Sunday 30 January 2022

துரோகச் சுவடுகள் – வாழ்தலின் விழிப்பு

துரோகத்திற்கும், நம்பிக்கைக்குமான இடைவெளியில் நிற்கும் ஒருவன் எதன் பக்கம் சாய்கிறான் என்பதே அவனுடைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அந்த தீர்மானித்தல் துரோகம் என்ற நிலைப்பாட்டைக் கொள்ளும் போது அது எதிரில் இருப்பவர், பாதிக்கப்பட இருப்பவர் உள்ளிட்ட எவர் பற்றியும், எது குறித்தும் கவலை கொள்வதில்லை. துரோக எண்ணத்தில் தீவிரம் கொண்டு இயங்கும் ஒருவரின் செயலானது பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல வரலாற்றிலும் சுவடுகளாகப் பதிந்து விடுகிறது என்பதை விளக்கும் நூல் துரோகச் சுவடுகள். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வழியாக வந்திருக்கும் இந்நூலின் ஆசிரியர் வெ. இறையன்பு.

துரோகங்களின் வகைகள், அது எங்கிருந்து, யாரால், எப்பொழுது கட்டவிழ்க்கப்படுகிறது என்பதையெல்லாம் வாசிக்கும் போதே மெய்சிலிர்க்கிறது. குறிஞ்சி மலரைத் தேட வேண்டுமானால் பல நூறு நெறிஞ்சி மலர்களை நாம் கடக்க வேண்டியிருக்கிறது. வாழ்தலை அத்தனை ஐயப்பாடுகளால் நகர்த்த வேண்டிய காலத்தில் தான் கி.பி. தொடங்கி இன்று வரை இருந்து வருகிறோம் என்பதற்கு துரோகச் சுவடுகளே சாட்சியாய் இருக்கிறது.

நம் வாழ்வில் கடந்து வந்த பாதைகள் முழுக்க யாரோ ஒருவரால் சிறிதாகவோ, பெரிதாகவோ பாதிக்கப்பட்டிருப்போம். அந்த பாதிப்பிற்கு பெயர்கள் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். அந்த வேறின் வேர் சுயநலமாக இருக்கும் போது அது நம்பிக்கையில் இருந்து துரோகத்திற்கு நகர்ந்து விடுகிறது. இந்த நகர்விற்கு நம்மை ஒப்புக் கொடுத்து விடாமலும், பிறர் நம்மை பலிகடாவாக்கி விடாமலும் காத்துக் கொள்வதில் மட்டுமே வாழ்தலின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. அந்த சூட்சும முடிச்சுகளை அவிழ்ப்பதற்கான முன் தயாரிப்புகளைச் செய்து கொள்ள இந்நூல் நிச்சயம் உதவும்.

தொகுப்பின் இறுதியில் இறுதியாக என்னும் தலைப்பில் உலகம் உண்மையில் அழகானது. அதை அழகாக்குபவர்கள் யார்? என பெரும் பட்டியலை நூலாசிரியர் வரிசைப் படுத்திக் காட்டுகிறார். அந்த நீள் பட்டியல் தருகின்ற மனிதர்களின் சாயல் பூண்டவர்களில் ஒருவராக நாம் மாறினால் நமக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் நல்லது. துரோகச் சுவடுகளைத் துடைத்தெறிய வேண்டுமானால் அவரவர் முதலடியை மனசாட்சிப் படி எடுத்து வைத்தால் மட்டுமே சாத்தியம். அப்படி சாத்தியமானால் தனிமனிதனுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் நல்லது.

No comments:

Post a Comment