Friday, 11 April 2014

சரித்திரம் செய்

இளைஞனே……..! 

இன்னும் என்ன உறக்கம்?
எதற்காக இந்த தயக்கம்?

உன்னை அறி
அறிதலில் தொடங்கி
உற்சாகத்தின் உன்னதத்தில் முடி.

எதிர்மறை சிந்தித்தலில்
நேர்மறை சிந்தனைகளை தொலைக்காது
உன் சிறகுகளை அகல விறி.

எதையாவது
செய்வதை விடுத்து
எதைச் செய்வது என திட்டமிடு.

சந்தர்ப்பங்களுக்காக
காத்திருப்பதை விடுத்து
சகலத்தையும் சந்தர்ப்பங்களாக்கு.

Thursday, 10 April 2014

துளிப்பாக்கள்

வனப்பில் நின்று

வறுமையைக் காட்டுகின்றன 
அலமாரி அங்கீகாரங்கள்

நன்றி : சஞ்சிகை

Wednesday, 9 April 2014

புத்திசாலி சான்றிதழும், தேர்வறை அனுபவமும்

சென்ற முறை தேர்வெழுத சென்றபோது மெயின் ஹாலில் என்னுடைய நம்பர் இருந்தது. அந்த அறை எல்லா பாடங்களில் தேர்வு எழுதுபவர்களால் சூழப்பட்டதைப் போல எல்லா வயதிலும் உள்ளவர்களாலும் பால் பாகுபாடின்றி சூழப்பட்டிருந்தது.

கண்காணிப்பாளர்கள் என ஆணும், பெண்ணுமாய் பத்துப் பேர் வரை இருந்தார்கள். போதாக்குறைக்கு அவ்வப்போது சிலர் வந்து போனார்கள். அத்தனை கண்காணிப்பிலும் ஒரு தேர்வர் தன் செல் போனில் பிட்டை பதிவு செய்து கொண்டு வந்து எழுதிக் கொண்டிருந்தார். அதைக் கண்டுபிடித்து செல்லை பறிமுதல் செய்த பெண் கண்காணிப்பாளர் என் அருகில் வந்ததும் மணி பார்ப்பதற்காக டேபிளின் மேல் நான் எடுத்து வைத்திருந்த என் செல் போனை பார்த்து விட்டு அதையும் எடுத்துக் கொண்டார்.

ஏன் எடுக்குறீங்க? மணி பார்ப்பதற்காக தான் மேலே எடுத்து வைத்திருக்கிறேன். வேண்டுமானால் உள்ளே வைத்துக் கொள்கிறேன் என்று சொன்னேன். அவர் தர மறுத்து விட்டார். அது கூட பரவாயில்லை. அதற்கு பிறகு தான் பிரச்சனை ஆரம்பமானது. அந்த கண்காணிப்பாளர் தன் சக கண்காணிப்பாளரிடம் ரொம்ப புத்திசாலின்னு நினைப்பு போல.....செல்லுல மணி பார்க்குறதுக்காக மேலே வச்சிருந்தாராம். பறித்து வந்து விட்டேன் என்று சொன்னது என் காதில் விழுந்தது.

Saturday, 5 April 2014

கரண்ட் இல்லையா? கரெக்டா இல்லையா?

சில கோப்புகளை ஒழுங்குபடுத்தி சரிபார்த்து தருவதற்காக அந்த துறையில் அனுபவமுள்ள ஒருவருக்கு அனுப்பி சில தினங்கள் ஆகி விட்டதால் நண்பனிடம் சொல்லி விபரம் கேட்கச் சொன்னேன். சில மணிநேரம் கழித்து அந்த நண்பன் போனில் மாப்ள…….கேட்டேன். ”கரெக்டா இல்லையாம்? அப்புறம் பேசுறேன்னு சொல்லிட்டாருஎன்றான்.

ஒருவேளை நான்தான் தவறாக அனுப்பியிருப்பேனோ? என்று நினைத்து அவருக்கு அனுப்பி வைத்திருந்தவைகளின் நகல்களை மீண்டும் சரிபார்த்து, நானாக அவசியமிருக்காது என ஒதுக்கிய சில படிவங்களையும், கோப்புகளையும் அவைகளோடு இணைத்து மீண்டும் ஒரு பிரதி எடுத்து அனுப்பி வைத்தேன். அந்த துறை சார்ந்தவரிடமிருந்து எனக்கு போன் வந்தது. ஏன் முன்பு அனுப்பியவைகளையே திருப்பி எனக்கு அனுப்பி உள்ளீர்கள்? என்று கேட்டார்.

தர்மசங்கடமான நிலையில் இல்லண்ணே……நண்பர் போனில் கேட்டப்ப கரெக்டா இல்லைன்னு சொன்னீங்களாம். அதான் முன்பு அனுப்பாமல் விட்ட சில படிவங்களையும் இணைத்து அனுப்பி இருக்கிறேன் என்றேன். அவர் சிரித்துக் கொண்டே உன் நண்பன் போன் செய்தபோது கரண்ட் இல்லை. பேரனை கையில வச்சுக்கிட்டு இருந்ததால தொடர்ந்து பேச முடியல. அதுனாலகரண்ட் இல்லை. அப்புறம் பேசுறேன்னு சொன்னேன்னுசொன்னார். ஒரு வழியாக சமாளித்து நன்றி சொல்லி வைப்பதற்குள் நாக்கு வறண்டு விட்டது