தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்த ஒரு இளைஞனைக் கண்ட எழுத்தாளர் டால்ஸ்டாய் அவனை தடுத்து நிறுத்தி அதற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு அந்த இளைஞன் ஐயா….நான் ஏதாவது தொழில் செய்து பிழைக்க நினைக்கிறேன். ஆனால் அதற்கான மூலதனம் என்னிடமில்லை. அதனால் தற்கொலை செய்து கொண்டு சாக முடிவெடுத்தேன் என்றான். உடனே டால்ஸ்டாய், நான் உனக்கு நூறு ரூபிள் (இரஷ்ய நாணயத்தின் பெயர்) தருகிறேன். அதற்கு பதிலாக உன் ஒரு விரலைத் தருகிறாயா? என்று கேட்டார். இளைஞன் முடியாது என வேகமாக மறுத்தான். சரி…..….விரல் வேண்டாம். இரண்டு கண்களில் ஒன்றைக் கொடு என்றார். அப்போதும் அந்த இளைஞன் மறுத்தான். நூறு ரூபிளுக்கு பதில் ஆயிரம் ரூபிள் தருகிறேன். அதற்கு பதிலாக உன் இரண்டு கால்களில் ஒன்றைக் கொடு என்று கேட்டார். அப்போதும் மறுத்த இளைஞனிடம் டால்ஸ்டாய் உன்னிடம் மதிப்பிட முடியாத உடல் உறுப்புகள் என்னும் மூலதனம் இருக்க எதுவுமில்லை என தற்கொலைக்கு முயன்று கொண்டிருக்கிறாயே? என்று கேட்டதும் அந்த இளைஞன் தன் முடிவை நினைத்து தலைகவிழ்ந்து நின்றான்.
இந்த இளைஞனைப் போல வாழ்வை வசப்படுத்தி ஜெயிக்க இது தான் வேண்டும் எனச் சொல்லிக் கொண்டு அப்படி ஜெயிப்பதற்கு இருக்கக்கூடிய பல அம்சங்களை நாம் மறந்து விடுகிறோம். ஆனால், வெற்றியாளர்கள் அப்படி இருப்பதில்லை. தாங்கள் செய்ய நினைக்கும் செயலின் மீது அதீத நம்பிக்கையையும், அதற்கேற்ற வெற்றிச் சூத்திரங்களையும் வைத்துக் கொண்டு காரியத் தடைகளைத் தகர்த்தெறிந்து நினைத்ததை அடைகின்றனர். சாதிக்கின்றனர்.
நன்றி : தமிழ்முரசு நாளிதழ்