Friday, 3 July 2015

முதல் ரேங்க் வராமல் போயிட்டா?

தனி இந்தி டியூசன் வகுப்பிற்குப் போவதில் யோசனையும், பயங்கர தயக்கமும் காட்டியவனை கட்டாயப்படுத்த வேண்டாம் என நினைத்திருந்தேன். காலையில் அவனிடம் பேசிக் கொண்டிருந்த போது இந்தி டியூசனுக்கு அக்காவோடு நானும் போகவா? வேண்டாமா? என்று அவனே கேட்டதும் தயக்கத்தோடு அது உன் விருப்பம். போனால் நல்லது தானே என்றேன்.

முதல் மார்க் வராமல் போயிட்டா? என்றான். 

எதுக்கு முதல் ரேங்க்? என்றேன்.  

அப்பத்தானே சர்ட்டிஃபிகேட் (CERTIFICATE) தருவாங்க என்றான்

சர்ட்டிஃபிகேட்டும், முதல் ரேங்கும் முக்கியமில்லை. இந்தி மொழியைத் தெரிஞ்சுக்கிட்டா போதும். பெரியவனான பின் உனக்குப் பயன்படும். முதல் மார்க் வரனும்னு நினைச்சுக்கிட்டு டியூசன் போகாதே என்றேன்

அப்பன்னா சரி. நானும் டியூசன் போகிறேன். அம்மாவிடம் சொல்லி விடுங்கள் என்றான்

பேசி முடித்ததும் பள்ளிக்கூடங்கள் குழந்தைகளை முதல் ரேங்கையும், சர்ட்டிஃபிகேட்டையும் மட்டுமே மையப்படுத்தி அடையாளப்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டுகள் பொய்யாக இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றியது