Monday, 10 May 2021

காம்ரேட் – சிவப்பின் வசீகரம்

 

காம்ரேட் என்ற உச்சரிப்புக்கு ஒரு வசீகரம் இருக்கும். தோழர்களுக்கு அது இன்னுமொரு படி மேல். அந்தப் பெயரில் ஒரு வரலாற்று நாவல். பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதியதை வி.கே. பாலகிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். 1975 ல் வெளியான நூல். என் தந்தை எனக்கு வழங்கிய நூல்களில் இதுவும் ஒன்று. உச்சரிப்பின் வசீகரமே என்னை வாசிக்கத் தூண்டியது. காம்ரேட்”, யஷ்பால் இவ்விரண்டு வார்த்தைகளும் நாவல் எதைப் பற்றி பேசும் என்பதை யூகித்து விட போதுமானது என்றாலும் அதைக் கடந்து வாசிக்கும் போது வரலாற்றை முன் நோக்கி பார்க்க முடியும்.  

பத்மலால் பாவரியா தானிய வாணிபம் செய்பவன். ஒழுக்கக் கேடுகள் நிறைந்தவன். காங்கிரஸ் பெரும் புள்ளி ஒருவரின் கைப்பாவையாகச் செயல்படும் ரவுடி. கல்லூரி செல்லும் நேரம் போக கம்யூனிஸ்ட் கட்சியின் இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது, கட்சியின் புத்தகங்கள், பத்திரிக்கைகள் விற்பது என செயல்படுபவள் கீதா. எதிர்பாராத சந்திப்புகளால் இருவருக்குமிடையே பழக்கம் ஏற்படுகிறது. பாவரியா ஒழுக்கங்கெட்டவனாக இருந்த போதும் கீதாவிடம் கண்ணியமாகவே நடந்து கொள்கிறான். இயக்கத்தைப் பற்றிக் கூறி ஏதாவது நல்ல விசயத்திற்கு இவனை திருப்பி விடலாம் என கீதா நினைக்கிறாள். அதில் வெற்றி பெற்றாளா? என்பதே நாவல்.

Sunday, 9 May 2021

வேலூர் புரட்சி – மறைக்கப்பட்ட முகம்

சில வரலாற்று நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டவுடன் காத்திருக்கும் பருந்துகளாய்  பதிப்பகங்கள்  அத்தகைய புத்தகங்களை அச்சடித்துத் தள்ளுகின்றன. அவற்றின் விற்பனையும் சோடை போவதில்லை.  இதன் பொருள் அப்படியான நூல்கள் அதிகம் வாசிக்கப்படுகின்றன. இதன் மூலம் நூற்றாண்டுக்கு முந்தைய தன் இனத்தின், மண்ணின் நிலைமையை இந்தத் தலைமுறை அறிந்து கொள்ள முனைகிறது என்று சந்தோசம் கொள்ளலாம். அந்த வகையில் பேராசிரியர் ந. சஞ்சீவி அவர்களின் நூல்கள்  பெருமளவில் மலிவுப் பதிப்புகளாக வர ஆரம்பித்திருக்கின்றன. வரலாற்றை மீளாய்வு செய்பவர்களுக்கும் ஆய்வுக் கட்டுரையாளர்களுக்கும் இவருடைய நூல்கள்  ஆதாரங்களாக அமைகின்றன.

Saturday, 8 May 2021

கபடவேடதாரி – விமர்சனப் போட்டி – 4

 

 அத்தியாயம் – 4 (இரண்டு செங்கல்)

சூனியனைத் தூக்கி எறிந்து விட்டு சனிக்கோளம் நோக்கிப் போவதோடு மரணக் கப்பலின் கதையும், அந்த உலகத்தின் கதையும் முடிகிறது. தன் சாகசங்களால் தூசியினும் சிறிதாய் மாறி உயிரோடு நம் எதார்த்த உலகத்திற்குள் சுங்கச்சாவடி வழியாகவே வரும் சூனியன் கோவிந்தசாமி என்பவனின் உடம்பில் கூடு பாய்ந்து கொள்கிறான். தினத்தந்தி நாளிதழின் அன்றாடச் செய்தி கோர்வையாய் இருக்கும் துயரங்களால் சூழப்பட்ட வாழ்க்கை கோவிந்தசாமியினுடையது. அவன் பெயரை அறியும் முயற்சியில் சூனியனே அயர்ந்து போகிறான் என்றால் மற்றதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.