Wednesday 30 June 2021

தயக்கத்தின் மீதான வெறுப்பு!

மிக முதிர்ந்த ஒரு பெரியவர் அறுவைசிகிச்சைக்குப் பின்னர் அணிவதற்கான கண்ணாடியை வாங்க மருத்துவரின் சீட்டோடு எனக்கு முன் அமர்ந்திருந்தார். அவருக்குத் துணையாய் எவரும் வந்திருக்கவில்லை! சீட்டைப் பார்த்து விட்டுக் கடையில் இருந்த பெண்மணி, "650 ரூபாய் ஆகும் தாத்தா" என்றார்.

அவரோ நடுங்கும் விரல்களோடும், குரலோடும் "அவ்வளவு காசு இல்லையேம்மா. குறைய எதுவும் முடியாதா?" என்றார்.

அப்படின்னா தூரப் பார்வை கண்ணாடி போட முடியாது தாத்தா என அந்தப் பெண் சொன்னதும், "எனக்குப் படிக்கிறது முக்கியம். அதுனால தூரப் பார்வைக்கு எல்லாம் வேணாம். வாசிக்கிற மாதிரி செஞ்சு கொடுத்தா போதும்" என்றார். அப்படின்னா 350 ரூபாய் ஆகும் தாத்தா என்று அந்தப் பெண் சொன்னதும். "இருமா என்றபடி தன் உள் சட்டைப் பையில் இருந்த பர்சை எடுத்துப் பார்த்தார். அதில் 400 ரூபாய் இருந்தது. சரிம்மா. அதையே கொடு. ஆனால், வாசிக்கிற மாதிரி கண்ணாடியா போட்டுக் கொடுத்துடு என்பதை மீண்டும், மீண்டும் அழுத்திச் சொல்லிய படியே பணத்தை எடுத்து நடுங்கும் விரல்கள் வழியே நீட்டினார்".

மகன் எனும் தோழன் தந்த பரிசு !

டிராயிங் வரைஞ்சு ரொம்ப நாள் ஆச்சே. ஏதும் ஐடியா இல்லையாடா? என மகனிடம் கேட்டேன்.

இப்போதைக்கு வேறு ஒரு முக்கியமான வேலையில் இருக்கான். அது முடியுற வரைக்கும் அவனை விட்ருங்க டாடி என்றாள் மகள்.

அப்படி என்ன முக்கியமான வேலை?

இந்த மாதக் கடைசியில் அது தெரியும். அதுவரைக்கும் சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டுமே என்றான் மகன்.

காலையில் எழுந்ததும் மனைவி, மகள் சூழ இந்த ஓவியத்தைக் கொடுத்தான்.

முறையான பயிற்சி ஏதும் இன்னும் கொடுக்கவில்லை. பார்த்து வரைதல் என்ற அளவில் தான் இருக்கிறான் என்ற போதும் என்னை அடையாளப்படுத்தும் அளவுக்கு வந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. தோழனாய் அவன் தந்த பரிசுக்கு ஒரு உச்சிமுகர்தலைக் கொடுத்தேன்.