Friday, 27 November 2015

கீழே போட்டு விடாமல் எழுதுங்கள்!

 

கடந்த வாரம் புத்தக வெளியீட்டு விழா ஒன்றிற்குச் சென்றிருந்தேன். புத்தகத்திற்கான அன்பளிப்புத் தொகையை வைத்துக் கொடுக்கும் கவரின் மேல் வாழ்த்துகள் என எழுதி பெயரிட்டுத் தர என் வசம் பேனா இல்லாததால் அருகில் இருந்த ஒரு அன்பரிடம் இரவல் கேட்டேன். அவரை அந்த நிகழ்வில் தான் முதன் முதலில் பார்க்கிறேன். கடந்த காலங்களில் இரவல் கொடுத்து பறிகொடுத்த அனுபவமோ என்னவோ பேனாவின் மூடியைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டு பேனாவை மட்டும் என்னிடம் தந்தார்.

பேனா என் கைக்கு மாறியதும் புது விதமான முன்னெச்சரிக்கை குறிப்பாய்கீழே போட்டு விடாமல் எழுதுங்கள்என்றார். எழுதும் போது எப்படிக் கீழே போட முடியும்? என்ற எண்ணம் தம்பி இராமையாவின் மாடுலேஷன் வாய்சில் மனதில் தோன்ற அவரிடமிருந்து என் கைக்குத் தாவி இருந்த பேனாவால் கவரின் மேல் "வாழ்த்துக்கள்" என எழுதினால் முதல் எழுத்தைக் கூட பேனா எழுத மறுத்து நின்றது

எழுதாத எழுதுகோலுக்கு இத்தனை முன்னெச்சரிக்கையும், முன்னெடுப்புமா? என நினைத்துக் கொண்டே பேனா எழுதவில்லையே எனச் சொல்லியபடி அவரிடம் திருப்பிக் கொடுத்த நொடி தன் பேனா தன்னிடமே வந்து விட்ட சந்தோசத்தில் அவரின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்! சந்தோசங்கள் முகிழ்வதற்கான காரணங்கள் எல்லோருக்கும் ஒன்று போல் இருப்பதில்லை போலும்!!