நதிக்கரை ஓரத்தில் முகாமிட்டிருந்த ஆட்டு மந்தைக்கு அருகில் தன் குட்டியை ஈன்றெடுத்த புலி அங்கேயே இறந்து போக ஆடுகளோடு வளர்ந்த அந்த புலிக்குட்டி ஆட்டுக்குட்டியைப் போலவே மாறிப்போனது. ஒருநாள் அவ்வழியே வந்த ஒரு புலி ஆட்டுமந்தைகளோடு சுற்றித்திரிந்த அந்த புலிக்குட்டியை இழுத்துச் சென்று அதன் வாயில் மாமிசத்தை திணித்து நீயும், நானும் புலிகள். மாமிசம் உண்டு வாழ்பவர்கள். உன்னைப் பார்த்தால் மிரண்டு ஓடக்கூடிய ஆடுகளோடு சேர்ந்து நீயும் ஆடாகவே மாறிவிட்டாயே என்று கூறியதும் தான் அந்த புலிக்குட்டி தன்னுடைய சுயத்தை அறிந்ததாம். இராமகிருஷ்ண பரமஹம்சரின் கதையில் வரும் இந்த புலிக்குட்டி உணர்ந்ததைப் போல நீங்கள் உங்களை எப்பொழுது உணர ஆரம்பிக்கிறீர்களோ அப்பொழுது உங்களின் சுயம் தானாக வெளிப்பட ஆரம்பித்து விடும். ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. புலிக்குட்டிக்கு அதன் சுயத்தை கண்டறிய உதவிய புலியைப் போல நமக்கு யாரும் உதவ வரமாட்டார்கள். மாறாக நாமாகவே முயன்று சுயமாய் சுடர் விட்டால் தான் உண்டு.
சுய சிந்தனை, பகுத்தறிதல், ஜெயித்தவர்களின் வாழ்வியல் பாடங்கள், நமக்குள் இருக்கும் தூண்டல்களை தங்களின் அனுபவங்களின் வழி தூக்கி பிடித்து நிறுத்தி வைக்கும் வெற்றியாளர்களால் நடத்தப்படும் கருத்தரங்குகள் ஆகியவைகளின் வழி தொடர்ந்து நம்மை நாமே சுத்திகரித்துக் கொள்வதன் மூலம் மட்டுமே அதை சாத்தியமாக்கிக் கொள்ளவும், சுயத்தை கண்டறிவதற்கான தூண்டல்களை பெறவும் முடியும். எனவே இது போன்ற விசயங்களில் அவ்வப்போது கவனம் செலுத்துவதன் வழி உங்களின் சுயத்தை வெளிப்படுத்துவதற்கான தூண்டல்களைப் பெற முயலுங்கள். அப்படியில்லாமல் நேரம் காலம் இன்னும் கூடி வரவில்லை என ஜோசியர் சொல்கிறார். இப்ப கிரகம் சரியில்லை என ஜாதகம் சொல்கிறது. ஆறுமாசம் கழிச்சு செஞ்சா தான் காரியம் வெற்றியடையும்னு பஞ்சாங்கம் பார்த்து குருக்கள் சொல்றாருன்னு சொல்லிக் கொண்டும், அவைகளின் வழி நின்று உங்களின் சுயத்தை வெளிப்படுத்தவும் விரும்புவீர்களேயானால் புலிக்குட்டியாக இருந்தும் நீங்கள் ஆட்டுக்குட்டியாக தான் வாழ்வீர்கள்! வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்!! வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை எங்கிருந்து, யாரிடமிருந்து பெறுகிறீர்கள் என்பதில் தான் வெற்றியும் ஆரம்பமாகிறது.
உங்களின் திறமை, ஆற்றல் என்ன என்பதை உங்களின் செயல்பாடுகளின் வழி உறுதிபடுத்திக் கொள்ள வேண்டுமேயொழிய கட்டங்கள், கிரகணங்கள் வழி உறுதி படுத்த முயலக்கூடாது. கடமையைச் செய்வதற்காக காலநேரம் பார்ப்பவர்கள் ஒருபோதும் காரியம் செய்வதில்லை. காரியம் செய்பவர்கள் கால நேரம் பார்ப்பதில்லை. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களைத் தவிர வேறு யாராலும் உறுதிபடுத்தித் தந்து விட முடியாது. தாயக்கட்டைகளை உருட்டி கால நேரம் பார்த்து எதையும் செய்ய நினைக்கும் நாம் அதே தாயக்கட்டைகளின் உருட்டல் தான் பாணடவர்களின் இராஜ்ஜியத்தையே பறிபோக வைத்தது என்பதை மறந்து விடக்கூடாது. எனவே உங்களை உணர்ந்து சுயம்புவாய் – சுயமாய் நீங்கள் எழ வேண்டுமானால் இது போன்ற நிச்சயமற்ற தன்மைகளின் வழி உங்களுக்கான இயக்கத்தை எப்பொழுதும் தொடங்க மட்டுமல்ல தொடரவும் செய்யாதீர்கள். இவையெல்லாம் பொய். பித்தலாட்டம். என இங்கு பிரச்சாரம் செய்வதோ அல்லது அவைகளின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைகளை நீர்த்துப் போகச் செய்வதோ என் நோக்கமல்ல, இவையெல்லாம் அவரவர் விருப்பம் சார்ந்தது. இவைகளை நம்புவதா? வேண்டாமா? என்பதை விட இதுபோன்ற நிச்சயமற்ற தன்மைகளின் வழி உங்களின் நிச்சயவெற்றிக்கு போராட வேண்டுமா? அவைகளுக்கு முன்னுரிமை தர வேண்டுமா? என்ற கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என்பதே என் வேண்டுகோள்.
யாராவது ஏதாவது ஒன்றை நம்மை பற்றிச் சொன்னால் போதும். அடுத்த நொடியே அதற்கு அடிமையாகி அடங்கி, முடங்கி போவது நம்மில் பலரின் பழக்கம். இந்த பழக்கம் வழக்கமாகும் போது வாழ்க்கை வறண்டு விடுகிறது. அதனால் தான் வீட்டில் உள்ள மூத்தவர்கள் மற்றவர் பேச்சைக் கேட்டு தவறு செய்யும் பிள்ளைகளை கண்டிக்கும் பொழுதெல்லாம் ”அவன் சொன்னான்னா உனக்கு எங்கே போச்சு அறிவு?” என கேட்பார்கள். இவ்வுலகில் எல்லா உயிரற்ற பொருள்களையும் மதிப்பிட ஒரு அளவீடு, வரையறை இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் வகுத்தளித்த மனிதன் தன்னை மதிப்பிட எந்த வரையறையையும் வைத்துக் கொள்ளவில்லை. மற்றவர்களும், தன்னைச் சார்ந்தவர்களும் சொல்வதை எந்த வரையறைக்குள்ளும் வைத்து பார்க்காமல் அப்படியே ஏற்றுக் கொள்வதையும், அதன் பொருட்டு தன்னுடைய முயற்சிகளில் - முன்னேற்றத்தில் முட்டுக்கட்டைகளை தனக்குத் தானே போட்டுக் கொண்டு முடங்கிப் போவதையும் தனக்கான இயல்புகளில் ஒன்றாக ஆக்கிக்கொள்ள ஆரம்பித்து விட்டான். இந்த இயல்புகளுக்குள் வெற்றியாளர்கள் எப்பொழுதும் அகப்படுவதே இல்லை. அதிலிருந்து விலகியே நின்றிருக்கிறார்கள். அதனால் தான் சாதித்தும் இருக்கிறார்கள். சரித்திரத்தில் சாதித்தவர்களைப் பற்றி மற்றவர்கள் கொண்டிருந்த அபிப்ராயங்கள் எல்லாமே பொய்யாகவே இருந்திருக்கின்றன.
கற்கும் திறனில்லாத ”முட்டாள்” என ஆசிரியரால் மதிப்பிடப்பட்டவர் எடிசன்.
உலகெங்கும் சில்லரை விற்பனை மையங்களை நடத்தும் உல்வொர்த் ஸ்டோரின் நிறுவனர் உல்வொர்த் ஆரம்பத்தில் ஒரு கடையில் விற்பனை ஊழியராக பணியாற்றிய போது அந்த முதலாளி அவருக்கு கொடுத்த மதிப்பீடு ”விற்பனையாளனாக இருப்பதற்கு இலாயிக்கற்றவன்”.
வால்ட்டிஸ்னி பத்திரிக்கையில் வேலை பார்த்த போது அந்த பத்திரிக்கை ஆசிரியர் அவருக்கு கொடுத்த மதிப்பீடு ”சுய சிந்தனையும், கற்பனை வளமும் அற்றவர்”.
முறையாக டாக்டர் பட்டம் பெறாததால் ”பேராசிரியர் பணி செய்ய தகுதியற்றவர்” என மறுக்கப்பட்டவர் அப்துல் கலாம்.
விப்ரோ நிறுவனத்தில் ”வேலைக்கு தகுதியற்றவர்” என புறக்கணிக்கப்பட்டவர் இன்போசிஸ் நாராயணமூர்த்தி.
பொய் நீண்ட நாட்களுக்கு நிற்காது என்பதைப் போல தங்கள் மீதான மற்றவர்களின் மதிப்பீடுகளை இவர்கள் உடைத்தெறிந்து தங்களின் இலக்கை நோக்கி பயணித்ததால் தான் வாழ்க்கையை ஜெயிக்க முடிந்தது. சரித்திரத்தில் தங்களின் இடத்தை உறுதி செய்ய முடிந்தது. மற்றவர்களின் மதிப்பீடுகள் உங்களுடைய திறமைகளை நிர்ணயிக்கும் அளவீடாக இருக்காது. இருக்கவும் முடியாது என்பதை எப்போழுதும் நினைவில் கொள்ளுங்கள். உங்களின் மீது மற்றவர்கள் கொண்டிருக்கும் அவநம்பிக்கைகளை உங்களின் நம்பிக்கையாக மாற்றிக் கொள்ளாதீர்கள். அவர்களின் அவநம்பிக்கைகளிலும், புறக்கணித்தல்களிலும் தான் உங்களின் சுயம் உறைந்து கிடக்கிறது என்பதால் அதிலேயே முடங்கி போய் நின்று விடாமல் அதிலிருந்து வெளியே வந்தால் மட்டுமே உங்களைப் பற்றிய மற்றவர்களின் அபிப்ராயங்களிலிருந்து விலகி நின்று செயல்பட முடியும்
ஞானம் பெற வேண்டும் என நினைத்த சந்நியாசியை அவனின் குரு ஒரு அரசனின் அரண்மனைக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தார். அரண்மனையில் ஞானமா? என யோசித்த சந்நியாசி குருவின் சொல்லைத் தட்ட முடியாமல் அரண்மனைக்கு வந்து தங்கி இருந்தார். ஒருநாள் அரண்மனைக்கு பின்னால் இருந்த நதியில் நீராட அரசனோடு சென்றிருந்தார். அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென அரண்மனை தீப்பற்றிக் கொள்ள ஆரம்பித்தது. இதைக்கண்டதும் ”ஐயோ என் துணிகள் எல்லாம் அரண்மனைக்குள் இருக்கிறது. அவையெல்லாம் எரிந்து போய்விடுமே” என்று சொல்லிய படி அரண்மனையை நோக்கி ஓடத்துவங்கிய சந்நியாசி தன்னோடு அரசன் வராததைக் கண்டதும் ஆச்சர்யத்துடன் ”அரசே……..அரண்மனையே தீப்பற்றி எரிகிறது. நீங்கள் கவலைப்படாமல் இன்னும் நதிக்குள்ளேயே நின்று கொண்டிருக்கிறீர்களே” என்றார். அதற்கு அரசன் அந்த அரண்மனை என்னுடையது என நினைத்திருந்தால் நானும் உன்னைப் போல் ஓட ஆரம்பித்திருப்பேன். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. அரண்மனை அரண்மனையாக மட்டுமே இருப்பதைப் போல நான் நானாக மட்டுமே இருக்கிறேன். நான் பிறப்பதற்கு முன் இருந்த அரண்மனை நான் இறந்த பின்னும் இருக்கத்தான் போகிறது. அதனால் அதை எனக்கானது என சொல்லிக்கொள்வது எப்படி சரியாகும்? என்று கேட்டான் .அந்த கணம் அரசனின் காலில் விழுந்த சந்நியாசி ஞானம் பெற்று திரும்பினார். ஓஷோ சுட்டிக்காட்டும் சந்நியாசி போல இருப்பவர்கள் மற்றவர்களின் அபிப்ராயங்களை எல்லாம் தனக்கானதாக எண்ணிக் கொண்டு அவைகளை நோக்கி ஓடியே மடிந்து முடங்கிப் போகிறார்கள். ஆனால் அரசனைப் போல இருப்பவர்கள் தன் மீதான மற்றவர்களின் அபிப்ராயங்கள் தனக்கானது அல்ல என்று நினைக்கிறார்கள். அதனால் தான் வெற்றிபெற்றாலும், தோல்வியடைந்தாலும் அது பற்றிய மற்றவர்களின் அபிப்ராயங்களை அவர்கள் பொருட்படுத்துவதில்லை.
உங்கள் மீதான மற்றவர்களின் அபிப்ராயங்கள் நிலையானது அல்ல. எல்லா அபிப்ராயங்களும் ஒவ்வொரு நிலையிலும் மாறக்கூடியது. நீங்கள் வெற்றியடைந்தால் எனக்கு அப்பவே தெரியும். அவன் திறமைக்கு அவன் நின்று ஜெயிப்பான் என சொல்பவர்கள் நீங்கள் தோற்றால் எள்ளி நகையாடுவார்கள். உங்களின் திறமையை கேலி பேசுவார்கள். எனவே மற்றவர்கள் உங்களைப் பற்றி சொல்லும் அபிப்ராயங்களை அரசனைப் போல இருந்து அலட்சியப்படுத்துங்கள். அப்பொழுது தான் எதையும் கடந்து உங்களால் காரியம் சாதிக்க முடியும். சந்நியாசியாக இருக்கப்போகிறீர்களா? அல்லது அரசனாக இருந்து ஆளப்போகிறீர்களா? நீங்களே முடிவு செய்யுங்கள்
நன்றி : நிலாச்சாரல்