கிருஷ்ணசாமி என்கிற கிச்சாமி “குதிரைக் கிச்சாமி”யாக மாறிப் போன நிகழ்வைச் சொல்லும் கதை “குதிரை”. சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.
கிச்சாமியை குதிரை கடித்து விடுகிறது. வைத்தியம் பார்ப்பதற்காக மருத்துவரிடம் செல்கிறார். மருத்துவருக்கு அதற்கான வைத்திய முறை தெரியவில்லை, டெக்ஸ்ட் புக்கிலும் மருத்துவ விளக்கங்கள் இல்லை. அதனால் மருத்துவர் தனக்குத் தெரிந்த வைத்தியத்தைச் செய்கிறார். சிலநாட்களில் கிச்சாமியின் காயம் ஆறிப் போனாலும், ”குதிரை” என்ற அடைமொழி மட்டும் அவரோடு ஒட்டிக் கொள்ள ”குதிரைக் கிச்சாமி”யாகி விடுகிறார் என்பது தான் கதை.
”குதிரை கடிச்சிடுத்து” என்று கிச்சாமி சொல்வதை வாசித்த உடனையே குதிரை கடிக்குமா? என்று நமக்குள் எழும் ஆச்சர்யக் கேள்வியை குறைவான கதாபாத்திரங்கள், எதார்த்தமான உரையாடல்களை மட்டும் வைத்துக் கொண்டு நகைச்சுவை ததும்பக் காட்சிப் படுத்தியிருப்பது கதையின் பலம்.
”தினப்படி காப்பி குடித்து, பேப்பர் படித்து, துணி மடித்து, பஸ் பிடித்து” என்ற வார்த்தைகளில் கிச்சாமியைப் பற்றியும், ”மனைவி, குழந்தை, மாமனார், வாடகை வீடு, பாத்ரூமில் பாட்டு, மண் தொட்டியில் ஒன்றிரண்டு தொட்டிச்செடிகள், தவணை முறையில் ரேடியோ” போன்ற சில வார்த்தைகளில் அவரின் வாழ்வியலையும் முழுமையாய் வாசிப்பாளனிடம் சொல்லி விடும் சுஜாதாவின் சாதுர்யம் கதை முழுவதும் வியாபித்திருக்கிறது.
கதை நிகழக் காரணமான குதிரையின் நிலையையும், அதை வளர்ப்பவர்களின் வாழ்வியலையும் கதைக்குள் கதை போல கதையோட்டத்திலேயே சொல்லிச் சென்றிருப்பது சிறப்பு.
தன் மனைவியின் ஆதங்கத்தாலும், அதே ஆதங்கத்தோடு அவர் மற்றவர்களிடம் சொல்ல முனையும் விசயங்களாலும் கிச்சாமி எரிச்சலடைவதில் நியாயம் இருந்தாலும் அதற்காகப் பொது இடத்தில் ”குதிரை கடிக்கும்னு யாருக்குடி தெரியும் மூதேவி” என்று மனைவியை ஏசுவது சரியா? என்றும் நினைக்கத் தோன்றுகிறது.
பல கேலிகளுக்கு மத்தியில் வைத்தியம் பார்க்கவும், குதிரையைக் கண்காணிக்கவும் அக்கறை கொள்ளும் கிச்சாமியின் மனவோட்டம் மூலம் பயம் மனிதனை எத்தனை மெனக்கெடல்களுக்கு உள்ளாக்குகிறது என்பதை ஆசிரியர் அழகாக எடுத்துக்காட்டி விடுகிறார்.
பிரபலமடைதல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் நிகழும். சிலருக்கு அது மிகச் சாதாரண விசயங்கள் மூலமாகக் கூட நிகழ்ந்து விடவும் வாய்ப்புண்டு என்பதை ”ஊருக்கு ஊர் கிச்சாமி இருக்கிறார்கள். ஆனால் நாட்டுல ஒரே ஒரு குதிரைக் கிச்சாமி நான் தான் என்பதில் ஒரு அற்ப சந்தோசம்” என்று முத்தாய்ப்பாய் அமைந்த முடிவு வரிகள் வாசிப்பாளனுக்கு உணர்த்தி விடுகிறது.
கிச்சாமியை குதிரை கடித்து விட்டது என்ற ஒற்றை வரியை வைத்துக் கொண்டு சுஜாதா படைத்த நகைச்சுவை விருந்தாக இந்தக் கதையைச் சொல்லலாம்.
ஆசிரியர் : சுஜாதா
கதை : குதிரை
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்