Monday 29 November 2021

கபடவேடதாரி - விமர்சனப் போட்டி - 30

அத்தியாயம் – 30

 (தங்கத்தவளை)

நீலவனத்தில் சாகரிகா, கோவிந்தசாமியின் நிழல், ஷில்பாவை  சூனியன் எதேச்சையாக காண்பதில் களம் சூடு பிடிக்கிறது.  அப்பொழுதும் கூட அவர்களின் வருகை பா.ரா.வின் திட்டம் என சூனியன் ஐயுறுகிறான். தனக்கு எதிராக அந்த திட்டம் – ஆயுதம் நிற்காது என கூறிக் கொள்ளும் சூனியன்  சாகரிகாவின் திட்டத்தையும் சரியாக கணிக்கிறான்.

நரகேசரிக்கு போதை தர நிலவுத் தாவரம் தேடிச் சென்ற சூனியன் ஒரு தங்கத்தவளையை பிடித்து வருகிறான். அதன் விசம், தங்கத்தவளை குறித்த விவரணை சுவராசியம். தவளையின் விசத்தை அம்பில் தோய்த்து கோவிந்தசாமியின் நிழல் மீது எய்ய நரகேசரியிடம் சூனியன் கூறுகிறான். கோவிந்தசாமியின் நிழலை தடுத்து நிறுத்துவதன் மூலம் பா.ரா.வின் நோக்கத்தை உடைப்பது சூனியனின் நோக்கம். எய்த அம்பு குறி தப்பாமல் தாக்கியதா? சூனியனின் நோக்கம் ஜெயித்ததா? வரும் அத்தியாயத்தில் விடை கிடைக்கலாம்.

Sunday 28 November 2021

கைகள் கொள்ள அன்பினை ஏந்தியபடி எங்களின் 17 வது திருமணநாள்.........

கடந்த சில தினங்களாகவே எங்களை எட்டி விடாத இரகசியங்களாக இருக்க வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டிய படியே மகனும், மகளும் ஏதாவது பேசிக் கொண்டும், செய்து கொண்டும் இருந்தார்கள். நேற்றிரவு உறங்கிய சில மணி நேரத்தில் படுக்கையறை விளக்குகள் ஒளிர ஆராம்பித்தது. விடிந்து விட்டதா? என்று விழித்துப் பார்த்தால் வாழ்த்துச் செய்தியோடு எங்கள் முன் கேக் விரிக்கப்பட்டு இருந்தது. தன் சேமிப்பில் கடையில் வாங்கி வந்திருந்த பரிசுப்பொருளோடு அன்பை வார்த்தை வாழ்த்தாக்கி மகன் கொடுத்தான். தன் காகித வடிவமைப்புகளை தன்னுடைய வார்த்தைகளால் உயிர்ப்புள்ளதாக்கி தன் பங்கிற்கு மகள் கொடுத்தாள். 

Saturday 27 November 2021

கபடவேடதாரி - விமர்சனப் போட்டி - 29

அத்தியாயம் – 29 (சமஸ்தானாதிபதி)

சாகரிகா மீது கோவிந்தசாமியின் நிழல் கொள்ளும் மையல் கோவிந்தசாமி கொண்டதை விடவும் அதிகமாக இருந்த போதும் நிழலுக்கு சாகரிகா எதுவும் செய்யும் உத்தேசம் கொண்டிருக்கவில்லை. அதை நிழல் உணரவில்லை!

சாகரிகாவுக்கு எதிராக செயல்படுவது யார்? என்ற ஷில்பாவின் தூண்டிலுக்கு நாற்பதாண்டு காலம் தனக்குக் கூடு தந்தவனை விட்டுக் கொடுக்காமல் நிழல் பேசுகிறது! அதேநேரம், நிழலின் மூலம் தன் மீது விழுந்த பழியை துடைக்க சாகரிகா முயல்கிறாள். 

நீலநகரவனத்தில் குடியேறும் ஒவ்வொருவரும் ஒரு சமஸ்தானத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற வசதியைப் பயன்படுத்தி ஷில்பா கோவிந்தசாமியின் நிழலை நீலவனவாசியாக்கி அவன் உருவாக்கும் சமூகம் மூலம் சாகரிகாவுக்கு எதிரானவர்களை எதிர்கொள்ள திட்டமிடுகிறாள். தங்கள் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கில் சமஸ்தானாதிபதியாக்கப் போகும் திட்டத்தை இருவரும் கோவிந்தசாமியின் நிழலுக்குச் சொல்கிறார்கள். இது போதாதா? அன்பின் பொங்கி வழியும் நிழல் தான் ஒரு சக்கரவர்த்தியாகப் போகும் உணர்வில் மிதக்க ஆரம்பிக்கிறது. மூவரும் நீலநகரவனம் நோக்கி  பயணிக்கிறாள்.

இந்த பயணம் அவர்கள் நினைத்ததை நிறைவேற்றித் தருமா? காத்திருப்போம்.

Friday 26 November 2021

கபடவேடதாரி - விமர்சனப் போட்டி - 28

அத்தியாயம் – 28

 (திரு. யாரோ)

நாளிதழ்களில் இலவச இணைப்பாக தரப்படும் இதழ்களில் துணுக்கு, பொன்மொழி, கவிதை, என ஏதாவது ஒன்றை எழுதி அதன் கீழ் யாரோ என போட்டிருப்பார்கள். இந்த தலைப்பை வாசித்ததும் அது தான் நினைவுக்கு வந்தது. ஆனால், கபடவேடதாரியில் யாரோ யார்? என தெரிந்துவிடும் என்றே நினைக்கிறேன்.

தங்கள் உலகில் இருக்கும் வனம் குறித்து சூழியன் கூறும் தகவல்கள் ஒரு பிரமாண்ட வனத்தை மனதில் காட்சிகளாய் விரிய வைக்கிறது. வனமற்ற உலகில் இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? என்ற சூனியனின் கேள்வி நமக்கும் உரியதாகிறது.

நீலநகரத்தில் இருக்கும் வனம் தன் உலகில் இருக்கும் வனத்திற்கு இன்னும் ஒரு படிமேலாக இருப்பதையும், வனவிலங்குகளும், அங்கு வசிக்கும் வனவாசிகளும் நெருங்கி வாழ்வதையும் காண்கிறான். உதாரணத்திற்கு, தன் வீட்டில் வசிக்கும் யாளிகளுக்கு இரு வேளையும் சர்க்கரை பொங்கல் போன்ற ஒன்றை உணவாகத் தருகிறார்கள்! புவிப்பந்தில் நாம் பார்த்து மிரளும் அத்தனை ஜந்துகளும் அவர்கள் வீட்டு வாசலில் சாய்ந்து கிடக்கின்றன.  அவைகளை அவர்கள் சகஜமாகக் கையாள்கிறார்கள். தங்களின் கூரைகளை அவர்கள் மேயும் விதத்தை வாசிக்கும் போது சங்கப்பாடல்களில் வரும் கற்பனை நயம் நினைவில் வருகிறது.

Wednesday 24 November 2021

இவனுக்கு அப்போது மனு என்று பேர்

இரா. எட்வின் அவர்களின் நண்பராக முகநூலில் இணைந்த பின் அவருடைய பதிவுகளை நேரம்வாய்க்கும் போதெல்லாம் வாசிப்பதுண்டு. குழந்தைகளுக்கும், சமூகத்திற்குமான அக்கறையும், உள்ள நிறை நெகிழ்வும் எப்பொழுதும் நிரம்பி நிற்கும். இத்தொகுப்பில் இருக்கும்தெய்வங்களுக்குக் கற்றுத் தருபவன்என்ற கட்டுரையை அவருடைய முகநூல் பதிவில் வாசித்த பின் ஏனோ அந்த தலைப்பும், அதன் சாரமும் மனதுக்கு நெருக்கமானதாகிப் ,போனது. இத்தொகுப்பில் இருக்கும் கட்டுரைகளில் சில அவரின் முகநூல் பக்கங்களில் முன்பே வாசித்தவை என்ற போதும் மீள்வாசிப்பின் போதும் மாறா மனநிலையையே தருகிறது.

எட்வின் அவர்கள் ஆசிரியப் பணியில் இருப்பதால் கல்வி குறித்தும், மாணவர்கள் குறித்தும் அதிகம் இத்தொகுப்பில் எழுதி இருக்கிறார். தன் படைப்பின் வழி அவர் முன் வைக்கும் கேள்விகளும், எழுப்பும் சந்தேகங்களும், சொல்லும் ஆலோசனைகளும் அந்தந்த தளங்களில் விவாதத்தைக் கிளப்பக் கூடியவைகளாகவும், விவாதிக்க வேண்டியவைகளாகவும் இருப்பதை மறுக்கவோ, மறுதலிக்கவோ முடியாது.