Thursday 3 June 2021

அறம் – மன அச்சாணி!

படைப்பாக்கத்தின் வடிவமைவுகள் காலந்தோறும் மாறிக் கொண்டே இருக்கின்றன.  கதை சொல்லும் முறையும், அதற்கென கையாளப்படும் மொழி லாவகமும் பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்தவைகளிலிருந்து முற்றிலும் வேறாகி விட்டது. கதை சொல்லலுக்குள் ஒளிந்திருக்கும் வாசகனுக்கான வெற்றிடத்தை முழுமையாக அவனுக்கு ஒப்புக் கொடுக்கும் அதேநேரம் தனது புனைவின் மையத்தை நோக்கி மிகச் சரியாக அவனை நகர்த்தி வர வைப்பது நவீன கதையாடல் பாணியில் படைப்பாளிக்கு இருக்கும் பெரிய வசதி அல்லது கிடைத்திருக்கும் சுதந்திரம் எனலாம். தனக்கான வெற்றிடத்தை தன்னளவில் நிரப்பிக் கொண்டு வாசிக்கின்ற புனைவுக்கு இணை நேர் கோடாகவே பயணித்து வரும் வாசகன் அதன் மையத்தை மிகச் சரியாகவோ அல்லது நெருக்கத்திலோ வந்தடையும் போது ஏற்படும் மனநிலையில் ஆசுவாசம் கொள்கிறான். ஒரு நிறைவு அவனை சூல் கொண்டு விடுகிறது. அது ஒன்றே அவன் செல்லும் இடமெல்லாம் அந்த படைப்பை சுமந்து செல்ல வைக்கிறது. எங்கும் பகிரத் தூண்டுகிறது. சலிப்பின்றி மீள்வாசிப்பு செய்ய வைக்கிறது. அப்படி நான் சமீபத்தில் மீள் வாசிப்பு செய்த தொகுப்பு “அறம். வம்சி வெளியீடு செய்திருக்கிறது.

ஜெயமோகனின் படைப்புலகத்தைப் பொறுத்தவரை அவரின் புனைவுகளின் மையத்தை ஒரே வாசிப்பில் மிகச் சரியாக கண்டடைபவர்கள் குறைவு என்றே நினைக்கிறேன். அவருடைய இணையப் பக்கத்தில் வாசகர்களால் எழுதப்படும் புனைவுகள் சார்ந்த கடிதங்களே அதற்கு சாட்சி எனலாம். புனைவில் ஒரு வாசகனின் பார்வை வழியாகத் தான் விட்ட இடத்தை அல்லது தொட்ட இடத்தை இன்னொரு வாசகன் பகிர்ந்து கொள்ளும் போது அது புதிதாய் வாசிக்க நுழைபவர்களுக்கு புரிதலுக்கான ஆரம்பத்தை தருகிறது. இப்படியான ஒரு நிலையில், உண்மை நிகழ்வுகளை நேரடி கதை சொல்லல் பாணியில் ஜெயமோகன் எழுதி இருக்கிறார்.   

தொகுப்பில் இருக்கும் கதைகளில் அறம், சோற்றுக்கணக்கு, வணங்கான், யானை டாகடர், நூறு நாற்காலிகள் ஆகிய ஐந்தையும் ஒரு வரிசை, மத்துறு தயிர், கோட்டி, தாயார் பாதம் ஆகியவைகளை இன்னொரு வரிசை, பெருவலி, உலகம்யாவையும், ஓலைச்சிலுவை, மயில் கழுத்து ஆகியவைகளை மற்றொரு வரிசை என் பிரித்துக் கொண்டேன். முதல் வரிசை கதைகளில் ஒன்றை வாசித்து முடிக்கும் போது எழும் ஒரு வித மன அல்லலை கொஞ்சமாக ஆசுவாசப்படுத்திக் கொள்ள அடுத்த வரிசைக் கதைகள் உதவின. அவரவர் வாசிப்பு இரசணைக்கேற்ப பிரித்துக் கொள்ளலாம்.

பதிப்பாளனுக்கும், படைப்பாளிக்கும் இடையே அறம் எப்படி சதிராடுகிறது என்பதைச் சொல்லும் கதை அறம். மூல நூல்களை மட்டும் தரவுகளாக வைத்துக் கொண்டு நூறு தலைப்புகளில் புத்தகம் எழுத முடியுமா? என்ற கேள்வியை வறுமையும், வாழ்வியல் காட்டாயங்களும் நொறுக்கி விடுகிறது. தன்னை ஏமாற்றிய பதிப்பாளன் மீது படைப்பாளி அற வெண்பா பாடுகிறான். அவனால் வேறு என்ன செய்ய முடியும்? ஆனால், அது தான் பதிப்பாளனின் மனைவி வழியாக அறத்தை ஸ்தாபிக்கிறது. தன் கணவன் செய்த பாவத்தை அறம் கொண்டு கழுவேற்றுகிறாள். இன்றும் கூட அறம் கொண்டு கழுவப்பட வேண்டிய பதிப்பாளர்கள் இருக்கவே செய்கின்றனர்!

சோற்றுக்கணக்கு கதையை வாசிக்கும் போது குறிப்பிட்ட நேரத்தில் திறந்து மூடும் கீழக்கரை ராவியத் மைசூர்பாகு கடை, வேண்டுமளவு சாப்பிட்டு விட்டு இயன்றதை உண்டியலில் போட்டு விட்டு செல்லும் சிங்கப்பூர் உணவு விடுதி ஆகியவைகள் நினைவில் வந்து போயின. கூடவே, அங்கெல்லாம் நீண்ட கைகளும், பார்வைகளும் கெத்தேல் சாகிப்பினுடையதாக இருந்ததா? என்பதையும் நினைத்துப் பார்க்கிறேன். அவரை விடவும் அவருடைய கைகளே அதிகம் பேசுகின்றன. அதுவே வாசிக்கின்ற நம்மையும் பேச வைக்கிறது. கெத்தேல் சாகிப்பை நாம் அறிந்து கொள்ள அவர் உணவு பரிமாறும் விதத்தையும், தனது அம்மா பரிமாறும் விதத்தையும் பற்றி ஆசிரியர் விளக்கும் பகுதி போதுமானது. உறவினர் வீடுகளில் தங்கிப் படிக்கும் பிள்ளைகளின் வலி கதையில் பின்னலிழையாய் நகர்கிறது.

ஒருவன் தன் மீது வீசப்பட்டிருக்கும் அடிமைத் தனத்தை உணர்ந்து உடைத்து எறிய முனையும் போது அது அவனுக்குள் எத்தகைய உந்து விசையைத் தருகிறது என்பதையும், அந்த வேகத்தில் மேலெழுந்து வந்து விட வேண்டும் என அவன் நினைத்து விட்டால் அதன் உச்சமும், உக்கிரமும் எப்படி இருக்கும் என்பதையும் மூன்று தலை முறை நிகழ்வாய் விவரிக்கும் கதை வணங்கான். இந்தத் தலைமுறையிலும் கூட சாதியின் பெயரால் அறுபடாத அடிமைச் சங்கிலிகள் யானையின் காலடிகளில் வணங்கான் போன்ற ஒருவரை கட்டிவைத்தே இருக்கின்றன.

ஒன்றன் மேல் காட்டும் வெறும் ஈடுபாடு மட்டுமே ஒருவனை தனித்து தெரிய வைக்காது. அதற்கு அதையும் மீறி வேறு ஏதோ ஒன்று தேவை. அதைக் கண்டடைபவர்கள் எட்டாத உயரங்களத் தொடுகின்றனர். சாத்தியமாக வாய்ப்பில்லை என நினைக்கும் விசயங்களைச் சாத்தியமாக்குகின்றனர். யானை டாக்டர் கதையில் வரும் டாக்டர்.கே. அப்படியான ஒருவர். செய்யும் வேலையில் காட்டும் ஈடுபாடு என்று சொல்லி அவரின் செயல்பாடுகளை சட்டென கடந்து விட முடியாது. யானை டாக்டர் என அழைக்கப்பட்டாலும் செந்நாய்கள், சோற்றுப் பருக்கையாய் ஊறித் திரியும் புழுக்கள், மான்கள் என எல்லாவற்றிற்குமான நம்பிக்கையாக இருக்கிறார். ஒரு கண்ணாடி பாட்டில் உடைபடும் சப்தம் நம் செவிகளை எட்டும் போதெல்லாம் டாக்டர். கே நினைவில் வருகிறார்.  வனவிலங்குகள் குறித்தும், அதன் வாழ்விடங்களில் நிகழ்த்தப்படும் அக்கிரமங்கள் குறித்தும் நம்மிடையே ஒரு உரையாடலை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார் டாக்டர். கே. என்கிற யானை டாக்டர்.

நாயாடி போன்ற ஒரு தாழ் சமூகத்திலிருந்து ஒருவன் மேல் எழும்பி அதிகாரத்துக்கு வந்தாலும் அவனது அங்கீகாரத்தை இந்த சமூகம் அவலட்சணமாகவே அவன் முன் நீட்டும் என்பதை மகனுக்கும், தாயுக்குமான மனப்பதிவுகள் வழி விளக்கும் கதை நூறு நாற்காலிகள். அதிகாரத்தாலோ, சமூக அந்தஸ்தாலோ மட்டும் சாதியின் பெயரால் இழைக்கப்படும் அவமானங்களையும், தீண்டல்களையும் மங்கச் செய்து விட முடியாது என்பதையும், உயரடுக்குச் சாதியினர் மீது கொள்ளும் வெறுப்பும், பயமும் எப்படியெல்லாம் தாயுக்கும், மகனுக்குமான பாசத்தில் உணர்வெழுச்சி கொள்ள வைக்கிறது என்பதையும் சொல்லிச் செல்லும் கதை முழுக்க “காப்பா, காப்பா என்ற குரல் நம் காதுகளுக்குள் எதிரொலித்த படியே இருக்கிறது.

மத்துறு தயிர் ஆசிரியனுக்கும், மாணவனுக்கும் இடையே ஒரு ஆத்மார்த்த உணர்வைப் பேசும் கதை. அத்தகைய உணர்வு மேலோங்கும் போது மத்து தயிரைக் கடையக் கடைய வெண்ணெய் திரள்வதைப் போல அங்கு அன்பும் திரண்டு நிற்கிறது. அது தன் மாணவனுக்காக ஒரு பெண்ணின் காலில் ஆசிரியரையே விழ வைக்கும் அளவுக்கு கொண்டு செல்கிறது. கம்பனின் கவிதைப் புலத்தோடு நகரும் கதையில் அந்த உறவின் இடைவெளி பல, பல காரணங்களால் அதிகமாகி பின்னொரு சந்தர்ப்பத்தில் நெருங்கி வரும் போது ஒரு குறுகுறுப்பான மனநிலை குருவைக் காணவந்தும் மாணவனை விலகி நிற்க வைக்கிறது.

சமூகம் எத்தனை எள்ளி நகையாடினாலும், ஏளனம் செய்தாலும் கொண்ட கொள்கையில் உறுதி கொள்பவர்கள் அதிலிருந்து எந்த நிலையிலும் வழுவுவதில்லை என்பதை சொல்லும் கதை கோட்டி. எந்த எதிர்பார்ப்புமின்றி அறம் வழுவாது தன் நிலைப்பாட்டை முன் வைத்தபடியே கோட்டியாக வரும் பூமேடை நகர்கிறார். ஆனால், அதை எவரும் கண்டு கொள்ளாது புறக்கணித்து பகடி செய்கின்றனர். கதையும் கூட பகடியாகவே நகர்ந்த போதும் பூமேடை சாதியங்கள் குறித்து எழுப்பும் கேள்விகள் நமக்குள் சலனத்தை உருவாக்கியபடியே இருக்கிறது.

பாட்டனாரின் அறம் மீறிய செயல் அவர் வீட்டுக்கு வாழ வந்த பெண்ணின் சுயத்தை இழக்க வைத்ததையும், அதனாலயே அவளின் செயல்பாடுகள் அனிச்சையாய் மாறிப்போனதையும், அவளுக்கு ஏற்பட்ட பரிதாபகரமான முடிவையும் பேசும் கதை தாயார் பாதம். பெண்ணீயம், பெண் உரிமை என வாய் கிழிய பேசினாலும் காலம் காலமாக மனதிற்குள் ஊறிக் கிடக்கும் ஆணாதிக்க அகங்காரம் பெண்களை ஒரு படி கீழிறக்கியே பார்க்கிறது. அதுவும் குடும்ப அமைப்புகளில் தன் சுயத்தை இழக்கும் பெண்கள் ஒரு கட்டத்தில் செக்கு மாட்டு செயல்பாடுகளுக்கு தங்களை உருமாற்றிக் கொள்கிறார்கள்.  அந்த உருமாறுதலை தஞ்சை மாவட்ட குடும்ப நிகழ்வு வழியாக நமக்குக் கடத்தி விடுகிறார்.

தன் வெறுமையை கைலாய யாத்திரை மூலம் கடக்கும் சுவாமிநாதன் கடைசியில் அடையும் பரவசத்தை விளக்கும் பெருவலி, ஒரே உலகம், உலகக் குடிமகன் பற்றி காரிடேவிசன் வழி பேசும் உலகம் யாவையும், மதம் மாற்றும் ஒரு கிறிஸ்தவராக, வறுமையை அதற்குப் பயன்படுத்துபவராக சித்திரம் பெற்று நகரும் சாமர்வெல் குழந்தையை இழந்து நிற்கும் ஒரு தாயிடம் நடந்து கொள்ளும் முறையினால் அவர் சார்ந்து நம் மனதில் இருக்கும் ஆரம்ப சித்திரத்தை மாற்றிப் போடும் ஓலைச்சிலுவை, நிறத்தின் குறியீடாய் நின்று ஆற்றாமையை, இயலாமையை கடக்கவும், கடத்தவும் இயலாமல் உள் மனம் கொள்ளும் திணறுதல் பற்றி பேசும் “மயில் கழுத்து ஆகிய கதைகள் மனிதர்களுக்கிடையேயான உறவுகள், அவர்களின் செயல்பாடுகள் கிளர்த்தும் உணர்வுகளைப் பேசுகின்றன. தன் மொழி நடை விவரிப்பால் கதைமாந்தர்களின் உணர்வுகளை வாசித்துக் கடக்கையில் மனமுகமாக அவர்களோடு ஏற்படும் உள்ளார்ந்த நெருக்கம் அம்மனிதர்களோடு நம்மைப் பொருந்தி நிற்க வைக்கின்றன.

ஒரு படைப்பை வாசிக்கும் போது அவரவர் வாசிப்பு பரவலுக்கேற்ப முன்பு வாசித்திருந்த வேறு படைப்புகளின் நினைவோ அல்லது வாசித்த கதை மாந்தர்களோ நினைவுக்கு வருவது வழக்கம். இந்தத் தொகுப்பைப் பொருத்தவரை எனக்கு நான் கடந்து சென்ற அல்லது என்னை மனதளவில் கடத்திச் சென்ற மனிதர்களிடம் இருந்த, இருந்திருக்க வேண்டிய அறத்தைப் பற்றியே நினைக்க வைத்தன. கூடவே, எனக்கான அற அளவீடுகளையும் மனம் மதிப்பிட்டு பார்த்துக் கொண்டது. வட்டார வழக்கு மொழியில் எழுதப்பட்ட கதைகளை சட்டென வாசித்து நகர முடியாத போதும் ஜெயமோகனின் கதை மாந்தர்களுடைய வட்டார மொழி முருங்கைக்கீரையில் பொரித்துப் போடும் அரிசித் துகள்களின் மொறு,மொறுப்பு ருசியை தருகிறது. அந்த மொழி இன்னுமொரு வாசிப்பை செய்து பார்க்கத் தூண்டுகிறது.

இந்தக் கதைகள் எனக்குள் தந்தவைகளை மட்டுமே இங்கு பதிவாக்கி இருக்கிறேன்.  ஒருவேளை, நீங்கள் வாசிக்கும் போது இதிலிருந்து மாறுபட்ட ஒன்றை உங்களால் பெற முடியும். இன்னும் சொல்லப்போனால் நானே மறு வாசிப்பு செய்யும் போது வேறொரு உணர்வை தரக்கூடிய அத்தனை சாத்தியங்களையும் தன்னுள் ஈரம் காயாமல் அறம் தொகுப்பு வைத்திருக்கிறது. காரணம், அதுவே ஒவ்வொருவருவரின் வாழ்வியலுக்கான மன அச்சாணியாய் இருக்கிறது.


 

No comments:

Post a Comment