Tuesday 18 January 2022

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் – 1 – ஊக்க மருந்து!

மற்றவர்களின் வாழ்வியல் செய்திகளை தன் எழுத்துகளில் அரங்கேற்றாமல் தன் அனுபவங்கள் வழியாக மட்டுமே சொல்ல வேண்டிய தகவல்களை வாசிக்கின்றவர்களுக்கு நேரடியாக கடத்தும் தனக்கே உரிய ட்ரேட் மார்க்கோடு லேனா தமிழ்வாணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. கல்கண்டில் தொடராக வந்து மணிமேகலைப் பிரசுரம் வழி வந்திருக்கும் இந்நூலில் 60 கட்டுரைகள் உள்ளன. அத்தனையும் நமக்கே நமக்கானது என்பது நூலின் சிறப்பு.

பக்கம் பக்கமாக வழங்கப்படும் அறிவுரைகளால் பயன் ஏதுமில்லை. அது வழங்கப்படும் அறிவுரைகளின் அடர்த்தியை நீர்த்துப் போக வைத்து விடும் என்ற எதார்த்தத்தின் சாயலைத் தனதாக்கி குறுகத் தரித்த வார்த்தைகளில் ஒவ்வொரு கட்டுரையும் இருக்கிறது.

ஒரு பக்கக் கட்டுரைகளின் வழி ஒரு நூறு தகவல்களை, செய்திகளை மட்டுமல்லாது அதன் மூலமாக வாழ்தலுக்கான வழிமுறிகளையும், நமக்கு நாமே சுத்திகரிப்பு செய்து கொள்ள வேண்டிய விசயங்களையும், திருத்தங்களையும் சுட்டிக் காட்டுகிறார். சுடர் தரும் விளக்கில் இருந்து பயன் பெற வேண்டியது நம் கையில் தான் இருக்கிறது. பெறுகிறவர்கள் பிரகாசிப்பார்கள்.

தொகுப்பின் எந்த ஒரு பக்கத்தில் இருந்தும் மேற்கூறிய ஏதோ ஒன்றைப் பெற முடியும் என்பதால் பயணங்களில், காத்திருப்பு நேரங்களில் வாசிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கும் நூல் பட்டியலில் இத்தொகுப்பையும் இணைத்துக் கொள்ளலாம்.


 

1 comment:

  1. தாங்கள் எழுதிய நூல் ஆய்வும் இரத்தின சுருக்கமாக இருக்கிறது.

    மணிமேகலை பிரசுரம் புகழ்பெற்ற நிறுவனம்தான்; இருப்பினும் முகவரியையும் பதிவில் இணைத்திருக்கலாம்!

    ReplyDelete