Monday 7 June 2021

மனிதத் தீவுகள் – ஓரிதழ் வணிக எழுத்து

சிற்றிதழ்களில் வரும் கதைகள் ஏதோ ஒன்றை தன்னுள் இறுத்தி வைத்த படியே இருக்கும். வாசிப்பின் வழியே அதைக் கடந்த போதும் வாசகனால் கண்டடையப்படாத அல்லது கண்டடைய வேண்டிய ஒன்று அதனுள் மறைந்திருக்கும். அதை பொது வெளியில் பகிரப்படும் விமர்சனங்கள், பிறருடைய வாசிப்பனுபவங்கள் மூலம் கண்டு கொள்ளும் வாசகன் மீள் வாசிப்பு வழியே தானும் அந்த புள்ளியை வந்தடைகிறான். ஆனால், வணிக இதழ்களில் வரும் கதைகள் அப்படியில்லை. அதன் அச்சை வாசகனால் எளிதில் எட்டி விட முடிவதால் பெரும்பாலும் அவைகள் மீள் வாசிப்பைக் கோருவதில்லை. ஓரிதழ் விவரிப்பாகவே அத்தகைய கதைகள் இருக்கும். அந்த வகையில் வணிக இதழ்களில் வெளிவந்த பதிமூன்று கதைகளின் தொகுப்பு மனிதத் தீவுகள். திருவரசு புத்தக நிலையம் வெளியீடாக வந்திருக்கும் இதன் ஆசிரியர் உத்தமசோழன்.

வசிப்பிடங்களை நெருக்கமாக்கிய நாம் நம்முடைய மனங்களை விலக்கி தீவுகளாகி நிற்கிறோம் என்பதைச் சொல்லும் கதை “மனிதத் தீவுகள்”.  தான் உண்டு; தன் வேலை உண்டு என்று இருப்பது உத்தம வாழ்வு என நினைப்பவர்களுக்கு அடுத்தவருக்கு வந்த பிரச்சனை போன்ற ஒன்று தனக்கு வரும் போது மற்றவர்களும் அப்படியே இருப்பார்கள் என்பதே கதையின் மையம். கூப்பிடு தூரத்தில், ஒரு சுவர் தடுப்பில் இருந்தாலும் அடுத்தவர்களுக்கு பிறரால் முறையற்ற வகையில் ஏற்படும் அசெளகரியங்களில் ஈடுபட்டு அதிலிருந்து மீள அவர்களுக்கு நாம் உதவுவதில்லை. காதையும், கதவுகளையும் இருக மூடிக் கொள்கிறோம் இந்தக் கதையை வாசித்த போது வளர்ச்சி என்ற தலைப்பில் கலாப்ரியா எழுதிய கவிதை ஒன்று நினைவில் வருகிறது.

நாட்டுப்புறக் கலைஞர்கள் பற்றி பேசும் கதை ஜரிகைக் குமுறல். நாட்டுப்புற கலைஞர்கள் தங்களுக்குள் ஒத்துப் போக மாட்டார்கள். தங்கள் கலையே சிறந்தது என அவர்களுக்குள் எழும் மனப்பான்மை பிற கலைகளை மட்டுமல்ல அந்தக் கலைகளின் கலைஞர்களையும் பதம் பார்த்து விடும். அப்படி கரகாட்ட கலைஞர் ஒருவருக்கும், குறவன், குறத்தியாடும் சக கலைஞருக்கும் அவரவர் கலை, அதை வெளிப்படுத்தும் முறை சார்ந்து நிகழும் விவாதம் கதையின் மையமாக நகர்கிறது.

சிவாவும், நந்தாவும் பள்ளிகால தோழர்கள். கால ஓட்டத்தில் சிவா கடையில் எடுபிடியாக, டீ மாஸ்டராக, டிக்கெட் கிழிப்பவனாக மாற அதே ஊரில் நந்தா அரசு அதிகாரியாகிறான்.  தனக்கு இடர் நெரும் போதெல்லாம் உதவிக்கரம் நீட்டுபவனாக வந்து நிற்கும் சிவாவுக்கு நந்தா ஒரு முறை கூட நன்றி சொல்லாமல் இருப்பதைப் போல நந்தாவிடம் சிவாவும் தனக்கென எந்த உதவியும் கேட்டு நின்றதில்லை.  தனக்காக உதவுபவனுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையை நேரடியாக பார்த்துச் சொல்லவும், துயருற்று நிற்கும் தன் சிநேகிதனை காக்கத் தான் வகிக்கும் பதவி, அந்தஸ்தை தடையாக்கிக் கொண்டும் தவித்து நிற்கும் நந்தா அவன் நண்பன் சிவா ஆகிய இரு நண்பர்களைப் பற்றி பேசும் கதை சிவா என்றொரு சிநேகிதன்.

தன் குழந்தைக்கு இணையாக ஆட்டுக்குட்டியையும் வளர்க்கும் நண்பனின் மனம் கண்டு வியக்கிறான் ஜீவா. அவன் போலவே தானும் அந்த ஆட்டுக்குட்டியை தூக்கிக் கொஞ்சி கொண்டாட வேண்டும் என்ற நினைப்போடு மறுமுறை நண்பன் வீட்டிற்கு வரும் ஜீவாவுக்கு காத்திருக்கும் அதிச்சியை கொன்றால் பாவம்; தின்றால் போச்சு என்ற பழமொழியை விரித்து சொல்லப்பட்ட கதை பயம்.

காதலிக்க ஒருவன்; கல்யாணம் செய்து கொள்ள ஒருவன். காதலிப்பது விருப்பம். கல்யாணம் என்பது வாழ்க்கைக்கான வாய்ப்பு, வசதிகளுடனான தேர்வு என்ற நவீன காதல் ஆத்திசூடியில் விளைந்திருக்கும் கதை காதல்2000.

காலம் காலமாக கழுதைகளை அது சுமக்கும் பொதி போல அடித்துத் துவைக்கும் மனித வக்கிரம் இன்றும் குறையாத சூழலில் கழுதை வளர்க்கும் செல்லி அவைகள் குறித்து கொள்ளும் அக்கறைகளும், அழுந்தி, அழுந்தி நின்ற கழுதை எழுந்து நின்ற போது செல்லியின் மனதிற்குக் கொடுத்த நம்பிக்கையையும் கழுதைகள் மீதான பரிவை கூடுதலாக்குகிறது. கழுதைகளின் வாழ்வியலோடு நகரும் இது கழுதைகளின் காலம்கதையை வாசிக்கையில் சிறு வயதில் கழுதைகள் சார்ந்து வாசித்த கதைகளும், எஸ். ராமகிருஷ்ணன் தன் மகனுக்கு கழுதையைக் காட்ட அலைந்து திரிந்தது குறித்து எழுதிய கட்டுரையும் நினைவுக்கு வருகிறது.

நகர்புறங்களில் தன் சுயநலனுக்காக எதையும் ஒருவர் முன் நிறுத்த முடியும். ஆனால், கிராமப்புறங்களில் அது அத்தனை எளிதல்ல.  கொஞ்சம் சென்சிட்டிவான விசயங்களைத் தொட்டால் மட்டுமே சாத்தியம். கிராமத்தில் நடக்கும் ஒரு கோவில் திருவிழாவை தங்கள் சுயநலனுக்காக சாதியப் பிரச்சனையாக்க முயலும் பெரியசாமி, பேச்சி முத்து என்ற இரு சுயநலமிகளைப் பற்றி பேசும் கதை தீமூலம். இதே கருத்தை மையச்சரடாய் இழைத்து தந்திர வலைவிரிப்பு கதை விரிகிறது.

ஆரம்பம் முதலே தன்னைப் பிடிக்காததால் உதாசீனப்படுத்தும் கணவனின் அத்தனை புறக்கணிப்புகளையும் பொறுத்துக் கொண்டு அவனுடைய மனநேர்மை, நியாயத்திற்காக தன் மனதில் அவனை சிம்மாசனமிட்டு அமர வைக்கும் சந்திரிகா ஒரு சமயத்தில் அதிலிருந்து அவனைத் தூக்கி எறிகிறாள். அதற்கான காரணத்தையும், தன் விருப்பங்களையும் ஒரே வீட்டிற்குள் இருக்கும் தன் கணவனுக்கு சந்திரிகா அதிரா மொழியில் கடிதமாக  சொல்லும் கதை ஆசையின்றி ஒரு கடிதம்.

உள் மனதில் அன்பும், பாசமும் நிறைந்திருக்கும் உறவுகளுக்கிடையில் அது எந்த உறவாக இருந்தாலும் கோபமும், ஆத்திரமும் எந்த  முறையில் வெளிப்பட்டாலும் சம்பந்தப்பட்டவருக்கு ஒரு உடல் நலப் பிரச்சனை என்று தெரிந்து விட்டால் அதுவரையிலும் அவர் மேல் நின்ற அத்தனை கோபமும் வடிந்தோடி விடும்.  இந்த எதார்த்தத்தைப் போல வெளியூரில் இருக்கும் தன் கணவனை போனில் இரக்கமற்று தடித்த வார்த்தைகளால் வறுத்தெடுக்கும் பவளம் அவனுக்கு காய்ச்சல் என்று அறிந்ததும் பதறிப் போகிறாள். அதுவரையிலும் அவன் மீது நின்ற அத்தனை கோபமும் அவளிடமிருந்து வடிந்தோடி அக்கறையாகி விடுகிறது. இதை பவளம் என்ற சம்சாரியின் குடும்ப நிகழ்வோடு சொல்லும் கதை நெருப்பும் குளிரும். 

தன்னிடம் இருக்கும் காசுக்கு பலாப்பழம் தர மறுத்து ஏசிய பலாப்பழக்காரி பின் மனம் மாறி அதை இனமாகத் தர முன் வருகிறாள். ஆனால், பட்டினி கெடந்து செத்தாலும் சரி. யார்கிட்டேயும், எதுக்காகவும் கைநீட்டக் கூடாதுன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லும் என்று கூறி தீர்க்கமாய் மறுத்துவிடுகிறாள் ஐந்து வயது சிறுமி.  அந்த தீர்க்கத்திற்காக அதீத பாசம் வைத்திருக்கும் தன் தம்பியை அடிக்கவும் தயங்கவில்லை. அந்த சிறுமிக்கும், அவள் தம்பிக்குமான குழந்தை வயது மனநிலையோடு “வறுமை ஒருபோதும் கையேந்தாது என்ற சொலவடையை நினைவுபடுத்தும் கதை வறுமையில் எழுதிய கவிதை.

தனக்குக் கிடைக்காத அல்லது தான் வாழ நினைக்கும் வாழ்க்கை இன்னொருத்திக்கு கிடைத்திருப்பது கண்டு சந்தோசம் கொள்ளும் இல்லத்தரசியின் கதை ஏக்கம்.

மேகமூட்டத்தின் விரவல் வழியாக தன் அப்பாவின் அடிமன கோணலை சூட்சுமமாக அவருக்கே உணர்த்தும் மகன், அவன் அம்மா, அவனின் சித்தி பிள்ளைகள் என ஒரு வீட்டிற்குள் நிகழும் கதை  கள்ள மனசு.

வணிக இதழுக்கான டெம்ப்ளேட்டுடன் அனைத்து கதைகளும் இருந்த போதும் ஜோடனையற்ற விவரிப்பு நெருடலற்ற வாசிப்புணர்வைத் தருகிறது. குறைவான கதாபாத்திரங்கள், ஒற்றை நிகழ்வின் விரிவு என நகரும் கதைகளின் முடிவை பெரும்பாலும் ஊகித்து விட முடிகிறது. அதுவே கதையின் முடிவாகவும் மலர்ந்து நிற்பது மேலதிக சிந்தனைக்கு வழியின்றி அடுத்தடுத்த பக்கங்களுக்கு நகர வைக்கிறது.

No comments:

Post a Comment