Thursday, 17 September 2015

கலியுகத்தில் சிக்கிக் கொண்ட கடவுள்!

காஸ்யப முனிவருக்கும், மாயைக்கும் பிறந்த சூரபத்மன் வரங்கள் வேண்டி சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவத்தை மேற்கொண்டான். ஆண்டுகள் பலவாகியும் சிவபெருமான் காட்சி தராததால் கடுப்பானவன் தன் உடல் உறுப்புகளை ஒன்றன் பின் ஒன்றாய் அறுத்து யாக குண்டத்தில் போட்டு எரித்துக் கொண்டு தானும் அதிலேயே விழுந்தான். அவனின் தம்பிகளான சிங்கமுகன், தாரகன் ஆகியோரும் அவ்வாறே செய்ய சிவபெருமான் அவர்களுக்குக் காட்சியளித்ததோடு தேவர்களுக்கெல்லாம் தலைவனாக வேண்டும். எத்திசையும் செல்ல இந்திரஞாலத் தேர் வேண்டும். அழியாத யாக்கை வேண்டும் என சூரபத்மன் கேட்ட வரங்களையும் கொடுத்தார்.

 வரம் வாங்கியதும் கடலுக்குள் தனக்கான தலைநகரான வீரமகேந்திரபுரத்தை அமைத்தான். தேவலோகத்தின் மீது படையெடுத்து வென்றான். அவனிடமிருந்து தப்பிய தேவலோகத் தலைவனான இந்திரன் தன் மனைவியோடு சீர்காழிக்கு வந்து சேர்ந்தான். அங்கு ஒரு நந்தவனத்தை அமைத்து மூங்கில் மரத்தில் மறைந்து வாழ்ந்த படியே தன்னைக் காத்தருளுமாறு தன் பதவிக்கே வேட்டு வைத்த சிவபெருமானை வேண்டி நின்றான்.

இந்திரனின் மனைவியான இந்திராணியின் அழகைப் பற்றி அறிந்த சூரபத்மன் தனக்கு ஏவல் செய்ய அவளையும், அவளோடு சேர்த்து இந்திரனையும் அரண்மனைக்குப் பிடித்து வாருங்கள் என தன் படைத் தளபதிகளுக்கு உத்தரவிட்டான். கைது ஆணை பிறப்பிக்கப்பட்டதும் நான்கு திசைகளிலும் தேடுதல் வேட்டையை சூரபத்மன் படைகள் மேற்கொண்டிருந்த நிலையில் கலகக்காரரான நாரதர் இந்திரனைச் சந்தித்து வளரொளி நாதரை அணுகி அவர் பாதம் பணிந்தால் மட்டுமே உன் தலை தப்பும் எனச் சொல்ல தேவேந்திரன் உள்ளிட்ட தேவர்கள் தங்களின் குடும்பத்தோடு வளரொளி நாதரிடம் வந்து தஞ்சம் புகுந்தனர். தஞ்சம் அடைந்தவர்களின் தலைக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டதும் மகிழ்ந்து போன தேவேந்திரன் தேவதச்சனை அழைத்து வளரொளி நாதருக்கு ஒரு கோயில் கட்டும் படி பணித்தான். அந்த இடம் தான் இன்று காரைக்குடி பக்கத்தில் இருக்கும்வயிரவன் பட்டி”!

அடையாளம் காட்டிக் கொள்ளாத உளவாளிகளாய் எங்கும் ஊடுருவி தேடுதல் வேட்டையை நடத்திய சூரபத்மனின் ஒற்றர்கள் தேவேந்திரனோடு தேவர்கள் அனைவரும் வயிரவன் பட்டியில் தஞ்சம் அடைந்திருப்பதை அறிந்து தலைமைக்குத் தகவல் அனுப்பினார்கள். தகவல் கிடைத்த உடனையே சூரபத்மனின் படைத்தளபதிகள் தத்தம் அசுரப்படைகளை வயிரவன்பட்டியை நோக்கிச் செலுத்தினர். செய்தியறிந்த தேவர்கள் பயந்து போய் ஆலயத்திற்குள் சென்று பதுங்கினர். தான் உயிர் உத்தரவாதம் கொடுத்திருக்கும் தேவர்களைத் தன் எல்லைக்குள்ளேயே நுழைந்து தாக்க தயாராகி நின்ற அசுரப்படைகளின் மீது பதில் தாக்குதல் நடத்த வளரொளி நாதர் முடிவு செய்தார். தன் படைகளுக்குத் தலைமையேற்றுச் செல்ல ஒப்புக் கொண்ட நந்தி தேவர் போர்க்களத்தில் விநாயகர் முன்னே செல்ல அவரின் பின்னால் படைகள் அணிவகுத்தால் நன்றாக இருக்கும் என அபிப்ராயம் சொல்ல உடனடியாக விநாயகரிடம் பேசி ஒப்புதல் பெற்றுக் கொடுத்த வளரொளி நாதர் தன் படைகளுக்கு வயிரவர் கோலம் தாங்கிய திருவுருவம் காட்டி களத்திற்கு அனுப்பி வைத்தார். நந்தி தேவரின் தலைமையில் நால்வகைப் படைகளும் அணிவகுத்து நிற்க விநாயகர் தன் பூதப்படைகள் சூழத் தேர் ஏறினார். நந்தி தேவரின் தலைமையிலான படைகளும், விநாயகரின் பூதப் படைகளும் போர்க்களத்தில் முகாமிட்டிருந்த அசுரப்படைகளைச் சுற்றி வளைத்து தாக்க ஆரம்பித்தன.

தன் பூதப்படைகளுடன் விநாயகர் களத்திற்கு வந்திருப்பதை அறிந்து கோபம் கொண்ட கும்பாண்டகன் என்ற அசுரப் படைத்தளபதி நேரடியாக பூதப்படைகளைத் தாக்கும் படி தேவகண்டன் என்ற தன் துணைத்தளபதிக்கு உத்தரவிட்டான். அவன்  தலைமையில் களம் புகுந்த அசுரப்படைகளின் தாக்குதலில் சிக்கி பூதப்படைகள் சிதறி ஓடத் துவங்கின. பூதப்படையில் இருந்த விநாயகரின் தொண்டனான பிரளயனின் தேரை தேவகண்டன் அம்பால் வீழ்த்திச் சாய்த்தான். தன் பக்தர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் விடுவாரா விநாயகர்? தேரில் ஏறி நேரே அப்பகுதிக்குள் நுழைந்தார். அதுவரையில் உள்ளூர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து வம்பு செய்து கொண்டு இருக்கும் கலவரக் கும்பல் அதிரடிப்படை வந்ததும் தெறித்து ஓடுவதைப் போல விநாயகர் கூடுதல் படைகளோடு வந்து சேர்ந்ததும் பூதப்படைகளின் தாக்குதலில் அசுரப்படைகள் நாலாபுறமும் சிதறி ஓடின. தன் பக்தனை அம்பால் வீழ்த்திய தேவகண்டனைத் தாக்கிய விநாயகர் அவனின் ஆயுதங்களை இழக்க வைத்து நிராயுதபானியாக்கினார்.

தனித்து நிற்பவனைத் தாக்கி அழிப்பது போர் தர்மம் அல்ல என்கிறபோது தான் செய்தால் அது தர்மமாகவே இருக்காது என நினைத்த விநாயகர்இன்று போய் நாளை வாஎன அவனை உயிரோடு அனுப்பி வைத்தார். இப்படித் தனக்குத் தரப்பட்ட உயிர்பிச்சை தன் திறமைக்கே அவமானம் என நினைத்த தேவகண்டன் ஆயுதமில்லாவிட்டல் என்ன? அசுரபலத்தைக் காட்டுகிறேன் பார் என அருகில் இருந்த ஒரு மலைக்குன்றைப் பிடுங்கி விநாயகரை நோக்கி எறிந்தான். உயிர்பிச்சை கொடுத்தது எவ்வளவு முட்டாள்தனம் என நினைத்த விநாயகர் தன்னை நோக்கி வந்த மலையை உடைத்தெறிந்த கையோடு அவன் தலையையும் கொய்து எறிந்தார்.

துணைத்தளபதியின் தலை கொய்து எறியப்பட்ட செய்தி அறிந்து அங்கு வந்த கும்பாண்டகன் பின் வாங்கி நின்ற அசுரப் படைகளை முன்னோக்கிச் சென்று தாக்குமாறு கட்டளையிட்டான். தளபதியின் நேரடி உத்தரவு என்பதால் அசுரப்படைகள் முன்னிலும் வேகமெடுத்துப் பாய்ந்தன, அந்தப் பாய்ச்சலில் விநாயகரின் பூதப்படைகளோடு நந்தி தேவரும் நடுநடுங்கிப் போனார். நிலைமை சிக்கலானதால் மீண்டும் களத்துக்கு வந்த விநாயகர் அசுரப்படைகளின் தாக்குதலை தடுத்து நிறுத்தியதோடு இம்முறை உயிர் பிச்சை எல்லாம் தரமுடியாது எனச் சொல்லி விட்டு கும்பாண்டகன் தலையை வெட்டி எறிந்தார்.

தங்கள் தளபதிகளின் தலைகளைக் காவு கொடுத்து விட்டு அசுரப்படைகள் கலங்கிப் போய் நிற்க விக்கிரதமிட்டிரன் என்ற அசுரத்தலைவன் தன் வலிமை முழுவதையும் திரட்டி மிகப்பெரிய மலை ஒன்றைப் பிடுங்கி விநாயகரின் மீது எறிந்தான். அம்மலை அவரின் மீது மோதி விடாமல் தடுத்து நிறுத்திய பூதப்படைகள் அம்மலையைக் குகை போல வடிவமைப்புச் செய்ய அதில் எழுந்தருளி தன் படை வீரர்களுக்குக் காட்சி தந்து அருள்பாளித்த விநாயகர் இப்படி ஒரு சிம்மாசனம் தந்ததற்குக் கைமாறாக விக்கிரதமிட்டிரனையும் போட்டுத் தள்ளினார். ஆனாலும், ஓயாத அலையாய் அடுத்தடுத்து அசுரப்படைகள் வந்த படியே இருந்தன.

எத்தனை பேரைத் தான் தானே போட்டுத் தள்ளுவது? தலைமையேற்று வரும் தளபதிகளை எல்லாம் தானே அழித்து விட்டால் படைகளை வழிநடத்தி வந்த நந்தி தேவருக்குக் களங்கம் வந்து விடாதா? என நினைத்த விநாயகர் வயிரவப் படைகளுக்கு உதவியாகத் தன் பூதப்படைகளின் ஒரு பிரிவைக் களத்திலேயே இருக்கச் செய்து விட்டுத் தான் எழுந்தருளிய மலைக்குன்றிலேயே தங்கி விட்டார். அப்படி அவர் தங்கிய தலம் தான்பிள்ளையார் பட்டி”!


 

காரைக்குடியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் இவ்வூரில் எழுந்தருளியிருக்கும் இந்த விநாயகர்கற்பக விநாயகர்என்றழைக்கப்படுகிறார். ”கல்என்றால்பாறை”, ”பகுஎன்றால்பகுத்தல்” – ”பிளத்தல்”. பாறையைப் பிளந்து எழுந்தருளி இருப்பவர் என்பதால் கற்பக விநாயகர் எனப் பெயர் பெற்றார். நவக்கிரகங்களால் பிடிக்க முடியாத இரு கடவுளர்களுள் ஒருவர் விநாயகர். இன்னொருவர் ஆஞ்சநேயர். நவக்கிரகங்களால் பிடிக்க முடியாத விநாயகரை பக்தன் சாணத்திலோ, மஞ்சளிலோ, சர்க்கரையிலோ பிடித்து விட முடியும் என்பதால் தான்பிடித்து வைத்தால் பிள்ளையார்என்றழைக்கப்பட்டார்.

தனக்குத் தானே நாயகராய், கடவுளுக்கெல்லாம் முதல்வராய் இருந்தும் குளத்தங்கரையிலும், முச்சந்தியிலும், தெருமுனைகளிலும்ஏழைக் கடவுளாய் எழுந்தருளி பக்தனுக்காகத் தன்னை எளிமைப் படுத்திக் கொண்ட விநாயகருக்கு உகந்த பல விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி நாளில் அவரை மண்ணில் செய்து நீர்நிலைகளில் கரைப்பதற்குப் பெயர்விசர்ஜனம்”. மனதில் நாம் பல உருவங்களைச் செய்து கொள்கிறோம். அவற்றை ஒரு காலத்தில் உடைத்தெறிய வேண்டும். உருவங்களை வழிபடுபவன் வழிபடு பொருளின் நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற உன்னதத்தைத் தன்னையே விசர்ஜனம் செய்து கொண்டு விநாயகர் நமக்கு உணர்த்துகிறார். நாமோ அதையெல்லாம் உணராமல் அந்நாளில் பூஜை அறையில் இருக்கும் விநாயகரை சாலைகளில் இறக்கிக் கலர், கலர் மையிட்டு அழகுபடுத்தி சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறோம். கடற்கரைக்குக் கரைக்கக் கொண்டு போகிறேன் பேர்வழி என கலவரங்களை உண்டு பண்ணுகிறோம். ”ஏழைக் கடவுளைஏழரைக் கடவுளாக ஆக்கியதன் விளைவு பக்தனைக் காக்க வேண்டிய கடவுளை காவலர்கள் காக்க வேண்டிய நிலை உருவானது.

பக்தனுக்குச் சோதனை வந்தால் கடவுளிடம் முறையிடலாம். அந்தக் கடவுளுக்கே சோதனை வந்தால் அவர் யாரிடம் போய் முறையிடுவார்? இதையெல்லாம் யோசித்தால் பக்தனுக்கு மட்டுமல்ல அவன் வழிபடும் கடவுளுக்கும் அது நல்லது. பக்தனோடு கடவுளும் சிக்கிக் கொண்ட கலியுகத்தில் இறைவழிபாட்டை மத வெறியாக மாற்றிக் கொண்டிருப்பவர்களிடம் இதை எப்படிச் சொல்லி புரிய வைப்பது?

நன்றி : வல்லமை.காம்