சிற்றிதழ்களில் வரும் கதைகள் ஏதோ ஒன்றை தன்னுள் இறுத்தி வைத்த படியே இருக்கும். வாசிப்பின் வழியே அதைக் கடந்த போதும் வாசகனால் கண்டடையப்படாத அல்லது கண்டடைய வேண்டிய ஒன்று அதனுள் மறைந்திருக்கும். அதை பொது வெளியில் பகிரப்படும் விமர்சனங்கள், பிறருடைய வாசிப்பனுபவங்கள் மூலம் கண்டு கொள்ளும் வாசகன் மீள் வாசிப்பு வழியே தானும் அந்த புள்ளியை வந்தடைகிறான். ஆனால், வணிக இதழ்களில் வரும் கதைகள் அப்படியில்லை. அதன் அச்சை வாசகனால் எளிதில் எட்டி விட முடிவதால் பெரும்பாலும் அவைகள் மீள் வாசிப்பைக் கோருவதில்லை. ஓரிதழ் விவரிப்பாகவே அத்தகைய கதைகள் இருக்கும். அந்த வகையில் வணிக இதழ்களில் வெளிவந்த பதிமூன்று கதைகளின் தொகுப்பு ”மனிதத் தீவுகள்”. திருவரசு புத்தக நிலையம் வெளியீடாக வந்திருக்கும் இதன் ஆசிரியர் உத்தமசோழன்.
வசிப்பிடங்களை நெருக்கமாக்கிய நாம் நம்முடைய மனங்களை விலக்கி தீவுகளாகி நிற்கிறோம் என்பதைச் சொல்லும் கதை “மனிதத் தீவுகள்”. ”தான் உண்டு; தன் வேலை உண்டு” என்று இருப்பது உத்தம வாழ்வு என நினைப்பவர்களுக்கு அடுத்தவருக்கு வந்த பிரச்சனை போன்ற ஒன்று தனக்கு வரும் போது மற்றவர்களும் அப்படியே இருப்பார்கள் என்பதே கதையின் மையம். கூப்பிடு தூரத்தில், ஒரு சுவர் தடுப்பில் இருந்தாலும் அடுத்தவர்களுக்கு பிறரால் முறையற்ற வகையில் ஏற்படும் அசெளகரியங்களில் ஈடுபட்டு அதிலிருந்து மீள அவர்களுக்கு நாம் உதவுவதில்லை. காதையும், கதவுகளையும் இருக மூடிக் கொள்கிறோம் இந்தக் கதையை வாசித்த போது ”வளர்ச்சி” என்ற தலைப்பில் கலாப்ரியா எழுதிய கவிதை ஒன்று நினைவில் வருகிறது.
