சிங்கப்பூர் வாசகர் வட்டத்தில் கலந்துரையாட கவிஞர். கலாப்ரியா வருகை தர இருப்பதையொட்டித் தொடர்ந்து மூன்று அமர்வுகளில் நவீனக்கவிதைகள் சார்ந்தும், அவரின் கவிதைகள் குறித்தும் கலந்துரையாடிச் சிலாகித்து இருந்தோம்.
அந்தக் கதகதப்பின் சுகத்தை இன்னும் இறுத்தி வைக்கும் முகமாகக் கடந்த சனிக்கிழமை (03-10-2015) கலாப்ரியோடு கலந்துரையாடலும், அதற்கடுத்த நாள் கவிதைப் பயிலரங்கு நிகழ்வும் அங் மோ கியோ நூலகத்தில் நடைபெற்றது.
சனிக்கிழமைப் பொழுது அத்தனைச் சிக்கலின்றி ஆரம்பித்தத்தில் அரைநாள் விடுப்போடு கலந்துரையாடலுக்குப் போக முடிந்தது. எந்த பந்தாவும் இல்லாமல் தோள் பையைத் தொங்க விட்ட படி எளிமையின் அடையாளமாய் அரங்கிற்குள் வந்தவரை இயல்பாய் அணுக முடிந்தது. ”என் வாழ்வும், கவிதையும்” என்ற தலைப்பில் தன் கவிதைப் பயணம் குறித்துப் பேசினார். தன்னைப் பற்றிப் பேசினார் என்பதை விட ஒவ்வொரு வரியிலும் வாசகர்கள் வாசிக்க வேண்டிய ஆளுமைகளின் படைப்புகளை அவர்களின் கவிதைகளோடு அடையாளம் காட்டினார் எனச் சொல்வதே சரியாக இருக்கும். அவரின் உரைக்குப் பின் கலந்துரையாடல் என்றதுமே ஹோட்டலுக்கு குழுவாகச் சாப்பிடச் சென்றால் யார் முதலில் ஆர்டர் பண்ணுவது? என்று வரும் பிதுக்கல் வாசகர்களிடம் வந்து நின்றது, ஸ்டார்ட்டிங் டிரபிளில் கலந்துரையாடல் சிக்கி நிற்க அதைத் தன் முதல் கேள்வி மூலம் அழகுநிலா அவர்கள் கிளியர் செய்து கொடுத்தார்.
கவிதையின் கட்டமைப்பு, கவிதையின் புரிதலின்மை, கவிதைக்கான கருவை உள்வாங்குதல், கவிதைக்குத் தலைப்பிடுதல் ஆகியவைகளைச் சார்ந்து பல கேள்விகள் முன் வைக்கப்பட்டன. எல்லாக் கேள்விகளுக்கும் நேரடி பதில்களை, எளிமையான கவிதை உதாரணங்களோடு கொடுத்ததோடு கேள்வி கேட்டவரிடம் நான் உங்களுக்குச் சரியா சொல்லி இருக்கேனா? என்று கேட்டு எங்களின் புரிதலையும் உறுதிப்படுத்திக் கொண்டார்.
நானும் ஐந்தாறு கேள்விகளோடு தயாராய் இருந்தாலும் சபைக் கூச்சம் அடக்கி உட்கார வைத்திருந்தது. என் கேள்விகளுக்கான பதில்களை இதர பல கேள்விகளுக்கான பதில்களில் அவர் சொல்லி விட்டதால் என்னிடம் எஞ்சி நின்ற ஒரு கேள்வியை மட்டும் கேட்டேன். கவிதைக்கும், வாசகனுக்குமான அணுக்கம் குறித்த அந்தக் கேள்விக்கு அவர் தந்த விளக்கம் எனக்குக் கொடுத்த மாதிரி மற்றவர்களுக்கும் சில புரிதலைக் கொடுத்திருக்கும் என நம்பலாம்.
அரங்கில் வைக்கப்படிருந்த அவருடைய படைப்புகளில் ”நினைவின் தாழ்வாரங்கள்” போன்ற தொகுப்புகள் இல்லாதிருந்தது சிலருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்ததைக் கேட்க முடிந்தது. நான் ”உருள்பெரும் தேர்” வாங்கினேன். ஆசானிடம் வரிசையில் நின்று கையெழுத்து வாங்கிய கையோடு ”தரனும்னு தோணுச்சு” என்ற படி என்னுடைய கவிதைத் தொகுப்பை எடுத்து நீட்டினேன். விதி யாரை விட்டது! சிரித்தபடி வாங்கிக் கொண்டார்.
மறுநாள் கவிதைப் பயிலரங்கிற்குச் செல்லும் போதே அன்றைய நாளிதழில் வெளிவந்த என் குட்டிக்கதைக்கு வாழ்த்துச் சொல்லி ஒரு தோழியிடமிருந்து அழைப்பு வந்தது. அன்றைய பொழுதின் சந்தோசத்தோடும் வழக்கமான தாமதத்தோடும் அரங்கிற்குச் சென்றால் ஆசான் முன்கூட்டியே வந்திருந்து அளவளாவிக் கொண்டிருந்தார். அவரவர் இருக்கையில் இருந்த கேள்வி பதில் பாணியிலான குறிப்புக் காகிதங்களைப் பார்த்ததும் எல்லோருக்கும் கொஞ்சம் கிலி பிடிக்கத் துவங்கியது. பயிலரங்கிற்கு வந்திருந்த மாணவர்களின் மொழியில் ”இங்கேயும் பரீட்சையா?” என்ற குரல்கள் அமுக்கமாய் கிளம்பியது.
”நிழல்” என்று சொன்னதும் உங்கள் மனதில் தோன்றுவதைக் குறிப்புகளாக அல்லது கவிதைகளாக எழுதிக் கொடுங்கள் என்றார். எழுதிக் கொடுத்தோம், எல்லோருடைய குறிப்புகளையும் தனித்தனியே வாசித்து அவைகளை எப்படி கவிதையாக்கலாம்? நம்மைச் சுற்றி இருப்பவைகளிலிருந்து எப்படி கவிதைக்கான கருவை நிலை நிறுத்தலாம்? தலைப்பு ஒன்று தான் என்றாலும் அது ஒவ்வொருவரையும் எப்படி மாறுபட்டு சிந்திக்க வைக்கிறது? என்பதை அழகாக விளக்கிச் சொன்னார். தயார் செய்து வந்திருந்த கவிதைகளின் வழி கவிதைத் தளத்தில் இயங்க நினைப்பவர்கள் வாசிக்கவும், கவனிக்கவும் வேண்டிய படைப்பாளிகளை அடையாளம் காட்டினார். இப்படியான நிகழ்வுகளில் தன்னைப் பற்றி மட்டும் எப்பொழுதும் புகழ்ந்து திரிபவர்களுக்கு மத்தியில் ஆலமரமாய் நின்ற போதும் நான் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளவே வந்திருக்கிறேன் என்றதோடு தன் கவிதைகளோடு சமகாலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மூத்த படைப்பாளிகள் தொடங்கி ஒரு தொகுதி மட்டுமே கொண்டுவந்திருக்கும் இளம் படைப்பாளிகள் வரை அனைவரையும் அடையாளம் காட்டி அவர் பேசியது “எந்தப் புகாரும் யார்மீதும் இல்லை. எவர் மீதும் குரோதமும் கோபமும் இல்லை. தான் என்ற அகங்காரமில்லை. எதையும் எவரிடத்தும் கோரவுமில்லை- எதிர்பார்ப்புமில்லை என்பது போன்ற அசல் கலைஞனுக்குரிய சகல குணாம்சங்களுடனும் தன் பயணத்தைத் தொடர்கிறார் கலாப்ரியா” என்று முன்பு வாசித்தது நினைவில் வந்து போனது.
பயிலரங்கு முடிந்ததும் மதிய உணவோடு தக்காளி அறை தயாராய் இருந்தது. வந்திருந்த மாணவர்கள் அவர்களின் ஆசிரியரும், வாசகர் வட்டப் பொறுப்பாளருமான சித்ரா ரமேஷிடம் என்ன கேட்டார்கள்? என்பது தெரியவில்லை. நான் ஏற்பாடு செய்யும் சாப்பாடு சைவமாகத் தான் இருக்கும் என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தது மட்டும் காதில் விழுந்தது.
வருங்காலத்தில் நினைவின் தாழ்வாரங்கள், உருள்பெரும் தேர் போல ஏதேனும் ஒரு தொகுப்பில் கலாப்ரியா இவைகளை எல்லாம் அசை போடக் கூடும். அதை வாசிக்கும் பாக்கியம் கிட்ட வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.
"நிழல்" என்னும் தலைப்புக்கு நான் எழுதிக் கொடுத்திருந்த குறிப்பு -
நிழலின் நிழல்
நிழலுக்குள்ளேயே பயணிக்கிறது.
நதியின் நிழல்
நதிக்குள்ளேயே பயணிப்பது போல!