முகநூலில் நண்பர்களாக தொடர்ந்த போதும் 2013 ல் அவர் பதிந்த ஒரு புகைப்படத்திற்கு நான் போட்ட பின்னூட்டத்தின் வழி முதல் உரையாடல் ஆரம்பித்தது. பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே கொஞ்சம் வாசிப்பவன். சராசரிக்கும் கீழாய் எழுதுபவன் என்பதை கண்டுபிடித்து விபரங்கள் கேட்டார். சொன்னதும், “எழுதி அனுப்பு” என்று சொல்லி மெயில் ஐடி கொடுத்தார். அனுப்பியவைகள் எல்லாம் வாசிப்பிற்கேற்ற எல்லையில் இல்லை என்று சொல்வதைப் போல இன்னும் முயற்சித்து எழுதப் பாரு என்றதுடன், அப்படி எழுதும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள் என்ன? என்பதையும் சொல்லித் தந்தவர்.
அனுப்பியிருந்த கவிதைகளை மீண்டும் சரி செய்து அனுப்பினேன். அவைகள் கவிதை என்ற வட்டத்திற்குள் மிக கச்சிதமாக சிக்காவிட்டாலும் அதன் பரப்பில் நின்ற ஒன்றை எடுத்து ”கல்கி” இதழில் வெளியிட்டு வெகுஜன இதழில் எனக்கு முதல் மேடை கொடுத்தவர். அதன்பின் சில கவிதைகள் வெளிவந்தன.
