Sunday, 11 July 2021

ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற முதல் வீரன் அழகுமுத்துக்கோன்!

வரலாறுகள் எப்பொழுதும் இரகசியங்களை, இன்னும் அவிழ்கப்படாத முடிச்சுகளை தன்னகத்தே வைத்த படியே இருக்கின்றன. அதனாலயே வாசிப்பதற்கு சுவையானதாகவும், வரலாற்றாய்வாளர்களுக்கு நல்லதொரு தேடல் களமாகவும் வரலாறுகள் இருந்து வருகின்றன.  இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கமாக 1857 ம் ஆண்டை வரலாற்று நூல்கள் இன்றும் குறிப்பிட்டு வருகின்றன. ஆனால், அதற்கு நூறாண்டுகளுக்கு முன்பே வேலூரில் ஒரு மாபெரும் புரட்சி நிகழ்ந்தது. காலம் கடந்தே வரலாற்றாய்வாளர்களால் அது வெளிக் கொணரப்பட்டது. அதேபோல, ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதல் முழக்கம் செய்தவன் கட்டப்பொம்மன் என ஒரு சாரார் எழுதி வர ஆவணக்குறிப்புகளோ அந்த இடத்தை பூலித்தேவனுக்குத் தந்தன. தென் பிராந்தியங்களில் இருந்த பாளையங்கள் மற்றும் அதை ஆட்சி செலுத்தி வந்த பாளையக்காரர்கள் பற்றி அறிய வேண்டிய தகவல்களை தென்னிந்திய சுதந்திரக் களம் இன்றும் தனக்குள் புதைத்தே வைத்திருக்கிறது. அதைக் கண்டறியும் முயற்சியில் இறங்கும் ஆய்வாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு புது தகவல் கிடைத்த படியே இருக்கிறது. அப்படியான தேடலில் தான் வீரன் அழகுமுத்துக்கோன் மக்களுக்குத் தெரிய ஆரம்பித்தார்.

பாளையக்காரர்கள் குறித்த விபரங்களும், ஆவணங்களும் தொடர்ச்சியற்று அங்கொன்றும், இங்கொன்றுமாய் சிதறிக் கிடப்பதைப் போல வீரன் அழகுமுத்துக் கோனின் வரலாறும் தொடர்ச்சியாகக் கிடைக்கவில்லை. கும்மி, சிந்து, நட்டார் பாடல்கள், செவிவழிக் கதைகள், சமகாலத்தில் எழுதி வைக்கப்பட்ட குறிப்புகள், அக்கால கட்டத்தில் நிகழ்ந்த போர்கள நிகழ்வுகள், கள ஆய்வுகள் ஆகியவைகளே பாளையங்களையும், பாளையக்காரர்களையும் பற்றி அறிந்து கொள்வதற்கான ஆவணச் சான்றுகளாக இருந்து வருகின்றன. அப்படி எட்டயபுரம் சமஸ்தான புத்தக சாலையில் இருந்த எட்டயபுர அரசவைப் பண்டிதராக இருந்த சாமி தீட்சிதர் அவர்களால் 1878 ல் எழுதப்பட்ட வம்சமணி தீபிகை நூலும், கணபதி பிள்ளை  அவர்கள் எழுதிய  ETTAYAPURAM PAST AND PRESENT” புத்தகமும், “கட்டமிகுந்திடம் கட்டாலங்குளம் அழகுமுத்து சேருவைகாரன், அவன் கோட்டை பெத்த ஊரிலும்  தானுமே கொற்றவன் காக்கவே சண்டை செய்தான். வீராதி வீரரும் சூராதி சூரரும் வெங்கலக் கைகளை தானிழந்தார். மன்னாதி மன்னரை மார் காத்து நின்ற முத்து மாணிக்க சேர்வையும் மாய்ந்து விட்டார். பரிமேல் எறிரண கள மேவிய பச்சைமால் சேர்வையும் மாண்டு விட்டான்என சேர்வைக்காரன் கும்மியில் இடம்பெற்றிருந்த பாடலும் அழகுமுத்துக்கோன் பற்றிய தகவல்களை ஆய்வாளர்கள் வெளிக் கொண்டுவர உதவின. இன்று வரையிலும் அழகுமுத்துக்கோனின் வீர வரலாற்றுக்கு மூல ஆவணங்களாக இருந்தும் வருகின்றன.

ஆந்திர தேச எல்லையில் அமைந்திருக்கும் வானகப்பாடி எனும் ஊரை பூர்வீகமாகக் கொண்ட அழகுமுத்துக்கோனின் மூதாதையர்கள் தாங்கள் வளர்த்து வந்த கால்நடைகளுக்கு மேய்ச்சல் தேடி தமிழகப் பகுதிகளில் குடியேறினர்.  அப்படிக் குடியேறியவர்களில் பலர் சோழமன்னர்களின் படைகளுக்கு மிலாடுடையார், சேதராயர் என்ற பட்டத்துடன் தலைமையேற்றும், சோழமன்னர்களின் மேலாண்மையை ஏற்றும் ஆட்சி செய்து வந்தனர். சோழர்களை வீழ்த்தி பாண்டியர்கள் இரண்டாம் பாண்டியப் பேரரசை நிறுவிய போது அவர்களிடம் திசைக்காவலர்களாக பணியாற்றினர் என்ற குறிப்புகள் வாரிசுகளின் செவிவழிச் செய்தியாக சில நூல்களில் இடம் பெற்றுள்ளன.

வேறு சில நூல்களில், விஜயநகரப் பேரரசின் கீழ் இருந்த பகுதிகளில் வசித்து வந்த அழகுமுத்துக்கோனின் மூதாதையர்கள் அப்பகுதிகளில் நிகழ்ந்த முஸ்லீம் படையெடுப்புகளை எதிர் கொள்ள முடியாமல் தெற்கு நோக்கி நகர்ந்து வந்தனர். அவர்களுக்கு மதுரை நாயக்க மன்னர் ஆதரவு கொடுத்தார் என்ற குறிப்புகள் இருக்கின்றன.

அழகுமுத்துக்கோன் என்ற பெயரோடு இணைந்து வரும் சேர்வைக்காரன் பற்றி முரண்பட்ட தகவல்கள் இருந்த போதும், சேர்மானமான திட்டம் வகுப்பவன் என்ற பெயரில் கொடுக்கப்படும் பட்டமே சேர்வைக்காரன் என வரலாற்றுப் பேராசிரியர் தேவ ஆசீர்வாதம் குறிப்பிடுகிறார். இடம்பெயர்ந்து வந்து குடியேறியவர்களில் சிறந்த வீரன் ஒருவனுக்கு மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரால் சேர்வைக்காரன் என்ற பட்டம் வழங்கப்பட்டு அது பின்னர் வழிவழியாகத் தொடர்ந்ததில் அந்த வமச வழியில் வந்த அழகுமுத்துக்கோனுடன் அப்பட்டம் இணைந்தது என்றும், எட்டயபுரம் அரசர் தன்னிடம் தளபதியாக இருந்த அழகுமுத்துக் கோனுக்கு இப்பட்டத்தை வழங்கினார் என்றும் இருவேறு தகவல்கள் வாசிக்கக் கிடைக்கின்றன.

அதேபோல, நாயக்க மன்னரின் ஆளுகைப் பகுதியில் இருந்த தென் பகுதி பாளையங்களில் மைய அரசுக்கு எதிராக பெருமளவில் கலகங்கள் நிகழ்ந்து வந்தன. அதை ஒடுக்குவதற்காக அழகப்பன் சேர்வைக்காரன் என்ற வீரனை திசைக்காவலராக திருநெல்வேலி சீமைக்கு நாயக்க மன்னர் அனுப்பி வைத்தார். அவர்கள் நெல்லைச் சீமையில் இருந்த கட்டாலங்குளம், சோழபுரம் பகுதிகளில் குடியேறினர் என்றும், மதுரையிலிருந்து தன் உறவினர்களுடன் செமப்புதூர் வந்த அழகப்ப சேர்வைக்காரன் மாப்பிள்ளை வல்லேரு நாயக்கர் உதவியால் எட்டயபுரம் சென்றார். எட்டயபுர  மன்னர் அவரை தன் பாளையத்தின் படைத்தளபதியாக நியமித்ததோடு அவரும், அவருடன் வந்தவர்களும் குடியேற வசதியாக கட்டாலங்குளம் மற்றும் அதைச் சுற்றி இருந்த சில கிராமங்களை வழங்கினார் என்றும் மாறுபட்ட தகவல்கள் பதிவாகி இருக்கின்றன. எப்படியிருப்பினும், அழகுமுத்துக்கோனின் வரலாறு கட்டாலங்குளத்தில் இருந்தே தொடங்குகிறது.

1725 ல் கட்டாலங்குளத்தின் குறுநில மன்னராக அரியணை ஏறிய அழகுமுத்துக் கோனுக்கும், ராணி அழகுமுத்தமாளுக்கும் மகனாக வீரன் அழகுமுத்துக்கோன் (அழகுமுத்து என்பது வழிவழியாக வழங்கும் பெயர்) 1728 ல் பிறந்தார். தஞ்சையை ஆண்ட பிரதாப சிம்மன் அனுமந்தகுடி மீட்புப் போரைத் துவங்கியபோது  எட்டயபுர மன்னர் சேதுபதிக்கு ஆதரவாக நின்றார். தளபதி பெரியமுத்துப் பிள்ளையின் தலைமையில் ஒரு படையையும், அழகுமுத்துக்கோனின் தலைமையில் ஒரு படையையும் அனுப்பி வைத்தார். அப்போரில் வெற்றி கிடைத்த போதும் தத்தம் படைகளுக்கு தலைமையேற்று சென்ற பெரியமுத்துப் பிள்ளையும், அழகுமுத்துக் கோனும் வீரமரணம் அடைந்தனர். தந்தையின் மறைவையடுத்து மகன் அழகுமுத்துக் கோன் 1750 ல் கட்டாலங்குளம் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். காட்சிகளும், ஆட்சிகளும் மாறிய போதும் அழகுமுத்துக்கோன் எட்டயபுரம் மன்னருக்கு உற்ற நண்பனாக, படைத்தளபதியாக இருந்து வந்தார்.

நாயக்கர் ஆட்சியின் வீழ்ச்சியும், நவாபுகளின் ஏற்றமும் நிகழ்ந்த காலகட்டமாக அது இருந்தது. ஆற்காடு நவாப் முகமது அலியின் ஆளுகையின் கீழ் இருந்த திருநெல்வேலிச் சீமையில் வரிவசூல் என்பது குதிரைக் கொம்பாக இருந்தது. இதனால் வரிவசூலுக்காக தனது சகோதரன் மாபூஸ்கான் தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பி வைத்தான். ஆனால், எதிர்பார்த்தபடி வரிவசூல் ஆகவில்லை. பாளையக்காரர்களை ஒடுக்கி வரிவசூல் செய்ய வழி தேடிய முகமது அலி ஆங்கிலேயர்களின் உதவியை நாடினான். இந்த வாய்ப்புக்காகவே காத்திருந்த ஆங்கிலேயர்கள் அதற்கான உரிமையை அவனிடம் இருந்து 1755 ல் பெற்றனர். வரிகேட்டு பாளையத் தலைவர்களுக்கு ஓலை அனுப்பினர். எதிர்ப்புக் குரல்களே பதிலாக வந்தன. இனியும் காத்திருப்பதில் பலனில்லை என நினைத்த ஆங்கிலேய நிர்வாகம் வரிவசூலுக்கென போர் நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்தது.

கர்னல் ஹெரான் தலைமையில் ஐரோப்பிய வீரர்களைக் கொண்ட படைகளும், கான்சாகிப் மருதநாயகம் தலைமையில் சுதேசி படைகளும்,  மாபூஸ்கான் தலைமையில் நவாப்பின் படைகளும் 1755 பிப்ரவரி 4 ல் தென்பாண்டிச் சீமையில் இருந்த பாளையங்களுக்குள் நுழைந்தன. இப்படையெடுப்பே சுதந்திர தாகத்தோடு இருந்த தென்சீமைகளை அடக்க எழுந்த முதற்பெரும் படையெடுப்பு என ஆய்வாளர் கால்டுவெல் கூறுகிறார். லட்சுமணநாயக்கரின் எதிர்ப்பை கான்சாகிப் தலைமையிலான படைகள் முறியடித்து வரிவசூலோடு முன்னேறியது. சில பாளையங்கள் பணிந்தன. சில எதிர்கொள்ள ஆயத்தமாயின. எதிர்த்து நின்றவர்களைக் கடுமையான தாக்குதல் நடத்தி ஒடுக்கி முன்னேறி வந்த கான்சாகிப் அச்சமயத்தில் நெல்லைச் சீமையில் இருந்த பெரிய பாளையங்களில் ஒன்றாகத் திகழ்ந்த எட்டயபுரத்தைத் தாக்க ஆரம்பித்தான். உள்ளடி வேலைகளாலும், சூழ்ச்சியாலும் எட்டயபுரம் கான்சாகிபிடம் வீழ்ந்தது. பாளைய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்த கையோடு எட்டயபுரம் மன்னரும், தளபதி அழகுமுத்துக்கோனும் இதர வீரர்களும் அங்கிருந்து தப்பி பெருநாழி காட்டில் பாசறை அமைத்துத் தங்கினர். அங்கிருந்த படியே மக்களின் மறைமுக ஆதரவோடு படைகளைத் திரட்டி மீண்டும் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து எட்டயபுரத்தை மீட்கும் முயற்சியில் இறங்கினர். அதற்காக உருவாக்கப்பட்ட படைக்கென ஆட்களைத் திரட்டிய அழகுமுத்துக்கோன் தானே முன்நின்று அவர்களுக்குப் போர்பயிற்சியும் அளித்தார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் எட்டயபுரம் அரசு கட்டிலைத் தனதாக்கிக் கொள்ளும் முயற்சியில் மன்னரின் உறவினர்களின் முனைந்தனர். தன்னை அரசனாக முடிசூட்டினால் வரி செலுத்தத் தயார் என்ற உறுதிமொழியோடு  எட்டப்பனின் தாய்வழி உறவினனான பூதலபுரம் எட்டையா அரசனாக முடிசூட்டிக் கொண்டான். ஆனால், சொன்னபடி நடந்து கொள்ளாததால் அவனைச் சிறைப்படுத்தி விட்டு குருமலைத்துரை என்பவரை ஆட்சிக் காட்டிலில் ஏற்றிய கான்சாகிப் அவரின் உறவினர் சிவசங்கரன் பிள்ளையைத் தனது ஏஜெண்டாகவும், எட்டயபுரத்தின் தளபதியாகவும் நியமித்து உத்தரவிட்டான். நினைத்த படி எட்டயபுரம் பாளையத்தில் வரி வசூல் ஆனது. எட்டயபுரம் பணிந்த தகவல் அறிவிக்கப்பட்டது.

இந்தத் தகவல்களை அறிந்த எட்டயபுர மன்னர் முகாமிட்டிருந்த பெருநாழி பாசறையிலேயே உயிர் துறக்க அங்கேயே அவரின் மகன் வெங்கடேஸ்வர எட்டப்பன் முடிசூட்டப்பட்டார். இனியும் தாமதிப்பது உசிதமல்ல என நினைத்த புரட்சியாளர்கள் புரவி வேகம் கொள்ள ஆரம்பித்தனர். எட்டயபுரத்தை மீட்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டு படைகள் ஆயத்தப்படுத்தப்பட்டன. ஒரு பிரிவிற்கு அழகுமுத்துக் கோனும், இன்னொரு படைப் பிரிவிற்கு மன்னர் வெங்கடேஸ்வர எட்டப்பரும் தலைமை ஏற்றனர். இரு வேறு மார்க்கமாக படைகள் எட்டயபுரம் நோக்கி அணிவகுத்தன.

அழகுமுத்துக்கோன் தலைமையில் கிளம்பிய படை இரவில் பெத்தனாயக்கனூர் கோட்டையில் தங்கிச் செல்வது என முடிவானது. இத்தகவலை எட்டயபுர ஏஜெண்டாக நியமிக்கப்பட்டிருந்த சிவசங்கரன் பிள்ளை ஒற்றர்கள் மூலம் அறிந்து கான்சாகிப்பிற்குத் தகவல் சொன்னதோடு, முகாமிட்டிருக்கும் இடத்திலேயே அழகுமுத்துக்கோனின் படைகளைத் தாக்கவும் ஆலோசனை கூறினான். அதனை ஏற்ற கான்சாகிப் தன்னுடைய படைகளை பெத்தநாயக்கனூர் கோட்டை நோக்கிச் செல்ல உத்தரவிட்டான். கோட்டையில் உறங்கிக் கொண்டிருந்த வீரர்கள் மீது இரவோடு இரவாக திடீர் தாக்குதலை நடத்திய அப்படை அழகுமுத்துக்கோனின் படை வீரர்கள் பலரை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தது.

அழகுமுத்துக்கோன் உள்ளிட்ட 255 வீரர்களை சிறைபிடிக்கப்பட்டனர். இனி ஒரு எதிர்ப்புக்குரல் எழக்கூடாது என எதிர்ப்பவர்களை எச்சரிக்கும் விதமாக சிறைபிடிக்கப்பட்ட வீரர்களில் 248 பேரின் வலது கரங்களை வெட்டி எறிந்தனர். அழகுமுத்துக்கோனுடன் கெச்சிலனன், முத்தழகு, வெங்கடேஸ்வர எட்டு, ஜெகவீரரெட்டு, முத்திருளன், மயிலுப்பிள்ளை  என்ற ஆறு துணைத் தளபதிகளும்  கான்சாகிப் முன் நிறுத்தப்பட்டனர். கிளர்ச்சி செய்வதை விட்டு விட்டு கும்பெனிக்கு ஆதரவாகச் செயல்பட்டால் அனைவரையும் விடுதலை செய்வதோடு, மீண்டும் எட்டயபுரம் தளபதியாக நியமிப்பதாக அழகுமுத்துக் கோனிடம் கான்சாகிப் கூறினான். ஆங்கிலேயனுக்கு அடிமை என்பது அவச்சொல் என்று ஆரம்பம் முதலே கும்பெனியை எதிர்த்து நின்ற அழகுமுத்துக்கோன் அதற்குச் சம்மதிக்கவில்லை. இதை கான்சாகிப்பால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏழுபேரையும் நடுக்காட்டுச் சீமை என்ற இடத்திற்கு இழுத்துச் சென்று பீரங்கியின் வாயில் வைத்துக் கட்டி சுட்டுக் கொல்ல உத்தரவிட்டான். உத்தரவு உடனடியாக நிறைவேற்றப்பட்டது. பீரங்கிக் குண்டுகளால் ஏழு பேரின் உடலும் சிதறி துண்டு, துண்டானது. ஆறு துணைத்தளபதிகளுக்கு நடுவே அச்சமின்றி நின்று தன் ஆங்கிலேய எதிர்ப்பைக் காட்டிய முதல் சுதேசி வீரனின் சுவாசம் காற்றோடு கலந்தது. வெடித்துச் சிதறிய உடலின் பாகங்கள்  மண்ணில் விழுந்தது.

வீரன் அழகுமுத்துக்கோன் மறைவோடு ஆங்கிலேய எதிர்ப்புக் கிளர்ச்சி மரித்துப் போய் விடும் என ஆங்கிலேயர்கள் நினைத்ததற்கு மாறாக அது மெல்ல சுடர் விட்டு பிரகாசிக்க ஆரம்பித்தது. அந்த ஒளி தென் சீமை பாளையம் முழுக்க பரவி அதன் அனைத்து எல்லைகளுக்கும் விரிந்து ஆங்கிலேய எதிர்ப்புணர்வுக் கனாலாய் மாற ஆரம்பித்தது. அதற்கு முதல் அச்சாரமிட்ட பெருமை அழகுமுத்துக்கோனையே சாரும். ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதல் முழக்கத்தை பதிவு செய்தவன் கட்டப்பொம்மன் அல்ல என அந்த இடத்தை பூலித்தேவனுக்கு வழங்கிய வரலாறு தனது இன்னொரு ஆவணத்தின் வழியாக அந்த இடத்தை அதே மண்ணில் இருந்து வந்த வீரன் அழகுமுத்துக்கோனுக்கு வழங்கி இருக்கிறது. அந்த வீரனின் வரலாறு இன்னும் விரிவாக ஆராயப்படவும், கண்டடைய வேண்டிய ஒன்றாகவும் இருக்கிறது.

அழகுமுத்துக்கோனின் தியாகத்தை நினைவு படுத்தும் வகையில் அரசாங்கம் அவருக்குச் சிலை வைத்ததோடு, மணிமண்டபமும், நினைவு தபால் தலையும் வெளியிட்டு கெளரவப்படுத்தியது. அவரின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 11 ம்  தேதி கொண்டாடப்படுகிறது. நம்மை சுதந்திர சுவாசம் கொள்ள வைப்பதில் முதல் அச்சாரமாய் தன் மூச்சைக் கொடுத்த மாவீரன் அழகுமுத்துக் கோனின் தியாகத்தை அத்தினத்தில் நாமும் நினைவு கூர்வோம். 

ஆக்கத்திற்கு உதவிய நூல்கள் – குறிப்புகள் :

1.   இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் – ப.சரவணன் – கிழக்குப் பதிப்பகம்.

2.   இளசை  இராஜாமணி ஆய்வுக் கட்டுரை.

3.   வீரன் அழகுமுத்துக்கோன் ஆவணப்படம் – தந்தி டி.வி.

4.   தமிழகப் பாளையங்களின் வரலாறு – மு. கோபி சரபோஜி – கிழக்கு பதிப்பகம்.

5.   வீரன் அழகுமுத்துக்கோன் கட்டுரை – கே. கருணாகர பாண்டியன் – வரலாற்றாய்வாளர்.

6.   நிமிரவைக்கும் நெல்லை – எஸ். ராதாகிருஷ்ணன்.

7.   தமிழ் இந்து கட்டுரை.

8.   http://dhinasari.com


 

1 comment:

  1. அழகுமுத்துக்கோன் , தெலுங்கு கட்டப்பொம்மன் அனைவரும் கொள்ளைக்காரர்கள் . தியாகிகள் அல்ல

    ReplyDelete