Showing posts with label திண்ணை.காம். Show all posts
Showing posts with label திண்ணை.காம். Show all posts

Tuesday, 21 April 2020

பெற்றோர்கள் செய்ய வேண்டியது

கொண்டாட்டமாய் போக வேண்டிய விடுமுறையைசெம போர்எனச் சொல்ல வைத்து விட்டது கொரோனா. வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற கண்டிஷனோடு கிடைத்திருக்கும் விடுப்பு பெரியவர்களுக்கே சுமையாக இருக்கும் நிலையில் குழந்தைகளுக்குச் சொல்லவே வேண்டியதில்லை. கொஞ்சம் மெனக்கெட்டால் நமக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் கூட இந்த வீடு அடங்கி இருத்தலை சுகமான நினைவுகளாக மாற்றிக் கொடுக்க முடியும். வீட்டிற்குள் இருக்க மறுக்கும் குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே அடங்கி இருக்கச் செய்திருக்கும் இந்நாட்களில் அவர்களோடு சேர்ந்து நீங்காத நினைவுகளை உருவாக்கிக் கொள்ள பெற்றோர்கள் செய்ய வேண்டிய சில விசயங்களைச் சொல்ல விரும்புகிறேன்.

பிடித்ததைச் செய்ய அனுமதியுங்கள் :

பள்ளி நாட்களில் படி, படி என ஆசிரியர்கள் ஒரு பக்கம், நாம் ஒரு பக்கம் என குழந்தைகளை விரட்டிக் கொண்டே இருந்திருப்போம். வீட்டுப் பாடங்கள் செய்யவே அவர்களுக்கு நேரம் போதுமானதாய் இருந்திருக்கும். இப்போது கிடைத்திருக்கும் இந்த விடுப்பை அவர்களுக்கானதாக மாற்றுங்கள். அவர்களுக்குப் பிடித்த விசயங்களைச் செய்ய ஊக்குவியுங்கள். அவர்கள் பள்ளி நாட்களில் செய்ய விரும்பி நீங்கள் மறுத்த விசயங்களை நினைவூட்டி இப்போது செய்ய அறிவுறுத்துங்கள். செஸ், கேரம் போர்டு, அலைபேசி விளையாட்டுகள் என அவர்கள் அறிந்த விளையாட்டுகளோடு அவர்கள் தலைமுறையில் காணாமல் போன பல்லாங்குழி, தாயம், தட்டாங்கல் போன்ற விளையாட்டுகளை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். உங்களிடமிருந்து அவர்களும், அவர்களிடமிருந்து நீங்களும் கற்றுக் கொள்வதாக அத்தகைய விளையாட்டுகள் இருக்கட்டும்.

Monday, 27 January 2020

பஞ்சு மிட்டாய் பூக்கும் மரம்

வேக வாழ்க்கையில் எதையும் கணிக்கத் தவறுவதைப் போல கவனிக்கவும் தவறி விட்டோம். பிரபஞ்சத்தைச் சுற்றிலும்  நிகழும் அத்தனை நிகழ்வுகளும் ஏதோ ஒரு அதிசயத்தை, ஆச்சர்யத்தை, ஆர்ப்பரிப்பை, அற்புதத்தை, வாஞ்சையை தன்னுள் புதைத்தே வைத்திருக்கிறது.  

போகிற போக்கிலோ, மேம்போக்காகவோ வாழ்க்கையை நகர்த்திப் போகிறவர்களால் அவைகளை இரசிக்கவும், அனுபவிக்கவும் முடியாது. கொஞ்சம் மெனக்கெட்டால், ஒரு குழந்தையின் உற்று நோக்கலோடு அணுகினால் சாத்தியம் என்பதற்கான சான்றாய் சந்தியா பதிப்பக வெளியீட்டில்பஞ்சு மிட்டாய் பூக்கும் மரம்பூத்திருக்கின்றது

சுருங்கிய சொல், விரிந்த பொருள் என்ற கட்டுமானத்தில் எந்த சமரசமும் செய்யாததாலயே குறள் இன்று வரையிலும் பல குரல்களில் களமாடிக் கொண்டிருக்கிறது. வள்ளுவனின் குறளடியை விரித்து, சீரைச் சுருக்கி படைப்பின் கட்டுமானத்தில் நின்று நெய்யப் பட்டிருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பும் அந்த மறைநூலைப் போல நம் மனதிலும், சிந்தனையிலும் நின்று களமாடுகிறது.

Monday, 9 May 2016

சுவை பொருட்டன்று – சுனை நீர்!

ஒரு விதையை விதையாகவும் பார்க்கலாம். ஒரு அடர் விருட்சத்தைத் தனக்குள் உறைய வைத்திருக்கும் உயிராகவும் பார்க்கலாம். இதில் ஷாநவாஸ் இரண்டாவது வகை. பரோட்டாவை ஒரு பதார்த்தமாக மட்டும் பார்ப்பவர்களுக்கு மத்தியில் அதில் ஊடேறிக் கிடக்கும் மனிதர்களின் வாழ்வியல் சார்ந்த உணர்வுகளைக் கவிதையாக்கித் தந்திருக்கிறார். இந்தத் தொகுப்பில் இருக்கும் பெரும்பாலான கவிதைகள் அதைத் தான் பேசுகின்றன.

ஒரு ஞாயிறன்று பெய்த மழை கலைத்துப் போட்டதில் அந்த முதலாளி(தவ்கே)க்கும், தொழிலாளிக்கும் ஏற்படுகின்ற மன ஓட்டத்தையும்சுகாதார அதிகாரியிடம் பகிர முடியாத சத்தியத்தினால் குறுகி நிற்கும் காதலையும் பேசி நகரும் இக்கவிதைத் தொகுப்பு சொற்ப வரிகளைத் தனக்குள் வைத்துக் கொண்டு வாசிப்பாளனின் பார்வையை விசாலமாக்கிய படியே செல்கிறது. அவைகளில் பலவும் வாசிப்பவரின் அனுபவத்திற்கேற்பப் பொருத்திப் பார்த்துக் கொள்ளும் நெகிழ் தன்மை கொண்டவைகள்.

Tuesday, 2 February 2016

ஆறஞ்சு

  

மண் வாசம் தேடும் வலசைப் பறவையாய் தன் சிறகை விரித்திருக்கும் அழகுநிலாவின் முதல் சிறுகதைத் தொகுப்புஆறஞ்சு”. 14 கதைகள் கொண்ட இத் தொகுப்பில் உள்ள கதைகளில் சிலவற்றை முன்னரே வாசித்திருந்த போதும் தொகுப்பாக வாசிக்கையில் அது இன்னும் எனக்கு நெருக்கமானதாக இருக்கிறது.

சிங்கப்பூரின் இலக்கிய அமைப்புகள் நடத்தும் போட்டிகளில் படைப்புகள் சிங்கப்பூர் சூழலைக் களமாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை அறிவிக்கப்படாத விதியாகவே இருக்கும். அந்த விதிகளை அனாயாசமாக சிங்கப்பூரில் இருக்கும் சில இடங்களின் பெயர்களையும், பேச்சு மொழியையும் இட்டு நிரப்பி படைப்பாளிகள் கடந்து விடுவதைக் கவனித்திருக்கிறேன். அப்படியான இட்டு நிரப்புதலின்றி அமைந்த கதைகளின் தொகுப்பாக இதைத் தயக்கமின்றி அடையாளம் காட்டலாம். அயலக இலக்கியம் என்பது சம்பந்தப்பட்ட மண்ணின் அக வாழ்வியலை புறமிருந்து வாசிக்கின்ற வாசகனுக்குச்  சொல்ல வேண்டும். அதை இந்தத் தொகுப்பு நிறைவாகவே செய்திருக்கிறது.