சிங்கப்பூரில் சம கால படைப்புகள் பற்றியும், படைப்பாளிகள் குறித்தும் விவாதிக்கும் ஒரு அமைப்பு வாசகர் வட்டம். ரமலான் கொண்டாட்டத்தை ஒட்டி கிடைத்த நீண்ட விடுமுறையை கொஞ்சம் கவிதை “ரம்”மியமாகவும் மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பாக அமைந்தது இந்த மாத வாசகர் வட்டக் கூட்டம். மாதத்தின் மூன்றாவது வார இறுதியை தனக்கான தினமாக வைத்திருக்கும் இவ்வமைப்பின் கூட்டம் அங்மோகியோ தக்காளி அறையில் நடைபெற்றது.( ”தக்காளி அறை” ன்னு பெயர் வைக்க விசேச காரணங்கள் ஏதும் உண்டான்னு இனிமேல் தான் கேட்டுத் தெரிந்து கொள்ளனும்)
ஜெயமோகன்,
எஸ்.இராமகிருஷ்ணன்,
மனுஷ்யபுத்திரன், அ.ராமசாமி, பெருமாள்
முருகன், ஜோ. டி. குரூஸ்
போன்ற சமகாலத்தின்
மிக முக்கிய
படைப்பாளிகளை இங்கு
அழைத்து வந்து
அவர்களுடனான கலந்துரையாடல்கள்,
பயிற்சிப் பட்டறைகள்
வழி வாசிப்பையும்,
அதன் மீதான
பார்வையையும் வெறும்
பருந்துப் பார்வையாக
இல்லாமல் உள்ளார்ந்த
தன்மைக்கு மாற்றம்
செய்து கொண்டிருக்கின்றனர்.
வரும் அக்டோபர்
மாதம் இவ்வமைப்பு
நடத்தும் கவிதை
திருவிழாவிற்கு கவிஞர்.
கலாப்ரியா வருகிறாராம்.
ஆசானிடம் கேட்க
நினைத்திருந்த சில
கேள்விகளை இப்பவே
வரிசைப் படுத்தி
வைத்துக் கொள்ளவும்,
அவரோடு நின்று
புகைப்படம் எடுத்துக்
கொள்ள தரம்
கூடிய கேமரா
இருக்கும் படியான
ஒரு அலைபேசி
வாங்கவும் மனம்
இப்போதே திட்டமிட்டுக்
கொண்டிருக்கிறது. ஆசானுக்கு
சமீபத்தில் வெளியான
என் கவிதைப்
புத்தகத்தை தரவும்
ஆசையிருக்கு. என்னை
மதிரியே எத்தனை
பேர் தரக்
காத்திருக்கிறார்களோ? ஆசானை
அந்த நெல்லையப்பர்
தான் காப்பாத்தனும்!
வட்டமாக அமர்ந்து கலந்துரையாடுவதற்கான அமைப்பில் தக்காளி அறை இருந்தது. ஒற்றை இலக்கத்தில் தொடங்கிய வாசகர்களின் எண்ணிக்கை மெல்ல இரட்டை இலக்கத்திற்குத் தாவியது. இயந்திரத்தனமான வேக வாழ்வில் குடும்பத்துடனான பொழுது போக்கிற்கான வாய்ப்பைத் தருபவைகளாக இது போன்ற நீண்ட விடுமுறை தினங்கள் தான் அமைகின்றன. அப்படியான நாளில் இலக்கியக் கூட்டத்திற்கு இத்தனை பேர் வருவது சந்தோசமான விசயம். இருக்கையில் அமர்ந்து கொண்டே உரையாடும் வசதி இருந்தது எனக்கு நல்லதாகப் போயிற்று. அறையில் நிலவிய குளிர் நடுக்கத்தையும், மேடை நடுக்கத்தையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்கையின் கைப்பிடியை இறுக்கமாய் பற்றிக் கொள்ள முடிந்தது.
இந்தமாதம் கவிதை சார்ந்த கலந்துரையாடலை கவிஞர் எம்.கே. குமார் ஆரம்பகால கவிதையின் பரிணாமங்கள் குறித்துப் பேசி துவக்கி வைத்தார். கலந்துரையாடலில் முன் வைக்கப்பட்ட பல கவிதைகளுக்கு அது சார்ந்த சங்கப்பாடல்களை அவர் அடையாளம் காட்டிய படியே வந்தது சிறப்பாக இருந்தது. பாரதி மூர்த்தியப்பன் பாரதியாரில் தொடங்கி நகுலன், கதிர்பாரதி, லீனா மனிமேகலை, இசை ஆகியோரின் கவிதைகளின் வழியே தனது கருத்துகளையும், புரிதல்களையும் பகிர்ந்து கொண்டார். தனக்கே உரிய எள்ளல், நையாண்டிகளின் மூலம் தனது கவிதைகளின் வீச்சை வாசிப்பவனிடம் கடத்தி வரும் இசையின் கவிதைகளை அடையாளப்படுத்திப் பேசும் போது தன்னில் நிரம்பி வழிந்த சிரிப்பைத் தேக்கி நிறுத்த முடியாமல் சிரமப்பட்டார். பகிரப்படும் கவிதைகளுக்கு நடுவே அது சார்ந்த சமகால கட்டுரைச் செய்திகளையும், சிங்கப்பூரின் வாழ்வியல் சூழலையும் பகிர்ந்து கொண்ட ஷாநவாஸ் கல்யாண்ஜியை பற்றி நின்று கரையேறிக் கொண்டிருந்தார்.
கிருத்திகா கவிதையை வாசித்து முடித்த பின் அதைப் புரிந்து கொள்ள முடியாமல் திணறும் போது தனக்கு இருக்கும் மனநிலை பற்றிச் சொன்ன போது முன்பொரு முறை
புரியாத மொழியில்
புனையப்படும் எதுவானாலும்
ஓங்கி அறை.
அது படைப்பானாலும்
படைப்பாளியானலும் சரி! என்று முகநூலில் பதிந்தது நினைவுக்கு வந்தது. வந்திருந்தவர்களில் சிலர் எம்.கே. குமார் உள்ளிட்டவர்களின் கவிதைகள் புரியவில்லை என ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக் கொண்டிருந்ததால் பகிர்வதற்காக தொண்டை வரை வந்த நினைவை நந்தி அள்ளி வந்து கொடுத்த விசத்தை தொண்டையில் நிறுத்திய சிவனாய் செவனேன்னு இருந்து கொண்டேன்.
அகிலா சுந்தர் தனக்குப் பிடித்த கவிதைகளை பகிரும் நோக்கில் அவைகளை நாற்பது பக்க நோட்டில் எழுதிக் கொண்டு வந்திருந்தார். பெண் கவிஞர்களை அதிகம் அடையாளப்படுத்திய அவருடைய பகிர்வு ஒரு கலவையான கவிதைத் தொகுப்பை வாசித்த உணர்வைக் கொடுத்தது.
நகுலன், பிரமிள், தேவதச்சன், கல்யாண்ஜி, கலாப்ரியா, முகுந்த் நாகராஜன், அம்பை, அ.வெண்ணிலா, இசை, கவிஞர்.நா.முத்துக்குமார், மாதங்கி, மனுஷ்யபுத்திரன் ஆகியோர் உலாவிக் கொண்டிருந்த அறையில் திடுமென வைரமுத்து நுழைந்தார். அதற்காகவே காத்திருந்தது போல அவரின் பொருட்டு பொது வெளியில் கூறப்பட்ட சில குற்றச்சாட்டுகளை வாசகர்கள் முன்னிறுத்த வந்த வேகத்தில் திரும்பிச் சென்றார்.
படைப்பாளி மட்டுமல்ல வாசகனும் தன் வாசிப்பின் ஒவ்வொரு நிலையையும் தன் வாழ்வியல் சூழலோடு பொருத்திப் பார்த்துக் கொண்டே இருப்பான் என்பதை அங்கு செல்லும் ஒவ்வொரு சமயமும் ஷாநவாஸிடமும், சசியிடமும் பார்ப்பேன். நேற்றைய சசியின் பகிர்வும் அப்படியாக இருந்தது. கொங்கு சார்ந்த விசயங்கள் பற்றிய தகவல்களை நிறைய தன்னுள் வைத்திருக்கிறார்.
தனக்கு அனுக்கமான கவிதைகளை அடையாளப்படுத்தி அது சார்ந்த புரிதல்களை அவரவர் நிலைக்கு கொடுத்த எழுத்தாளர் அழகுநிலாவின் பகிர்தலோடு நிறைவை எட்டிய நிகழ்வில் என் பங்களிப்பாக கவிதைகளைப் புரியவில்லை என்பதற்காக வாசகனிடம் நிகழும் புறந்தள்ளுதல், கடந்து செல்லுதல் பற்றிய கருத்துக்களை மனுஷ்யபுத்திரன், ஃப்ராங்கிளின் குமார் ஆகியோரின் கவிதைகளை துணைக்கு வைத்துக் கொண்டு பகிர்ந்து கொண்டேன். உரையாடல் சார்ந்த தன்மையில் வழங்கப்பட்ட பரிசுத்தொகையில் எனக்கும் ஒன்று கிடைத்தது. சில வார இதழ்கள் வாங்கவும், அந்த இரவை இன்னொரு “சுற்று”டன் முடிக்கவும் அது பயன்பட்டது.
நிகழ்வில் தந்த கிட் – கேட் சாக்லெட்டைத் தின்றபடியே இரண்டு பேருந்து ஒரு இரயில் பிடித்து விடுதிக்கு வந்து சேர்ந்தேன். விடுமுறை கொண்டாட்ட லயிப்பில் உறங்காமலிருந்த நண்பர் தூரப் பயணமா? என்றார். இப்படியான அமைப்புகள் இங்கு செயல்படுவதை அறியாத, பாடநூல் தாண்டிய வாசிப்பை சுவைத்திராத அவரிடம் என்ன சொல்வது? கையில் புத்தகங்களை வைத்துக் கொண்டு பொய்யும் சொல்ல முடியாது. ஒரு மீட்டிங் இருந்துச்சு என்றேன். பொழுதன்னைக்கும் மீட்டிங் தானா? என்றார் நக்கலுடன். கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என நினைத்துக் கொண்டு அவரைக் கடந்தேன். ஒரு சந்தேகம்னு பொசுக்குன்னு புகுந்து கழுதைக்கு கற்பூர வாசம் பிடிக்காதுன்னு உனக்கு எப்படித் தெரியும்? நீ என்னைக்காது காட்டியிருக்கியான்னு? யாராது குரல் எழுப்பினால் என்னிடம் பதில் இல்லை. அதெல்லாம் முடியாது நீ நிருபித்தே ஆக வேண்டும் என அடம் பிடித்தால் கற்பூரம், தட்டு, தீப்பெட்டி கொண்டு வர நான் தயார். கழுதை கொண்டு வர நீங்க தயாரான்னு சொல்லுங்க? நானும் கழுதைகளை நேரில் பார்த்து பல வருசமாச்சு, உங்க புண்னியத்துல பார்த்தமாதிரி இருக்கும்!
நிகழ்வில் நான் பகிர்ந்து கொண்ட ஃபிராங்கிளின் குமாரின் கவிதை
புறப்பட்டு விட்ட பேருந்திலிருந்து
சில்லறையை எறிந்த பின்பே கவனித்தேன்.
யாசித்த கைகளில்
விரல்களே இல்லை
கொத்தித் திறக்கப்பட்ட
முட்டையின் விளிம்புகளெங்கும்
வானம்.