Wednesday, 4 March 2015

நிஜத்தைத் தேடி

பிணத்தை எடுக்கப் பணம் இல்லாததால் உதவி கேட்டு வந்திருப்பதாகவும் வாசலில் தட்டைக் கையில் ஏந்தியபடி நிற்கும் ஒருவன் சொல்லும் உண்மைத்தன்மை மீது கணவன், மனைவிக்கிடையே நிகழும் உரையாடல் தான்நிஜத்தைத்தேடிகதை. இக்கதையின் ஆசிரியர் சுஜாதா.

கல்யாணமாகி ஒன்பது வருசத்திற்குப் பின் எதிரெதிரே அமர்ந்திருக்கும் கணவன், மனைவிக்கிடையே இருக்கும்பழக்கப்பட்ட மெளனம்என்ற ஆரம்ப வரிகளிலேயே நகர வாழ்வின் நிஜத்தைச் சொல்லி நேரடியாக கதைக்குள் ஆசிரியர் அழைத்து வந்து விடுகிறார்.

உதவி கேட்டு வந்து நிற்பவனிடம் கேள்விகளால் துளைத்தெடுக்கும் கிருஷ்ணமூர்த்தி மூலம் ஆண்களின் மனநிலையும்-

அவன் சொல்வது பொய்யாகவே இருந்தாலும் ஒரு ரூபா, ரெண்டு ரூபா கொடுத்துட்டா என்ன தேஞ்சா போயிடுவோம். எவ்வளவோ செலவழிக்கிறோம் கன்னா பின்னான்னுஎன சொல்வதிலிருந்து சித்ரா மூலம் பெண்களின் மனநிலையும் காட்டி அவர்களுக்கிடையேயான உரையாடலையும் அதே மன ஓட்டத்திலேயே கொண்டு சென்றது கதையை தொய்வின்றி நகர்த்திச் செல்கிறது.

இப்படி உதவி கேட்பதைமுட்டாளாக்கும் தந்திரம்எனச் சொல்லும் கிருஷ்ணமூர்த்தி அதற்கு ஆதாரமாக வரிசைப்படுத்தி காட்டும் ஏமாற்றுச் சம்பவங்கள் நமக்கு நிகழ்ந்திருப்பவைகளாக, நாம் பார்த்திருப்பவைகளாக இருந்தாலும்வீட்டுக்குள்ள இருக்கிறவ நீ”, “உனக்கு அந்த அறிவு போதாதுஎனக் கூறி மனைவி சித்ராவின் வாயை அடைக்க முயல்வதை ஒருவித அதிகார, ஆணாதிக்கத் தனம் எனலாம்.

உதவி கேட்டு வந்தவன் சொன்னதில் பொய் இருக்க வாய்ப்பில்லை என நினைக்கும் சித்ரா அதை உறுதி படுத்த முடியாமல் தன் மனதோடு வாதிட்டுக் கொண்டே இருக்கிறாள், அதன் வெளிப்பாடும், இயலாமையும் அவளிடமிருந்து கண்ணீராக வெளியேறியதை கிருஷ்ணமூர்த்தி பார்ப்பதில் கதை திசை திரும்புகிறது. அதுவரையிலான உரையாடல் சித்ராவின் கண்ணீரைப் போல அங்கு உடைபட்டு உண்மையின் தேடலாக மாறுகிறது.

தான் சொன்னதில் இருக்கும் உண்மையை மனைவிக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற வேகத்தில் உதவி கேட்டு வந்தவன் சொன்ன உத்தேச முகவரிக்கு காரை எடுத்துக் கொண்டு சென்ற கிருஷ்ணமூர்த்திக்கு அங்கு காணும் காட்சி இப்படித்தான் இருக்கப் போகிறது என்பதை ஊகித்து விட முடிகிறது. ஆனால், உண்மையை அறிந்து வீட்டிற்கு திரும்பியவன் என்ன ஆச்சு? எனக் கேட்ட மனைவியிடம் பொய் சொல்கிறான். அதைக்கேட்ட சித்ராஎத்தனை பொய்எனச் சொல்லி அமைதியடையும் போது பல நேரங்களில் பொய்யே ஜெயிக்கிறது என்ற நிஜம் நம் மனதில் ஆர்ப்பரிக்கத் தொடங்குகிறது.

சுஜாதாவின் தனித்த அடையாளங்களோடு மனித மனவோட்டத்தை வெளிச்சமிடும் கதை

ஆசிரியர்  : சுஜாதா

      கதை   :  நிஜத்தைத் தேடி

வெளியீடுவானதி பதிப்பகம்