Thursday 30 December 2021

கபடவேடதாரி - விமர்சனப்போட்டி - 45

அத்தியாயம் - 45 

(ஜோடி)

எதிர்பாராத வகையில் இரவுராணி மலர் இருக்கும் தடாகத்தின் கரைக்கு கோவிந்தசாமி வந்து சேர்கிறான். நினைவிலும், இலட்சியத்திலும் இருந்த உறுதியில் நீலநகர வனத்துக்கு வந்த நோக்கத்தையே மறந்தும் போகிறான்.

தன் தோற்றம், ஆளுமை சார்ந்து தனக்கிருந்த நம்பிக்கை சாகரிகாவைக் கவர பயன்படும் என நினைக்கிறான். நினைப்பா? தப்புக் கணக்கா? என்பது போகப் போகத் தெரியும்! அந்த நினைப்பு தாய் மசாஜ் குறித்து ஆரம்பத்தில் அவன் கொண்டிருந்த குற்ற உணர்வை நற்செயலாக நினைக்க வைக்கிறது.

மாயத்தடாகத்தில் குளித்து எழுந்த கையோடு கண்ணில் பட்ட இரவுராணி மலரைப் பறித்து தன் எண்ணத்தை அதன் இதழ்களுக்குள் புதைக்கிறான். அதேநேரம், உடலோடும், இதழோடும் இதழ் பதித்து காதல் செய்து கொண்டிருக்கும் ஒரு ஜோடியையும் பார்க்கிறான். முத்தத்திற்கு தங்களை குத்தகைக்குக் கொடுத்திருந்த அந்த ஜோடியின் முத்த பரிமாறலில் தன்னை மறந்த நிலையில் அவர்களை நெருங்கிப் பார்த்த கோவிந்தசாமிக்கு அதிர்ச்சி.

Wednesday 29 December 2021

கபடவேடதாரி - விமர்சனப்போட்டி - 44

அத்தியாயம் – 44

(அரோகரா)

மங்கையினால் வரும் துக்கம் மதுவினில் கரையும் என்ற எதார்த்தத்தைப் போல கோவிந்தசாமியும், அவன் நிழலும் மீண்டும் தன் துக்க சிந்தனைகளோடு சந்தித்துக் கொள்கிறார்கள். குடிக்க வந்திருக்கும் கோவிந்தசாமி தன் நிழலிடம், நீ குடிகாரன் ஆகிவிட்டாயா? எனக் கேட்பது நகை முரண்! தேசியவாதியாய் தான் மது குடிப்பது சரியா? தவறா? என்ற தர்க்க வாதங்களுக்கிடையே தனக்கெதிராக கிளம்பும் பெண்கள், அவர்கள் எல்லோரும் தன்னை விரும்புவது குறித்து கோவிந்தசாமி பெருமிதமும், துக்கமும் அடைகிறான். மது விடுதியில் கூட கோவிந்தசாமி ஒரு பெண்னிடம், புல்வெளிக்கு இஸ்திரி போடுகிறவன் என குட்டுப்படுகிறான்.

தன்னை ஏமாற்றியது குறித்து நிழல் வெண்பலகையில் எழுதிய பதிவை சாகரிகா வாசிக்கிறாள். தனக்கு வாய்த்த நிழல் அடிமை தன்னை விட்டு விலகவில்லை என சந்தோசம் கொள்பவள் போனசாக ஒரு முத்தமும் கொடுத்து அதை சமஸ்தானத்தில் உட்காரவைக்க நினைக்கிறாள். நம்மிடையே இருந்த திராவிடத்தாரகை கூட அடிமைகளைத் தானே பிரதானமாய் கொண்டிருந்தார்!

Tuesday 28 December 2021

கபடவேடதாரி - விமர்சனப்போட்டி - 43

அத்தியாயம் -  43 

( யோக நித்திரை )

பிரம்மனுக்கு இணைவைக்க முடியாத தன் யோக நித்திரை குறித்து சூனியன் விளக்குகிறான். அவனின் விளக்கமே அரூப ரூபத்தை நமக்குள் ரூபமாய் காட்சிப்படுத்துகிறது. யோக நித்திரையில் பிரதி பிம்பங்களைப் படைத்துத் தள்ளுகிறான். பூமி பந்தில் உலாவித் திரியும் அத்தனை அடையாளங்களோடும் உலாவித் திரியும் சூனியனின் பிரதி பிம்பங்களின் செயல்பாட்டு வேகம் மட்டும் எந்திரன் சிட்டி அளவுக்கு இருக்கிறது!  தன் படைப்பின் அம்சத்தை தோன்றிற் புகழோடு தோன்றுபவர்கள் என்ற ஒற்றை வரியில் சொல்லி விடுகிறான்.

கண்ணை பறவையாக்கி தன் கண்ணிகளை பார்வையிட ஆரம்பிக்கிறான். தன்னை ஒரு கொலைகாரன் என்று குற்றஞ்சாட்டும் கதையை வெண்பலகையில் படிக்கும் கோவிந்தசாமி கதறி அழுகிறான். அவனின் அழுகை எப்பவும் எடுபடாதது போல இப்பவும் எடுபடாமலே போகிறது. முதல் கண்ணிக்கு இப்படி கன்னி வைக்கும் சூனியனின் கண் பார்வை தன் அடுத்த கண்ணியான சாகரிகா மீது படுகிறது. அவளின் போலி திராவிடத்தை ஒட்டியும், வெட்டியும் வெண்பலகையில் வரும் பதிவில் அவள் மனதிற்குள் நினைத்த ஒரு விசயம் அம்பலமாகிறது. எப்படி இது சாத்தியம்? என சாகரிகா குழம்புகிறாள். சூனியனின் பிள்ளைகள் பல முனைகளில் இருந்தும் அஸ்திரங்களை ஏவ ஆரம்பிக்கின்றனர்.

Monday 27 December 2021

எங்கே போனது என் அல்வாத் துண்டு? - சாரம் குறையாத சரக்கு!

நாற்பத்தெட்டு பக்கம். நான்கு கதாபாத்திரங்கள். அதில் இரண்டு எலி. அவைகளும் கதை முழுக்க வரவில்லை. விவேக், அச்சுபிச்சு என்ற மீதி இரண்டு கதாபாத்திரங்கள் நம் போன்ற மனிதர்கள். இருக்கும் நிலையில் இருந்து இன்னும் அதிகமாய் முன் நகர்வதற்கான மனநிலை கதை போக்கில் அவர்கள் நமக்குள் விதைக்கிறார்கள். K.R.மணி எழுதி அநுராகம் வெளியீடாக வந்திருக்கும் இந்நூலை மாற்றங்களுக்கான தூண்டல் என்றால் மிகச் சரியாக பொருந்தும் என நினைக்கிறேன்.

அல்வாத்துண்டுஎன்பதை அவரவருக்கான குறியீடாகக் கொண்டு அதைத் தேடி ஓடுவதையும், அந்தத் தேடலில் கண்டடைவதையும், கண்டடைந்தது கைதவறி போகும் போது மீண்டும் புதியன தேடி ஓடுவதையும் மனநிலையாகக் கொண்ட மனிதர்களையும், கிடைத்ததை இழந்த போதும் புதிய தேடலுக்கான ஓட்டத்தை துவங்காமல் தயங்கி நின்றபடி அதற்கான காரணங்களை தனக்குத் தானே அடுக்கிக் கொள்ளும் மனநிலை கொண்ட மனிதர்களையும் விவேக், அச்சு பிச்சு பாத்திரங்கள் பேசுகின்றன.

Sunday 26 December 2021

கபடவேடதாரி - விமர்சனப்போட்டி - 42

அத்தியாயம் – 42 

(தாரகையின் தாபம்)

புவியில் தனக்கான சமஸ்தானத்தை அமைத்துக் கொண்டு நீலவனத்தில் குடியுரிமை பெற்றிருக்கும் தன் இரசிகர்கள் மூலம் வெண்பலகை வழியே அங்கும் தன் புகழை பரப்பச் செய்து வரும் எழுத்தாளர் நற்குணசீலனின் செயல்பாட்டையும், மாடலையும் தனக்கான முன் மாதிரியாக சாகரிகா எடுத்துக் கொள்கிறாள். நிழலை நம்பி  சாகரிகா ரசிகர் வட்டம் என்ற பெயரில் தனக்கான சமஸ்தானத்தை முறைப்படி அமைக்கிறாள்.

கோவிந்தசாமியின் நிழலுக்கு இருக்கும் தன் மீதான காதலை மெளனமாய் கடத்தி விட்டு விட வேண்டும் என்றும், நிழலை விடச் சிறந்த தற்காப்பு ஆயுதம் ஒன்று கிடைத்தால் வனத்திலேயே அதைக் கொன்று புதைத்து விடவும் சாகரிகா திட்டமிடுகிறாள். தன் சமஸ்தானத்தில் குடியேற மக்களுக்கு அவள் கொடுக்கும் விளம்பர அறிவிப்புகள் புதிய மனை விற்பனைக்கு பூமிப் பந்தில் செய்யப்படும் அறிவிப்புகளுக்கு நிகர்த்தவைகள்!

Saturday 25 December 2021

கபடவேடதாரி - விமர்சனப்போட்டி - 41

 அத்தியாயம் – 41

 (இன்னொரு சூனியன்)

தன்னைக் காதல் வலை(சூழ்ச்சி)யில் வீழ்த்தி காரியம் முடிந்ததும் தூக்கியடிச்சிட்டு போனவளை பரிகாசிக்கவும் முடியாமல், காதலைத் துறக்கவும் முடியாமல் கலங்கிப் போன நிழல் காதலில் காயப்படுபவனின் கடைசிப் புகலிடமாய் இருக்கும் சாரயக்கடைக்கு வந்து சேர்கிறது. அங்கு கோவிந்தசாமியும் சரக்கடித்துக் கொண்டிருக்கிறான். பிரிந்தவர்கள் சந்தித்துக் கொள்கிறார்க்ள். சோகத்தின் வீரியம் குறைய இடைஇடையே பெக்கோடு ஏமாற்றங்களுக்கும், துரோகங்களுக்கும் மன்னிப்பு கேட்ட கையோடு அவரவர் கதைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். மது – மங்கை – கவிதை வெண்பலகையில் வருவது கண்ட கோவிந்தசாமி தன் கவிதைத் திறன் குறித்து நிழல் வழியே நமக்கும் சொல்லிக் கொள்கிறான். மனுஷின் கவிதை மதுவுக்கான வெஞ்சனம் என்பது இலக்கியவாதிகள் சார்ந்த சாடலின் குறியீடாக இருக்கும் என நினைக்கிறேன்.

Friday 24 December 2021

கபடவேடதாரி - விமர்சனப்போட்டி - 40

அத்தியாயம் – 40 

(நான் உன் வெயில்)

கோவிந்தசாமியின் நிழல் சாகரிகாவை தனதாக்கிக் கொள்ள கொண்டிருந்த விரதத்தைக் கைவிடுகிறது. தன் சிந்தனைக் கதவைத் திறந்து விட்ட காதலியைத் (செம்மொழிப்ரியா) தவிர தன் மனதில் எவருக்கும் இடமில்லை என சத்தியம் கொள்கிறது. உனக்காக நான் என் சாம்ராஜ்யத்தையே துறப்பேன் என்ற காதல் மொழியை தன் காதலியிடம் சொல்லி காதலை வெளிப்படுத்துகிரது. இதெல்லாம் கலியுகக் காதலில் சகஜம் தான்!

தன் சொல்லுக்கு இயங்கும் சாட்டையாய் நிழலை ஆட்கொள்ளும் காதலி வெண்பலகை மூலம் சாகரிகாவிடமிருந்து நிழல் விலகி இருப்பதற்கான காரணத்தை எழுத வைக்கிறாள். தன் பங்கிறகு சாகரிகாவின் கடந்த கால திகிடுதத்தங்களையும், கபட நாடகத்தையும் வரிசைப்படுத்தி நீலநகரத்தின் கலாசாரத்துறைச் செயலாளராக அவள் ஆவதற்கான வாய்ப்புக்கும் வேட்டு வைக்கிறாள். போதாக்குறைக்கு கோவிந்தசாமியின் பெயரையும் இந்த விவகாரத்திற்குள் இழுத்து விடுகிறாள்.

புகைப்பட ஆல்பம் - 32

மகன் - நான்

 

Thursday 23 December 2021

மனைவி சொல்லே மந்திரம் - உற்றுநோக்கு!

"மேனேஜ்மெண்ட்" என்ற சொல்லை கெட்டிக்காரத்தனத்தின் அடையாளம் என நிர்வாகத் துறையில் இயங்கும் ஆண்களில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த மமதையை சொல்களில், செயல்களில் அவ்வப்போது வெளிப்படுத்துவதோடு, மேனேஜ்மெண்ட் சார்ந்த சிறப்பு வகுப்புகளில், பயிலரங்குகளில் கலந்து கொள்ள நிர்வாகம் தங்கள் செலவில் அனுப்பினால் அதை தனக்குத் தரப்பட்ட கெளரவத்தின் அடையாளமாகவே பிரதிநிலை படுத்திக் கொள்கிறோம். ஆனால், ஆண்களின் இத்தகைய அடாவடித்தனத்தை எல்லாம் "சும்மா", "பிதற்றல்" என பொட்டில் அடித்தாற் போல சொல்லிப் போகிறதுமனைவி சொல்லே மந்திரம்”! ஷாரு ரெங்கனேசர் ஆங்கிலத்தில் எழுதிய இந்நூலை வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் தமிழாக்கம் செய்திருக்கிறார். கற்பகம் புத்தகாலயம் வெளியீடு செய்திருக்கிறது.

நிர்வாகவியலில் கற்றுத் தரப்படும் அத்தனை வினாக்களுக்குமான சூத்திரம் அவரவர் வீட்டில் இருக்கும் பெண்களிடமே இருக்கிறது. அதை அவர்கள் சிறப்பாகக் கையாண்டு குடும்பத்தை நிர்வகிக்கிறார்கள். சிலநேரம், அதில் சிக்கல்கள் ஏற்படும் போது ஒரு தேர்ந்த நிர்வாகியின் திறனோடு அவைகளுக்கான மாற்று வழிகளையும் கைக்கொள்கிறார்கள். ஆனால், அதை அவர்கள் உணர்வதில்லை. காரணம், நம் கலாச்சார குழந்தை வளர்ப்பு முறையில் அவை அனிச்சையாய் அவர்களிடம் அப்பிக் கிடக்கிறது.