Wednesday 26 January 2022

கபடவேடதாரி – ஒரு வரி கதையும் ஒருநூறு மிகு புனைவும்!

Bynge ல் தொடராக வெளியாகி - எழுத்து பிரசுரம் வழியாக நூலாகி இருக்கும் கபடவேடதாரி யின் ஆசிரியர் பா.ராகவன்.

கபடவேடதாரியில் கதை என்று பார்த்தால்,தன்னைத் தண்டித்த கூட்டத்தைப் பலி வாங்கக் கிளம்புகிற ஒருவன் அதற்காக என்னவெல்லாம் செய்கிறான்? அவன் நினைத்தபடி நடந்ததா? என்ற ஒன்லைன் மட்டுமே! அந்த ஒன்லைனை ஐம்பது அத்தியாயங்களுக்கும் புனைவை துணைக்கு வைத்துக் கொண்டு சுவராசியமாக நகர்த்தி இருக்கிறார்.

காதல், அழுகை, ஏமாற்றம், காமம், கலாச்சாரம், சித்தாந்தம், அரசியல், நகைச்சுவை என எல்லா தளங்களையும் தொட்டு  நிற்கும் நாவலின் களத்திற்கும், கதாபாத்திரங்களுக்கும் உருவாக்கி இருக்கும் பிரமாண்ட பின்புலம் தரும் இரசனையும், காட்சிப்படுத்தலும் அடுத்தடுத்த அத்தியாயங்களை எட்டிப் பார்க்க வைக்கின்றன. படைப்புகளில் நாலும் இருக்க வேண்டும். அதுவும், நறுக்குன்னு இருக்க வேண்டும் என என் தமிழ் பேராசிரியர் சொன்னது நினவுக்கு வரும் விதமாக புனைவெழுத்தில் அடித்து ஆடி இருக்கிறார்.

முகநூல் என்ற சமூகவலைத்தளத்தை பிரதி எடுத்து நிற்கும் இந்நாவலைக் காலங்கடந்து வாசிப்பவர்கள் கூகுள் செய்து தெரிந்து கொள்வதற்கான சமகால விசயங்களையும் பா.ரா. தொட்டுச் சென்றிருக்கிறார். உதாரணமாக, ஒரு பத்து ஆண்டுகளுக்கு பின் நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பன்னீர்செல்வத்தை கூகுள் செய்பவர்களுக்கு என்னவெல்லாம் தெரிய வரும் என்பதை யோசித்து பார்த்தால் புரியும். நாவல் முழுக்க இப்படி நிறைய உண்டு.

நிகழ்கால கண்ணாடியை எதிர்கால வாசிப்பிற்குத் தர சமகால நிகழ்வுகளை சம்பவங்களாக்கி மட்டுமே பதிவு செய்ய முடியும் என்பதில்லை. சம்பவங்களை புனைந்தும் பதிவாக்கலாம் என்பதற்கு கபடவேடதாரி உதாரணம். எழுத்துக்கு மட்டுமல்ல. வாசிப்பிற்கும் கபடவேடதாரி வித்தியாசமான முயற்சி.

No comments:

Post a Comment