Tuesday 28 November 2023

”சண்டை போட்டுக்காதீங்க” என்ற ஒற்றை அறிவுரையோடு! – 20 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் -

19 ஆண்டு திருமண வாழ்வைக் கடந்து 20 ன் ஆரம்பத்தில் அடி எடுத்து வைத்து திரும்பிப் பார்க்கையில் அவரவர் இயல்புகளிலிருந்து ஏதோ ஒரு காரணங்களுக்காக எங்களை மாற்றிக் கொண்டே நகர்ந்திருக்கிறோம். நிறைய முரண்கள் என்பதை முட்கரண்டியாய் பார்க்காமல் உணவை உண்பதற்கான ஒரு உபகரணமாக மட்டுமே பார்த்துக் கொண்டோம். அதையே தோளுக்கு மேல் வளர்ந்த எங்கள் பிள்ளைகளுக்கும் உணர்த்தியிருந்தோம். அந்த உணர்தலை அவர்கள் அவ்வப்போது வார்த்தைகளில், இப்படியான தினங்களில், நிகழ்வுகளில் அன்பின் பொருட்டான பொருட்களாய் மாற்றி கைகளில் தந்து விடுவார்கள். கூடவே, ”சண்டை போட்டுக்காதீங்க” என்ற ஒற்றை அறிவுரையோடு!

இன்று திருமண நாள் என்ற பிரக்ஞை இன்றி விழித்தெழுந்ததும் மகளிடமிருந்து பின்னிரவு வேளையில் ”Happy anniversary dady.. 🤩🥰❤️❤️” என அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி கண்ணில் பட்டது. வீட்டில் இருந்த மகன் இரண்டு பைகளோடு வந்தான். ”திருமண நாள் வாழ்த்துகள் டாடி”. கிஃப்ட் இந்தாங்க. ஆனால், இப்ப ஓபன் செய்யாதீங்க, அம்மா வரவும் இரண்டு பேரும் சேர்ந்து இதை  பிரிங்க என்றான். மணமகளுக்காக  காத்திருக்கும் மணமகன் போல் காத்திருந்தேன். மாப்பிள்ளை தோழன் போல் மகன் என்னருகிலேயே அமர்ந்திருந்தான். வழக்கமான வேலைகளை முடித்து விட்டு மனைவி வந்தாள். பரிசுப்பொருட்களுக்குள் அவர்களின் அன்பை ஊடு பாவியும், எங்களை பதித்தும் கொடுத்திருந்தார்கள்.