Monday 26 July 2021

கபடவேடதாரி - விமர்சனப்போட்டி - 13

அத்தியாயம்-13

(முகக்கொட்டகை)

சாகரிகா பரப்பும் அவதூறுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும் என்ற கோவிந்தசாமியின் உளத் தூண்டலுக்கு உதவ ஒரு கரமும் நீளவில்லை. ஷில்பாவை நம்பியும் பயனில்லை என்ற நிலையில் கோவிந்தசாமியே நேரடியாகக் களமிறங்கி விடுகிறான். அவன் பிரச்சனைக்கு நீலநகரவாசி ஒருவன் மூலம் ஒரு தீர்வு கிடைக்கிறது.

முகக்கொட்டகைக்குச் சென்று சிறு பிள்ளைகள் விளையாட்டுச் சாமான்கள் வாங்குவதைப் போல ஒன்றுக்கு நான்கு முகத்தையும், அதைப் பயன்படுத்துவதில் தனக்கிருக்கும் சந்தேகத் தெளிவையும் பெற்றுக் கொண்டு வருகிறான். புதிய முகத்தோடு கோவிந்தசாமி செய்த குடியுரிமை பதிவை வெண்பலகை ஏற்றுக் கொள்கிறது. தனி ஒருவனாய் கோவிந்தசாமியின் ஆட்டமும் ஆரம்பமாகிறது!

Sunday 25 July 2021

கபடவேடதாரி - விமர்சனப் போட்டி - 12

அத்தியாயம் – 12 

(தேசத்துரோகி)

தன்னைப் பற்றி இவ்வளவு அபாண்டமாக எழுதும் அளவுக்கு தான் செய்த தவறு குறித்து சாகரிகாவிடம் கேட்க விரும்புவதால் தன்னை அவளிடம் அழைத்துச் செல்ல முடியுமா? சூனியனிடம் பறி கொடுத்திருந்த தன் நிழலை மீட்டுத் தர முடியுமா? என்ற இரு கோரிக்கைகளை கோவிந்தசாமி சாகரிகாவின் கோவிந்தசாமி சாகரிகாவின் தோழி ஷில்பாவிடம் வைக்கிறான்.  அவளோ, இரண்டில் ஒன்று என்கிறாள். கோவிந்தசாமியோ இரண்டுமே என்கிறான்! கடைசியில் ஷில்பாவே ஜெயிக்கிறாள்.

சாகரிகாவை சந்தித்தாலும் உங்களை அவள் அங்கீகரிக்கமாட்டாள் என சொல்லும் ஷில்பா சாகரிகா கூறி வரும் அபாண்டங்களைத் தடுக்க அவனுக்கு ஒரு யோசனை கூறுகிறாள். அவளின் யோசனையை ஏற்ற கோவிந்தசாமிக்கு நிகழ்ந்தது என்ன? என்பதே மீதி சுவராசியம். கோவிந்தசாமி வந்து போகும் ஒவ்வொரு அத்தியாயத்திலும்  வாசிக்கின்ற நம் மனதில் ஒரு சித்திரமாக அமர்ந்து கொள்கிறான். அவனை கடவுள் ரெம்பவே சோதிக்கிறார்!

தன் நிழலை வைத்து சூனியன் செய்த சதி தெரிய வந்ததும் கோவிந்தசாமி அழ ஆரம்பிக்கிறான். வேறு என்ன செய்ய முடியும்? அவனைக் காத்திருக்கச் சொல்லி விட்டு செல்லும் ஷில்பா ஏதேனும் தகவல் கொண்டு வந்தால் மட்டுமே கோவிந்தசாமியின் பரிதாபநிலை மாறக்கூடும். அதுவரையிலும் அவனைப் போல புதிய விரல் குறிகளை நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அடுத்த அத்தியாயம் வரை காத்திருக்கலாம்.

Sunday 11 July 2021

ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற முதல் வீரன் அழகுமுத்துக்கோன்!

வரலாறுகள் எப்பொழுதும் இரகசியங்களை, இன்னும் அவிழ்கப்படாத முடிச்சுகளை தன்னகத்தே வைத்த படியே இருக்கின்றன. அதனாலயே வாசிப்பதற்கு சுவையானதாகவும், வரலாற்றாய்வாளர்களுக்கு நல்லதொரு தேடல் களமாகவும் வரலாறுகள் இருந்து வருகின்றன.  இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கமாக 1857 ம் ஆண்டை வரலாற்று நூல்கள் இன்றும் குறிப்பிட்டு வருகின்றன. ஆனால், அதற்கு நூறாண்டுகளுக்கு முன்பே வேலூரில் ஒரு மாபெரும் புரட்சி நிகழ்ந்தது. காலம் கடந்தே வரலாற்றாய்வாளர்களால் அது வெளிக் கொணரப்பட்டது. அதேபோல, ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதல் முழக்கம் செய்தவன் கட்டப்பொம்மன் என ஒரு சாரார் எழுதி வர ஆவணக்குறிப்புகளோ அந்த இடத்தை பூலித்தேவனுக்குத் தந்தன. தென் பிராந்தியங்களில் இருந்த பாளையங்கள் மற்றும் அதை ஆட்சி செலுத்தி வந்த பாளையக்காரர்கள் பற்றி அறிய வேண்டிய தகவல்களை தென்னிந்திய சுதந்திரக் களம் இன்றும் தனக்குள் புதைத்தே வைத்திருக்கிறது. அதைக் கண்டறியும் முயற்சியில் இறங்கும் ஆய்வாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு புது தகவல் கிடைத்த படியே இருக்கிறது. அப்படியான தேடலில் தான் வீரன் அழகுமுத்துக்கோன் மக்களுக்குத் தெரிய ஆரம்பித்தார்.

Thursday 1 July 2021

நீங்க நினைக்காத மாதிரி கதை!

ஆன்லைன் கிளாசுல இன்னைக்கு என்ன தகவல்? என்றேன் மகனிடம்.

இப்போதைக்கு பாடமெல்லாம் நடத்தமாட்டாங்களாம். நான்கு வாரத்துக்கு அப்புறம் தானாம்! அதுவரை கதை மட்டும் சொல்லுவாங்களாம்..

கதை கேக்குறதுக்கெல்லாம் ஆயிரக்கணக்குல ஃபீஸ் கட்ட முடியாதுடா.

கதைன்னா நீங்க நினைக்கிற மாதிரி கதை இல்ல.

நான் நினைக்காத மாதிரி என்ன கதை சொல்லுவாங்க?

அப்துல்கலாம் சிறுவயது நிகழ்வு கதைகள், பூமின்னா அது சார்ந்த விசயங்கள், நடத்தப்போற பாடம் சார்ந்து வேறு தகவல்கள் அப்படி சொல்லுவாங்க.

என்ன திடீர்னு இப்படியான மாற்றம்?

பாடமா நடத்துனா போரடிச்சிரும்ல. அதுனால இந்த மாதிரி கதையெல்லாம் சொல்லிட்டு பாடம் நடத்துவாங்களாம்.

சரி...நல்ல விசயம் தான். வேற என்ன விசயம்?

இந்த வருச பீஸை உடனடியா கட்டிடனுமாம்!