Thursday, 23 December 2021

மனைவி சொல்லே மந்திரம் - உற்றுநோக்கு!

"மேனேஜ்மெண்ட்" என்ற சொல்லை கெட்டிக்காரத்தனத்தின் அடையாளம் என நிர்வாகத் துறையில் இயங்கும் ஆண்களில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த மமதையை சொல்களில், செயல்களில் அவ்வப்போது வெளிப்படுத்துவதோடு, மேனேஜ்மெண்ட் சார்ந்த சிறப்பு வகுப்புகளில், பயிலரங்குகளில் கலந்து கொள்ள நிர்வாகம் தங்கள் செலவில் அனுப்பினால் அதை தனக்குத் தரப்பட்ட கெளரவத்தின் அடையாளமாகவே பிரதிநிலை படுத்திக் கொள்கிறோம். ஆனால், ஆண்களின் இத்தகைய அடாவடித்தனத்தை எல்லாம் "சும்மா", "பிதற்றல்" என பொட்டில் அடித்தாற் போல சொல்லிப் போகிறதுமனைவி சொல்லே மந்திரம்”! ஷாரு ரெங்கனேசர் ஆங்கிலத்தில் எழுதிய இந்நூலை வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் தமிழாக்கம் செய்திருக்கிறார். கற்பகம் புத்தகாலயம் வெளியீடு செய்திருக்கிறது.

நிர்வாகவியலில் கற்றுத் தரப்படும் அத்தனை வினாக்களுக்குமான சூத்திரம் அவரவர் வீட்டில் இருக்கும் பெண்களிடமே இருக்கிறது. அதை அவர்கள் சிறப்பாகக் கையாண்டு குடும்பத்தை நிர்வகிக்கிறார்கள். சிலநேரம், அதில் சிக்கல்கள் ஏற்படும் போது ஒரு தேர்ந்த நிர்வாகியின் திறனோடு அவைகளுக்கான மாற்று வழிகளையும் கைக்கொள்கிறார்கள். ஆனால், அதை அவர்கள் உணர்வதில்லை. காரணம், நம் கலாச்சார குழந்தை வளர்ப்பு முறையில் அவை அனிச்சையாய் அவர்களிடம் அப்பிக் கிடக்கிறது.

இருப்பு வைத்தல் தொடங்கி தர மேலாண்மை வரையிலான அடிப்படை மேனேஜ்மெண்ட் நிர்வாகவியலை பெயரிடப்படாத சட்டத்தின் கீழ் ஒரு பெண் தன் திறமையால் நிர்வகிப்பதை, “குடும்பத்தை சீர்குலையாத வகையில் நிர்வகித்தல், குழந்தைகளை தங்கள் கைக்குள் வைத்தபடியே அவர்களுக்கு புதிய விசயங்களை கற்றுத் தருதல், கணவன் என்ற தலைமை நிர்வாகியை தன் சொல்லுக்கு தலையசைக்க வைத்தல், ஓரளவுக்கேனும் சரியாக இருக்கும் படியான முடிவுகளை உள்ளுணர்வின் வழி எடுத்தல், கொந்தளிப்பான நிலையில் குடும்பத்திற்குள், உறவுகளுக்குள் நிகழும் நெருடல்களை பெரிய அளவில் சம்பந்தப்பட்டவர்களை பாதிக்காத வகையில் சரிசெய்தல், குடும்பத்தில் புதிய பொறுப்புக்கு வரும் போது அதன் பொருட்டு ஏற்படும் இடர்களை களைதல்என அவர்களுடைய அன்றாட குடும்ப நிர்வாக செயல்பாடுகளை முன் வைத்து இந்நூல் பாடம் போதிக்கிறது. ஒவ்வொரு கட்டுரையையும் வாசித்து முடித்து நிமிர்கையில் அது போன்ற சந்தர்பத்தில் மனைவி கையாண்ட, கையாண்டு கொண்டிருக்கும் வழிமுறைகளை யோசிக்கும் போதுஅட”, ”ஆமாலஎன்ற எண்ணம் தானாகவே நமக்குள் வந்து அமர்ந்து கொள்கிறது. கட்டுரையின் சாராம்சத்தை அதன் தொடக்கத்தில் இடம்பெற்றிருக்கும் கார்டூன்கள் கோடி காட்டி விடுகின்றன.

நூலின் முடிவில் பெண்கள் பிரமாண்டமான கணினி போன்றவர்கள். அவர்களால் ஒரே நேரத்தில் பல விசயங்களைச் செய்ய முடியும் என்று கூறியிருப்பதற்கு ஆசிரியர் தரும் உதாரணம் இருக்கட்டும். நம் வீட்டு பெண்களின் செயல்பாடுகளை உற்றுக் கவனித்தாலே போதும். அந்த கூற்றின் உண்மை புரியும்.

நிறுவனத்தில் ஏற்படும் ஒரு பிரச்சனைக்கு அல்லது தீர்க்க வேண்டிய ஒரு தாவாவுக்கான தீர்வு தன் வீட்டு அடிப்படியில் உறைந்து கிடக்கிறது என்பதை ஆண்கள் மனம் ஏற்க மறுக்கிறது. இந்த எண்ணத்தை தூக்கி எறியுங்கள் என இந்நூல் விடுக்கும் அடிப்படை செய்தியோடுமாணவன் தயாராகும் போது குரு தானே தோன்றுவார்என்பதை கொஞ்சம் மாற்றிகுரு நம் வீட்டிலேயே இருக்கிறார். கற்கத் தயாராகும் மாணவராக நாம் தான் மாற வேண்டும்என முடிவு செய்தால் போதும் நிர்வாகவியலின் கரைகள் நமக்கு அனுக்கமானதாகி விடும்.


 

No comments:

Post a Comment