நீண்ட நேரம் அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த மகனிடம் அம்மா எங்க? என்றேன்.
சமைக்க கறி வெட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றவனிடம் ”அவள்”ட்ட கொடு என்றேன்.
”அவள்”னு ஏன் சொல்றீங்க. அம்மாவுக்கு பேர் இல்லையா? என்றான்.
எதிர்பாராத இந்தக் கேள்வி சற்றே தடுமாற்றத்தைத் தர சுதாரித்துக் கொண்டு அப்படிச் சொன்னா தான் அவளுக்குப் பிடிக்கும் என்றேன்.
அது எப்படி உங்களுக்குத் தெரியும்? என்றான்.
அவ எனக்கு பிரண்ட்(FRIEND). அதுனால தெரியும் என்றேன்.
பிரண்டுன்னா தெரியுமாக்கும். அவங்க சொன்னா தானே உங்களுக்குத் தெரியும். பிரண்டு கிட்ட கொடுன்னு சொல்லுங்க. ”அவ”கிட்டேன்னு சொல்லாதீங்க. இல்லைன்னா சங்கீதகலா (மனைவி பெயர்) கிட்ட கொடுன்னு சொல்லுங்க. சரியா? என்றான்.
சரி என சொன்னவுடன் அப்பா இனிமேல் அப்படி சொன்னா எனக்கிட்ட சொல்லுங்க என்ற படி மனைவியிடம் செல்போனை கொடுத்தான்.
மகனிடமிருந்து அலைபேசியை வாங்கிய மனைவி சற்றே நக்கலாக ”இன்னைக்கு செம பாடம் போல” என்றாள்.
இன்று மகனிடமிருந்து வந்த இந்த எதிர்வினை ”ஒருமையில் அழைப்பது நட்பு சார்ந்த விசயமில்லை. உரிமை சார்ந்த விசயம்” என்பதை உணர்த்தியது.