(நந்தலாலா (இதழ் 17) இணைய இதழில் என் “மெளன அழுகை” கவிதைத் தொகுப்பிற்கு நண்பரும், கவிஞருமான இரா. பூபாலன் எழுதிய விமர்சனம்)
கதறியழத் திராணியுள்ள மனிதன் தன் ஆற்றாமையை அழுதழுது துடைத்துக் கொள்கிறான் அல்லது தளர்த்திக் கொள்கிறான். கதறியழுது கண்ணீரையெல்லாம் வற்றிவிடச் செய்யாது, தனக்குள்ளேயே அழுது கண்ணீரை மறு சுழற்சி செய்துகொள்ளும் மெளன அழுகைக்காரன் கவிஞன்.
தனது வலிகளை, ஆற்றாமைக் கோபங்களை வார்த்தைகளாகக் கோர்த்து எறிகிறான் கவிதையாக. அவனின் அழுகையை கவிதை செய்கிறது. அதன் மெளன சாட்சியாக கவிஞன் நிற்கிறான். சமூகத்துக்காக மட்டுமே கவிஞன் அழுவதில்லை. தன்பாலும் அழ வேண்டிய தருணங்கள் கவிஞனுக்கு நிறையவே இருக்கின்றன. எப்படியாகினும் கவிஞனின் மெளன அழுகையே கவிதையாகிறது.
கோபி சரபோஜியின் தொகுப்பின் தலைப்பு மெளன அழுகையாக இருப்பதின் பொருட்டு, வெடித்துக் கதறக் காத்திருக்கும் கவிதைகளைக் கையிலெடுப்பதாக உருவகித்துக் கொண்டு வாசிக்கத் துவங்குகிறேன் இக்கண்ணீரை.


