Sunday, 18 May 2014

மெளன அழுகை - 1

(நந்தலாலா (இதழ் 17) இணைய இதழில் என்மெளன அழுகைகவிதைத் தொகுப்பிற்கு நண்பரும், கவிஞருமான இரா. பூபாலன் எழுதிய விமர்சனம்)


கதறியழத் திராணியுள்ள மனிதன் தன் ஆற்றாமையை அழுதழுது துடைத்துக் கொள்கிறான் அல்லது தளர்த்திக் கொள்கிறான். கதறியழுது கண்ணீரையெல்லாம் வற்றிவிடச்  செய்யாது, தனக்குள்ளேயே அழுது கண்ணீரை மறு சுழற்சி செய்துகொள்ளும் மெளன அழுகைக்காரன் கவிஞன்.

தனது வலிகளை, ஆற்றாமைக் கோபங்களை வார்த்தைகளாகக் கோர்த்து எறிகிறான் கவிதையாக. அவனின் அழுகையை கவிதை செய்கிறது. அதன் மெளன சாட்சியாக கவிஞன் நிற்கிறான். சமூகத்துக்காக மட்டுமே கவிஞன் அழுவதில்லை. தன்பாலும் அழ வேண்டிய தருணங்கள் கவிஞனுக்கு நிறையவே இருக்கின்றன. எப்படியாகினும் கவிஞனின் மெளன அழுகையே கவிதையாகிறது.

கோபி சரபோஜியின் தொகுப்பின் தலைப்பு மெளன அழுகையாக இருப்பதின் பொருட்டு, வெடித்துக் கதறக் காத்திருக்கும் கவிதைகளைக் கையிலெடுப்பதாக உருவகித்துக் கொண்டு வாசிக்கத் துவங்குகிறேன் இக்கண்ணீரை.

பிழைப்பு தேடி பிறந்த மண்ணை விட்டு நகரத்து நெருக்கடிகளுக்குள் நுழைந்து விடுகிற எல்லா எளிய மனிதர்களும், வலிகளுடனும், ஏக்கங்களுடனுமே நகர வீதிகளில் மலங்க, மலங்க விழித்துக் கொண்டு அலைந்தபடி இருக்கின்றனர். தமது வேர்களை ஊர்களில் விட்டு விட்டு புதிய வேடங்களைப் போட்டுக் கொள்ள வேண்டிய பின் நாட்களில் ஒவ்வொரு கிராமத்து மனமும் திக்கு முக்காடித்தான் போகும்.

அகப்படாத வித்தை

காலாரக் கிளம்பி

கருக்கல் மறைவில்

வயிற்றுக்கொரு கையறு பாடி

கையும் காலும்

அலம்பியே பழக்கப்பட்ட தாத்தாவிற்கு

 வருடம் போயும்

பிடிபடவில்லை

பத்துக்கு நாலு கழிப்பறையில்

பக்குவமாய் வயிறு கழுவி

புறம் வருதல்

இக்கவிதையில் தாத்தா குறியீடாகிறார். தாத்தா நம் ஆதி முகமாகிறார். தாத்தா நாமாகிறார். சுயமிழந்த கண்மாய்கள் கவிதையும் இதே வலியைத்தான் பேசுகிறது.

பொருள் தேடி வெளிநாடு செல்ல வேண்டிய சுய அனுபவத்தின் வலி மிகுந்த இழப்புகளாக இவர் எழுதியிருக்கும் சில கவிதைகள் நம் அனுபவமுமாக இருக்கின்றன.

பரதேசி

ஊரில் உள்ள

கடவுளையெல்லாம் வேண்டி

கண்ணீரோடு அம்மா

புத்தியோடு பிழை

கவனமாய் இரு

வழக்க வாசிப்போடு அப்பா.

………………………………………………..

…………………………………………….

இத்தனையும் கடந்து

நகர்ந்து போகின்றேன்

அக்கரை தேசத்திற்கு

பரதேசியாய்.

ஒரு நிமிட, இரண்டு நிமிட மெளன அஞ்சலிக் கூட்டங்களை ஏராளமாய்ப் பார்த்தாயிற்று. அங்கு நடந்தேறும் அபத்தங்கள் தவிர்க்கவியலாத்து தான். சொல்லப்போனால் அந்த அபத்தங்களை, பெருமையாய் ஏற்றுக் கொள்ளவும் பழகியிருக்கிறோம். கவிஞர் இப்படிச் சொல்கிறார்

மெளன அஞ்சலி

எழுந்து நிற்கச் சொல்லும்

மெளன அஞ்சலிகளில்

நிமிடங்களை எண்ணுவதில்

நினைவிழந்து போகிறது

இறந்தவனின் நினைவு.

மெளன அஞ்சலிக் கூட்டங்களில் இறந்தவனின் நினைவைப் புறந்தள்ளிவிட்டு சுய பறைசாற்றல்களாகவும், நிமிடங்களில் கவனித்தும் இருக்கும் மனிதர்கள் இறந்தவனுக்கு துரோகமும் இழிவும் தான் செய்கிறார்கள்.

காட்சிப் படிமனாக விரியும் ஒரு நல்ல கவிதையாக இத்தொகுப்பில் நான் ரசித்த கவிதை

மீண்டும்

செயற்கையை

தனக்குள் வாங்கி

உந்தி எழுந்த நீர்த்திவலை

இயற்கையோடு

கை கோர்த்து புணர்ந்த கணத்தில்

அடங்கி மறைந்த்து

மீண்டும் நீர்க்குமிழியாய்.

நவீன கவிதையின் முனை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் புதுக்கவிதைக்காரனின் கவிதை வரிகள் இவை எனக் கொள்ளலாம். இன்னும் பொறுத்திருந்தால் இன்னும் சிறப்பான ஒரு தொகுப்பாக கவனம் ஈர்த்திருக்கக் கூடுமான ஒரு தொகுப்பு

-இரா. பூபாலன்,

 பொள்ளாச்சி.

 9842275662 

நன்றி : நந்தலாலா