Thursday 6 May 2021

பாளையங்கோட்டை – ஒரு மூதூரின் வரலாறு

தமிழக ஆய்வாளர் தொ.பரமசிவன், பேராசிரியர் ச. நவநீத கிருஷ்ணன் ஆகியோரால் எழுதப்பட்டு காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கும் நூல் பாளையங்கோட்டை – ஒரு மூதூரின் வரலாறு. நகரம் சார்ந்து தமிழில் வந்திருக்கும் நூல்களில் சிறந்த நூல். வீரபாண்டிய கட்டப்பொம்மனின் வாழ்க்கை வரலாறு நூலை எழுதுவதற்கான தரவுகளைச் சேகரித்த சமயத்தில் இந்நூலையும் வாசித்தேன்.

நகரின் பெயர் உருவான விதம், நட்டார் தெய்வங்கள், கோட்டையின் வடிவமைப்பு, பாளையக்காரர்கள் போராட்டத்தில்  இந்நகருக்கான இடம், கிருஸ்தவ மிஷனரிகளால் கல்வியில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகிய தகவல்களோடு வரலாற்றுப் பின்னனியையும் இணைத்து பாளையங்கோட்டையின் ஆரம்பகால நகர அமைப்பு எப்படியிருந்தது? விரிவாக்கம் எப்படி நிகழ்ந்தது? இப்போது அவ்விடங்கள் என்னவாக உருமாறியிருக்கிறது? என்பதை வரைபடங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்வதைப் போல தெளிவாகவும், கோர்வையாகவும் நூல் விவரிக்கிறது.

பிராமணர்களைத் தாக்கி பிராமணப் பெண்களின் தாலியையும், காதுகளையும் அறுத்த வரலாறு,  கோகிலா என்ற மராட்டிய விதவைப் பெண்ணுக்கு ஞானஸ்தானம் வழங்கிய தகவல், ”தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட்” என பாளையங்கோட்டை அழைக்கப்படுவதற்கான காரணம், கண் தெரியாதவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பள்ளிகள் உருவான விதம் ஆகிய தகவல்களை சற்று விரிவாகவே நூலாசிரியர்கள் தந்திருக்கின்றனர். 

பாளையங்கோட்டை பற்றிய வருங்கால ஆய்வாளர்களுக்கான ஒரு அறிமுக நூலாக இதை நூலாசிரியர்கள் முன் வைத்திருப்பதால் பாளையக்காரர்கள் சார்ந்து இந்நகரம் அடைந்த எழுச்சி, ஆங்கிலேயர்களுடன் அம்மண்ணில் நிகழ்ந்த போர், கட்டப்பொம்மன் மறைவுக்குப் பின் ஊமைத்துரை சிறைவைக்கப்பட்டது,  அவர்கள் தப்பிச் சென்ற விதம் உள்ளிட்ட வரலாற்று நிகழ்வுகளை   சில வரிகளில் அடிக்கோடிட்டு காட்டுகிறார்கள். இவை ஒவ்வொன்று குறித்தும் இன்று வரை முரண்களும், கள ஆய்வுகளும் நடைபெற்றுக்  கொண்டுதானிருக்கின்றன.

பாளையங்கோட்டை பக்கம் போக வாய்ப்புள்ளவர்கள் இந்நூலை ஒரு முறை முழுதாக வாசித்து தகவல்களை குறிப்பெடுத்துக் கொண்டோ அல்லது புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டோ சென்றால் பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டமைந்திருந்த இந்நகர மாதிரியை மனக் கண்ணில் கண்டு வர முடியும்.

1 comment:

  1. Iam from tirunelvelli district. My college studies from palayamkottai. Schools and colleges, school for deaf and dump, blind students, the churches..more than all the famous Caldwell lived idayankudi nearer to palayamkottai. Navneetha krishnan my prof at madurai University. Thanks for this post.

    ReplyDelete