Monday, 17 June 2013

குறுங்கவிதைகள்

வெளிக்கொணர முடியா
இரகசியங்களாய்
பூங்காக்கள் தோறும்
இறைந்து கிடக்கிறது
சிலரின் ஏமாறுதல்களும்
பலரின் பரிமாறல்களும்!
----------------------------------------
செயற்கையை
தனக்குள் வாங்கி
உந்தி எழுந்த நீர்த்திவலை
இயற்கையோடு
கைகோர்த்து புணர்ந்த கணத்தில்
அடங்கி மறைந்தது
மீண்டும் நீர்க்குமிழியாய்!
-----------------------------------------
ஆதிமனுஷியின் அருவமாய்
ஊருக்கு மத்தியில்
உருவம் தாங்கி நின்றாள்
இடுப்புச் சேலையை
கை விரித்து பறக்க விட்டபடி
விளம்பரப்பெண்.
--------------------------------------
பின்வாசல் கிழிசல்களை
முன் வாசலில்
திரையாய் மாற்றும்
உன் கைங்கர்யத்தை
உற்றுநோக்கி நிற்கின்றேன்
உன் கிழிசல்களின் வழியே!
--------------------------------------

நன்றி : மலைகள்

Sunday, 16 June 2013

பூனைக்கு யார் மணிகட்டுவது?

கடவுள் ஒருவரே
அந்த ஒருவர்
உருவமற்றவரா? உருவமுடையவரா?

லஞ்சத்தை ஒழிக்க வேண்டும்
யார் முதலில் ஒழிப்பது
வாங்குபவரா? கொடுப்பவரா?

சாதிகளை களைய வேண்டும் 
யார் சாதியை
உன் சாதியவா? என் சாதியவா?

உயிர்க் கொலை பாவம்
ஐந்தறிவு உயிர்க் கொலையா?
ஆறறிவு உயிர்க் கொலையா?

பூரண மாற்றம் தேவை
யாரிடம்
உன்னிடமா? என்னிடமா?

இப்படியான முரண்களோடு
முட்டி,முட்டியே முறிந்து போனது
சமுதாய மாற்றம் வேண்டி
முழங்கி நிற்பவனின்
மூச்சுக்காற்று.

நன்றி : அதீதம்

Thursday, 16 May 2013

வாழ்வை வளமாக்கும் நீதிக்கதைகள்

    

வாழ்க்கைக்கான உந்து சக்தியை தன்னுள் உறைய வைத்திருக்கும்இராமாயணம்”, மகாபாரதம் என்ற மாபெரும் இதிகாசங்களில் கொட்டிக் கிடக்கும் இன்றைய வாழ்வியலுக்கு ஏற்ற நிகழ்வுகளையும்-
ஆன்மிகப் பெரியோர்கள், ஞானிகள், துறவிகள் தங்களின் அறிவுரைகளின் மூலம் உணர்த்திய உன்னதமான தகவல்களையும், கற்றுத்தந்த பாடங்களையும் எளிய நடையில் குறைந்த வரிகளில் சொல்லும் நூல்
ஒவ்வொரு நிகழ்வும் அதன் முடிவில் உள்ள நீதியும் உங்களுடைய இன்றைய இறுக்க வாழ்வை மேம்படுத்திக் கொள்ள உதவும்.