Monday, 24 November 2014

வெற்றிக்கு ஐந்து காரணிகள்

கற்றுக்கொள்ளத் தயாராய் இருங்கள் :

எப்பவும், எதையும், எதிலிருந்தும் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் மட்டுமே தடைகளைக் கடந்து சாதிக்கவும், வாழ்வை தன் வசப்படுத்தவும் முடியும். இதற்கென நீங்கள் அதிகமாக மெனக்கெடவோ, உங்கள் மூளையை கசக்கிப் பிழியவோ வேண்டியதில்லை. உங்களைச் சுற்றியிருக்கக் கூடியவைகளை, நிகழ்பவைகளை உற்று நோக்கினாலே போதும். ”மாணவன் தயாராய் இருக்கும் போது குரு தானே தோன்றுவார்என்பது கற்றல் விசயத்தில் முற்றிலும் சரியல்ல. இந்த விசயத்தைப் பொறுத்தவரையில் வெவ்வேறு வடிவங்களில்., உருவங்களில், அஃறிணையாகவும், உயர்திணையாகவும் குருவானவர் உங்களைச் சுற்றிலும் இருந்து கற்பித்துக் கொண்டே இருக்கிறார். மாணவனாக நீங்கள் மாறி கற்றுக் கொள்ள வேண்டியது மட்டும் தான் பாக்கி. குழப்பமாக இருக்கிறதா? கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன்.

எறும்பு - சுறுசுறுப்பையும், ஒழுங்கு முறையையும், மழைக்கால சேமிப்பையும், காகம் - ஒற்றுமையையும், சிங்கம் - ஆண்மையின் கம்பீரத்தையும் குருவாக இருந்து நித்தமும் கற்றுத் தந்து கொண்டே இருக்கின்றன. என்றாவது ஒருநாள் கற்றுக் கொண்டு அதை உங்களின் வாழ்க்கையின் உயர்வுக்கு பயன் படுத்தி இருக்கிறீர்களா? இது தனிமனித ஒழுங்கிற்கு என்றால் வெற்றி வாழ்க்கைக்கு உதாரணம் சொல்கிறேன். பறவைகள் கூட்டு முயற்சியையும், கொக்கு சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதையும், சிலந்தி விடாமுயற்சியையும் கற்றுத்தந்து கொண்டிருக்கிறதே! நீங்கள் கவனித்ததுண்டா? கற்றுக் கொண்டதுண்டா? இல்லையென்றால் இந்த நிமிடத்திலிருந்து மாணவனாய் மாறுங்கள். ஏனெனில் பறவை என்ற குருவிடம் கற்ற பாடம் தான் ரைட் சகோதரர்களை விமானத்தைக் கண்டுபிடிக்கத் தூண்டியது. சிலந்தி என்ற குருவிடம் பாடம் கற்ற இராபர்ட் புரூஸ் இழந்த தன் நாட்டை மட்டுமல்ல தன்னுடைய நம்பிக்கையையும் மீட்டான். இது வரலாறு. நீங்களும் வரலாற்றில் இடம் பெற விரும்பினால்  கற்றுக்கொள்ள தயாராய் இருங்கள்.

மற்றவர்களின் திறமைகளை மதியுங்கள் :

திறமைசாலிகள் எங்கிருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் மதிக்கப் பழகுங்கள். உங்களின் மேலதிகாரியை விட உங்களின் கீழ் பணியாற்றுபவர்கள் திறமைசாலிகளாக இருந்தால் தான் உங்களைத் திறமைசாலியாக நிர்வாகத்திற்கு காட்டிக் கொள்ளமுடியும். எனவே பெரியவன், சின்னவன், ஏழை, பணக்காரன், என் கீழ் பணிசெய்பவன் என்று எந்த வித ஏற்றத்தாழ்வும் பாராமல் திறமைக்கும், திறமைசாலிக்கும் மதிப்புத் தர தயாராய் இருங்கள். அப்படித் தந்தவர்கள் சாதித்திருக்கிறார்கள். தங்களை வெற்றியாளர்களாக அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.

உலகிலேயே அதிக பங்குதாரர்களைக் கொண்ட நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தை அதன் தலைவர் திருபாய்அம்பானி திறமைசாலிகளைக் கொண்டே உருவாக்கினார். திறமைசாலிகளை உலகம் முழுக்க தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் தந்து தங்கள் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்துவதும், அதன் மூலம் அவர்களின் திறமைகளை தங்களின் வெற்றிகளுக்கு பயன்படுத்த வைப்பதும் தான் இன்றளவும் ரிலையன்சின் வெற்றிக்கான வழிகளில் ஒன்றாக பின்பற்றப்படுகிறது. நிர்வாகத்தில் தான் என்றில்லை. வீட்டில்  மனைவியின், குழந்தைகளின் திறமையைப் பாராட்டி அவர்களை உற்சாகப்படுத்தும் கணவன் வெற்றிகரமான குடும்பத் தலைவராக கொண்டாடப்படுகிறார். ஏனெனில் தானும், தன் திறமையும் பிறரால் மதிக்கப்பட வேண்டும் என நினைப்பது மனித இயல்பு. அதை மிகச்சரியாக தன்னுடைய நிர்வாகத்தில், வீட்டில் செயல்படுத்துகிறவர்கள் வெற்றி பெறுகின்றனர்.

முன்மாதிரியாய் இருங்கள் :

நீங்கள் நீங்களாக இருப்பது எப்படி வெற்றிக்கு அவசியமோ அதே மாதிரி மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நடந்து கொள்வதும் அவசியம். உங்களின் அலுவலக வருகைப் பதிவேட்டில் உயரதிகாரியாக இருக்கும் உங்களின் வருகை சரியான நேரத்தில் இருக்குமானால் மற்றவர்களும் சரியான நேரத்திற்கு வந்து விடுவார்கள். இந்த நடைமுறையை வெற்றி முறையாகப் பின்பற்றும் நோக்கில் தான் பல அலுவலக வருகைப் பதிவேடுகளில் நிர்வாகியின் பெயர் முதலிடத்தில் இருக்கும். முதலிடத்தில் இருப்பவர்கள் முன் மாதிரியாய் இருப்பதன் மூலம் மற்றவர்களையும் அப்படியே இருக்கச் செய்ய முடியும். சுந்தரம் க்ளெய்டன் லிமிடெட்டின் தலைவர் டி.வி.எஸ். வேணுசீனிவாசன் தங்கள் நிறுவனத்தில் ஏதாவது குப்பை கீழே கிடப்பதை பார்த்தால் உடனே அதை குனிந்து எடுத்து குப்பைத் தொட்டியில் போடுவாராம். “எதிலும் ஒழுங்குஎன்ற நிறுவனத் தலைவரின் எண்ணம் ஒரு முன் மாதிரியாக கடைநிலை ஊழியர் வரையிலும் அங்கு கடைபிடிக்கப்படுகிறது. இது டி.வி.எஸ். நிறுவனத்தின் வெற்றி என்றால் அதன் தலைவராக மட்டும் இருக்காமல் நிர்வாக அதிகாரியாகவும் இருந்து மற்ற நிர்வாகிகளுக்கு முன்மாதிரியாய் இருப்பது வேணுசீனிவாசன் என்ற தனிமனிதனின் வெற்றி!

டாட்டா தம்முடைய அலுவலகத்தை விட்டு வீட்டிற்கு கிளம்பும் போது அவசியமின்றி எரியக்கூடிய விளக்குகளை எல்லாம் அனைத்து விட்டுச் செல்வாராம். இந்த முன்மாதிரி தலைவரின் நிறுவனம் இன்று உலக அளவில் வெற்றி பெற்று நிற்கிறது. எனவே, உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளுங்கள். தானாகவே மற்றவர்கள் உங்களை பின்பற்றத் தயாராகி விடுவார்கள்.

தவறுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் :

இவைகளைப் பயன்படுத்தி அதை மற்றவர்கள் மீது சுமத்தவோ முயலாதீர்கள். அப்படிச் செய்வது அரசியல்வாதிகளின் வேலை. ஆள்பிடிக்கும் கூட்டத்தின் அஸ்திரம். நீங்கள் வெற்றி பெற முயற்சிப்பவர்கள். உங்களுடைய அஸ்திரமாக இருக்க வேண்டியது குள்ளநரித்தனமல்ல. தைரியம். “தைரியம் புருஷ லட்சணம்என்பதை நினைவில் கொள்ளுங்கள். தன் தவறுக்குத் தானே பொறுப்பேற்றுக் கொள்ள முடிகிறவனால் தான் அதைச் சரிசெய்யவும் முடியும். சரிசெய்யப்பட்ட தவறுகள் தான் சாதனைகளாக மாறியிருக்கின்றன. இன்றைய கண்டுபிடிப்புகள் எல்லாமே தவறுகளை சரிசெய்ததில் தான் முழுமையடைந்து பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. எனவே நீங்கள் முழுமை பெற்ற வெற்றியைப் பெற்று வெற்றியாளராக திகழ வேண்டுமானால் உங்களின் தவறுகளுக்கு மற்றவர்களை நோக்கி கை நீட்டாமல் நீங்களே துணிச்சலுடன் பொறுப்பேற்றுக் கொள்ள பழகுங்கள்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்திருந்தார். அரசாங்கத்தோடு மக்கள் ஒத்துழைக்க வேண்டாம் என்ற காந்தியின் அறைகூவலுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். ஆங்காங்கே அரசுக்கு எதிராக ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களும் மக்களால் நடத்தப்பட்டன. அப்படி ஊர்வலமாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள செளரிசெளரா என்னுமிடத்தில் வந்து கொண்டிருந்த மக்கள் தங்களைத் தாக்கியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் கொடூரமாக நடந்து கொண்ட காவலர்களில் இருபத்திரண்டு பேரை காவல் நிலையத்திற்குள் பூட்டி வைத்து தீயிட்டுக் கொழுத்தினர். இதைக் கேள்விப்பட்ட காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை உடனடியாக வாபஸ் பெற்றுக் கொண்டதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. மக்களை தான் முறையாக கட்டுப்படுத்தவில்லை என்று குறிக்கும் விதமாகநான் இமாலாயத் தவறு செய்து விட்டேன்என்றார். இந்த தைரியம் தாம் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிரான வெற்றியை அவருக்குப் பெற்றுத் தந்தது. தேசப்பிதாவாக பரிணாமம் பெறச் செய்தது.

வெற்றி பெறுவதற்காகப் படியுங்கள் :

அப்படியானால் இதுவரை பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நான் படித்தவைகள் வெற்றி பெறுவதற்காக இல்லையா? என நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்வி என்றாலும் உண்மை என்ன தெரியுமா? நீங்கள் படித்த பாடப் புத்தகங்களால் வாழ்க்கையில்  சில மதிப்பீடுகளைப் (RANK) பெற முடியுமே தவிர ஒருநாளும் வெற்றி (SUCCESS) பெற முடியாது. அதனால் தான் பாடத்திட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியங்கள் குறித்து இன்று எல்லோரும் பேச ஆரம்பித்துள்ளனர். கல்விநிறுவனங்கள் தங்கள் பாடத்திட்டங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த ஆரம்பித்துள்ளன.

எல்லோருக்கும் சமமான நிலையில் நீங்கள் இருந்தால் பத்தோடு பதினொன்று என்ற கணக்கில் தான் அறியப்படுவீர்கள், சாமானியருக்குரிய இந்த கணக்கிலிருந்து சாதனையாளனுக்குரிய கணக்கிற்கு மாற வேண்டுமானால் அதற்கு வெற்றி என்கின்ற விலாசம் தேவை. அந்த விலாசத்தை பாடப்புத்தகங்களால் ஒருநாளும் பெற முடியாது என்பதால் தான் வெற்றி பெறுவதற்காக படியுங்கள் என்றேன். வெற்றிப் பயணத்திற்கான தூண்டல்களை தரக்கூடிய தன்னம்பிக்கை, வாழ்வியல் நூல்கள், வெற்றியாளர்களின் வாழ்க்கை வரலாறுகள், வெற்றியாளர்களின் வெற்றி மொழிகள் போன்ற வெற்றி சார்ந்த நூல்களைப் படியுங்கள். அப்படி படிப்பதன் மூலமும், அதன் வழி பெறும் வழிகாட்டல்கள், அனுபவங்கள் மூலமும் மட்டுமே உங்களுக்குள் உறைந்து கிடக்கும் ஆற்றல்களை உசுப்பி விட்டு அதன் பாய்ச்சலை அதிகமாக்கிக் கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். செலவில்லாமல், நினைத்த நேரத்தில் கிடைக்கக்கூடிய புத்தக அறிவுரைகளால் பிரமாண்ட வெற்றியைப் பெற முடியும் என்பதால் தான் இந்தியாவிற்கு வெளியிலும் தன்னுடைய நிறுவனப் பொருட்களுக்கு வாடிக்கையாளர்களை வைத்திருக்கக் கூடிய கெவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரெங்கநாதன்இளம் வெற்றியாளர்கள் தினமும் சிறிது நேரம் ஒதுக்கி வெற்றி சம்பந்தமான புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்என அறிவுரை கூறுகிறார். இன்று பில்கேட்ஸ்க்கு அடுத்த இடத்தில் இருந்து கொண்டு அவருடன் போட்டியிடக்கூடிய அளவுக்கு வளர்ந்து வரும் பணக்காரரான வாரன்பஃபெட்டின் அஸ்திவாரம் சிறுவயதில் அவரால் படிக்கப்பட்ட ஒரு புத்தக அறிவுரையில் இருந்து தான் ஆரம்பமானது.

காந்தியடிகள் சுதந்திரம் வாங்கித் தந்தார் என்று சொல்லித் தரும் பாடப்புத்தகங்களை விட எப்படி வாங்கித் தந்தார் என்று சொல்லித் தரும் வாழ்க்கை புத்தகங்களில் தான் ஒரு போராட்டத் தலைவனுக்கு தேவையான விசயங்கள் விரவிக்கிடக்கும் என்ற நிஜத்தை உணருங்கள். எனவே, உங்களின் இலட்சியத்திற்கு உதவக்கூடிய புத்தகங்களைத் தேடி எடுத்து அதற்கென சில மணிநேரங்களை ஒதுக்கிப் படியுங்கள். அது உங்களை நீங்களே புதுப் பித்துக் கொள்ள உதவும்.

தேடிச் சோறு நிதந்தின்று

பல சின்னஞ்சிறு கதைகள் பேசி

மனம் வாடத் துன்பமிக உழன்று

பிறர் வாடப் பல செயல்கள் செய்து

நரைகூடிக் கிழப் பருவமெய்தி

கொடுங்கூற்றுக் கிரையெனப் பின்மாயும்

பல வேடிக்கை மனிதரைப் போலே

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? –

என பாரதியைப் போல செருக்காய் நின்று வெற்றிகளை குவிக்க விரும்பினால் மேற்கூறிய ஐந்து காரணிகளின் வழி தொடந்து இயங்குங்கள். அந்த இயக்கம் உங்களை வெற்றியை நோக்கி நகர்த்துவதோடு மட்டுமல்ல தொடர்ந்து நகரவும் வைக்கும்.

நன்றி : நிலாச்சாரல்