மகளிடம் பேசிக் கொண்டிருந்தபோது நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லுங்க என்று சொல்லி விட்டு கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.
ஒரு அப்பா, அம்மாவுக்கு இரு பையன்கள். அப்பாவும் அம்மாவும் வெளியூருக்கு போய்விட்டதால் இரு பையன்கள் மட்டும் வீட்டில் இருந்தார்கள். அன்று பெரிய பையன் வேலைக்குச் சென்றுவிட்டான். சின்ன பையனுக்கு காய்ச்சல் என்பதால் பள்ளிக்கு போகாமல் வீட்டிலேயே இருந்துவிட்டான். மத்தியானம் அவன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்கு சாப்பிட வந்த அண்ணன் கதவை தட்டினான். அதேநேரம் வீட்டின் இன்னொரு கதவை ஒரு திருடனும் தட்டினான். சப்தம் கேட்ட அந்த சின்னப் பையன் முதலில் எதைத் திறப்பான் என்று கேட்டாள். அதற்கு நான் அண்ணன் தட்டிய கதவை தான் முதலில் திறப்பான் என்றேன்.
எப்படி சொல்றீங்க? என்றாள்.
ரெகுலராக அந்த வீட்டிற்குள் அண்ணன் தட்டிய கதவின் வழியாக தான் அவர்கள் வருவார்கள் என்பதால் பழக்கத்தில் அந்த கதவைத் தான் திறப்பான் என்றேன். உடனே அந்த பதில் தப்பு. முதலில் கண்ணைத் தான் திறப்பான். இது தான் பதில் என்றாள். அதன் பின் அவள் சொன்னது தான் தகவல்.
அது எப்படி? எங்க மிஸ், அம்மா, நீங்க மூணுபேருமே ஒரே மாதிரி பதில் சொல்றீங்க. ஒன்னு மட்டும் எனக்கு தெரியுது. நான் கேட்ட கேள்வியை நீங்க மூணு பேருமே ஒழுங்கா கவனிக்கல. நல்லா தூங்கிக்கிட்டு இருந்தான்னு சொல்லி இருக்கேன். அப்ப கண்ணை மூடித்தானே தூங்கி இருப்பான். அடுத்ததா முதலில் எந்த கதவை திறப்பான்னு கேள்வி கேட்கல. எதை திறப்பான்னு தான் கேட்டேன். ஆனால், நீங்க மூணு பேருமே அதை கவனிக்கல. கொஞ்சம் மாத்தி யோசிங்க. இப்படி தான் இருக்கும்னு நீங்களா சொல்லாதீங்கன்னு சொன்னாள்.
அவள் கவனமாகத்தான் கேட்டிருக்கிறாள். நான் தான் கேனத்தனமாக காதில் வாங்கி விட்டு அறிவாளித் தனமாய் அரைவேக்காடு பதிலை சொல்லி இருக்கின்றேன் என்பது அப்புறம் தான் உரைக்க ஆரம்பித்தது.