில்” பற்றியும், அதன் பயன்பாடு பற்றியும் சொன்னார். சிங்கப்பூரில் இருந்து கொண்டு இத்தனை ஞானசூன்யமா இருந்திருக்கோமேடா!  என நினைத்துக் கொண்டு இணையத்தில் அறிந்து கொள்ள முனைந்ததில் மின்னூலின் அவசியம் குறித்து எழுதப்பட்ட சில கட்டுரைகளையும் வாசிக்க நேர்ந்தது. அதன் பிறகு மின்னூல் சார்ந்து இருந்து வந்த பிரமிப்பு விலக ஆரம்பித்தது.

அந்த நேரத்தில் நிறுவனத்தின் ஆட்குறைப்பு பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் இருந்ததால் கிடைத்த நேரத்தில் மின்னூலை உருவாக்கிப் பார்க்கும் முயற்சியில் இறங்கினேன். அச்சில் வந்திருந்த என் நூல்களில் ஒன்றை மின்னூலாக்கும் விருப்பத்தை நண்பர்களிடம் சொன்னேன். எங்களுக்கு இந்தத் துயரம் வேறா? என அவர்கள்  காட்டிய அக்கறையில் அஸ்தமனமாகிப் போனது மின்னூல் கனவு!

கனவு அஸ்தமனமானாலும் ஆசை தீரவில்லை. திடுமென ஒரு ஞாயிறுப் பொழுதைக் காவு கொடுத்து நூலாக்கம் பெறாத அச்சு, இணைய இதழில் வந்த கவிதைகளைத் தொகுத்தேன். ”என் முதல் மின்னூல் முயற்சி” என முகநூலில் அறிவிப்பும் கொடுத்தாயிற்று. அதன் பிறகே அதில் அறிந்திருக்க வேண்டிய தொழில் நுட்பத்தில் எத்தனை சைபரோடு இருக்கிறேன் என்பது புரிந்தது. இது வேலைக்கு ஆகாது என தூக்கிப் பரணில் போட்டு விட்டு வேறு வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். புத்தகத்தை வாங்குறானோ? இல்லையோ? புத்தகம் எப்ப வருது? எப்ப வருது?ன்னு கேட்டு நச்செடுக்கிறதுக்குன்னு நாளு நண்பர்கள் இருப்பதெல்லாம் வரமா? துயரமா? எனச் சொல்லத் தெரியவில்லை. அந்த வரமும், துயரமும் என் மின்னூலாக்கக் கனவை கதகதப்பாகவே வைத்திருந்தது என்றே சொல்லலாம்.

FREE TAMIL EBOOKS தளம் வழி மின்னூலாக்கும் முயற்சிகளை ஆரம்பித்தேன். எல்லாமே அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். படைப்பை மட்டும் நீ அனுப்பு. என நண்பன் சொன்னதை நம்பி அவர்களுக்கு அனுப்பினேன். ”எத்தனை நாளைக்குத் தான் நாங்களே மீன் பிடித்துத் தருவோம் என நினைத்துக் கொண்டிருப்பீங்க? உங்களுக்கு நாங்க மீன் பிடிக்கவே கத்துத் தாரோம்” எனச் சொல்லி அவர்கள் தந்த ஊக்கம் என் மின்னூல் கனவை மினுமினுக்கச் செய்தது. கற்றுக் கொள்கிறேன் பேர்வழி என நான் கேட்ட பல அடிப்படையான(BASIC), அபத்தமான கேள்விகளுக்குக் கூட அமெரிக்காவில் இருந்தும், இலண்டனில் இருந்தும், சென்னையில் இருந்தும், காரைக்குடியில் இருந்தும் அக்குழுவில் இருந்த நண்பர்கள் அயர்ச்சியின்றி தந்த பதில்கள் என்னாலும் ஒரு மின்னூலுக்கான அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தந்தது. அது போதாதா என்ன?

அடுத்த கட்டமாய், ”இணையத்தில் எடுத்தேன். நல்லாயிருக்கா?” என அட்டைக்கான படத்தை நண்பனிடம் காட்டிக் கேட்டேன். ”நெட்டுல இருக்குன்னு ஆட்டயப் போட முடியாது. அனுமதி வாங்கலைன்னா ஆப்பு தான்” என்றான். விக்கிபீடியாவுல ஒரு படத்தை அப்படி எடுத்துப் போட்டுட்டு பட்ட துயரம் கைவசமிருந்ததால் நண்பனின் எச்சரிக்கையை உதாசீனப்படுத்தும் தைரியம் வரவில்லை. நன்கு அறிமுகமான நண்பர் ஒருவர் எடுத்திருந்த புகைப்படத்தை அவர் அனுமதியோடு வாங்கி அனுப்பினேன். இரண்டாம் நாளே FREE TAMIL EBOOKS குழுவில் இருந்த நண்பர் அதை அட்டைப்படமாக்கி ஒப்புதலுக்கு அனுப்பினார்.

நண்பர்களிடம் என் முதல் மின்னூல் குறித்து கம்பீரமாய் சொன்ன போது மின்னூலிலும் கவிதையைப் போட்டுட்டியா? என கண்ணீர் வராமல் கலங்கியவர்கள் தான் அதிகம். இன்னைக்கு வரை அந்தக் கலக்கம் அப்படியே இருக்கிறதோ? என நினைக்கும் அளவுக்கே அதன் வாசிப்பாளர் வருகையும் இருக்கிறது! அதற்காகவெல்லாம் காரியமாற்றாமல் இருக்க இயலுமா என்ன? ஆனாலும், வாசித்த சில நண்பர்களின் கருத்துகளும், வந்த எதிர்வினைகளும் கவனித்து கலந்துரையாடவும் அதில் விசயங்கள் இருக்கிறது என்றே இருந்தது. நேரமிருப்பின் நீங்களும் இங்கே சென்று ”சலனக்கிரீடம்” தொகுப்பை வாசித்துப் பார்க்கலாம்.

நம்மூர் சாமியார்களுக்கு அடுத்து பேராசை கொண்டவன் எழுத்தாளன்! ஒரு புத்தகம் போட்டா போதும் என நினைத்து ஆரம்பிப்பவன் அப்படியே அடுத்தடுத்து என குரங்காய் தொங்கிக் கொண்டிருப்பது வழக்கம். அந்த வழக்கத்துக்கு நானும் விதிவிலக்கல்ல என்பதால் இரண்டாம் மின்னூல் தயாரிப்பைத் தொடங்கினேன். இம்முறை அக்கால கட்டத்தில் நண்பர்கள் வழி வாசிக்கக் கிடைத்த நூல்களுக்கு எழுதிய விமர்சனத்தை மட்டும் தேர்ந்தெடுத்து தொகுப்பாக்கினேன். ”விரியும் வனம்” என்ற அந்தத் தொகுப்பை இங்கே சென்றால் வாசிக்க முடியும்.

விகடனில் மூன்று நூல்கள் மூன்றாவது பதிப்புகள் வரை வந்திருந்த போதும் அதில் ஒன்று கூட விகடனின் மின்னூல் பட்டியலில் இல்லையே என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. அது இன்னும் ஈரமாகவே இருக்க, கடந்த வருட புத்தகத் திருவிழாவில் கிழக்கு பதிப்பகத்தின் விற்பனையில் முதல் இருபது இடங்களுக்குள் வந்த காமராஜர் வாழ்வும்; அரசியலும் நூல் கிழக்கு பதிப்பகத்தின் மின்னூலாக்க பட்டியலுக்குள் வந்ததோடு அமேசான்.காம் வழி விற்பனைக்கும் வந்தது மகிழ்வைத் தந்தது. முகநூல் பக்கம் கெத்து காட்டவும் அது உதவியது.

அச்சு நூலுக்கென ஒரு மவுசு இருந்தாலும் அதை வாங்கும் பலரும் அலங்காரப் பொருளாக பாவிக்கிறார்களோ என நினைக்க வேண்டி இருப்பதை மறுப்பதற்கில்லை! இப்படியான சூழலில் வாசிப்பை எளிதாக்கும் மாற்று வழியாக மின்னூல் வடிவம் மட்டுமே இருக்கிறது. மாற்றங்கள் எத்தனை அவசியமோ அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்வதும் அவசியம் என்றே நினைக்கிறேன்.

Sunday, 8 January 2017

சொந்தமாகச் சிந்திக்கலாம்!

”முன்னேற்றத்திற்காகவே பூமியில் பிறந்துள்ளோம். ஒவ்வொரு நிமிடமும் நாம் முன்னேறவில்லையானால் வாழ்க்கை சுவையற்று சலிப்புத் தட்டி விடும்” என்கிறார் அன்னை. சுவையான முன்னேற்றத்திற்கு சிந்தனை அவசியம். சிந்தனை மட்டுமே இது தான் முடிவு என்று முடிவாகச் சொல்லப்பட்ட விசயங்களை உடைத்தெறிந்து மேலும் முன்னேற வைக்கிறது. புவிஈர்ப்பு விசை இருப்பதால் மேல் செல்லும் எந்தப் பொருளும் பூமியை நோக்கி வரும் என்ற நியூட்டனின் விதி குறித்து அறிவியலாளர்கள் சிந்திக்கத் தொடங்கினர். விளைவு, சந்திர மண்டலத்துக்கு இராக்கெட்டுகளை ஏவினர். தொலைநோக்குக் கருவிகளை வானில் உள்ள பாறைகள் மீது நிறுத்தி வைத்தனர். “வெற்றி பெறச் சிந்தியுங்கள்” நூலின் ஆசிரியர் ஸ்டேபிள் தன்னுடைய நூலில், ”வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக் கண்டுபிடிக்க ஐந்தாண்டுகள் முயற்சி செய்ததாக கூறுகிறார். அந்த முயற்சியில் ஆக்கப்பூர்வமான மாற்றம் தன்னுடைய சிந்தனையும், நம்பிக்கையும் தான்” எனக் கண்டறிந்ததாகக் கூறுகிறார்.

உலகில் பிறந்த எல்லா உயிரினங்களுமே அது அஃறிணையாக இருந்தாலும், உயர்திணையாக இருந்தாலும் சிறப்பான அம்சங்கள் கொண்டே இருக்கின்றன. அத்தகைய திறமை கொண்டிருப்பதாலயே மரங்கொத்திப் பறவை சரியான இடத்தில் தட்டுவதன் மூலம் உணவைப் பிடிக்கிறது. வெளவால் ரேடாரை விட சிறப்பான வழிகாட்டல் மூலம் பயணம் செய்கிறது. அவ்வாறு தான் மனிதர்களாகிய நமக்கும் சிறப்பான குணங்கள் இருக்கின்றன. அவைகள் வெற்றியாளனுக்கும், சாமானியனுக்கும் சிந்தனையால் மட்டுமே வேறுபடுகிறது.

காலம் காலமாக செய்யப்பட்டவை; சொல்லப்பட்டவை என்பதால் அதைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. ஏன் செய்கிறோம்? என யோசிக்காமலே செய்து கொண்டிருக்கிறோம். “சொக்கப்பன் கொழுத்துதல்” என்று ஒரு விழா கார்த்திகை மாதத்தில் கிராமங்களில் கொண்டாடுவதைப் பார்த்திருப்பீர்கள். கார்த்திகை மாதம் மழைக் காலம். அந்தப் பருவத்தில் பயிர்கள் வளர்ந்து நன்றாக இருக்கும். அப்போது மழை பெய்தால் நாற்று சேதமடைந்து விடும் என்பதால் மழை பெய்யக் கூடாது என்பதற்காக அவ்விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் இப்போது மழையின்றி பஞ்சம் நிலவும் கார்த்திகை மாதத்திலும் இந்த விழாவை நாம் கொண்டாடி வருகிறோம். மழைக்காக வானம் பார்த்துக் காத்திருக்கும் பூமியில் மழையே, மழையே போ, போ என்று இன்றும் நர்சரி பள்ளிகளில் கற்றுத் தரப்படுகிறது. ஏன் செய்கிறோம்? என்ற சிந்தனையால் மட்டுமே இது போன்ற நிகழ்வுகளை மாற்றியமைக்க முடியும்.

உள்வாங்குதலை ஆழ்மனம் வரை வாங்கினால் மட்டுமே ஒன்றன் மீது கேள்விகளை எழுப்பிச் சிந்திக்க முடியும். ஆனால் நம்முடைய உள்வாங்குதல் மேம்போக்காக அமைந்து விடுகிறது. தன்னம்பிக்கை நூல் எழுத்தாளர் எம். எஸ். உதயமூர்த்தி, ”பல சமயம் எழுதப் பட்டிருக்கும் கருத்துகளுடன் நான் விவாதம் செய்வேன். மறுப்பேன் அல்லது அது தொடர்பாக என் அனுபவங்களை முன் கொண்டு வந்து வைத்து உரைத்துப் பார்ப்பேன்” என்கிறார். நம்மில் எத்தனை பேர் இப்படிச் செய்கிறோம்?

வாழ்க்கை நல மேம்பாட்டு நூல் எழுத்தாளர்கள் நேரமிச்சம் பற்றி ஆலோசனை தருகின்றனர். ஒரே நேரத்தில் இரண்டு செயல்களைச் செய்யச் சொல்கின்றனர். அப்படிச் செய்யும் பொழுது செயல் சிறப்பாக முழுமையடைந்திருக்காது. அதற்கான நேரமும் அதிகமாகும். அதேபோல் இந்தெந்த வேலைக்கு இவ்வளவு நேரம் ஒதுக்குங்கள். மீதி நேரத்தில் இதைச் செய்யுங்கள் என்கிறார்கள். இதுவும் ஒரு தவறான வழிமுறைதான்! அறிவுரை தரும் வாழ்வியல் அறிஞர்களின் கண்ணோட்டம் மட்டும் ஒருவரின் நேரத்தைச் சரிபங்கிட்டுத் தர முடியாது.

ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக நேரம் வேறுபடும். எல்லாருக்கும் இவர்கள் தரும் பட்டியல் சரியானதா? என்று ஆராய்ந்தால் சாமானியனின் வாழ்க்கை நேரத்தில் அது வேறுபட்டு நிற்கும். என்னுடைய இந்தக் கருத்தில் இருந்து உங்களுடைய சிந்தனைக் கருத்து மாறுபட்டு வேறோரு முடிவுக்கு வரலாம். இத்தகைய சிந்தனை முடிவுகள் தான் வெற்றிக்கான படிக்கட்டுகள்.

”நீங்கள் வெற்றி பெற பிறந்தவர்கள். தோல்வி பற்றிச் சிந்திக்காதீர்கள்: என்ற கருத்தும் பரவலாக இன்று பேசப்படுகிறது. இது தவறான வழிகாட்டல் என மனோதத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒரு நிலையிலேயே இருந்து கொண்டு ஒரு வழி பற்றியே சிந்திப்பது அதில் தடை ஏற்பட்டால் முன்னேறிச் செல்ல முடியாத படி செய்து விடும். அப்படி தடை ஏற்படாமலிருக்க இன்னொரு மாற்று வழி தேவைப்படுகிறது. எதிர்மறை நிலையில் இருந்து சிந்திக்கும் போது மட்டும மாற்று வழிகள் உருவாகிறது. மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் பல்வேறு எதிர்மறை நிலையில் இருந்து ஆய்வு செய்த பின்பே தங்களது உற்பத்தியைச் சந்தைக்குக் கொண்டு  செல்கின்றனர்.

“ஆங்கில வழிக் கல்வியாக எல்லாம் வந்து விடும் சமயத்தில் தாய் மொழியின் உணர்வு, அதன் ஆழம், அறிவு போய் விடும்” எனச் சொல்லிக் கொண்டு ஆங்கில வழி போதித்தலுக்குத் தடை கேட்டு நீதிமன்றத்தில் நிற்கின்றனர். தடை கோருவதற்குப் பதில் தாய் மொழியின் சிறப்பை இன்னும் அறியச் செய்ய என்ன செய்யலாம்? என சிந்தித்துச் செயலாற்ற முனைய வேண்டும்.

இன்னொன்றின் வளர்ச்சியோடு போட்டி போடுவதற்குப் பதில் இருக்கும் நிலையிலேயே இருந்து கொண்டு தடை போடச் சொல்வது சரியல்ல. இது நடுநிலையாளர்கள் என்ற பார்வையில் இருக்கும் சிலரின் கருத்து வடிவம். இந்தக் கருத்து அதனதனில் தொடர்புடையவர்களுக்கு வேறுபடலாம். இப்படி வேறுபடும் யோசனை புதியதொரு மாற்று வழியை உண்டாக்கக்கூடும். ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த மாற்று வழிச் சிந்தனை தான் வெற்றியைத் தந்தது.

தனிமனிதனுக்கு உணவில்லை எனில “ஜகத்தினை அழித்திடுவோம்” என்றான் பாரதி. ஜகம் என்பதற்கு நாடு என்றே இந்நாள் வரை  அர்த்தப்பட்டு வந்தது. அண்மையில் ஒருவர் ”ஜகம்” என்பதற்கு ”காடு” என்றும் ஒரு பொருள் உண்டு. அதனால் தான் பாரதி தனிமனிதனுக்கு உணவில்லாத போது காட்டை அழித்தாவது உணவளிக்க வேண்டும் என்ற பொருளில் பாடியதாக அர்த்தம் சொன்னார்.

இதேபோல, அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் உயிர் இழப்புகளுக்கு மருத்துவர்கள் நியாயத்தைக் கூறி வந்த போதும், மக்கள் ”கடவுளால் வழங்கப்படும் தண்டனை” என்று நினைத்த போதும் அதற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்ற சிந்தனை அறுவை சிகிச்சை அரங்கையே மாற்றியமைத்தது. மருத்துவர்களின் உடை, பயன்படுத்தும் கருவிகளின் தூய்மையை உணர்த்தச் செய்தது.

சிந்தனை மட்டுமே புதிய, புதிய செயல்களைச் செய்யத் தூண்டுகிறது. பார்த்தல், கேட்டல் மூலம் பெறும் உணர்வுகள் முடியும் என்ற நிலையில் முடியாது என்ற சிந்தனையின் தொடர்ச்சியாகச் செல்ல வேண்டும். அடுக்குமாடி வீடுகளையே அரபு நாடுகளில் கட்டிப் பழக்கப்பட்ட வல்லுநர்களுக்கு வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனை தோன்றியது.

அதன் விளைவாக 320 டிகிரியில் சுழலக்கூடிய வீடுகளைக் கட்டப் போகிறார்களாம். காலையில் கிழக்கு நோக்கியும், மாலையில் மேற்கு நோக்கியும் வீட்டு வாசலைத் திருப்பிக் கொள்ள முடியும். உள்வாங்கும்  எண்ணம், முடிவைச் செயலாக்கும் எண்ணம், செயலைச் சென்றடையும் எண்ணம் என வெற்றிக்கான வழிகளை - சிந்தனை வழிகளை அமையுங்கள். நீங்களும் வெற்றியாளராவீர்கள்.

நன்றி : ஹெர்குலிஸ் மாதஇதழ்