நாற்பத்தெட்டு பக்கம். நான்கு கதாபாத்திரங்கள். அதில் இரண்டு எலி. அவைகளும் கதை முழுக்க வரவில்லை. விவேக், அச்சுபிச்சு என்ற மீதி இரண்டு கதாபாத்திரங்கள் நம் போன்ற மனிதர்கள். இருக்கும் நிலையில் இருந்து இன்னும் அதிகமாய் முன் நகர்வதற்கான மனநிலை கதை போக்கில் அவர்கள் நமக்குள் விதைக்கிறார்கள். K.R.மணி எழுதி அநுராகம் வெளியீடாக வந்திருக்கும் இந்நூலை மாற்றங்களுக்கான தூண்டல் என்றால் மிகச் சரியாக பொருந்தும் என நினைக்கிறேன்.
”அல்வாத்துண்டு” என்பதை அவரவருக்கான குறியீடாகக் கொண்டு அதைத் தேடி ஓடுவதையும், அந்தத் தேடலில் கண்டடைவதையும், கண்டடைந்தது கைதவறி போகும் போது மீண்டும் புதியன தேடி ஓடுவதையும் மனநிலையாகக் கொண்ட மனிதர்களையும், கிடைத்ததை இழந்த போதும் புதிய தேடலுக்கான ஓட்டத்தை துவங்காமல் தயங்கி நின்றபடி அதற்கான காரணங்களை தனக்குத் தானே அடுக்கிக் கொள்ளும் மனநிலை கொண்ட மனிதர்களையும் விவேக், அச்சு பிச்சு பாத்திரங்கள் பேசுகின்றன.
”ஓடுபவனே இலக்கை அடைவான். தேடல் உள்ளவனே தனக்கு தேவையானதைக் கண்டடைவான்” என்ற வழமையான நம்பிக்கை மொழி தான் கதையின் அடிநாதம் என்ற போதும் அதை நகர்த்தியிருக்கும் விதம் நமக்குள் மறைந்திருக்கும் நம்பிக்கையைத் துளிர்விட வைக்கிறது. எதன் பொருட்டும் தயங்கி நிற்பவர்களுக்கு புதியதொரு தேடலுக்கான ஓட்டத்தை ஆரம்பிக்கச் செய்கிறது.
காணாமல் போன அல்லது குறைந்து கொண்டிருக்கும் அல்வாதுண்டுக்காக அச்சுபிச்சு மனநிலையில் காத்திருந்தால் என்ன நிகழும்? என்பதை அறிந்தவன். கடந்த காலங்களில் அப்படியான மனப்பொறிக்குள் சிக்கிக் கொண்டு மீண்டு வர முயற்சி செய்து கொண்டிருப்பவன் என்ற முறையில் எங்கே போனது என் அல்வாத்துண்டு? (WHO MOVED MY CHEESE) எனக்கு அதிக நெருக்கம் தந்தது.
பலநூறு பக்கமுள்ள ஒரு தன்னம்பிக்கை நூலை வாசிக்கையில் கிடைக்கும் விசயங்களை மிகச்சில பக்கங்களில் பெற விரும்பினால் தயக்கமில்லாமல் இந்த நூலை வாசிக்கலாம். விலை குறைந்தாலும் சாரம் குறையாத சரக்கு! ஒவ்வொரு கட்டுரைக்கு முன்னும் தரப்பட்டிருக்கும் இரண்டு வரிச் செய்தி நமக்குள் தூண்டலைத் தரும் அகல்களாக மிளிர்கிறது.
வாய்ப்புகளை தேடத் தயங்குபவர்கள், தடைகள் கண்டு தயங்கி நிற்பவர்கள், புதிய தேடலின் பொருட்டு உள்ளதையும் இழந்து விடுவோமோ? என பயம் கொண்டிருப்பவர்கள், மாற்றங்களுக்கு தன்னை ஒப்புக் கொடுக்க முடியாமல் தினறுபவர்கள் என எந்த படிநிலையிலும் நிற்பவர்கள் தயங்காமல் இந்நூலை வாங்கி வாசிக்கலாம். அதுவரையிலும் கொண்டிருந்த உங்கள் மனநிலை நிச்சயம் மாறும்.
மாற்றங்களே வளர்ச்சிக்கு அடிப்படை. அந்த அடிப்படைக்கான அஸ்திவராத்துக்கு முதல் கல்லாக எங்கே போனது என் அல்வாத்துண்டு? இருக்கிறது.
No comments:
Post a Comment