Wednesday 23 September 2015

உன்னில் இருந்து தொடங்கு!

பண்டைய பாரதத்தில் பெண்களுக்குப் பெருமதிப்பு இருந்தது. அந்தப்புரத்தைத் தாண்டி ஆட்சியாளராக, படைத் தளபதியாக, போர்க்களச் சாரதியாக, அவைக்களப் புலவராக, தூதுவராக இருந்ததைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. பெண்ணைப் பெண்ணாய் போற்றிய பாரதத்தின் இடைக்காலத்தில் நிகழ்ந்த சமூக மாற்றங்களாலும், சாதியப் பிளவுகளாலும் மேலெழும்பிய ஆணாதிக்கத்தனத்தால் பெண்கள் ஒடுக்கப்பட்டனர். அவர்களின் மீது பலவித கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை ஆகியவைகளை வீட்டிற்குள்ளேயே கொடுத்து ஒரு குறுகிய சட்டத்திற்குள் அடைக்கப்பட்டனர். ஆரம்ப காலத்தில் பெண்களைக் கொண்டாடிய சமூகம் அவர்களைப் பூட்டிவைத்து பீடு நடை போடும் குறை சமூகமாய் சுருங்கிக் கொண்டிருந்த வேளையில் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு பொறுக்க முடியாமல் விடுதலைப் போராட்டக் களத்தில் நின்ற தலைவர்களில் சிலர் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

கல்வி, சொத்து உரிமை மறுப்பு, பாலிய விவாகம், விதவைத் திருமண மறுப்பு, உடன்கட்டை ஏறுதல், எனப் பெண்களைச் சூழ்ந்திருந்த சிலந்தி வலையிலிருந்து அவர்களை மீட்க வேண்டும் என முற்போக்குச் சிந்தனை கொண்ட பெண்களோடு அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆணாதிக்கச் சமூகத்திலிருந்து இராஜாராம் மோகன்ராய், பாரதியார், விவேகானந்தர் போன்றோரின் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. அதன் விளைவாகப் பனி மூட்டமாய் பெண்களைச் சூழ்ந்திருந்த திரை மெல்ல விலக ஆரம்பித்தது. அதன்பின் அம்பேத்கார், பெரியார் ஆகியோர் மிகத் தீவிரமாக பெண்களின் சுதந்திரத்திற்குக் குரல் கொடுத்ததன் விளைவாகக் கட்டுப்பெட்டியாய் பெண்களைக் கட்டிவைத்திருந்த கயிறுகள் அறுபட ஆரம்பித்தன.

விடுதலைக்கு மகளிரெல் லோரும்

வேட்கை கொண்டனர்என்ற பாரதியின் வரி வேகம் பிடித்து எழுந்ததில் தங்களுக்கான சுதந்திரத்தின் அவசியம் குறித்து உணரத் தொடங்கிய பெண்கள் தடைகளைத் தகர்த்தெறிந்து ஆணுக்குப் பெண் சமம் என்னும் நிலைக்கு உயர்ந்தனர்.

 பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண்

இளைப்பில்லை காண்என்ற பாரதியின் வாக்கு இருபதாம் நூற்றாண்டுக்கு முன்னரே பலிக்க ஆரம்பித்தது. அது இன்று கிளையாய், விழுதாய், வேராய் விரவி விரிந்து பரந்து நின்ற போதும் பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடைகளாய் அன்று இருந்தவைகள் இன்று வேறு முகங்கள் கொண்டு தலை தூக்க ஆரம்பித்தன. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சக பெண்களாலயே நிகழ ஆரம்பித்தன. பெண்களுக்கு எதிராகப் புற்று நோய் கட்டியாய் வளர்ந்து நின்ற வரதட்சணைக் கொடுமைகளை நிகழ்த்துவதில் ஆண்களை விடப் பெண்களே முன் நின்றதில்பெண்களுக்கு பெண்களே எதிரிஎன்ற நிலை உருவானது. மாமியார், நாத்தனார் என்ற உறவு முறைகள் ஒரு பெண் இன்னொரு பெண்ணை அடக்கி வைக்க உதவும் கடிவாளங்களாக மாறின.

கடுமையான சட்டங்களும், தனிக்குடித்தன வாழ்க்கை முறையும், பொருளாதார பலமும் வரதட்சணைக் கொடுமைகளிலிருந்து பெண் சமூகத்தை ஓரளவுக்கு மீட்டெடுத்தது. அதன் பின்னர் இருபதாம் நூற்றாண்டின் நவீனமாய் பெண்கள் மீதான அடக்குமுறைகளும், எதிர்ப்புணர்வுகளும், வன்முறைகளும் வீட்டிற்குள் உறவு முறை சார்ந்தவர்களாலும், சமூகத்தில் உறவு முறை சாராதவர்களாலும் புதிய வடிவங்களை எடுக்க ஆரம்பித்தது.

பெண்களைத் தெய்வமாய் மதித்த நிலை மாறி இன்று சக மனுசியாகக் கூட மதிக்க மறுக்கும் சமூகத்தில் வேலை செய்யுமிடத்தில் உயரதிகாரிகள், வீட்டில் கணவன், சமூகத்தில் தன்னைக் கடந்து போகும் சக ஆண்கள், தன் சக நண்பர்கள் என தன்னைச் சுற்றியிருப்பவர்களிடமிருந்து எப்பொழுதும் அபாயத்தை எதிர் கொள்ள வேண்டியவர்களாகவே பெண்கள் இருந்து வருகிறார்கள். இத்தகைய சுழல்களிலிருந்து கடந்து வருவதற்கான நம்பிக்கையையும், துணிச்சலையும் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் கல்வி நிறையவே கொடுத்திருக்கிறது. ஆனால், துரதிருஷ்டவசமாகக் கல்வி மூலம் கிடைத்த அந்த நம்பிக்கையையும், துணிச்சலையும் அவர்கள் தங்களின் முன்னோக்கிய பயணத்திற்குப் பயன்படுத்திய அதே வேகத்திற்கு இணையாக ஆணாதிக்க சமூகத்திற்கும், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எதிர் வினையாகவும் பயன்படுத்த ஆரம்பித்ததால். பெண்களின் ஒவ்வொரு அசைவையும் சமூகம் கோணக்கண் கொண்டு பார்க்கும் நிலை உருவானது.

போதைப்பழக்கம், புகைப்பழக்கம், அங்கங்கள் துருத்தித் தெரிய அணியும் ஆடைகள், ஆண் நண்பர்களோடு பொது இடங்களில் எல்லை மீறிய நடவடிக்கைகள், நம்பிக்கையற்ற நிலையில் ஆண் நண்பர்களோடு தனித்த பயணங்கள், நவீனம் என்ற பெயரில் எதிர் பாலினத்தவரோடு தங்குதல், குடும்ப அமைப்பில் சிக்கல்கள் உருவாகும் போது விவாகங்களை விவாகரத்து நோக்கி நகர்த்துதல், காரணமே இல்லாமல் உரிய பருவங்களில் திருமணம் செய்ய மறுத்தல் என ஆண்களுக்குக் கொஞ்சமும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காட்ட பெண்கள் செய்த, செய்யும் செயல்களும், நடவடிக்கைகளும் அவர்களையே கூர் பார்க்க ஆரம்பித்தன

புரிதலின்மையால் நிகழும் இப்படியான நிகழ்வுகளைச் சரிசெய்து கொண்டால் மட்டுமே தங்களின் வளர்ச்சியும், முன்னேற்றமும் சமூகத்தோடு இயைந்த ஒன்றாய் நிகழும் என்பதைப் பெண்கள் உணர வேண்டும். அதேபோல, ”பெண்கள் இந்நாட்டின் கண்கள்என்பதை வெறும் வார்த்தை ஜாலமாக மட்டுமே வைத்துக் கொண்டு வெறும் காட்சிப்பதுமையாய், காமத்தின் குறியீடாய் தங்களை ஊடகங்கள் காட்சிப்படுத்துவதை உணர்ந்து  தங்களை இகழும்படியானவைகளில்கலைஎன்ற பெயரில் பங்களிப்பதைப் புறக்கணிக்க வேண்டும்.

மண்ணில் கிளர்ந்து விண்ணில் எழுந்தோம்என்ற உச்ச நிலைக்கு வந்து விட்ட பின்பும் பெண்களின் மனநிலை இப்படித் தான், இந்த எல்லைக்குள் தான் இருக்கும் என்ற பொதுப்புத்தி சமூகத்தில் மாறாத கறையாய் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அழகுக் குறிப்பையும், சமையல் குறிப்பையும் தாண்டிய வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளாததே இப்படியான மனநிலை உருவாவதற்கு முக்கிய காரணம்! பெண்கள் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ”பாட நூல்களுக்கு வெளியேயான வாசிப்பு சுவராசியமானதுஎன்பதை இலக்கிய வாசிப்பின் வழி பழக வேண்டும். மேலை நாடுகளின் கலாச்சாரங்களை அறியக் காட்டும் ஆர்வத்தில் கால் பங்காது அவர்களின் வாழ்வியல் முன்னேற்ற நிலையை அறிந்து கொள்ளப் பயன்படுத்தினாலே செல்ல வேண்டிய தூரம் தெரிந்து விடும்.

குடும்பம் என்ற கூட்டிற்குள் அடங்கி விடாமல் வாய்ப்புக் கிடைக்கும் சமயமெல்லாம், நேரமிருக்கும் போதெல்லாம் தங்களுக்குப் பிடித்த விசயங்களில் கவனம் செலுத்தலாம், புதிய விசயங்களைக் கற்றுக் கொள்ளலாம். மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஆக்கப்பூர்வமான சமூக நல மன்றங்களில் இணைந்து செயல்படலாம். புறத்தோற்ற அழகையும், ஆடை, அணிகலன்களையும் தாண்டி தன் திறமைகளைத் தன் அடையாளமாய் மாற்றிக் கொள்ள முனையலாம். இத்தகைய செயல்பாடுகள் தன்னம்பிக்கையோடு அன்றாட பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கான மனமாற்றத்தையும் தரும்.

இது தவிரவும், சொல்லால், செயலால் பெண்களை இழிவுபடுத்துவதை நிறுத்துவதற்கான முயற்சியை ஒவ்வொரு பெண்ணும் தன் வீட்டில் இருந்தே துவங்கலாம். தன் வீட்டு ஆண்களோ, குழந்தைகளோ அத்தகைய செயல்களில் ஈடுபடும் போது கண்டும், காணாமலும் இருப்பது தான் இது போன்ற நிகழ்வுகளுக்கான ஆரம்பமாக உள்ளது. அந்த ஆரம்பப் புள்ளியை வீட்டிலேயே துடைத்தெறிவதன் மூலம் சமூகத்தில் இத்தகைய நிகழ்வுகள் நிகழாதவாறு தடுக்க முடியும்.

அடுத்த வீட்டுக்குப் போகிறவளுக்கு கல்வி எல்லாம் காசுக்குப் பிடிச்ச கேடுஎன்று நினைக்கும் போக்கு மாறி பெண்குழந்தைகளுக்கு முழுமையான கல்வியை வழங்கப் பட வேண்டும். அதேபோல வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதில் பெண்களுக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். பெண்பிள்ளைகளுக்கு வரன் தேடும் போது தங்களின் தேவையிலிருந்து அவர்களின் துணையைத் தேடாமல் அவர்களின் விருப்பத்தில் இருந்து தங்களின் தேடலைத் தொடங்க வேண்டும். இப்படியாக தன்னில் இருந்தும், தன் வீட்டில் இருந்தும் சுதந்திரமாய் வெளியேறும் பெண்களுக்கு பொது இடங்களில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், கழிவறை உள்ளிட்ட கட்டாயத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தல், தொழில் துறைகளில் பெண்கள் ஈடுபடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக வங்கிக் கடனுதவி திட்டங்களை எளிமைப்படுத்துதல், கல்வி, வேலை வாய்ப்புகளில் இடமளித்ததைப் போல ஆட்சி அதிகாரங்களில் குறிப்பிட்ட சதவிகிதம் பங்கு பெற வாய்ப்பளித்தல் ஆகியவைகளின் மூலம் அரசாங்கமும் பெண்களின் முன்னேற்றத்திற்கான வாசலை இன்னும் அகலத் திறந்து விடலாம்.

தங்களின் கடந்த காலப் பிம்பங்களை உடைத்தெறிந்து முன்னேறிய சமுதயத்தில் தங்களையும் ஒரு அங்கமாக முன்னிலைப்படுத்திக் கொள்வதற்கான முயற்சியை ஒவ்வொரு பெண்ணும் தன்னில் இருந்தே தொடங்க வேண்டும். அந்தத் துவக்கம் மட்டுமே துவண்டு கிடக்கும் பெண் சமூகத்தை இன்னும் வேகத்தோடு துளிர் விட்டு எழ வைக்கும். விலங்கிடப்பட்ட சுதந்திரத்தோடு இருக்கும் நிலையை தகர்த்தெறிந்து பாரதியும், பெரியாரும், விவேகானந்தரும் கோரிய பெண்விடுதலையைச் சாத்தியமாக்கித் தரும்.

படம் : இணையம்

வலைப்பதிவர் திருவிழா- 2015 புதுக்கோட்டை, தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின் தமிழ் இலக்கியப் போட்டியின்  பிரிவு (3) பெண்கள் முன்னேற்றம் குறித்த கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது.

உன்னில் இருந்து தொடங்கு!” எனும் தலைப்பில்  எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை  எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன்.  இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும்போட்டி முடிவு வெளியாகும் வரை வேறு எங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன் – மு. கோபி சரபோஜி