Showing posts with label புத்தகப் பார்வை. Show all posts
Showing posts with label புத்தகப் பார்வை. Show all posts

Thursday, 4 January 2024

வணிகத் தலைமைகொள் - வெற்றிக்கான சூட்சுமப் பெட்டகம்

வணிகத்தில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள் தாங்கள் ஜெயித்த கதைகளை எழுதி இருக்கிறார்கள். தொகுப்பாக்கி இருக்கிறார்கள். அவைகள் பெரும்பாலும் தன்னம்பிக்கை நூலின் சாயல் தரித்தே இருக்கும். அதில் இடம் பெற்றிருக்கும் கதைகள், உதாரணங்களில் பெரும்பகுதி மறு வாசிப்புக்குரியதாகவே அமைந்திருக்கும். தவிர, வணிகக் கனவை சுமந்து திரிபவர்களுக்கும், அதன் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கும் வணிகம் செய்வதன் பொருட்டு தங்களையும், ஆரம்பிக்க போகும் தொழிலையும் கட்டமைப்பதற்கான வழிகாட்டல்களை, செயல்படுத்தத் தகுந்த ஆலோசனைகளை தெளிந்த நீரோடையாகக் கொண்டிருக்காது. இத்தகைய குறைகள் இல்லாது ஒரு வழிகாட்டிக் கையேடு உங்களுக்கு வேண்டுமெனில் ராம் வசந்த் எழுதி விகடன் வெளியீடாக வந்திருக்கும் “வணிகத் தலைமைகொள்தொகுப்பை கையில் ஏந்திக் கொள்ளலாம்.

எந்தத் தொழிலை தொடங்குவது? என்பதை அவரவருக்குரியதாக ராம் வசந்த் விட்டு விட்டார். தொழிலைத் தொடங்கிய பின் அதில் முன்னேறிச் செல்வதற்கான அறி(ற)வுரைகளை தன் அனுபவங்கள் ஊடாக  தொகுப்பு முழுக்கச் சொல்லிச் செல்கிறார். நூலை வாசிக்க, வாசிக்க ஒரு நேரடி வகுப்பில் அமர்ந்து கேட்கும் உணர்வு ஏற்படுகிறது என்றால் அது மிகையில்லை. சந்தேகம் இருப்பின் வாங்கி வாசித்து நுகரலாம்.

Sunday, 30 January 2022

துரோகச் சுவடுகள் – வாழ்தலின் விழிப்பு

துரோகத்திற்கும், நம்பிக்கைக்குமான இடைவெளியில் நிற்கும் ஒருவன் எதன் பக்கம் சாய்கிறான் என்பதே அவனுடைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அந்த தீர்மானித்தல் துரோகம் என்ற நிலைப்பாட்டைக் கொள்ளும் போது அது எதிரில் இருப்பவர், பாதிக்கப்பட இருப்பவர் உள்ளிட்ட எவர் பற்றியும், எது குறித்தும் கவலை கொள்வதில்லை. துரோக எண்ணத்தில் தீவிரம் கொண்டு இயங்கும் ஒருவரின் செயலானது பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல வரலாற்றிலும் சுவடுகளாகப் பதிந்து விடுகிறது என்பதை விளக்கும் நூல் துரோகச் சுவடுகள். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வழியாக வந்திருக்கும் இந்நூலின் ஆசிரியர் வெ. இறையன்பு.

துரோகங்களின் வகைகள், அது எங்கிருந்து, யாரால், எப்பொழுது கட்டவிழ்க்கப்படுகிறது என்பதையெல்லாம் வாசிக்கும் போதே மெய்சிலிர்க்கிறது. குறிஞ்சி மலரைத் தேட வேண்டுமானால் பல நூறு நெறிஞ்சி மலர்களை நாம் கடக்க வேண்டியிருக்கிறது. வாழ்தலை அத்தனை ஐயப்பாடுகளால் நகர்த்த வேண்டிய காலத்தில் தான் கி.பி. தொடங்கி இன்று வரை இருந்து வருகிறோம் என்பதற்கு துரோகச் சுவடுகளே சாட்சியாய் இருக்கிறது.

Wednesday, 26 January 2022

கபடவேடதாரி – ஒரு வரி கதையும் ஒருநூறு மிகு புனைவும்!

Bynge ல் தொடராக வெளியாகி - எழுத்து பிரசுரம் வழியாக நூலாகி இருக்கும் கபடவேடதாரி யின் ஆசிரியர் பா.ராகவன்.

கபடவேடதாரியில் கதை என்று பார்த்தால்,தன்னைத் தண்டித்த கூட்டத்தைப் பலி வாங்கக் கிளம்புகிற ஒருவன் அதற்காக என்னவெல்லாம் செய்கிறான்? அவன் நினைத்தபடி நடந்ததா? என்ற ஒன்லைன் மட்டுமே! அந்த ஒன்லைனை ஐம்பது அத்தியாயங்களுக்கும் புனைவை துணைக்கு வைத்துக் கொண்டு சுவராசியமாக நகர்த்தி இருக்கிறார்.

காதல், அழுகை, ஏமாற்றம், காமம், கலாச்சாரம், சித்தாந்தம், அரசியல், நகைச்சுவை என எல்லா தளங்களையும் தொட்டு  நிற்கும் நாவலின் களத்திற்கும், கதாபாத்திரங்களுக்கும் உருவாக்கி இருக்கும் பிரமாண்ட பின்புலம் தரும் இரசனையும், காட்சிப்படுத்தலும் அடுத்தடுத்த அத்தியாயங்களை எட்டிப் பார்க்க வைக்கின்றன. படைப்புகளில் நாலும் இருக்க வேண்டும். அதுவும், நறுக்குன்னு இருக்க வேண்டும் என என் தமிழ் பேராசிரியர் சொன்னது நினவுக்கு வரும் விதமாக புனைவெழுத்தில் அடித்து ஆடி இருக்கிறார்.

Saturday, 22 January 2022

முரண்பாட்டை முன்வைத்தல் - முன்னெடுப்பின் அவசியம்!

இன்றைய கல்வி முறையில் பாடத்திட்டங்கள் சார்ந்து நிலவும் முரண்களையும், அதை கற்பிப்பதில் ஆசிரியர்களும், கற்பதில் மாணவர்களும் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், சமூகம் சார்ந்த நடைமுறை நிகழ்வுகளிலிருந்து வரலாறு, அறிவியல் பாடங்கள் விலகி நிற்பதையும், ஆங்கிலவழிக் கல்வி மூலம் தனியார் பள்ளிகளின் எழுச்சியையும், அரசுப்பள்ளிகளின் வீழ்ச்சியையும் பற்றி இந்நூல் பேசுகிறது.  லேனிங் ப்ஃரம் கான்பிளிக்ட் என்ற தலைப்பில் கிருஷ்ணகுமார் எழுதியதை ஜே.ஷாஜஹான் தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.

முரண்பாட்டை முன்வைத்தல்என்ற முதல் தலைப்பில் பிரதமர் இந்திரா படுகொலையின் தொடர்ச்சியாக சீக்கியர்கள் மீது நிகழ்ந்த வன்முறை சார்ந்த அரசின் செயல்பாடுகள், காந்தி படுகொலைக்கான காரணத்திற்கு அந்தந்த மாநில அரசுகள் பாடநூல்களில் பூசும் மதச் சாயங்கள் குறித்தான முரண்களை முன் வைக்கிறார். பொய்யான அல்லது நிலவும் சூழல், அரசியல் நிலைப்பாடு, சமூக நலன் கருதி மறைத்தோ, மேம்போக்காகவோ எழுதப்பட்ட பாடநூல்கள் மூலமாக மாணவர்களின் மனதில் நிஜத்திற்கு எதிரான கருத்துகளே வந்து அமர்வதாய் எச்சரிக்கிறார். வரலாற்றில் மிகையான தகவல்களை மட்டும் தந்து முரண்பாடுகளைத் தவிர்க்கும் பழைய கல்விமுறை மாணவர்களுக்கு எத்தகைய அறிவைத் தருகிறது? மாணவர்களுக்கு இந்த தேசத்தின் நிர்மானத்தை அது எப்படி புரிந்து கொள்ள வைக்கிறது?  என்பதன் வழியாக இளம் தலைமுறையினரின் அறிவுத் தேவையை நிறைவு செய்ய பழைய பாடத்திட்ட முறைகள் தடையாக நிற்கும் அவலத்தை முன் வைக்கிறார்.  நம்மால் இவைகளைத் துளியும் மறுக்க இயலவில்லை.

Tuesday, 18 January 2022

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் – 1 – ஊக்க மருந்து!

மற்றவர்களின் வாழ்வியல் செய்திகளை தன் எழுத்துகளில் அரங்கேற்றாமல் தன் அனுபவங்கள் வழியாக மட்டுமே சொல்ல வேண்டிய தகவல்களை வாசிக்கின்றவர்களுக்கு நேரடியாக கடத்தும் தனக்கே உரிய ட்ரேட் மார்க்கோடு லேனா தமிழ்வாணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. கல்கண்டில் தொடராக வந்து மணிமேகலைப் பிரசுரம் வழி வந்திருக்கும் இந்நூலில் 60 கட்டுரைகள் உள்ளன. அத்தனையும் நமக்கே நமக்கானது என்பது நூலின் சிறப்பு.

பக்கம் பக்கமாக வழங்கப்படும் அறிவுரைகளால் பயன் ஏதுமில்லை. அது வழங்கப்படும் அறிவுரைகளின் அடர்த்தியை நீர்த்துப் போக வைத்து விடும் என்ற எதார்த்தத்தின் சாயலைத் தனதாக்கி குறுகத் தரித்த வார்த்தைகளில் ஒவ்வொரு கட்டுரையும் இருக்கிறது.

ஒரு பக்கக் கட்டுரைகளின் வழி ஒரு நூறு தகவல்களை, செய்திகளை மட்டுமல்லாது அதன் மூலமாக வாழ்தலுக்கான வழிமுறிகளையும், நமக்கு நாமே சுத்திகரிப்பு செய்து கொள்ள வேண்டிய விசயங்களையும், திருத்தங்களையும் சுட்டிக் காட்டுகிறார். சுடர் தரும் விளக்கில் இருந்து பயன் பெற வேண்டியது நம் கையில் தான் இருக்கிறது. பெறுகிறவர்கள் பிரகாசிப்பார்கள்.

Sunday, 16 January 2022

NO 1 - சேல்ஸ்மேன் – விற்பனையாளருக்கான வழிகாட்டி

இதனை இவனிடம் விற்க முடியும் என்றாய்ந்து

   அதனை அவன் கண் விற்றல் –

என்பதே விற்பனையாளனாக இருக்கும் ஒருவரின் வெற்றி சூட்சுமம். இந்த சூட்சுமத்தில் சூரனாக இருப்பது என்பது அத்தனை எளிதல்ல. அதனால் தான் வெற்றிகரமான விற்பனையாளராக சிலரால் மட்டுமே இருக்க முடிகிறது. அப்படியென்றால், மற்றவர்களால் அப்படி ஆக முடியாதா? என்ற எதிர் கேள்விக்கான பதில் “முடியும்”. அதற்கான வழிகளை இந்நூலாசிரியர் சோம. வள்ளியப்பன் தன் அனுபவக் குறிப்புகளோடும், நடைமுறை நிகழ்வுகளோடும், வெற்றிகரமான விற்பனையாளர்களின் அணுகுமுறைகளோடும் விளக்கி இருக்கிறார்.

ஒரு விற்பனை பிரதிநிதி (சேல்ஸ்மேன்) வாடிக்கையாளரிடம் விற்பனையை ஆரம்பிப்பதற்கு முன் தன்னை எப்படி தயார் செய்து கொள்ள வேண்டும்? வாடிக்கையாளரை எவ்வாறு அணுக வேண்டும்? அவரை வாய்ப்புள்ள வாடிக்கையாளாரக எப்படி மாற்றலாம்? பொருளை வாங்க வைக்க எவ்வாறு தூண்ட வேண்டும்? தூண்டலுக்கான உரையாடலை எந்த நேரத்தில் துண்டித்துக் கொள்ள வேண்டும்? என்பன போன்ற அடிப்படையான விசயங்களை நூல் முழுக்கக் கற்றுத் தருகிறார்.

Wednesday, 12 January 2022

கட்டப்பொம்மனும் கலெக்டர் ஜாக்சனும் - திருப்பம் தந்த சந்திப்பு!

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முதல் எதிர்ப்புக்குரல் எழுப்பியவனாகவும், ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டி நின்ற கொள்ளைக்காரனாகவும் இருவேறு அடையாளங்களாக நமக்கு கட்டப்பொம்மனின் வரலாறு வாசிக்கக் கிடைக்கிறது. இவ்விரு அடையாளங்களும் சமகால வரலாற்றாசிரியர்களால் முன் வைக்கப்பட்டிருக்கிறது என்பது சுவராசியம்! கட்டப்பொம்மனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வராலாற்றாய்வாளர்கள் இரு கிளைகளாக பிரிந்து நின்றனர். நிற்கின்றனர். அந்த வகையில் கட்டப்பொம்மனை முதல் எதிர்ப்புக்குரலுக்குச் சொந்தக்காரனாக ஏற்று வந்திருக்கும் இந்நூலின் ஆசிரியர் செ. திவான்.

பிறப்பின் அறிமுகத்தில் தொடங்கி கயத்தாறு கட்டை புளிய மரத்தில் முடியும் வரையிலான இத்தொகுப்பின் தன் ஏற்புரைக்கு இன்னும் வலிமை சேர்க்க ஏதுவாக கட்டப்பொம்மனின் புகழ் பரப்பிய முன்னோடிகளை நூலின் முன் பக்கங்களிலேயே ஆசிரியர் வரிசைப்படுத்தி விடுகிறார்.

Monday, 27 December 2021

எங்கே போனது என் அல்வாத் துண்டு? - சாரம் குறையாத சரக்கு!

நாற்பத்தெட்டு பக்கம். நான்கு கதாபாத்திரங்கள். அதில் இரண்டு எலி. அவைகளும் கதை முழுக்க வரவில்லை. விவேக், அச்சுபிச்சு என்ற மீதி இரண்டு கதாபாத்திரங்கள் நம் போன்ற மனிதர்கள். இருக்கும் நிலையில் இருந்து இன்னும் அதிகமாய் முன் நகர்வதற்கான மனநிலை கதை போக்கில் அவர்கள் நமக்குள் விதைக்கிறார்கள். K.R.மணி எழுதி அநுராகம் வெளியீடாக வந்திருக்கும் இந்நூலை மாற்றங்களுக்கான தூண்டல் என்றால் மிகச் சரியாக பொருந்தும் என நினைக்கிறேன்.

அல்வாத்துண்டுஎன்பதை அவரவருக்கான குறியீடாகக் கொண்டு அதைத் தேடி ஓடுவதையும், அந்தத் தேடலில் கண்டடைவதையும், கண்டடைந்தது கைதவறி போகும் போது மீண்டும் புதியன தேடி ஓடுவதையும் மனநிலையாகக் கொண்ட மனிதர்களையும், கிடைத்ததை இழந்த போதும் புதிய தேடலுக்கான ஓட்டத்தை துவங்காமல் தயங்கி நின்றபடி அதற்கான காரணங்களை தனக்குத் தானே அடுக்கிக் கொள்ளும் மனநிலை கொண்ட மனிதர்களையும் விவேக், அச்சு பிச்சு பாத்திரங்கள் பேசுகின்றன.

Thursday, 23 December 2021

மனைவி சொல்லே மந்திரம் - உற்றுநோக்கு!

"மேனேஜ்மெண்ட்" என்ற சொல்லை கெட்டிக்காரத்தனத்தின் அடையாளம் என நிர்வாகத் துறையில் இயங்கும் ஆண்களில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த மமதையை சொல்களில், செயல்களில் அவ்வப்போது வெளிப்படுத்துவதோடு, மேனேஜ்மெண்ட் சார்ந்த சிறப்பு வகுப்புகளில், பயிலரங்குகளில் கலந்து கொள்ள நிர்வாகம் தங்கள் செலவில் அனுப்பினால் அதை தனக்குத் தரப்பட்ட கெளரவத்தின் அடையாளமாகவே பிரதிநிலை படுத்திக் கொள்கிறோம். ஆனால், ஆண்களின் இத்தகைய அடாவடித்தனத்தை எல்லாம் "சும்மா", "பிதற்றல்" என பொட்டில் அடித்தாற் போல சொல்லிப் போகிறதுமனைவி சொல்லே மந்திரம்”! ஷாரு ரெங்கனேசர் ஆங்கிலத்தில் எழுதிய இந்நூலை வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் தமிழாக்கம் செய்திருக்கிறார். கற்பகம் புத்தகாலயம் வெளியீடு செய்திருக்கிறது.

நிர்வாகவியலில் கற்றுத் தரப்படும் அத்தனை வினாக்களுக்குமான சூத்திரம் அவரவர் வீட்டில் இருக்கும் பெண்களிடமே இருக்கிறது. அதை அவர்கள் சிறப்பாகக் கையாண்டு குடும்பத்தை நிர்வகிக்கிறார்கள். சிலநேரம், அதில் சிக்கல்கள் ஏற்படும் போது ஒரு தேர்ந்த நிர்வாகியின் திறனோடு அவைகளுக்கான மாற்று வழிகளையும் கைக்கொள்கிறார்கள். ஆனால், அதை அவர்கள் உணர்வதில்லை. காரணம், நம் கலாச்சார குழந்தை வளர்ப்பு முறையில் அவை அனிச்சையாய் அவர்களிடம் அப்பிக் கிடக்கிறது.