Friday, 11 December 2015

அம்மாவென்ற நான்

குடும்பம், குழந்தைகள்  எனத் தன் வாழ்வின் பெருங்காலத்தைக் கடத்தி விட்ட ஒரு பெண் தன் உண்மையான அடையாளத் தேடலைத் தொடங்க வேண்டிய அவசியம் குறித்து உணர்ந்த சூழலைப் பற்றிப் பேசும் கதைஅம்மாவென்ற நான்”. அப்பாவின் படகு என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள இக்கதையின் ஆசிரியர் கிருத்திகா.

வழக்கமான கதைக்கருவை தன்னுடைய மொழி நடையில் படைப்பாக்காமல் புதிய விசயத்தைக் கருவாக்கி இருக்கிறார். திருமணத்திற்குப் பின் ஒரு பெண் அடையும் மாற்றங்களுக்கு அவளுடைய பெயரும் தப்புவதில்லை. இன்னாரின் மனைவி, இன்னாரின் அப்பா, இன்னாரின் பாட்டி என யாரோ ஒருவரின் இணைப்பிலேயே அவளின் வாழ்நாள் முழுக்கக் கழிந்து விடும் துயரத்தைச் சிறுகதைக்குள் கொண்டு வந்து தந்திருக்கும் முயற்சி பாராட்டுக்கு உரியது.

தன் பெயரைப் பேத்தி கேட்டவுடன் என் பெயர் என்ன? தன்னைக் கடைசியாகப் பெயர் சொல்லிக் கூப்பிட்டது யார்? என்ற கேள்விகளோடு அப்பெண் யோசிக்கும் விசயங்கள் நம்மையும் ஒரு முறை வரிசைப்படுத்திப் பார்க்க வைத்து உண்மையான அடையாளங்களைத் தேடிப் பயணப்பட வைக்கின்றது. இப்படித் தன் சுய அனுபவங்களை, வாழ்வியலை கதை முழுக்க இணைத்துப் பார்ப்பதன் மூலம் நாமும் அதில் பங்கேற்பாளனாக மாறும் வாய்ப்புகளை கதையை நிறைத்து நிற்கும் அதிகமானச் சொல்லாடல்கள் தடுத்து விடுகிறது.

கதையின் கடைசிப் பக்கங்களில் கிட்டும் மன உணர்வை அதன் ஆரம்பப் பக்கங்களில் பெற முடியவில்லை. கதை மாந்தரோடு இணைந்து பயணிப்பதில் ஏற்படும் இந்தச் சிக்கலைக் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் தவிர்த்திருக்கலாம்.

தான் நினைக்கின்ற அத்தனை விசயங்களையும் படிப்பவர்களிடம் கடத்தி விட வேண்டும் என்ற நினைப்போடு கதையைச் சொல்லிச் செல்வதில் ஆசிரியர் காட்டிய வேகமும் -

ஆற்றொழுக்காய் முடிவை நோக்கி மட்டுமே நகர்ந்து செல்ல  முனையும் முன் உணர்வும்

ஒரு நேர்த்தியின்றி சிதறலாய் நிற்கும் காட்சி அமைப்புகளும் கதையின் பலவீனம்.

கதை இயல்பாகவே ஒரு முடிவை எட்டி விட்ட நிலையில் தொடர்ந்து கதையை நீட்டிச் செல்லும் வரிகள் செயலற்ற வார்த்தைகளாகவே இருக்கின்றன, வாசகன் தன் அளவில் எழுதிக் கொள்ள வேண்டியதை ஆசிரியரே செய்ய முனைந்திருப்பது ஏமாற்றம் தருகிறது.

கதைக்கு இன்னும் அணுக்கமான தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்

அம்மாவென்ற நான்அம்மாக்களை மட்டுமல்ல புற, அக அடையாளங்களால் இயற்பெயரைத் தொலைத்து நிற்கும் நம் அத்தனை பேரையும் யோசிக்க வைக்கிறது,

 ஆசிரியர்  : கிருத்திகா

      கதை : அம்மாவென்ற நான்

வெளியீடு : தங்கமீன் பதிப்பகம்